“கிரிக்கெட் ஆட எது முக்கியம் நந்தனா? ஃபிட் பாடி ஆர் மைண்ட்?”
“ரெண்டுமே. ஆனா, இட்ஸ் அ மைண்ட் கேம் ஃபர்ஸ்ட். கிரவுண்ட்குள்ள இருக்கற வரை அசாத்திய கவனம் இருக்கணும். அலர்ட்டா இருக்கணும். அது தான் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம்.”
“எல்லாம் சொல்றது ஈஸி.” என்று சலித்தவன், “நீ சொல்றதை கேட்க கூடாதுன்னு, ஃபாலோ பண்ணக் கூடாதுன்னு எனக்கென்ன வேண்டுதலா நந்து? அதை எப்பவும் மனசுல வச்சுட்டு தான் பால் போடுறேன். ஆனா, அது கொடுக்கற அழுத்தமும், பதட்டமும் என்னை இன்னும் மோசமா பவுல் பண்ண வைக்குது. என்னை என்ன பண்ண சொல்ற? கேம் பிரஸர். அதுக்கும் மேல உன்கிட்ட என்னை நிரூபிக்கணும்னு அந்தப் பிரஸரும் கூடச் சேர்ந்துக்குது. எண்ட் ரிசல்ட், என்னை அறியாம நோ பால் போடுறேன். ஐயோ, சொதப்பாத டா நிரஞ்சான்னு மனசுக்குள்ள கத்திட்டு ஓடி வந்தா, அதுவும் தப்பான பாலா போகுது. நான் என்ன பண்ணட்டும் நந்து?” கைகளைக் காற்றில் வீசி, ஆவேசமாகக் கத்தினான்.
“பேட்டிங்கை பொறுத்தவரை முதல்ல மைண்ட் தான் ஆக்டிவா இருக்கணும். இல்லையா? நீ ஈசியா சொல்ற. யார்க்கர் பால் கவனம்னு. ஆனா, பவுலர் என்ன பால் போட போறான்னு கணிக்கவே மைக்ரோ செகண்ட்டுக்கும் கம்மியான நேரம் தானே எங்களுக்குக் கிடைக்கும். அதுக்குள்ள ஒரு பேட்ஸ்மன் எத்தனை வேலை பார்க்கணும். நீயே சொல்லு?” என்றவன்,
“என்ன மாதிரி பால் வரப் போகுது. என்ன ஷாட் அடிச்சா சரியா இருக்கும்? எந்தப் பக்கமா அடிக்கறது? எந்தப் பக்கம் ஆள் நிக்கலனு நோட் பண்ணி அந்தக் கேப்ல அடிச்சு விடணும். குருட்டாம் போக்குல ஒரு ஷாட் அடிச்சா, அவுட் ஆக வேண்டியது தான். நீ எப்பவும் சொல்ற மாதிரி, எதிர்ல இருக்கவனுக்கு என்னோட மைனஸ் நல்லா தெரியும். சோ, என்னைக் குழப்பி விட்டு தான் அவனும் பால் போடுவான். ப்ச், ஐ ஹேட் திஸ் நந்தனா” இது போல விளக்கம் அளிப்பதே சோர்வை அளிக்க, தலையைப் பின்னுக்குச் சாய்த்தான் நிரஞ்சன்.
“என்கிட்ட என்ன நிரூபிக்கணும் நீங்க? முதல்ல ஏன் நிரூபிக்கணும்னு நினைக்கிறீங்க? உங்க திறமை உலகத்துக்கே தெரியும் நிரஞ்சன். உங்க அனுபவத்துக்கு முன்னாடி, நான் எல்லாம் ஒன்னுமே கிடையாது. கிரிக்கெட்டில் கத்துக் குட்டி நான் நிரஞ்சன்” வலக்கரத்தை அவன் கன்னத்தில் பதித்து அவள் கேட்க,
“உனக்காக நான் இதுவரை என்ன செய்திட்டேன் நந்து? எதுவுமே செய்யல. உன் அழகை விட, அறிவை பார்த்து மயங்கி தான் உன்னைக் கல்யாணம் பண்ணேன். ஏன்னு எனக்கே தெரியல. ஆனா, மனசு எப்பவும் உன் பாராட்டுக்கு ஏங்குது. நமக்கு நெருக்கமானவங்க பாராட்டுறதும், தட்டிக் கொடுக்கறதும் தனித் தெம்பு தானே?” என்றவன்,
“ஐ ஃபெயில்டு யூ நந்து.” என்றான் முடிவாக. அந்தக் குரலில் இருந்த சோகமும், வருத்தமும், கரகரப்பும் அவளைக் கண் கலங்கச் செய்தது. ஏற்கனவே அவன் வார்த்தைகளில் நொறுங்கிப் போய் இருந்தாள் அவள்.
