இனியொரு பிரிவேது – 13 (2)

இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றால் கணவன் சரியாகி விடுவான் என்று நினைத்தாள் நந்தனா.

இரண்டே மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருந்தது. அதற்கான பயிற்சிகள் அவனை மாற்றி விடும் என்று முழுதாக நம்பினாள் அவள்.

அதிசயமாக மறுநாள் வலைப் பயிற்சிக்குச் சென்றான் நிரஞ்சன். சில நாட்களிலேயே தனது வழக்கத்துக்கு அவன் திரும்ப, அவளுக்கு அப்படியொரு ஆசுவாசம். மகிழ்ச்சியில் கண்கள் கலங்கி விட்டது.

“நிரஞ்சன், நிரஞ்சன்..” உறங்கிக் கொண்டிருந்தவனை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தாள் அவள்.

“ம்ம்.. தூங்கு நந்து” காற்றில் கை நீட்டி துழாவி அவளைத் தேடினான் அவன்.

அவன் கைப் பிடித்து இழுத்தாள் நந்தனா. அவளைச் சுண்டி இழுத்து தன் மேல் போட்டான் அவன்.

“என்ன பொண்டாட்டி..” வசீகரித்தது கிசுகிசுப்பான அவன் குரல்.

“ஹேப்பிப் பர்த் டே நிரஞ்சன்” மென்மையாய் அவன் மார்பில் முணுமுணுத்தாள் நந்தனா.

மெலிதான புன்னகை முங்கமெங்கும் படர, கண் விழித்தான் நிரஞ்சன்.

“தாங்க்ஸ் நந்து”

அவனிடம் இருந்து விலகி அவள் எழ, அறையின் அலங்காரம் அவன் கண்களில் விழுந்தது.

அவன் கைப்பிடித்து எழுப்பிப் படுக்கைக்கு அருகில் இருந்த காஃபி டேபிள் முன் அமர வைத்தாள் நந்தனா.

பிறந்தநாள் கேக் அங்கிருக்க, அதில் ஒற்றை மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. கத்தியை எடுத்து வெட்டப் போனான் அவன்.

“மேக் அ விஷ் (Make a wish)” என்றாள் நந்தனா.

அறை நிறைத்த இருளில் மெழுகுவர்த்தியின் ஒளியில் ஒளிரும் மனைவியின் முகத்தை இமைக்காமல் பார்த்தான் நிரஞ்சன்.

“என்ன பண்ணனும்?”

“விஷ் நிரஞ்சன்”

“அப்படின்னா?”

“ப்ச், விருப்பம், வேண்டுதல் இது போல. உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கும் இல்ல? இந்த வருஷம் அது வேணும்னு வேண்டிக்கோங்க”

“யார் கிட்ட?”

“மனசுக்குள்ள தான். கடவுள் கிட்ட…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளை நோக்கி கை நீட்டினான் நிரஞ்சன்.

அவள் குழப்பமாக அவன் கையைப் பார்க்க, நீட்டிய கரத்துடன், “கிவ் மி அ விஷ் பொண்டாட்டி” என்றான் அவள் கண்களை ஆழப் பார்த்து.

நந்தனாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, “பர்த் டே விஷ் பொண்டாட்டி. எனக்கொரு வரம் கொடு” என்றான் மந்தகாசப் புன்னகையுடன்.

அவன் கேட்டு எதையும் மறுக்காதவள், அவன் கரத்துடன் தன் கரம் கோர்த்து, “என்ன வேணும் சொல்லுங்க?” என்றாள்.

சற்றே யோசனைக்குப் பின், “ஜஸ்ட் வரம் மட்டும் கொடு பொண்டாட்டி. திடீர்னு என்ன வேணும் கேட்டா சட்டுனு மனசுல எதுவுமே தோணல. இந்த நிமிசம் நீ மட்டும் போதும்னு தான் மனசுக்கு இருக்கு. சோ, எனக்கு எப்பவாவது, ஏதாவது வேணும்னா அப்போ உன்கிட்ட கேட்கறேன். பட், இப்போதைக்கு அந்த வரத்தை மட்டும் கொடு” என்று நிரஞ்சன் நீளமாகப் பேச, சிரிப்புடன் அவன் கரத்தை அழுத்திக் கொடுத்தாள் நந்தனா.

