இனியொரு பிரிவேது – 14 (2)

சரியாக ஒரு வருடம் முன்பு மகள் கொடுத்த அதிர்ச்சி, அவளின் முடிவு அவர்களை உடைந்து போகச் செய்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், அப்போதும் மகள் மேல் இருந்த நம்பிக்கையில் அவள் முடிவை கேள்விகளின்றி அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் அவர்கள்.

இப்போதும் மகள் கணவனோடு இருக்க வேண்டும் என்று சொல்ல, பூரித்துப் புன்னகைத்தார் பூர்ணிமா.

“உன் விருப்பத்தை மீறி நாங்க என்ன செய்திடப் போறோம் நந்து மா. நீ மாப்பிள்ளை கூடவே இரு டா. நாங்க அங்க வந்து உன்னைப் பார்த்துக்கறோம்” பூர்ணிமா சொல்ல, பூவாய் மலர்ந்தது அவள் முகம்.

“அம்மா டின்னர் செய்யப் போறேன் நந்து. நீ ரெஸ்ட் எடு” என்று விட்டு அவர் வெளியேற, படுக்கையில் சரிந்தாள் நந்தனா.

கணவன் கண்களுக்குள் வந்து சிரித்தான்.

காரணமின்றி அவன் சிரிக்க மறந்த நாட்களும் இப்போது அவளுக்கு நினைவில் வந்தது.

“ஒரு ரன் நந்து. ஒரே ஒரு ரன், நான் எடுத்திருந்தா அன்னைக்கு முடிவே மாறியிருக்கும். ஆனா, அந்த யார்க்கர் பால் என்னை…” புலம்பினான் நிரஞ்சன்.

“நிரஞ்சன், அன்னைக்கு நடந்தது எதுக்கும் நீங்க பொறுப்பில்ல. நீங்க ஒரு ரன் எடுத்து சூப்பர் ஒவர் போய் இருந்தாலும், கப் மும்பைக்குத் தான் போய் இருக்கும்” அந்த வருடத்தின் ஐபிஎல் தோல்வியைக் கடந்து வரவே அவனுக்குப் பல மாதங்கள் பிடித்தது.

அவள் தான் பல்வேறு விதமாகப் பேசி அவனை அந்தக் குற்ற உணர்வில் இருந்து வெளியில் கொண்டு வந்தாள்.

“அப்பாடா” என்று அவள் நிமிரும் நேரம், உலகக்கோப்பை வந்தது.

அரை இறுதி வரை சென்று, தோல்வியைத் தழுவி திரும்பியது, மீண்டும் அவனின் மனஅமைதியை முழுவதுமாகக் கலைத்துப் போட்டது.

அந்நேரம் ரசிகர்கள், விமர்சகர்கள் கொடுமை போதாதென்று இந்திய அணி நிர்வாகமும் வீரர்களுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்தது.

அவர்களுக்குக் கட்டுப்பாடுகளை, பயிற்சிகளை மிகக் கடுமையாக்கியது.

இந்திய அணி வெளிநாடுகளுக்கு, போட்டித் தொடர்ளுக்காகச் செல்லும் போது, இனி அவர்களின் மனைவி, காதலி என்று யாரும் உடன் வரக் கூடாது என்ற விதியை மீண்டும் அமலுக்குக் கொண்டு வரப் போகிறோம் என்று வீரர்களை மிரட்டியது நிர்வாகம்.

மனைவி, காதலி உடன் இருந்தால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று காரணம் சொன்னார்கள்.

“நாங்க என்ன ரோபோக்களா?” கொதித்தனர் வீரர்கள்.

நிரஞ்சனால் நிர்வாகமும், பயிற்சியும், விமர்சனங்களும் கொடுத்த மன அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதளவில் பெரிதும் துவண்டான் அவன்.

அந்த மாதம் நியூசிலாந்து தொடருக்கு சென்று விட்டு, வெற்றியுடன் மட்டும் திரும்பாமல் தோள் பட்டையில் காயத்துடனும் திரும்பினான்.

ஓய்வு அவனை ஓய செய்தது. ஆனாலும், அவனது போராட்ட குணம் அவனை விட்டுப் போகாதிருக்க, அதில் இருந்தும் மீண்டு வந்தான் அவன்.

