இனியொரு பிரிவேது – 16 (3)

அதுவும் மனைவியிடம் இருந்து அதைக் கேட்கும் போது மனம் குளிர்ந்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், ஒரு வித சங்கடமான உணர்வு.

“சாரி நந்து. உன்ன ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன். நான் ரொம்ப இம்மெச்சூர்ட்டா நடந்துக்கறேன் இல்ல?”

“யார்கிட்ட என்கிட்ட தானே டா. நாம நேசிக்கிறவங்க, நம்மளை நேசிக்கிறவங்க கிட்ட மட்டும் தான் நம்மளோட சிறுபிள்ளைத்தனங்களைக் காட்ட முடியும். உங்ககிட்ட மெச்சூர்ட்டா நடந்து நான் என்ன சாதிக்கப் போறேன். நான் நானா இருந்தா தானே உங்களால ரசிக்க முடியும். நமக்குள்ள நடிப்புக்கு என்ன அவசியம். நீங்களா இருங்க நிரஞ்சன்”

“எப்பா.. எவ்ளோ பேசுற. எனக்கு உன்ன மாதிரி எல்லாம் பேச வராது நந்து. நான் உன்னை டிசப்பாய்ண்ட் பண்ணலன்னு கேட்கவே அவ்வளவு சந்தோசமா இருக்கு. இனி வர்ற காலத்துலயும்…”

“பிளீஸ் டா. இப்படியே பேசிட்டு இருக்காத. கடுப்பாகுது” நெருக்கமான நேரங்களில் மட்டும் ஒருமைக்குத் தாவுவாள் நந்தனா. அவன் கண்களில் சின்னதாய் பளிச்சிடல்.

அவனை நோக்கி கை நீட்டினாள்.

“பிராமிஸ் மீ” என்றாள். புருவம் உயர்த்தினான் நிரஞ்சன்.

“கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சப்போ எப்படி இருந்தீங்களோ, அப்படியே இருங்க நிரஞ்சன். அதே கேர் ஃப்ரீ ஆட்டிட்யூட்டோட இருங்க. நீ என்ன வேணும்னாலும் பேசிக்கோ. நான் இப்படித் தான் ஆடுவேன்னு ஒரு பார்வை, ஒரு அலட்டல் இருக்கும் பாருங்க. அப்படியே இருங்க. அந்த நிரஞ்சனோட பயங்கரமான ஃபேன் நான். அவர் மேல் தான் காதலில் விழுந்தேன்”

“அவனைத் தான் கல்யாணம் பண்ணியிருக்க. உனக்காக.. இல்ல.. இல்ல.. நமக்காக.. எனக்காக.. நான் அப்படியே தான் இருப்பேன் நந்து” அழுத்தமாகச் சொன்னான் நிரஞ்சன்.

அவள் முகத்தில் ஆயிரம் மத்தாப்பின் ஒளி, மகிழ்ச்சியின் பிரவாகமாய்.

“எந்தக் காரணத்துக்காகவும் இனி மேல் நீங்களா மேட்ச்ல இருந்து வெளில வரக் கூடாது”

“ப்ச், சத்தியமா பண்ண மாட்டேன் நந்து. நான் ஏதோ கோபத்துல பண்ணது உன்னை இவ்ளோ பாதிக்கும்னு நான் நினைச்சே பார்க்கல. சாரி, பொண்டாட்டி” அவள் கன்னம் பற்றி அவன் கேட்க,

“நிரஞ்சன் கிரிக்கெட்டை ஒதுக்கினது, நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க. என்னால இன்னும் ஜீரணிக்கவே முடியல. எப்படி, எப்படி, ஏன்னு.. யோசிச்சு பைத்தியமே பிடிச்சுடும் போல ஆகிடுச்சு”

“சாரி.. சாரி.. பொண்டாட்டி”

“மன்னிச்சுட்டேன்” என்றாள் குறும்பு புன்னகையுடன்.

“அப்படியே மறந்துடுவியாம். இதுக்காக நாம திரும்பச் சண்டை போட கூடாது. ஓகே?”

“ம்ம். டிரை பண்றேன்” என்றாள் கெத்தாக. சத்தமாகச் சிரித்தான் நிரஞ்சன். அவன் சிரிப்பில், அவள் முகத்தில் அலாதியான மகிழ்ச்சி.

பல நாட்களாகப் பேச வேண்டியதை பேசி முடித்து நிம்மதியாக உறங்கப் போனார்கள். ஆனால், மிக முக்கியமான ஒன்றை அவனிடம் சொல்ல மறந்து போனாள் நந்தனா. ஒருவேளை அப்போதிருக்கும் நல்ல மனநிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்துச் சொல்லாமல் விட்டாளோ? தாமதிக்காமல் சொல்லி இருக்கலாம்.