“இந்தக் கேம் நல்லா இருக்குல்ல? ஆனா, ஏதாவது ஏடாகூடமா கேட்காம இருந்தீங்கன்னா சரி தான். இந்த வரம் எல்லாம், எப்பவும் வில்லங்கத்தைத் தான் கொண்டு வரும்” அவள் செல்லமாகச் சலித்துக் கொள்ள, “என்னை நம்பு, பொண்டாட்டி” என்று சத்தமாகச் சிரித்தான் நிரஞ்சன்.

காலம் காற்றாய் விரைய, உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த உலகப்கோப்பை போட்டித் தொடர் ஆரம்பமானது.

இந்திய அணி சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தியது.

வெற்றி மட்டுமல்ல தோல்விகளையும் சந்திக்கத் தான் செய்தது. ஆனாலும் வெற்றி சதவீதம் அதிகமாக இருக்க, வெகு எளிதாக, அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது இந்திய அணி.

மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையைக் கைப் பற்ற போகிறது இந்தியா என்று ரசிகர்கள் மார்தட்டி பெருமை பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்த மைதானத்தின் சாதகப் பாதகங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது நிபுணர்கள் குழு.

இந்தியா நிச்சயம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று கண்களில் கனவுடன் ஒவ்வொரு இந்திய ரசிகனும் காத்திருக்க, சொல்லி வைத்தது போல அத்தனை வீரர்களும் சொதப்பினார்கள் அன்று.

வீரர்கள் உயிரை கொடுத்து ஆடத் தான் செய்தார்கள். ஆனால், சாதாரண ரசிகனை பொறுத்த மட்டில் வெற்றி பெறாத எல்லா ஆட்டமுமே சொதப்பல் ஆட்டம் தான்.

இந்திய அணியினர் அனைவரும் அந்தப் போட்டியில் அவுட்டாகி இருக்க, மிக மோசமான தோல்வியாகத் தான் உலகமே அதைப் பார்த்தது.

வீரர்கள் ஐபிஎல் மாதிரியான போட்டிகளில் ஆடுவதால் தான் உலக அளவிலான போட்டிகளில் சோபிப்பதில்லை. அவர்கள் சில மாதங்கள் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதால் சோர்ந்து போகிறார்கள் என்ற பேச்சு அடிபடத் தொடங்கியிருந்தது.

ஐபிஎல் பணத்தை மட்டுமே குறியாக வைத்து இயங்கிறது. அது வீரர்களின் திறமைகளை மழுங்கச் செய்கிறது என்று காட்டமான விமர்சனங்கள் வீசப்பட்டது.

அந்நேரம் கிடைத்தது வாய்ப்பு என்று கண்டபடிக்கு விமர்சன மழையைப் பொழிந்தனர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள். உலகக்கோப்பை வீடு வராத ஏமாற்றம் அவர்களைக் கொதிக்கச் செய்தது.

இப்படியே போனால் இந்திய அணியின் நிலைமை அவ்வளவு தான் என்பது வரை விமர்சனம் போக, வீரர்கள் பலமாகத் தாக்கப்பட்டார்கள்.

செய்திகள், இணையம் என எங்கும் அந்தப் பேச்சு தான் பல நாட்களுக்குத் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்தது.

ஏமாற்றத்தை தாங்க இயலாது, வீரர்கள் மேல் தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடங்கி இருந்தனர். இணையம் முழுவதும் கேலி, கிண்டல், வன்மம் என மீம்களாக உலாவ, பல வீரர்கள் வெளியில் காண்பித்துக் கொள்ள முடியாத அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளானார்கள்.