அவன் இயல்பு நிலைக்கு மீள அடுத்தடுத்த போட்டிகள் அவனுக்குப் பெரிதும் உதவியது.

பழைய நிரஞ்சனாக மாறியிருந்தான் அவன். அவனது பேட்டிங், பவுலிங் சிறப்பாகி, அதிரடிக்குத் திரும்பியிருந்தான்.

அந்நிலையில் தான் அந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் ஆரம்பமானது.

கிரிக்கெட்டை போலத் தான் நந்தனாவின் திருமண வாழ்க்கையும் இருந்தது. எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுடன், முடிவுகளுடன் அவளுக்கு அதிர்ச்சியையும், இன்ப அதிர்ச்சியையும் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தது.

நிரஞ்சன், அவன் நேசிக்கும் கிரிக்கெட் என இரண்டின் மேலும் அவளுக்குத் தீராக் காதல் இருந்ததினால் அனைத்தையும் எளிதில் கடந்தாள் நந்தனா.

மனதை தொட்டு சொல்ல வேண்டும் என்றால், திருமண வாழ்க்கையை ரசித்துத் தான் வாழ்ந்தாள் அவள்.

அவளுக்குப் பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை. ஏமாற்றங்களை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் சுலபமாக அவளால் அதை எதிர்கொள்ள முடிந்தது.

கணவனுடன் ஒன்றாகக் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு, உடற்பயிற்சி செய்து, கிரிக்கெட் ஆடி, கதை பேசி, சிரித்து என அவர்கள் சந்தோசமாக இருந்த நாட்கள் தான் அதிகம். ஆனாலும், சண்டையிடும் நாட்களின் எண்ணிக்கையும் அவளை அதிகம் தொல்லை செய்யவே செய்தது.

அந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் தொடங்க இரண்டு நாட்களே இருந்த நிலையில் அவளுக்கு முதல் அதிர்ச்சியைக் கொடுத்தான் சுகாஸ்.

அவளிடம் கொடுக்கப்பட்ட சென்னை அணி வீரர்களின் பட்டியலில் சுகாஸின் பெயர் இல்லாதிருக்க, பட்டியலை மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பிச் சரி பார்த்தாள் அவள்.

முடிவில் சிவராஜிடம் போய் நின்றாள்.

“இந்தச் சீசன் சுகாஸ் விளையாடல நந்து” தன் வேலையில் கவனமாக அவர் சொல்ல,

“ஏன்?” என்றாள் நம்ப முடியாத அதிர்வுடன்.

“தெரியல. அவனே விலகிட்டான். மேனேஜ்மென்ட் கூட ஏதோ பிரச்சினை போல” என்றவர்,

“ப்ச், டீமும், ஃபேன்ஸிம் அவனை ரொம்பவே மிஸ் பண்ணுவோம். ஆனா, அவன் வர மட்டான் போல” என்று முடித்து விட்டு, தன் வேலையில் மூழ்கினார் அவர்.

அவசர அவரமாக அவனை அழைத்தாள். அவளின் அலைபேசி அழைப்புகளை எடுக்கவேயில்லை சுகாஸ். இருபதிற்கும் மேற்பட்ட முறைகள் முயன்று விட்டு, இறுதியில் நிரஞ்சனின் எண்ணில் இருந்து அழைத்தாள் நந்தனா.

“பிளீஸ், நிரஞ்..” என்று அவன் தொடங்க,

“இட்ஸ் மீ” என்று கத்தினாள் அவள்.

“பிளீஸ், என்னை எதுவும் கேட்காத நந்து. என்னால இப்போ எதையும் சொல்ல முடியாது.” அவள் மௌனமாகச் செவிசாய்க்க,

“ஆனா, காரணத்தை உன்கிட்ட கண்டிப்பா ஒரு நாள் சொல்வேன் நந்து. நடந்ததை ஜீரணிக்க எனக்குக் கொஞ்சம் டைம் கொடேன் பிளீஸ்” அதற்கு மேல் அவனை எதுவுமே கேட்கவில்லை நந்தனா.

இந்த முடிவை வலிக்க, வலிக்கத் தான் எடுத்திருப்பான் என்பது அவன் குரலிலேயே தெரிய, “ஓகே. ஆனா, உன்னை டீமில் பார்க்க ஐ ஆம் வெயிட்டிங் சுகாஸ்” என்றாள் குரலில் அவன் மீதான நட்பையும், அன்பையும் தேக்கி.