“என்ன பேசறீங்க நிரஞ்சன்? எனக்காக என்ன செய்யல நீங்க? நமக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷமாகப் போகுது. வாய் விட்டு நான் இது வேணும்னு எதையும் கேட்கற மாதிரி நீங்க வச்சதே இல்ல.” அவனிடம் இருந்து கசப்பான சிரிப்பொன்று வெளிவந்தது.
“நீயும் சம்பாதிக்கற நந்து. நான் இல்லாமலும், உன்னால எல்லாத்தையும் வாங்கியிருக்க முடியும். இப்பவும் உனக்கானதை நீ தான் வாங்கற. சில நேரம் எனக்கும் சேர்த்து. ஆனா, நான் அதைச் சொல்லல” என்றவன்,
“கிரிக்கெட்டில் உனக்காக நான் என்ன செய்துட்டேன் நந்து? என்னோட பிரஸர், ஸ்ட்ரெஸ், ஃபெயிலியர் எல்லாத்தையும் உன் மேல தான் கொட்டியிருக்கேன். அதைத் தவிர உனக்கு என்ன செய்துட்டேன் நான்? அனலிஸ்ட் நந்தனாவின் புருஷனுக்கு ஒழுங்கா கிரிக்கெட் ஆடத் தெரியலன்ற பேரை தான் வாங்கிக் கொடுத்திருக்கேன். என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு” சோஃபாவில் ஓங்கிக் குத்தினான்.
அவன் மனதில் இத்தனை வருத்தங்கள் இருக்கிறதா? விளையாட்டும், விமர்சனங்களும் கொடுக்கும் அழுத்தம் போதாதென்று, தன்னைத் தானே இத்தனை நிந்தித்துக் கொண்டானா கணவன்? அவனுக்காகத் தவித்தாள் நந்தனா. இதை எதிர்பார்த்திருந்தாள் தான். ஆனாலும், நிதர்சனம் எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது.
“நமக்குள்ள கல்யாணம் சரி வராதுன்னு நான் சொல்ல இது தான் ரீசன் நிரஞ்சன். எனக்குத் தெரியும். நம்மை ஒரு நாள் இப்படிக் கொண்டு வந்து நிறுத்தும் இந்த உலகம்னு. நான் பார்க்கற வேலையை வச்சு, என் அப்பாவை சொல்லி உங்களை ஜட்ஜ் பண்ணுவாங்க, கிரிட்டிசைஸ் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீங்க அதைப் பெருசா எடுத்துப்பீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல நிரஞ்சன்.”
“எவனோ வேலை வெட்டி இல்லாம என் வேலையை வச்சு உங்க பர்பாமென்ஸை பேசினா, அடப் போடான்னு லெஃப்ட் ஹாண்ட்டில் டீல் பண்ணிட்டு போவீங்கன்னு எதிர்பார்த்தேன்.”
“அதான் சொன்னேனே நந்து. என்னால உன்னோட எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேத்த…” அவன் சொல்லி முடிக்கும் முன்பே, “ஸ்டாப் இட் நிரஞ்சன்” என்று கத்தி, அவன் பேச்சை நிறுத்தினாள் நந்தனா.
கோபத்தில் அவளுக்கு மூச்சு வாங்கியது. கணவனுக்குத் தாழ்வு மனப்பான்மையா? அவளிடம் தன்னை நிரூபிக்க ஏன் துடிக்கிறான் அவன்? அவளுக்குப் புரிந்தும் ஏற்றுக் கொள்ளத் தான் முடியவில்லை.
“ஏன் இப்படிப் பண்றீங்க நிரஞ்சன்?” அழுகுரலில் அவள் கேட்க,
“உனக்குப் புரியாது நந்து. கிரிக்கெட் உனக்கு, உங்கப்பாக்கு.. இங்க நிறையப் பேருக்கு ரொம்ப ஈஸியா கிடைச்சுடுச்சு. என்னை மாதிரி முட்டி மோதி மேல வந்தவன் வலியும், வேதனையும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் உங்களுக்குப் புரியவே புரியாது”
நந்தனா கனவில் கூட அவனிடம் இருந்து அப்படியொரு வார்த்தைகளை எதிர்பார்த்திருக்கவில்லை. கோபம் சுனாமியை போலப் பேரலையாக எழுந்து நின்றது.
