அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் நந்தனா.
எதிரில் இருந்த சுவரை சுற்றியது அவள் கண்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் விதவிதமான புகைப்படங்களில் அவளும், நிரஞ்சனும் தான் இருந்தார்கள்.
சிலவற்றில் மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு, சிலதில் மலர்ந்து சிரித்தபடி, புன்னகைத்தபடி, அணைத்தபடி, என்று பார்ப்பதற்கே அத்துணை அழகாக இருந்தது.
அவர்கள் வீட்டில் கூட இத்தனை புகைப்படங்கள் இல்லை. ஆனால், மகள், மருமகன் புகைப்படங்களால் வீட்டை நிறைந்திருந்தனர் அவளின் பெற்றோர்.
அங்கிருந்த புகைப்படங்களிலேயே அவளுக்கும் மிகவும் பிடித்தது, நிரஞ்சனின் தங்கை நிவேதா வீட்டு விஷேசத்தில் எடுத்த புகைப்படம் தான்.
அவள் பட்டுச் சேலையிலும், அவன் பட்டு வேட்டியிலும் நிற்கும் படம். மனைவியின் இடையில் கரம் கோர்த்து, பற்கள் தெரிய சத்தமாகச் சிரிக்கும் நிரஞ்சன். அவனைச் சிரிப்புடன் ஏறிட்டு முறைக்கும் அவள். அட்டகாசமான புகைப்படம். அவள் விழிகள் இரண்டும் பல்லாயிரம் தடவையாக அவன் சிரிப்பில் மயங்கி விரிந்தது.
நந்தனாவிற்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவளுக்குக் கிரிக்கெட்டின் மேல் தீராக் காதல். ஆனால், அதைச் சாதாரணமாகப் பின்னுக்குத் தள்ளியது நிரஞ்சனின் மேலான காதல்.
“உலகம் பார்க்கற நிரஞ்சன் வேற, ஒரிஜினல் நிரஞ்சன் வேற நந்தனா. நிரஞ்சனை உனக்கு நான் கத்துத் தர்றேன். இல்ல, நீயே கத்துப்ப” கணவன் கல்யாணம் பற்றி முதல் முறையாகப் பேசிய நிமிடங்கள் அவள் கண் முன் வந்து போனது.
அவன் சொன்னது உண்மை தான். அவனின் உண்மையான முகத்தைத் திருமணத்திற்குப் பின் தான் கண்டாள் அவள். அப்போதும் அவனைப் பிடிக்கத் தான் செய்தது. அவன் எப்படி இருந்தாலும் அவளுக்குப் பிடிக்கத் தான் செய்யும் என்பதையே தாமதமாகத் தான் புரிந்து கொண்டாள் அவள்.
நேசிக்கும் ஒருவரை அவரின் நிறை, குறைகளோடு ஏற்பது தானே உண்மையான அன்பு?
கிரிக்கெட் வீரன் நிரஞ்சனை விட, கணவன் நிரஞ்சனை அதிகம் பிடித்தது. அவனோடு திருமணத்தை மறுத்தது எல்லாம் இப்போது அவளுக்கே அபத்தமாகப்பட்டது.
அடித்தாலும், பிடித்தாலும் அவனுடனான வாழ்க்கை அத்தனை சுவாரசியமாகச் சென்றது. சிரிப்பு, கோபம், சண்டை, சமாதானம், காதல், ஊடல், கூடல் என அவளின் நாட்களுக்குச் சுவை கூட்டினான் அவன்.
அவள் ஒற்றைக் காலை மடக்கி தரையில் ஊன்றி, சிக்ஸர் அடிக்கும் புகைப்படமும், அதையொட்டியே நிரஞ்சன் அதை ஆவென்று வாய் பிளந்து பார்க்கும் படமும் இருக்க, அவள் முகத்தை நிறைத்தது புன்னகை.
அதிரடி ஆட்டக்காரனை அவள் அசர வைத்த கணம் அது.
“என்ன நீ அசால்ட்டா சிக்ஸ் அடிக்கற? அப்புறம் பால் போடுற எனக்கு என்ன மரியாதை?” நிரஞ்சனின் பொய்யான கோபக்குரல் காதில் ஒலிக்க, அவள் இதழ்கள் தாமாகப் புன்னகையில் விரிந்தது.
அந்நேரம் சரியாக அவளின் நினைவின் நாயகனே அலைபேசியில் அழைக்க, அம்மாவின் மடியில் இருந்து எழுந்து அறைக்குள் போனாள்.
“நந்து…” எடுத்ததும் கெஞ்சலாக அழைத்தான்.
“பத்திரமா வீட்டுக்கு வந்துட்டேன். லஞ்ச் சாப்பிட்டேன். ரெஸ்ட் எடுக்கறேன்” அவன் கேட்கும் முன்பாக அவள் பதில் சொல்லத் தொடங்கியிருந்தாள்.
“நீ மட்டும் எனக்கு எத்தனை கண்டிஷன் போடுற நந்து? ஆனா, நான் கால்ல விழுந்து கெஞ்சினாலும் இறங்கி வர மாட்ட. இது உனக்கே நியாயமா இருக்கா?” கோபமாகச் சலித்தான்.
“என்ன வேணும் நிரஞ்சன்?”
“நான் என்ன பண்ணனும்? நான் என்ன பண்ணா, நீ திரும்பவும் கிரிக்கெட்..”
