அந்நேரம் அவனிடம் ஓடி வந்து, “சாரி, நிரஞ்” என்ற பவுலரை தூசியாகக் கூட மதிக்காமல், புறக்கணித்து விட்டுக் கை வீசி நடந்தான் நிரஞ்சன்.
இதுவரை நண்பனாக நினைத்து, மதித்து, மரியாதை கொடுத்து பழகிய ஒருவன், பதிலுக்கு என்ன செய்து விட்டான்.
அவனைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டான்? ‘உன்னை என்றைக்கும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டேன்’ தனக்குள் உறுதியாகச் சொல்லிக் கொண்டான் நிரஞ்சன்.
அவனது கோபம் அவனது நடையில் வேகமாக வெளிப்பட, அவனோடு இணைந்து கொண்டார் கேப்டன். இருவரும் எதிரணி வீரர்களுக்குக் கைக் கொடுத்துக் கொண்டே நடந்தனர்.
“வெல் டன் நிரஞ்” ஒற்றைக் கையால் அவனைத் தோளோடு அணைத்து சொன்னார் கேப்டன்.
“கிரவுண்டல நிக்கும் போது எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்ட கூடாது நிரஞ். அவனை அடிக்காம, மைக்ரோ செகண்ட்ல நீ சுதாரிச்சு அணைச்சது பக்கா கேம் பிளே. எதிராளிக்கு எப்பவும் நம்ம பலவீனத்தைக் காட்டவே கூடாது. அப்புறம் அதையே நமக்கு எதிரா பிடிச்சு தொங்கிட்டு, சீண்டிட்டே இருப்பானுங்க. நீ எப்பவும் போல, ஐ டோண்ட் கேர் ஆட்டிட்யூட்டோட இரு” அதிகம் பேசாதவர் அன்று அவனுக்காக அறிவுரைகளை அள்ளிக் கொடுக்க, அர்ப்பணிப்புடன் கேட்டுக் கொண்டான் நிரஞ்சன்.
“சுயர் கேப்டன்” என்றான் அவன்.
“நான் எப்பவும், எல்லோருக்கும் சொல்றது தான். நான் ஃபாலோ பண்ற ஒன்னு. முடிஞ்சா நீயும் செய். நியூஸ் பேப்பர் பார்க்காத. ஸ்போர்ட்ஸ் பகுதி போகவே போகாத. அதே தான் ஆன்லைன், சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ், வெப்சைட்ஸ் எல்லாத்துக்கும். அந்தப் பக்கமே தலை வைக்காத. ஒன்னு அவன் நம்மை அதிகம் புகழுவான். இல்லனா, மகா மட்டமா நம்மை மட்டம்தட்டி விமர்சனம் பண்ணுவான். ரெண்டுமே நம்மளோட மன அமைதிக்கு நல்லதில்ல. எண்ட் ஆஃப் த டே, நம்மளோட மன நிம்மதியும், அமைதியும் தானே நமக்கு முக்கியம்?” என்று அவர் கேட்க, “எஸ். எஸ். கேப்டன்” தடுமாறினான் நிரஞ்சன்.
“என்ன கேப்டன்? அண்ணா சொல்லி கூப்பிடு” என்றவர், தனது நடையை நிறுத்தி விட்டு, அவனை நன்றாகத் திரும்பிப் பார்த்தார். அவர் நிற்க, நிரஞ்சனின் நடையும் நின்று விட்டது. மைதானத்தை விட்டு வெளியில் வந்திருந்தனர். சென்னை அணி ஊழியர்கள் இருவருக்கும் குடிக்கக் குளிர்பானங்கள், தண்ணீர், துண்டு என்று கைகளில் அவர்களுக்குத் தேவையானதை அள்ளிக் கொண்டு வந்து ஓரமாக ஒதுங்கி நின்றனர்.