அதில் நிரஞ்சனும் ஒருவன். மனைவி அவனுக்காக என்னவெல்லாமோ செய்யத் தயாராக இருக்க, அறையை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை அவன். நாட்டை விட்டு அவனைக் கடத்திப் போக விரும்பினாள் அவள். ஆனால், அவன் நகர்ந்தால் தானே?

விளைவு?

மும்பை, சென்னை என்று பயணித்து விமானச் சேவைக்கு நிதியுதவி செய்து கொண்டிருந்தாள் நந்தனா.

கணவனின் வாழ்வில் எது நிகழ்ந்தாலும் அவளைத் தான் அதிகம் பாதித்தது. வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடும் வேளைகளில், மனைவியையும் சேர்த்தே கொண்டாடினான் நிரஞ்சன்.

தோல்வியில் துவளும் போது, அவளை முற்றிலுமாகத் தவிர்த்தான். அவள் தான் தவித்துப் போனாள்.

மழையும், வெயிலும் மாறி மாறி வர நடுக்கத்துடன் நனைந்தாள், காரணமின்றிக் காய்ந்தாள் அவள்.

“வாழ்க்கை என்றால் எல்லாம் தான் இருக்கும்” என்பதற்கு நல்ல உதாரணமாக இருந்தார்கள் அவர்கள். அதை எப்போதும் கடுப்புடன் நினைத்துக் கொள்வாள் நந்தனா.

மெல்ல மெல்ல மீள முடியாத மன அழுத்தத்திற்குள் அமிழ்ந்து கொண்டிருந்தாள் நந்தனா. கணவன், கிரிக்கெட், தங்களின் எதிர்காலம் என எப்போதும் கவலைகள் அவளை அரிக்க, எதையும் ஆராய்ந்து செயல்பட முடியாத வண்ணம் அவளது மூளை ஓய்ந்துப் போய் இருந்தது.

சதா சிந்தனைகளில் மூழ்கி இருந்தவளை மிகத் தாமதமாகத் தான் ஊன்றி கவனித்தான் நிரஞ்சன்.

எப்போதும் அவனது மன துயரங்களுக்கு வடிகாலாக இருப்பவள் அவள் தான். ஆனால், இப்போது அவள் தனக்குள் தொலைந்து கொண்டிருந்தாள்.

கணினி திரையில் போட்டி காணொளி ஓட ஷர்மா பேட் செய்து கொண்டிருந்தார். கண்கள் அதை வெரித்தாலும், அறிவு ஆராய்வதை நிறுத்தியிருந்தது. அவளுக்குப் புள்ளி விவரங்கள் ஒன்றும் புலப்படவில்லை. கைகள் குறிப்பு எடுக்காமல் அந்தரத்தில் நிற்க, அதிர்ந்து போனாள் நந்தனா.

“நந்து, வாட்ஸ் ராங்?” அவன் பேசும் மொழி புரியாதது போல அவள் முழிக்க, “நந்து” மனைவியின் தோளை மென்மையாகத் தொட்டான் நிரஞ்சன்.

நினைவுகளில் தொலைந்துப் போனவனை, நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தாள் இன்று ஆழ்ந்த உறக்கத்திலும் புலம்பிய அவன் மனைவி.

“நந்து” இப்போதும் மென்மையாக அவள் முதுகை வருடிக் கொடுத்தான் நிரஞ்சன்.

“ஏன் இப்படிப் பண்றீங்க நிரஞ்சன்? கிரிக்கெட் உங்க வாழ்நாள் கனவு. அதை ஏன் விடுறேன்னு சொல்றீங்க?” தூக்கத்தில் அவள் துக்கத்துடன் கதற, அவனுக்குத் தொண்டை அடைக்கும் உணர்வு. கனலாய் எரிந்த கண்கள் கலங்கியது.