“ப்ச், திரும்பத் திரும்ப அதையே ஏன் பேசறீங்க?”
“நான் என்ன பண்ணனும் நந்து? அதை மட்டும் சொல்லு?”
“ம்ம். சொல்லிடுவேன்” மிரட்டினாள்.
“பிளீஸ், சொல்லு. நான் தலைகீழா நின்னாவது செஞ்சுடுறேன்.”
“அப்படியா?”
“கண்டிப்பா நந்து. என்னை நம்பலயா நீ?” அவன் குரலில் லேசாகக் கோபம் எட்டிப் பார்க்க,
“சென்னை வின் பண்ற ஃபர்ஸ்ட் மேட்ச்ல… நீங்க…” அவள் தயங்க,
“பட்டுனு சொல்லு நந்து” ஊக்கினான் அவன்.
“நம்ம தாதா (Dada) இங்கிலாந்துக்கு எதிரான மேட்ச் வின் பண்ணப்போ, என்ன பண்ணார் ஞாபகம் இருக்கா? எப்படிச் செலிபிரேட் பண்ணார்னு…”
“ஏய், பொண்டாட்டி. லூசா நீ?” அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை யூகித்து அவன் கத்த, சிரிப்பை அடக்கினாள் நந்தனா.
“எஸ். அவரை மாதிரியே சட்டையைக் கழட்டி, அதைக் கையில் வச்சு சுத்தணும் நீங்க” அவள் சிரிப்புடன் சொல்ல, அந்தப் பக்கமிருந்து பதிலே வரவில்லை. அசாதாரண அமைதி.
“நிரஞ்சன்…” என்றாள் மெல்ல.
அவன் மனைவியான அவள் முன்பு இயல்பாக, உடை மாற்றவே அவனுக்குப் பல நாட்கள் பிடித்தது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.
அப்படியிருக்கையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி வழியாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவன் சட்டையைக் கழற்றுவது, நிஜத்தில் என்ன, கனவில் கூட நடக்கவே போவதில்லை என்பது அவளுக்கு நூறு சதவீதம் நிச்சயமாகத் தெரியும்.
“என் பொண்டாட்டி தானே நந்து நீ? என்னை என்ன செய்யச் சொல்ற, தெரியுதா?” மனைவியிடம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை நிரஞ்சன். கோபத்தை மீறிய உணர்வில், “என்னை ரொம்ப டார்ச்சர் பண்ற நீ” என்று விட்டு அழைப்பை துண்டித்தான் அவன்.
எப்போதும் போல அவர்களுக்குள் விளையாட்டு வினையாகிப் போனதில், “அச்சோ” என்று நாக்கை கடித்துக் கொண்டு புலம்பினாள் அவள்.
“சாரி” என்று அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள். அதைப் பார்த்த பின்பும் பதில் அனுப்பவில்லை அவன்.
தேவையில்லாத வேலை பார்த்து விட்டோம் என்று நொந்து கொண்டாள் நந்தனா. கணவன் அவள் பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்வான் என்று நினைத்து அதை அப்படியே மறந்துப் போனாள் அவள்.
“போன்ல மாப்பிள்ளை தானே நந்து? எப்போ வர்றார்?” அறைக்குள் தலையை நீட்டி பூர்ணிமா விசாரிக்க, “மும்பை மேட்ச் விளையாட இங்க வருவார் மா. அப்போ, அவர் கூடவே நானும் கிளம்பிடுவேன்.” கணவன் கண்டிப்பாக வருவான் என்ற உறுதியில் சொன்னாள் அவள்.
“ஓ சரி, சரி. உன் மாமியார்கிட்ட பேசணும் நந்து. உனக்கு ஏழாம் மாசம் வளைகாப்பு பண்ணனும். அதுக்கு அப்புறம் நீ இங்கேயே, எங்க கூட இருக்கலாம். இத்தனை மாசம் சென்னையிலேயே இருந்துட்ட நீ. எனக்கும் மாசமா இருக்கும் உன்னைத் தாங்கணும்னு ஆசையிருக்கும் இல்ல?” அறைக்குள் நுழைந்து, மகளின் முகம் வருடி அவர் கேட்க, அம்மாவின் அன்பு அவளை நெகிழ்த்தியது.
“நீங்க சென்னை வாங்கம்மா பிளீஸ். எனக்கு.. எனக்கு…” அவள் தடுமாற,
“என்னடா?” என்றார் கேள்வியாக,
“எனக்கு நிரஞ்சன் கூடவே இருக்கணும் போல இருக்கு மா.” என்ற மகளின் வார்த்தையில், மகிழ்ந்து போனார் பூர்ணிமா.
மாதம் ஒருமுறை கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டுக்கு வருவதும், மறுநாளே கணவனிடமே ஒடுவதுமாக இருந்த மகளின் வாழ்க்கையைக் குறித்து ஆரம்பத்தில் அவ்வளவு கவலைக் கொண்டார் பூர்ணிமா. கார்த்திகேயன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவ்வளவு தான். ஆனால், அவர்கள் கவலை அவசியமற்றது எனும் படி, சில நாட்களிலேயே மகளை மீண்டும் மகிழ்ச்சியாகப் பார்க்கும் போது, அவள் நன்றாகத் தான் இருக்கிறாள் என்று தங்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்வார்கள் அந்தப் பெற்றோர்கள்.