நிரஞ்சனின் தோளில் அழுத்தமாய்க் கைப் பதித்து, “விளையாட்டில் எதிரிகள் சகஜம் நிரஞ். அவங்க தான் நமக்கு ஆட்டத்தைச் சுவாரசியமாக்குறது. எதிரிகள் தானா சேருவாங்க. ஆனா, இங்க பிரண்ட்ஸை தேர்ந்தெடுக்கும் போது ரொம்பக் கவனமா இரு.” என்றவரின் பார்வை, பெங்களூர் அணியின் பந்து வீச்சாளரை தொட்டு மீள, தலைக் குனிந்தான் நிரஞ்சன்.
“எதிரி எப்பவும் முகத்துக்கு நேரா தான் சவால் விடுவான். முதுகில் குத்த மாட்டான். நம்ம கூடக் கடுமையா போட்டி போட்டு ஜெயிக்கத் தான் விரும்புவான். ஒரு நாளும் நம்ம காலை வாரி விட்டு ஜெயிக்க நினைக்க மாட்டான். ஆனா, நண்பன்னு சொல்லிட்டு கூடவே இருக்கறவன் தான் நீ கற்பனை பண்ணி பார்க்காததை எல்லாம் செய்வான். எல்லோருக்கும் ஒரு எல்லை கோடு வச்சுக்கோ.”
“தாங்க்ஸ் ண்ணா” ஆத்மார்த்தமாகச் சொன்னான் நிரஞ்சன்.
புன்னகையுடன் அவனைத் தழுவி, “நான் பார்த்த பெஸ்ட் பிளேயரில் நீயும் ஒருத்தன். இப்படியே இரு” என்று விலகி நடந்தார் அவர்.
அவரின் பாராட்டில் மனம் நெகிழ அவருக்குப் பின்னே நடந்தான் நிரஞ்சன்.
அசுர வேகத்தில் ஓடி வந்ததில் மூச்சு வாங்க, “கங்கிராட்ஸ் கேப்டன்” என்று அவரிடம் சொன்ன நந்தனா, பதிலுக்கு அவர் தந்த புன்னகையைக் கூட வாங்கிக் கொள்ளவில்லை.
அவரைக் கடந்து படிகளில் இறங்கி கணவனிடம் ஓடி வந்தாள். எப்போதும் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு, ஓரமாக அமர்ந்திருக்கும் மனைவி, இப்படி அவனுக்காக மைதானத்தில் மக்கள் பார்க்க ஓடி வருவது, நிரஞ்சனுக்கு இது அரிதிலும் அரிதான காட்சி.
அந்த நிமிடம் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை அவன். பொதுவெளியில் தங்களின் அன்பை ஒருபோதும் வெளிகாட்டிக் கொள்ளாத இருவரும் அன்று உலகமே பார்க்க இறுக்கமாக அணைத்து கொண்டனர்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்களுக்கு மேலாக மைதானத்தில் நின்றிருந்த காரணத்தால் வியர்வை குளியல் போட்டிருந்தான் அவன். உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தது அவன் உடை. அதனோடு ஒட்டிக் கொண்டாள் அவன் மனைவி.
அணைப்பால், உணர்வால் பேசிக் கொண்டனர்.
சில நொடிகளில் இருவரும் பிரிந்திருக்கத் திரை முழுக்க அவர்கள் தான் தெரிந்தனர்.
“நிரஞ்சன்.. நந்தனா” ரசித்து, கத்தி ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள்.
இருவர் பெயரின் ஆங்கில முதல் எழுத்தையும் இணைத்து, “எங்களின் என்.என்” என்று கூட்டம் ஆரவாரிக்க, இங்கே இவர்கள் இருவரின் முகத்திலும் விரிந்தது அழகான புன்னகை.
சமீபமாகத் தான், “என். என்” (NN) என்று பூவும், இதயமும் பின்னி பிணைந்திருப்பது போல டாட்டூ குத்தியிருந்தான் நிரஞ்சன். இப்போது அதையே ரசிகர்களும் சொல்ல, புஜத்தை தடவி கொடுத்தது அவன் கரம்.