“ஷ்ஷ்ஷ், தூங்கு நந்து” அவன் குரலும், விரல்களும் வருட அவளின் மேடிட்ட வயிறு அவன் மேல் இடிக்க, அவனை மேலும் ஒன்றினாள் நந்தனா.

“எல்லாத்தையும் தப்புத் தப்பா பண்ணிட்டேன் நந்து. சாரி” கண்களை மூடிக் கொண்டு புலம்பினான் நிரஞ்சன், அப்படியே உறங்கியும் போனான்.

மறுநாள் காலை சூரியன் சுள்ளென்று அவன் முகத்தில் சுட்டு எழுப்பி விட, அனிச்சையாய் மனைவியைத் தேடியது அவன் கண்கள்.

பக்கத்தில் படுக்கையில் அவளில்லை. கண்ணைத் தேய்த்தபடி எழுந்தான், முகம் கழுவி மனைவியைத் தேடிக் கொண்டு கீழே போக, உணவு மேஜையின் முன் இருந்தாள் அவள்.

அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டிருந்த மாமனாரை பார்த்ததும் அவனுக்குத் திடுக்கென்றது.

அவர் கண்களைச் சந்திக்க முடியாமல் மனைவியைப் பார்த்தபடி, “வாங்க மாமா. எப்படி இருக்கீங்க?” என்றான் அவன்.

பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தார் அவர். அந்தக் கண்களில் இருந்த குற்றச்சாட்டில் குன்றிப் போனான் நிரஞ்சன்.

ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை விபத்துக்குள்ளாக்கி அவளை இரண்டு நாட்கள் சுய நினைவில்லாமல் மருத்துவமனையில் படுக்க வைத்திருக்கிறான் அவன்.

செய்தி அறிந்து ஒரு தந்தையாக அவரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அவனால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

ஆத்திரத்தில் அவர் என்ன செய்தாலும், ஏன் அடித்தாலும் கூட வாங்கிக் கொள்ளத் தயாராகவே இருந்தான் அவன். ஆனால், அவருக்கு மட்டுமல்ல விபத்து பற்றிய விஷயம் ஒரு ஈ, காக்கைக்குக் கூடத் தெரியாது என்பதை அப்போது அவன் தான் மறந்திருந்தான், பாவம்.

“நல்லா இருக்கேன் மாப்பிள்ளை” என்றவர், “வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க, அவரின் அருகில் சென்று அமர்ந்தான் அவன்.

அவனுக்கு உணவு பரிமாறிய மனைவியைப் பார்த்து, “நீ சாப்பிட்டியா நந்து?” என்று அவன் கேட்க, மறுப்பாக அசைந்தது அவள் தலை. அவளையும் அமர வைத்து‌, தனது தட்டை அவளுக்கு நேராக நகர்த்தி விட்டு, தனக்கு வேறொரு தட்டில் பரிமாறிக் கொண்டான் அவன்.

“சாப்பிடு நந்து. சாப்பிட முடியலயா? இது பிடிக்கலையா? நான் வேற ஏதாவது செஞ்சு தரவா? என்ன வேணும் சொல்லு” அவன் அக்கறையுடன் கேட்க, அவனையே அசையாமல் பார்த்தாள் நந்தனா.

“உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா நிரஞ்சன்?” திருமணம் முடிந்த இரவு, அதிகாலையில் இருவருக்கும் பசிக்க, “காஃபி, சுடச்சுட சீஸ் ஆம்லெட்” செய்து கொடுத்த கணவனை அதிசயமாய்ப் பார்த்து, விழி விரித்துக் கேட்ட புத்தம் புது மனைவி நந்தனா அவன் கண்களுக்குள் இப்போது வந்து போனாள்.

அவனது சட்டையை மட்டும் அணிந்து கொண்டு நின்றவள், அன்று அத்தனை வசீகரித்தாள் அவனை. அவனோடு கலந்ததில் கலைந்து, களைத்திருந்தாள்.