காலம் சென்ற பின் எதுவுமே அதன் மதிப்பை இழந்து விடுகிறது தான்.

மறுநாள் காலையிலேயே அவளுக்கு அழைப்பு வந்து விட்டது. சிவராஜ், சென்னை அணி நிர்வாகம், கோச், கேப்டன் என்று தொடர் அழைப்புகள். கேப்டனிடம் இருந்தெல்லாம் அழைப்பை அவள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அனைவருக்கும் கொடுக்கப் பதிலும், விளக்கங்களும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போனாள் அவள். ஆனால், அதற்குத் தேவையற்று தான் போனது.

சென்னை அணி அடுத்து பெங்களூர் அணியை எதிர்த்து ஆடியது.

முதலில் ஆடிய பெங்களூர் அணி இமாலய இலக்கை சென்னைக்கு இலக்காக வைத்திருந்தது.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் சவாலான நிலை.

சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி காட்டினார்கள். ஆனால், அதை அவர்களால் தொடரத் தான் முடியவில்லை.

130 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாலு விக்கெட்டுகளை இழந்திருந்தது சென்னை அணி. களத்தில் நிரஞ்சன் இறங்கினான்.

அவனோடு ஜோடியாக நின்றது சென்னை அணியின் தலைவன்.

கேப்டன் அவனுக்கு அருகில் வந்து, அவன் தோளில் தட்டி, “பிளே யுவர் பெஸ்ட் நிரஞ். பார்த்துக்கலாம்” என்று சொல்ல, தலையசைத்தான். அவனுக்கு வீசப்பட்ட முதல் பந்திலேயே அதிரடியை தொடங்கி விட்டான் நிரஞ்சன்.

சிக்ஸ், ஃபோர் என்று பந்துகள் ஒவ்வொரு பக்கமும் பறக்க அவன் கண்கள் தன்னிச்சையாக அங்கிருந்த பெரிய கணினி திரைக்குச் சென்றது.

“தலைவா… தலைவா…நிரஞ்சன்… நிரஞ்சன்” என்ற ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் அவள் முகம். அவனின் ஒரு பாதியின் முகம். கண்களில் நிறைத்துக் கொண்டான் அவன்.

அவனின் மந்தகாசப் புன்னகையை அணிந்திருந்த ஹெல்மெட் மறைத்து விட, பேட்டிங் செய்யத் தயாராக நின்றான் அவன்.

அடுத்த வீசப்பட்ட சுழற்பந்தை (spin ball) அடிக்கச் சற்றே தடுமாறித் தான் போனான் நிரஞ்சன்.

“ஈஸி, ஈஸி” என்று எதிர் பக்கத்தில் இருந்து குரல் கொடுத்தார் கேப்டன்.

தலையை உலுக்கி, அடுத்தப் பந்தை எதிர்நோக்க நின்ற நிரஞ்சனுக்கு அருகில் கிடந்தது பந்து. விக்கெட் கீப்பரிடம் பேசிக் கொண்டே பந்தை கையில் எடுத்த பந்து வீச்சாளர், அவனைக் கடக்கையில் லேசாகத் திரும்பி நக்கல் சிரிப்புடன் அந்த வார்த்தைகளை உதிர்த்து விட்டுப் போனார்.

பல்லாயிரம் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்தனர். கோடி கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் நேரலை பார்த்துக் கொண்டிருக்க, கையில் இருந்த பேட்டை தரையில் ஓங்கி அடித்தான் நிரஞ்சன்.

ஆத்திரம் கண்ணை மறைக்க, எதிரில் நின்ற பவுலரை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அடிக்கப் போனான்.

அவனது முழு உயரத்துக்கு ஓங்கி உயர்ந்த வலக்கரம், எதிரில் இருந்தவன் மேல் அப்படியே இறங்கப் பார்த்தது.

“ஓ.. நோ. வாட்ஸ் ஹேப்பனிங்? சாது நிரஞ்சனா அது?” என்று கமென்ட்டேட்டர்ஸ் அதிர்ந்து வியக்க, கண் முன்னால் விரிந்த காட்சியில், கணவனின் புது அவதாரத்தில், திரை முழுவதும் தெரிந்த அவனது கோப முகத்தில் நந்தனாவிற்குத் தலைச்சுற்ற, கண்கள் மங்கி, மயங்கியது.

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top