“தாங்க்ஸ் நந்து” என்றான் சுகாஸ்.

சென்னை அணியில் சுகாஸின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது அணி நிர்வாகத்திற்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். அதனால், சாமர்த்தியமாகப் போட்டியின் அழுத்தத்தை மற்ற வீரர்கள் மேல் திருப்பியது அணி நிர்வாகம்.

நிரஞ்சன், ரவி, ஷான் என்று மூத்த வீரர்கள் அதிக நெருக்கடிக்கு உள்ளானார்கள்.

அதிலும் நிரஞ்சன், ரவி போன்ற ஆல் ரவுண்டர்களின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால், துரதிஷ்டவசமாக அந்த வருடம் சென்னை அணிக்கு எல்லாமே எதிராகத் தான் இருந்தது.

மைதானங்கள், பிட்ச் (Pitch), காலநிலை என எதுவுமே அவர்களுக்குச் சாதகமாக இல்லை. ஐபிஎல்லை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு தான் போட்டிகள் நடைபெறும். அந்த வருடம் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. விளைவு, பந்து வீச சிரமப்பட்டனர் வீரர்கள்.

மேலும், காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் அவ்வளவு குறைகள். வீரர்கள் பலரும் மோசமான ஃபார்மில் (out of Form) இருந்தார்கள்.

சென்னை அணி தோல்வியுடன் தொடரைத் தொடங்கி, தோல்வியுடன் தொடர்ந்தது.

ராஜ், நிரஞ்சன், கேப்டன், ஷான் என்று பேட்டிங் வீரர்கள் சிறப்பாக ஆடினால், அந்தப் போட்டியில் பந்து வீசும் வீரர்கள் சொதப்பினார்கள்.

பந்துவீச்சு சிறப்பாக இருந்தால், பேட்டிங் சொதப்பியது.

ராஜஸ்தானிற்கு எதிரான அன்றைய போட்டியில் நிரஞ்சன் தொடர்ந்து இரண்டு வைட் மற்றும் ஒரு நோ பால் வீச, பொறுமைக்குப் பெயர் போன கேப்டன் பொங்கியிருந்தார்.

அவர் இரண்டு கைகளையும் காற்றில் வீசி, “என்ன பண்ற நிரஞ்? எந்த டீமுக்கு ஆடுற நீ?” என்று கர்ஜிக்க, அவமானத்தில் சிறுத்துப் போனது நிரஞ்சனின் முகம்.

“ஃபோகஸ், ஃபோகஸ்” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்து கேப்டன் செல்ல, இயல்புக்குத் திரும்பப் படாதப் பாடுபட்டான் நிரஞ்சன்.

அந்தப் போட்டியில் அடுத்தடுத்து அவன் இரண்டு விக்கெட்களை எடுக்கவும் தான், அவனுக்கு நிம்மதியானது.

“வெல் டன்” என்று இப்போது பாராட்டத் தவறவில்லை கேப்டன். ஆனால், தன் மேலேயே நம்பிக்கையை இழக்கத் தொடங்கியிருந்தான் நிரஞ்சன்.

அவனது அந்தப் போக்கு நந்தனாவை கவலைக்குள்ளாக்கி மன அழுத்தத்திற்குள் தள்ளியது.

ராஜஸ்தான் உடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும் புள்ளி பட்டியலில் மிகவும் பின் தங்கி இருக்க, பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது.

புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது சென்னை அணி. ஆனால், கடைசியில் இருந்து இரண்டாம் இடம்.

லீக் போட்டிகளில், இன்னும் ஆறு போட்டிகளைச் சென்னை அணி சந்திக்க வேண்டியிருந்தது. அதில் ஐந்து போட்டிகளை வென்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும் எனும் அபாயகரமான நிலையிலிருந்தது சென்னை அணியின் நிலைமை.

அது சென்னை அணி ரசிகர்களைப் பெரிதும் ஏமாற்றதிற்கு உள்ளாக்கியது.

செய்திகள், இணையத் தளங்கள், இணைய உலகமான ஃபேஸ்புக், டிவிட்டர் என்று எங்குத் திரும்பினாலும் சென்னை அணியை அடித்து வெளுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு வீரனின் ஆட்டமும் ஆராய்ந்து அலசப்பட்டு, காயப் போடப்பட்டது. வீரர்களின் பலவீனங்கள் பூதாகரமாக உருமாற்றம் பெற்றுப் பேசப்பட்டது.