சமையல் மேடையில் சாய்ந்து நின்றவளை உரசியபடி சொன்னான். “ஹோட்டல்ல தான் வளர்ந்தேன் நந்து. ஓரளவு சமைப்பேன்”

நாற்காலி இழுபடும் ஓசையில், நிகழ்காலத்திற்கு இழுக்கப்பட்டான் நிரஞ்சன்.

மனைவி எங்கோ செல்வதற்காகக் கிளம்பி நிற்பது இப்போது தான் அவன் கண்ணில் பட்டது. இதுவரை அவளது உடையைக் கவனிக்கவேயில்லை அவன்.

வெறும் இரண்டே இரண்டு இட்லிகளை உண்டு விட்டு எழுந்திருந்தாள் அவள்.

மனைவியைப் பார்த்தவன் பார்வை அப்படியே நகர்ந்து மாமனாரின் மேல் பதிந்தது.

“இவர் எதற்காக வந்திருக்கிறார்?” என்ற கேள்வி இப்போது தான் உதிக்க, பதட்டத்துடன் எழுந்தான் அவன். உணவை பாதியில் விட்டு விட்டு, கை கழுவினான்.

“மாமா, நான் வேணும்னு பண்ணல. தெரியாம.. சாரி.. இனி மேல் இப்படி ஆகாது. எனக்கு என்ன சொல்லன்னு தெரியல. என்னைப் பார்த்தா எனக்கே….” மேலே அவனைப் பேச விடாமல் உள்ளே புகுந்தாள் நந்தனா.

“நிரஞ்சன்…” என்று தீர்க்கமாக அழைத்தாள். மெல்ல அவனுக்கு அருகில் வந்து நின்றாள்.

மகளின் வலக்கரத்தில் இருந்த பெட்டியை வேகமாக வாங்கிக் கொண்டார் கார்த்திகேயன்.

“நான் அப்பா கூட மும்பை போறேன்”

“என்ன? ஏன் நந்து இப்படிப் பண்ற?” என்றவனை, கண்டுக்கொள்ளவே இல்லை அவள்.

அவன் பேசாதது போலப் பாவித்து, “ஐபிஎல் இந்தச் சீசன் இன்னும் ரெண்டே நாள்ல ஸ்டார்ட் ஆகப் போகுது. சென்னைக்கு முதல் மேட்ச் இன்னும் மூணு நாள்ல இருக்கு. நீங்க பிராக்டீஸ்கு போங்க” அவள் தீர்க்கமாகச் சொல்ல, தாடை இறுக அவளை முறைத்தான் நிரஞ்சன்.

அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து வெளியேறியிருந்தார் கார்த்திகேயன்.

“சரியா இன்னையில் இருந்து ஆறாவது நாள், உங்களுக்கு மும்பை கூட மேட்ச் இருக்கு. அதுக்கு நீங்க மும்பை வருவீங்க. அப்போ..”

“என்ன அப்போ? முதல்ல நீ எதுக்கு மும்பை போற நந்து?” கோபத்தில் வெடித்தான் அவன்.

“நீங்க இந்த வருஷம் ஐபிஎல் ஆடுறீங்க நிரஞ்சன். அப்படி ஆடினா, மும்பை வருவீங்க. அங்க உங்க பொண்டாட்டி, புள்ளை ரெண்டு பேரும் உங்களுக்காகக் காத்திட்டிருப்போம். ஒருவேளை நீங்க இந்த வருஷம் ஐபிஎல் விளையாடலன்னா…”

“விளையாடலைன்னா…?” பல்லைக் கடித்தபடி அவன் கேட்க,

“கிரிக்கெட் மட்டுமில்ல. பொண்டாட்டி புள்ளையையும் மறந்திடுங்க நிரஞ்சன். நீங்க மும்பை வந்தாலும், நான் உங்க கூட வர மாட்டேன்.” என்று அவள் சொல்ல, கைகளை இறுக மூடினான் நிரஞ்சன்.

