இனியொரு பிரிவேது – 16 (1)

கணினித் திரையில் மீண்டும் போட்டியை ஓட விட்டு, நிரஞ்சன் நீட்டிய காஃபி கோப்பையை வாங்கிக் கொண்டாள் நந்தனா.

“தாங்க்ஸ் மிஸ்டர். நிரஞ்சன் கிருஷ்ணகுமார்” என்றாள், அவனைச் சீண்டும் விதமாக.

“ஆல்வேஸ் வெல்கம் மிஸஸ். நிரஞ்சன்” என்றான் குறும்பாக.

அவனது மனநிலைக்குத் தகுந்தவாறு தன்னைக் கையாளும் கணவனைக் காண்கையில் அவளுக்குக் கடுப்பாக வந்தது.

போட்டியை நேரலையில் பார்த்தபடி குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தாள்.

“கோபமா?” இப்போது கேட்பது அவன் முறையானது.

“சாரி, பொண்டாட்டி” நெருங்கி அவளின் கழுத்தில் இருந்த டாட்டுவை வருடியபடி அவன் சொல்ல,

“ப்ச், நிரஞ்சன். எல்லாப் பக்கமும் கேமரா இருக்கு. கையை எடுங்க முதல்ல” எகிறிய கோபத்துடன் எச்சரித்தாள்.

“இது ஒரு தொல்லை” என்று நகர்ந்து அமர்ந்தான் அவன்.

போட்டி அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி பரபரப்பாகச் செல்ல, இருவரும் அதில் மூழ்கிப் போனர்கள்.

அன்றும் சென்னை அணி அதன் புதிய இயல்பாக ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.

தொடர் தோல்வியினால் வீரர்களுக்கு மட்டுமல்ல, சென்னை அணியைச் சார்ந்த அனைவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நந்தனா மறுநாள் நடக்கவிருக்கும் மீட்டிங்கை நினைத்து இப்பொழுதே மானசீகமாக உடல் சிலிர்த்துக் கொண்டாள்.

அதைக் காட்டிலும் தான் அனுப்பி இருக்கும் ஈ – மெயிலுக்கு எப்படி எதிர்வினை ஆற்றப் போகிறார்களோ என்று இப்போதே பயங்கொள்ளத் தொடங்கியிருந்தாள் அவள்.

ஆனால், என்ன நேர்ந்தாலும் சரி. அவள் தன் முடிவில் இருந்து மாறப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

“திரும்பவும் தோத்துட்டோம் நந்து. பேசியே கொல்லப் போறானுங்க. இந்த மீடியா வேற சும்மா இருக்காதே” புலம்பியபடியே எழுந்து கொண்டான் நிரஞ்சன்.

அன்றைக்கு அவர்கள் வீடு திரும்பும் போது நள்ளிரவு ஒரு மணியாகி இருந்தது.

மாலை வெயிலிலும், இரவு பனியிலுமாகப் பல மணி நேரங்கள் வெளியில் அமர்ந்திருந்தால் உடல் வியர்வையில் நனைந்து உலர்ந்திருக்க இருவரும் முதல் வேலையாகக் குளிக்கப் போனார்கள்.

நிரஞ்சன் குளித்து இடையில் துண்டுடன் வர, அவனைப் பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டாள் நந்தனா.

அவனது வெற்று முதுகில் முகம் பதித்து நின்றாள். கையில் எடுத்த உடையை அப்படியே வார்ட்ரோபில் திரும்ப வைத்து விட்டு, மெல்ல மனைவியின் கரம் பற்றி அவளைத் தன்னை நோக்கித் திருப்பினான் நிரஞ்சன்.

இப்போது முகத்தை அழுத்தமாய் அவன் மார்பில் பதித்துக் கொண்டாள் அவள்.

அவர்கள் இருவரின் வாழ்வையும் தலைகீழாக மாற்றப் போவதில்லை என்றாலும், வெகு நிச்சயமாகப் பெரிதான மாற்றத்தை கொண்டு வரப் போகும் முடிவை, யாரிடமும் கேட்காமல், அவ்வளவு ஏன் கணவனிடம் கூட ஆலோசிக்காமல் எடுத்திருந்தாள் அவள்.

அது அவனுக்குத் தெரிய வந்தால் என்ன செய்வான் என்பதை நினைக்கையிலேயே அவளுக்கு உள்ளுக்குள் உதறியது.