“நீங்களா நிரஞ்சன் இப்படிப் பேசுறது? என்னால நம்பவே முடியல. என் அப்பா, உங்க மாமனார் அவர். அவரைப் பத்தி உங்களுக்கு நிஜமா ஒன்னுமே தெரியாதா?” ஆதங்கத்துடன் அவள் கேட்க, அவரின் சாதனைகளைச் சொல்ல வந்தான் அவன்.
“இந்தியன் டீம்ல அவருக்கு வாய்ப்பு கொடுக்காம, அவரோட திறமையை மதிச்சு அதுக்குப் பதிலா மும்பை டீம் கோச் போஸ்ட் கொடுத்தாங்கன்னு நினைச்சீங்களா?” அவள் கேட்க, அவன் கண்களில் அதிர்ச்சி. மெல்ல விஷயம் புரிய ஆரம்பிக்க, அவன் கண்கள் பெரிதாக விரிந்தது.
“நீ விளையாடினது போதும், உங்களுக்கு எல்லாம் இந்தியன் டீம்ல இடமில்ல போடான்னு அப்பாவை துரத்தி விட்டாங்க. ஆனா, அப்பா சும்மா விடல. தப்பான வழி தான். ஆனா, அவர்கிட்ட யாரும் நேர்மையா நடந்துக்காத போது, அப்பா மட்டும் ஏன் நேர்மையா இருக்கணும்? கமிட்டியை மிரட்டி தான் அசிஸ்டன்ட் கோச் போஸ்ட் வாங்கினார். சும்மா பேப்பர்ல தான் போஸ்டிங் எல்லாம். அப்பாவை அவ்வளவு ஈசியா ட்ரெயின் பண்ண விடல. எத்தனை வருஷ போராட்டம் தெரியுமா? ஆனா, இன்னைக்கு இந்தியன் டீம்ல ஆடுற சில முக்கியமான பிளேயர்ஸ் அப்பாகிட்ட ட்ரெயின் ஆனவங்க. அதுல நிச்சயம் எனக்குப் பெருமை தான்.”
“சாரி” என்றான்.
அவளோ தொடர்ந்து பேசினாள்.
“நான் கிரிக்கெட்டர் கார்த்திகேயன் பொண்ணு தான். ஆனா, நான் நிக்கற இடம் நானே சம்பாதிச்சது நிரஞ்சன். சிவராஜ் சார் இன்ஸ்டியூட்டில் படிச்சேன். அவ்ளோ தான். அவரோட வேலையை என்னால பார்க்க முடியும்னு நம்பிக்கை வரவும் தான் எனக்கு வேலை கொடுத்தார் அவர். ஒவ்வொரு வருஷமும் அவர்கிட்ட எவ்வளவு பேர் படிக்கறாங்க தெரியுமா? எல்லோருக்கும் அவர் வேலை கொடுக்கறது இல்ல. எல்லோரையும் அவர் கூடவே வச்சுக்கறதும் கிடையாது”
“தெரியும் நந்து. எனக்கு, உன்னை நினைச்சாலே அவ்ளோ பெருமையா இருக்கு. இவ என் பொண்டாட்டின்னு நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக்கறேன் நான்.” காற்றில் அலைபாய்ந்த அவளின் கூந்தலை முகத்தில் இருந்து விலக்கி விட்டான். அவள் கண் பார்த்து,
“ஆனா, அதையே உனக்குத் திருப்பித் தந்தேனா? இல்லையே. உனக்காக என்ன செஞ்சுட்டேன் நான்? எப்பவும் என்னால உனக்குத் தலைகுனிவு தான். கேவலமான விமர்சனங்கள் தான்”
“பிளீஸ், ஸ்டாப் இட் நிரஞ்சன். உங்க கோச் சொல்றதை மட்டும் நீங்க கேட்டா போதும். உங்களைப் பத்தி நியூஸ் போட்டு, விமர்சனம் பண்ணி தங்களுக்குச் சீப் பப்ளிசிட்டி தேடிக்கற ஆளுங்களைப் பத்தி கவலையே படக்கூடாது. அவங்க சொல்றதை எல்லாம்…”
“நான் மயிரா கூட மதிக்கறது கிடையாது நந்து. ஆனா, அவனுங்க உன் பேரை உள்ள கொண்டு வந்தாலே… என்னையும் அறியாம ரியாக்ட் பண்ணிடுறேன்.”