இணையம் போதாது என்று புதிதாக முளைத்த யூடியூப் சேனல்களும், அவர்கள் பங்கிற்கு வீடியோ பதிவு செய்து விமர்சிக்க ஆரம்பித்திருந்தது.

“அனலிஸ்ட் மனைவி, கோச் மாமனார் என்று குடும்பத்தில் கிரிக்கெட் எக்ஸ்பர்ட்களைக் கூடவே வைத்திருக்கும் நிரஞ்சன் கிருஷ்ணகுமாரின் பர்பார்மென்ஸ் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது?” என்றது ஒரு யூடியூப் சேனல்.

“அதிரடி ஆட்டக்கார நிரஞ்சன் எங்குப் போனான்? என்பதைத் தொடர்ந்து,

மூத்த வீரரின் விமர்சனத்தை மீண்டும் தோண்டி எடுத்தது டிவிட்டர் உலகம்.

“நிரஞ்சன் மாமனாரிடம் கிரிக்கெட் கற்றுக் கொள்ள வேண்டும்” மீண்டும் வைரலாகி இருந்தது.

“நிரஞ்சனின் மனைவி நந்தனா யாரென்று தெரியுமா? அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கார்த்திகேயனின் மகள் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?”

“நிரஞ்சனின் மாமனார் கார்த்திகேயன் யார் என்று தெரியுமா? இந்தியாவிற்குப் பல சிறந்த வீரர்களைத் தந்த மும்பை டோமஸ்டிக் அணியின் கோச். ஷர்மா, ராஜ், ஏன் ஹிரித்திக் கூட அவரின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் தான்” என்ற செய்தியில் தொடர்ச்சியாக,

“கார்த்திகேயன் முதலில் மருமகனுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இல்லையேல், நிரஞ்சனின் நிலை மிக மோசமாகி விடும். நிரஞ்சன் ஆட்டத்தை இதே போலத் தொடர்ந்தால், கிரிக்கெட் எப்படி ஆட வேண்டும் என்று விரைவில் மறந்து விடுவார் என்றே தோன்றுகிறது”

அவனை நோக்கி வீசப்பட்ட ஒவ்வொரு தனிப்பட்ட தாக்குதலும், நிரஞ்சனை குறித் தவறாமல் தாக்கியது.

நந்தனா எதற்குப் பயந்தளோ, அது தான் அப்போது நடந்திருந்தது.

அவளுக்குத் தெரியும். அவள் இதை எதிர்பார்த்தே இருந்தாள். என்ன ஒன்று சத்தமாகச் சொல்லவில்லை. அவனிடம் சொல்லவில்லை, அவ்வளவு தான். ஆனால், அவளுக்கு நிச்சயமாகத் தெரியும், ஒருநாள் அவளது வேலையை வைத்து, அவளது அப்பாவை கொண்டு கணவனை விமர்சிப்பார்கள், தாக்குவார்கள் என்று.

அதில் அவனுக்குப் பாதிப்பு நிச்சயம் இருக்கும். அவன் உடைந்துப் போவான். அவர்களது திருமண வாழ்க்கை அதனால் பாதிக்கப்படும் என்று முன்னரே கணித்திருந்தாள் அவள்.

நிரஞ்சன் அந்தத் தனிப்பட்ட தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுவது தெரிய, அவனுக்காக வருந்தினாள் அவள்.

“நிரஞ்சன், இதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. நீங்க பார்க்காத விமர்சனமா?” என்றாள் மென்மையாக,

“இவனுங்களுக்கு வேற என்ன வேலை நந்து? இப்படித் தான் பேசுவானுங்க அறிவே இல்லாம. ஆனா, என்னைப் பத்தி மட்டும் பேசாம, ஏன் உன்னையும் உள்ள இழுக்கறானுங்க? என் பொண்டாட்டியை பத்தி பேச இவனுங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது?” ஆத்திரம் மிக அறை அதிர கத்தினான் அவன்.