மனைவியின் நிபந்தனை அவனை மீண்டும் முருங்க மரம் ஏறச் செய்தது. கோபம், எரிச்சல், ஆத்திரம் எனக் கலவையாய் எழுந்த உணர்வுகளை மனைவியின் முகம் பார்த்து அடக்கினான் அவன்.

“உங்களுக்கு என்ன வேணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க நிரஞ்சன்” நந்தனா சொல்லிவிட்டு நகர, அழுத்தமாய் அவள் கையைப் பற்றி நிறுத்தினான் நிரஞ்சன்.

“என்ன வேணுமா? எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாதா நந்து? எனக்கு என்ன ஆப்ஷன் கொடுத்திருக்க நீ? நான் என்ன முடிவெடுக்க?” அவன் படபடக்க,

“கிரிக்கெட், மனைவி, புள்ளை எல்லாமே உங்க வாழ்க்கையில் இருக்கும். ஆனா, அது நீங்க எடுக்கப் போற முடிவுல தான் இருக்கு நிரஞ்சன். திரும்பவும் சொல்றேன், சென்னை – மும்பை மேட்ச் ஆட மும்பை வாங்க. நான் அங்க உங்களுக்காகக் காத்திட்டிருப்பேன். அப்படி நீங்க வரலைன்னா, என்னை மறந்துடுங்க, கிரிக்கெட்டை மறக்க ரெடியானது மாதிரி, என்னையும் மறக்க…”

“நந்து, என்ன பேசுற நீ?” குரல் உயர்த்தி அதட்டினான்.

அவள் பார்வையில் எந்த மாற்றமுமில்லை.

“அப்போ நான் உன்கிட்ட கேட்டது என்னாச்சு நந்து? நீயும் கிரிக்கெட்குள்ள வந்தா மட்டும் தான் இனி நான் கிரிக்கெட்…”

ஒற்றை விரலை அவன் உதட்டில் வைத்து அவன் பேச்சை நிறுத்தினாள் நந்தனா.

“ஷ்ஷ்ஷ். பேசாதீங்க. இந்த டைம். எல்லாமே என்னோட இஷ்டம் போலத் தான் நடக்கும். உங்களுக்கு விருப்பம்னா, நான் வேணும்னா சென்னை டீம் பிளேயரா மும்பை வாங்க. இல்லையா..” என்று அவள் இழுக்க, அவளை அப்படியே இழுத்து அணைத்திருந்தான் நிரஞ்சன்.

அவளை மொத்தமாகத் தனக்குள் புதைத்து விடும் வேகம் அவனுள். ஆனால், அதற்கு மாறாக மென்மையாய் அவளின் மேடிட்ட வயிற்றை வருடியது அவன் கரம். மெல்ல குனிந்து அழுத்தமாய் இதழ் ஒற்றினான்.

“ஏன் இப்படிப் பண்ற நந்து?” அவன் கரகரத்த குரலில் கேட்க, வலக்கரத்தை அவன் கன்னத்தில் பதித்து,

“சீ யூ இன் மும்பை நிரஞ்சன்” என்றாள் நந்தனா.

அத்தோடு விலகி விறுவிறுவென வாயிலை நோக்கி நடந்திருந்தாள்.

அவளின் பின்னோடு ஓடினான். அங்கே காத்திருந்த காரின் கதவை கார்த்திகேயன் திறந்து விட, ஏறி அமர்ந்தாள் நந்தனா.

கார் நகர, “நந்து..” என்றான். அவனுக்குக் கையசைத்து விடைக் கொடுத்தாள் நந்தனா. கார் அங்கிருந்து மறையும் வரை அவளின் கண்கள் கணவன் மேல் தான் நிலைத்திருந்தது.

அதில் தெரிந்த எதிர்பார்ப்பில் உடைந்து போனான் நிரஞ்சன்.

என்ன முடிவெடுக்கப் போகிறான் அவன்?

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top