இப்படி மனம் திறந்து பேசுவதை என்றோ செய்திருக்க வேண்டும் என்று உணர்ந்து அக்கணம் மனதார வருந்தினாள் நந்தனா.
கணவனின் குரலில் இருந்த அவசியமற்ற குற்ற உணர்வை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. படக்கென்று எழுந்து அவனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்தாள் அவள்.
அவன் முகத்தை இரு கைகளாலும் அழுந்த பற்றி, “உங்களை நான் பாராட்டினது இல்ல தான் நிரஞ்சன். ஆனா, எப்படிப் பாராட்டுறது? நான் சிவராஜ் இல்லனா கேப்டனை பாராட்ட முடியுமா? அது நல்லாவா இருக்கும்? இல்ல சரியா தான் இருக்குமா? அவங்களைப் போலவே உங்களுக்கும் நான் எப்பவும் ஃபேன் கேர்ள் நந்தனா தான். நீங்க என்ன பண்ணாலும் என்னால வியந்து, வாய் பிளந்து, “வாவ்” சொல்லி பார்க்க மட்டும் தான் முடியும் நிரஞ்சன். கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, குதிச்சு ஆட தான் முடியும். அதைத் தான் முன்னாடி செஞ்சேன். இப்பவும் செய்யறேன்.”
“கிரவுண்ட்ல நீங்க ஆல் ரவுண்டர் நிரஞ்சன் கிருஷ்ணகுமார். என்னோட டீன் ஏஜ் கனவு கிரிக்கெட் ஹீரோ நிரஞ்சன். நீங்க எப்படி ஆடினாலும், இந்த நந்தனா பார்ப்பா. நீங்க சொதப்பினா கஷ்டப்படுவா, கோபப்படுவா. நீங்க அதிரடி ஆட்டம் ஆடினா, அவளைக் கையில பிடிக்க முடியாது. நீங்க.. என்னைக்குமே நீங்க தான். என்னைக் கல்யாணம் பண்ணதால அது மாறப் போறதில்ல நிரஞ்சன். உங்களுக்கு நான் சொல்றது புரியுதா?”
மனம் நெகிழ மனைவியைப் பார்த்தான் நிரஞ்சன்.
“அனலிஸ்ட் நந்தனா, உங்க பேட்டிங் பவுலிங் அனலைஸ் பண்ணி தான் கிரிக்கெட் கத்துக்கிட்டா. உங்க மேல அவளுக்கு எப்பவும் பிரம்மிப்பு இருக்கும் நிரஞ்சன்”
“நந்து…”
“நீங்க நீங்களா இருங்க. யாருக்காகவும், எதுக்காகவும் உங்களை மாத்திக்க வேணாம். இந்த உலகத்துக்கோ, இல்ல எனக்கோ நீங்க நிரூபிக்க என்ன இருக்கு? உங்க டேலண்ட் உலத்துக்கே தெரியும் நிரஞ்சன். கிரிக்கெட்குள்ள வர்றதுக்கு வேணும்னா உங்களுக்கு லக் தேவைப்பட்டு இருக்கலாம். ஆனா, நீங்க சரியா பெர்பார்ம் பண்ணலன்னா அடுத்தடுத்து உங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கவே மாட்டாங்க. ரெண்டு மேட்ச் ஆட விட்டு அப்புறம் டாட்டா காட்டியிருப்பாங்க.”
“எனக்கு நல்லா தெரியும். உங்களை எப்படா வெளில உட்கார வைக்கலாம்னு எத்தனை பேர் காத்துட்டு இருக்காங்கன்னு. ஆனா, அவங்களால ஒன்னுமே பண்ண முடியாது. ஏன்னா, உங்களை மாதிரி டேலன்ட்டட் ஆல் ரவுண்டர் அவங்களுக்குக் கிடைக்கவே மாட்டாங்க”
“போதும் நந்து.” குற்றம் குறைகளைச் சுட்டினால், விமர்சனங்கள் வைத்தால் கண்ணைச் சுருக்கி கேட்டுக் கொள்வான். பாராட்டும், புகழ்ச்சியும் அவனை நெளிய வைத்தது.