அதை விட நாளை சென்னை அணி நிர்வாகம் அவளிடம் கேட்கப் போகும் கேள்விகளுக்கு இப்போதே பதில்களை ஒத்திகைப் பார்க்கத் தொடங்கியிருந்தாள் அவள்.

கணவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் வேறு வரிசை கட்டி நின்றது. அதன் முடிவாக வரப் போகும் வார்த்தை போருக்கு அவள் தயாராகவே இல்லை. அவள் உடலிலும் மனதிலும் துளி கூடத் தெம்பில்லை.

அந்த நிமிடம் கழுத்தை நெரித்த அத்தனையையும் மறந்து விட விரும்பினாள் அவள்.

அவளும், கணவனும் மட்டுமேயான ஓர் உலகத்திற்குள் தொலைந்துப் போக விரும்பினாள்.

எந்த வித கேள்விகளும் இன்றி அவளை அப்படியே புரிந்து கொண்டான் நிரஞ்சன். அவள் உச்சரிக்காமலயே அவள் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவனாக, அவளது உச்சியில் இதழ் பதித்தான்.

அவன் இதழ்கள் மனைவியின் முகத்தில் முத்த ஊர்வலத்தைத் தொடங்கியது.

அவர்களின் பணிச் சூழல் காரணமாக இருவருமே ஒரு வித மன அழுத்தத்தில் தான் இருந்தனர். கண்ணாடி மனநிலை. இறுகப் பற்றினால் சில்லு சில்லாக நொறுங்கி விடும் நிலை.

அவர்களின் அலைப்புற்ற மனம் அமைதியை விரும்ப, இருவருக்கும் ஒருவரை ஒருவர் அதிகமாகத் தேடியது.

மார்பில் பதிந்திருந்த மனைவியின் முகத்தை இரு கைகளிலும் அள்ளி எடுத்தவன், அலைபாய்ந்த அந்தக் கண்களுக்குள் புதைந்துப் போக விரும்பினான். கண்ணிமைக்கும் கணத்தில் அவளைத் தனக்குள் கொண்டு வந்தவன், அவளுள் தொலைந்து போனான்.

மூன்று மணியளவில் அவன் சூடாகத் தோசை வார்த்துக் கொடுக்க, தக்காளி சட்னி தொட்டு, அவதி அவதியாக அதை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் நந்தனா.

“இன்னும் ஒரு தோசை நந்து”

“ம்ஹூம். போதும்” என்றவள், அவனுக்குத் தோசை வார்க்க, சூடாக உண்ணத் தொடங்கினான் நிரஞ்சன்.

பத்து நிமிடங்களில் கையில் பிளாக் டீயுடன் அவர்களின் அறைக்குத் திரும்பியிருந்தனர். பால்கனி சோஃபாவை நிறைத்தனர்.

இருவருக்கும் நடுவில் கனமான கேள்விகள் கேட்கப்படக் காத்திருக்க, தழுவிய காற்றுக்கு உடலை கொடுத்து விட்டுக் கண் மூடி அமர்ந்திருந்தனர் இருவரும்.

நந்தனா தான் அதற்கு மேலும் தள்ளிப் போட விரும்பாமல் முதலில் பேச்சைத் தொடங்கினாள்.

“இன்னைக்கு மேட்ச் நீங்க ஏன் விளையாடல நிரஞ்சன்?”

எதிர்பார்த்திருந்த கேள்வி தான். ஆனாலும், அவள் கேட்கும் போது பதிலின்றி இருளை வெறித்தான் அவன்.

“ஏன் நிரஞ்சன்?” அவன் பக்கமாகத் திரும்பி அமர்ந்து, அவன் தோளை தொட்டுக் கேட்டாள்.

“எப்படிச் சொல்லன்னு தெரியல நந்து. இப்ப யோசிச்சா சில்லியா இருக்கு. ஆனா, அந்த நிமிஷம் எனக்கிருந்த கோபத்துல என்னால அப்படியொரு முடிவு தான் எடுக்க முடிஞ்சது”

“என்ன கோபம் நிரஞ்சன்? எதுக்காகக் கோபம்? இதுவரை நீங்களா ஒரு மேட்ச் கூட மிஸ் பண்ணது கிடையாது தானே? இப்ப மட்டும் ஏன்?”