அன்றைய போட்டியில், “ஆட்ட நாயகன்” விருதை வென்றிருந்தான் அவன்.
விலையுயர்ந்த கார், அலைபேசி, ரொக்கப் பணம் என்று பரிசு பொருட்களுடன் அறைக்குத் திரும்பினார்கள் அவர்கள்.
அன்றைய மாலை முழுதும் புன்னகை முகமாகத் தான் நின்றாள் நந்தனா. ஆனால், அவளுக்கு உள்ளுக்குள் கேள்வி ஒன்று ஓடிக் கொண்டேயிருந்தது.
நிரஞ்சன் என்ன தான் விரிந்த புன்னகையுடன் சுற்றினாலும், அது அவன் கண்களை எட்டவில்லை. அந்தக் கண்களுக்குள் எரிந்த வெறுப்பின் அனல் அவளைச் சுட தான் செய்தது.
‘அந்தப் பவுலர் என்ன சொல்லியிருப்பான்? கணவனுக்கு ஏன் உலகம் மறக்கும் அளவுக்குக் கோபம் வந்தது? கணவன் அவனுக்கு என்ன பதிலடி கொடுத்தான்?’ அவளுக்கு மீண்டும் மீண்டும் அதே கேள்விகள் மனதில் வலம் வந்து கொண்டிருக்க, கணவனிடம் அதைக் கேட்க தக்க சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவர்கள் ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும், கணவனின் கைப் பிடித்து நிறுத்தி, “அவர் என்ன சொன்னார்? நீங்க ஏன் அப்படி ரியாக்ட் பண்ணீங்க? கேப்டன் விழுந்து, விழுந்து சிரிக்கற அளவுக்கு அவனுக்கு என்ன நோஸ் கட் கொடுத்தீங்க?” அவள் படபடத்து கேட்க, அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி,
“பொறுமை பொண்டாட்டி. ரொம்ப டையர்ட்டா இருக்கு. சூடா ஒரு குளியலை போட்டுட்டு வரேன்” என்று விலகிப் போனான் நிரஞ்சன்.
“என்ன நடந்தது நிரஞ்சன்? பிளீஸ் சொல்லிட்டுக் குளிக்கப் போங்க. ஆல்ரெடி, டிரெஸ்ஸிங் ரூம்ல குளிச்சீங்க தானே?” அவள் அலற,
“கேள்வியா கேட்காத” என்று அவளையும் கைப் பிடித்து இழுத்துக் குளிக்கப் போனான் நிரஞ்சன்.
அரை மணி நேரம் கழித்து அறையில் உணவுடன் அமர்ந்திருந்தார்கள் அவர்கள்.
இந்த முறை கணவன் விமர்சனத்தைச் சரியாகக் கையாண்டதில் அவளுக்கு வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியா அளவிற்கு மகிழ்ச்சி.
பழைய நிரஞ்சன் திரும்பி இருந்ததில் அப்படியொரு நிறைவு.
எட்டி அவளது தட்டில் இருந்து உணவை எடுத்து உண்டவனை முறைத்துக் கொண்டே, “இப்பவாவது சொல்லலாம் இல்ல?” என்று கேட்டாள் அவள்.
“ம்ஹூம். சாப்பிடு முதல்ல” அதட்டினான் அவன்.
தட்டில் மீதம் இருந்ததை ரெண்டு நிமிடத்தில் வாய்க்குள் திணித்து விட்டு அவள் நிமிர, “அதுக்காக இப்படியா சாப்பிடுவாங்க?” கேலி செய்தபடி தட்டை வாங்கி ஓரமாக வைத்தான் நிரஞ்சன்.
இருக்கையில் சாய்ந்து அவன் அமர, அவனை நெருங்கி அமர்ந்தாள் நந்தனா.
“நிரஞ்சன், என்ன சொன்னார் அவர்? ரொம்பத் தப்பா பேசிட்டாரா? அவர்கிட்ட பேச வேண்டாம்னு சுகாஸ் முன்னமே வார்ன் பண்ணான். தெரியுமா? நான் கூட அவர் கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டேன் பண்ணுங்கன்னு சொல்லி இருந்தேனே?” என்றவளை அமைதியாகப் பார்த்தான் நிரஞ்சன்.