“அதென்ன நான் பார்க்காத விமர்சனமா கேட்கற? யாரா இருந்தாலும், எந்தக் கொம்பனா இருந்தாலும், என் ஆட்டத்தை மட்டும் தான் விமர்சனம் பண்ணனும். அதான் அறம். அதைத் தான் என்னால சரியான விதத்துல எடுத்துக்க முடியும். என் சொந்த வாழ்க்கையை… மனைவி, மாமனாரை பத்தி பேச எந்த நாய்க்கும் தகுதியோ, அருகதையோ கிடையாது. அதை விமர்சனமா நான் பார்க்க கூட மாட்டேன்.” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் நிரஞ்சன்.

கிரிக்கெட் அவர்களைக் காதலிக்க வைத்தது, கல்யாண கனவை நனவாக்கியது. இப்போது அவர்களின் வாழ்வை, காதலை, கனவை கானலாக்க பார்த்தது.

மெல்ல மெல்ல மன அழுத்தத்தில் அமிழ்ந்து கொண்டிருந்தாள் நந்தனா.

முன்பொரு முறை அவள் மனஅழுத்தத்தில் இதே காரணத்திற்காக விழுந்த போது, நிரஞ்சன் தான் அவளை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தான். ஆனால், இம்முறை அவளைக் காட்டிலும் அதிகமான மனஅழுத்தத்தில் அவன் இருந்தான்.

பஞ்சாப் அணியுடன் மோதி மோசமான தோல்வியைத் தழுவி, டெல்லி அணியுடன் போட்டியிட டெல்லி சென்று இறங்கியது சென்னை அணி.

“டாஸ்” வென்ற கேப்டன் முதலில் பந்து வீசுவது என்று முடிவு செய்திருந்தார்.

நந்தனா கணினி முன் அமர்ந்து போட்டியை நேரடி ஒளிபரப்பில் கண்டு கொண்டிருந்தாள்.

“டீமில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்கப்பட,

“எஸ். நிரஞ்சன், மைக்கேல் இஸ் அவுட். அண்ட்…” அதற்கு மேல் அவர் சொன்ன எதுவும் அவள் மனதில் பதியவேயில்லை.

இன்றைய போட்டியில் நிரஞ்சன் ஆடவில்லை என்பது மட்டுமே அவள் மனதில் பதிய, வேக வேகமாகக் கணவனைத் தேடியது அவள் கண்கள். மைதானத்தில் அவன் தலையைக் காணாமல் கண்களைச் சுழற்றினாள். அவன் உடை மாற்றும் அறையில் இருந்தான் போலும்.

மின்னல் வேகத்தில் சிவராஜ் முன் போய் நின்றாள் நந்தனா.

“ஏன், ஏன் இன்னைக்கு நிரஞ்சன் டீமில் இல்ல?” அவள் மூச்சு வாங்க கேட்க, அவளை விசித்திரமாகப் பார்த்தார் சிவராஜ்.

“ஹி ஆஸ்க்ட் அவுட் நந்து. (He asked out) உனக்குத் தெரியாதா?”

அன்றைய போட்டியை அவனாகத் தவிர்த்தானா? கணவன் காரணமின்றிப் போட்டியில் இருந்து விலகினானா? அவளிடம் ஏன் சொல்லவில்லை?

கிரிக்கெட்டும், அவளும் அவனுக்கு முக்கியமில்லாமல் போய் விட்டர்களா? கேள்விகள் மனதை குடைய, தனது இருக்கையில் வந்து பொத்தென்று அமர்ந்தாள் அவள்.

நிரஞ்சன் தானாக ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆடுவதைத் தவிர்த்தான் என்ற அதிர்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அவள் அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருக்க, அவளைக் கடந்து வீரர்கள் இருக்கும் பகுதியை நோக்கி சென்றான் நிரஞ்சன்.

“நிரஞ்சன்” என்று கத்தி அழைத்து, முதல் கேள்வியாக, “இன்னைக்கு மேட்ச் ஏன் மிஸ் பண்ணீங்க நிரஞ்சன்? நீங்க ஏன் விளையாடல” என்று அவள் படபடக்க,

“உங்க வேலையை மட்டும் பாருங்க அனலிஸ்ட் நந்தனா” அவள் முன் குனிந்து அழுத்தமாகச் சொல்லி விட்டுப் போனான் நிரஞ்சன்.

தனக்குத் தான் காது கேட்கவில்லை போல என்று கண்ணைச் சிமிட்டி, சிமிட்டி கணவனைப் பார்த்தாள் நந்தனா.

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top