கோபத்தில் கிரிக்கெட்டை ஒதுக்கினானா கணவன்? என்ற ஆதங்கம் அவளுக்கு. ஏனோ அவன் முடிவை சாதாரணமாக அவளால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

“போன மேட்ச்ல நான் டீம்ல இருந்தேன். ஆனா, எனக்கு ஒரு ஒவர் கூடக் கொடுக்கல கேப்டன். என்னைப் பவுலிங் பண்ணவே சொல்லல. அதே தான் பேட்டிங்கும் நடந்தது. நான் இறங்க வேண்டிய இடத்தில ரவி இறங்கினான். டீம்ல இருக்கும் போதே என்னை மதிக்காம ஒதுக்கினா.. எனக்கு எப்படி இருந்திருக்கும்?”

“நிரஞ்சன் இதெல்லாம் ஒரு காரணமா?”

“எனக்குத் தெரியும். நீ இப்படித் தான் சொல்லுவன்னு. உனக்கு என்னோட வலி புரியப் போறதில்ல. எனக்கு எவ்ளோ இன்சல்டிங்கா இருந்தது தெரியுமா? அதான் இன்னைக்கு வேணும்னு ட்ராப் அவுட் ஆனேன்”

அவளுக்கு அப்படியே தலையில் ஓங்கி அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

அவன் முகத்திலேயே, “குரோ அப்” என்று கத்த வேண்டும் போலிருந்தது.

அவனை நேராகப் பார்த்து, “மேட்ச் தொடங்கும் முன்னமே கேப்டன் கிட்ட கேம் பிளான் இருக்கும். ஆனா, எல்லா நேரமும் அவர் அதை ஃபாலோ பண்ண மாட்டார். மோஸ்ட்லி உள்ளுணர்வை வச்சு அந்த நிமிஷ முடிவெடுக்கறவர் அவர். அது நிறைய நேரம் சரியாவும் இருக்கும். அதனால் தான் சக்சஸ்புல் கேப்டனா இருக்கார் அவர். உங்களுக்கு அது தெரியும் தானே? அவருக்குக் கீழ தானே இந்தியன் டீம்ல ஆடுனீங்க? வேர்ல்ட் கப் அடிச்சீங்க?” அவள் நிதானமாகக் கேட்க, அவனிடம் ஆழ்ந்த அமைதி.

“பஞ்சாப் டீம்ல எல்லோருமே நல்லா பேட் பண்ணுவாங்க. ஒருவேளை நீங்க பவுல் பண்ணியிருந்தா, நிறைய வோய்டு அண்ட் நோ பால் போட்டு…”

“ஓஹோ. நான் கேவலமா பால் போட்டு அவனுங்களுக்கு ரன்னை வாரி வழங்கி இருப்பேன்னு சொல்ற. அப்படித் தானே?” அடக்க முடியா கோபத்தில் அவன் மார்பு கூடு ஏறியிறங்க கத்தினான் நிரஞ்சன்.

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே?”

“அப்போ உன்னோட ரிப்போர்ட் அப்படிச் சொல்லுச்சா?” கத்தியவனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் நந்தனா.

அவளது வேலையை அவன் இதுவரை கேள்விக் கேட்டதே கிடையாது. இன்று கேட்கும் நிலை வந்திருக்கிறது என்றால், தன் மேலும் கோபமாக இருக்கிறானா கணவன்?

முகத்தை உயர்த்தி, “கிரிக்கெட்டை கத்து தா. வாழ்க்கையைக் கத்துத் தா. அப்படினு கேட்ட நிரஞ்சன் எங்க போனார்?” அவன் கண்களைப் பார்த்து அவள் கேட்க, தாடை இறுக அவளின் கண்களைச் சந்திக்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டான் அவன்.

“உங்களுக்கு என்ன கோபம் நிரஞ்சன்? முதல்ல யார் மேல கோபம்? என் மேலயா? நான் சொல்லி நீங்க கேட்கப் போறீங்களா என்ன?”

“நீ சொல்லி நான் என்ன கேட்கல நந்து? இல்ல தெரியாம தான் கேட்கறேன். நீ சொல்லி என்ன கேட்கல நான்? நீயே சொல்லு கேட்போம்” கண்களில் கனல் பறக்க கத்தினான்.

அவளுக்குக் கைகள் உதறியது. தேநீர் கோப்பையை அழுத்தமாகப் பற்றினாள்.

error: Content is protected !!
Scroll to Top