“என்னைப் பத்தி..” என்று தொடங்கியவள், அவனது கடின பார்வையில், “நம்மை, ஏதாவது தப்பா சொன்னாரா?” என்று மாற்றிக் கேட்க, அவனிடம் அமைதி மட்டுமே பதிலாக வந்தது.
மௌனமாகச் சுவரை வெறித்தான் அவன்.
“நிரஞ்சன், பிளீஸ்” அவள் கெஞ்ச, “வேண்டாம் பொண்டாட்டி. இங்க நல்லவன் எவனும் கிடையாது. நண்பன் யாரும் கிடையாது. எல்லாமே முகமூடி தான். அது கழண்டு விழும் போது எவ்வளவு கேவலமா இருக்கானுங்க” அவன் புலம்ப, அவன் விரல்களோடு தன் விரல்களைப் பிணைத்து, இறுக்கினாள் நந்தனா.
“என்னனு சொல்லுங்க…”
“கேட்காத, பிளீஸ்” அவளின் கண்களைப் பார்த்து அவன் கர்ஜிக்க, அவள் உடல் அனிச்சையாக உதற, இதழ்கள் தாமாக மூடிக் கொண்டது.
“சாரி” அவளின் தலைக் கோதி சொன்னான்.
சிறிய அமைதியான இடைவெளிக்குப் பின், “இன்னைக்கு நான் எப்படி ஆடினேன்?” என்று அவன் கேட்க, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள் நந்தனா.
“சொல்லு பொண்டாட்டி” அவன் கெஞ்ச, மிஞ்சினாள் மனைவி.
“பிளீஸ், பிளீஸ்” என்று அவன் கண்ணைச் சுருக்க,
“என்ன சொல்ல நிரஞ்சன்? அதிரடி ஆட்டம் தான். அதை நான் ஆராய விரும்பல. அதே நேரம் எவனாவது சீண்டி விட்டா, இப்படி ரியாக்ட் பண்ணாதீங்க. கீப் காம் அண்ட்..” (Keep calm and..)
“பிளே யுவர் பெஸ்ட் கிரிக்கெட்” (Play your best Cricket) அவள் சொல்ல வந்ததைக் குறும்பு சிரிப்புடன் முடித்து வைத்தான் அவன்.
“கேப்டன் சொன்னார்” என்றான்.
“ம்ம். கிரிக்கெட் யாருக்கும், யாரும் சொல்லித் தர முடியாது நிரஞ்சன். அது எப்படிச் சொல்ல? தானே இயல்பா வரணும். ஓரளவு நல்லா விளையாடுறவங்களை ட்ரெயின் பண்ணா ஷைன் ஆவாங்க” என்றவள்,
“எல்லோருக்குமே இங்க பிளஸ் அண்ட் மைனஸ் இருக்கும். சுகாஸோட பலவீனம் ஷார்ட் பால் சரியா ஆட முடியாதது. அவனுக்கு என்னால முடிஞ்ச டிப்ஸ் சொல்ல தான் முடியும். அவனுக்கு ஷார்ட் பால் போட்டுப் பிராக்டீஸ் கொடுக்க…”
அந்தச் சொல்லில் அவன் இறுக, சட்டெனப் பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தாள் நந்தனா.
“மேல சொல்லு” என்று அவன் செய்கையில் சொல்ல, “நீங்க தான் பிராக்டீஸ் நல்லா பண்ணனும். பிராக்டீஸ் அண்ட் டிரெய்னிங். அது ரெண்டும் தான் உங்களைப் பெர்ஃபெக்ட் ஆக்கும். மத்தபடி நான் எதுவும் உங்களுக்குக் கத்து…” தாடை இறுக, கண்கள் சிவக்க, அவனுடல் கோபத்தில் உதறியது.
அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அவள்.