விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி, தோல்விகள் சகஜம் தான். தோல்விகள் தான் வெற்றிக்கு முதல் படி என்று சொல்வது எளிது. ஆனால், நடைமுறையில் தோல்வியை இன்முகத்துடன் எதிர்கொள்வது சாத்தியப்படுமா என்று கேட்டால், மிகப் பெரிய கேள்விக் குறி தான்.
அந்த நிமிடம் பல கோடி ரசிகர்களின் பார்வையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் நிரஞ்சன் மேல் தான் இருந்தது. அவனோ, பதட்டமாக இருந்தாலும் வெற்றி வாகை சூடி விட வேண்டும் என்ற வெறியுடன் பேட் பிடித்து நின்றான்.
இங்கே கேப்டன் இறங்கி வீரர்களுடன் அமரப் போனார். ஓரளவு முடிவை கணித்து விட்டவர் திரும்பி நந்தனாவை பார்த்து புன்னகைத்து, “இட்ஸ் ஓகே. வீ வில் பவுன்ஸ் பேக்” என்று அவளின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டுப் போனார்.
இன்றைய இந்த ஆட்டத்தின் முடிவு ஒட்டு மொத்தமாகக் கணவனை நொறுக்கி விடும் என்ற உணர்வே அவளைக் கொல்ல, பார்வையைக் கணினி திரைக்குத் திருப்பினாள் அவள்.
பந்து வீசப்பட்டது. நிரஞ்சன் அந்த யார்க்கர் பந்தை கணித்து, காலை முன்னே கொண்டு வந்து, பந்தை பேட்டால் பலமாகத் தட்டி விட்டு, வெற்றி ஒன்றே குறிக்கோளாக ஓடினான்.
எதிரணியின் பந்து வீச்சாளர், “அவுட்” என்று கத்த, மைதானமே எழுந்து நின்றது. மஞ்சள் அணி பயத்துடன் பார்க்க, நீல அணி பதட்டத்துடன் எதிர்பார்க்க, நடுவரின் ஒற்றை விரல் மெல்ல மெல்ல மேல் நோக்கி உயர்ந்தது.
“ஹோ..” என்ற மும்பை ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணைப் பிளக்க, நிரஞ்சன் அவுட், “எல்பிடபிள்யூ”(LBW) என்றார்கள்.
ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த வருட கோப்பையை மும்பை அணி கைப்பற்ற, அதிக முறை இறுதி போட்டிக்கு சென்று தோற்ற அணி என்ற புதிய சாதனையைப் படைத்தது சென்னை அணி.
எல்லாம் சில வினாடிகளில் நடந்து முடிந்திருக்க, இரண்டாம் ரன் எடுக்க ஓடிக் கொண்டிருந்த நிரஞ்சனுக்கு அப்போது தான், “அவுட்” என்று அறிவித்ததே உரைத்தது. அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான் அவன். ஒன்றும் புரியாமல் எல்லாம் பக்கமும் பார்த்தபடி அவன் விழிக்க,
அவனை அப்படிப் பார்க்கையில் நந்தனாவிற்கு எழுந்து ஓடிப் போய் அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
மும்பை ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் கர்ஜிக்க, சென்னை ரசிகர்கள், “ஓ, நோ” என்று கூச்சலிட, அரங்கமே கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியது.
அதற்குள் மும்பை அணியினர் வெற்றியை கொண்டாடத் தொடங்கியிருந்தனர்.
களத்தில் இருந்த சென்னை வீரர்கள் இருவரும் குழம்பிப் போய் நின்றனர்.
நிரஞ்சனுக்குத் தான் அவுட்டா, இல்லையா என்ற சந்தேகமிருக்க ரெவியூ (review – DRS) செய்து உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினான் அவன்.
அவன் நடுவரை நோக்கி நகர, நந்தனாவிற்கு அழுகையில் உதடு துடித்தது.
ஒரு போட்டியில், ஒரு அணி இரண்டு முறை மட்டுமே ரெவியூ செய்ய முடியும். நடுவரின் முடிவு சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்து ரெவியூ செய்யும் வாய்ப்பை அந்த அணி இழந்து விடும். ஏற்கனவே சுகாஸ் அதைப் பயன்படுத்தி வீணாக்கியும் இருந்தான். இப்போது சென்னை அணி நிரஞ்சனின் அவுட்டை சரி பார்க்க முடியாது, ரெவியூவை இழந்திருந்தது. வேறு வழியின்றி நடுவரின் முடிவை அப்படியே ஏற்றுக் கொண்டாக வேண்டிய சூழல்.
அங்கே நிரஞ்சன் அதிர்ந்து, தோல்வியை உள்வாங்கி, ஒரு நொடி கலங்கி என்று பல்வேறு முகப் பாவங்களைக் காட்டி விட்டு, நொடியில் தன்னைச் சீர்ப்படுத்திக் கொண்டான்.
மும்பை வீரர்களுக்கு அவன் கைக் கொடுத்துக் கொண்டே வெளியில் வர, நந்தனா கணினி திரையை வெறித்தாள்.
நிரஞ்சன் அடித்த கடைசிப் பந்து, அவனின் இடப்பக்கமாகச் சென்று கொண்டிருந்தது. நிச்சயம் அது அவுட் கிடையாது. ஆனால், சென்னை அணி முறையிட முடியா நிலையில் நிறுத்தியிருந்தான் சுகாஸ்.
இதற்காகச் சுகாஸை வறுத்தெடுக்கப் போகிறார்கள் என்று மனதில் வருந்தினாள் நந்தனா.
“சியர் அப் நந்து. ஆட்டம்னு வந்துட்டா, அறம் எல்லாம் பார்க்க முடியாது நந்து. சூது தான் எப்போதும் வெல்லும்.” சிவராஜ் சொல்ல, அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவளுக்கு இப்போது நிரஞ்சன், சுகாஸ் இருவரையும் நினைக்கையில் பதறியது.
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம். ஐபிஎல் அதில் முக்கியமான திருவிழா. அதில் அவர்களுக்குப் பிடித்தமான அணி வெல்லவில்லை என்றால் ரசிகர்கள் கொதித்து விடுவார்கள் என்பதை இந்தியாவே அறியும்.
கேப்டன், சுகாஸ், நிரஞ்சன் என்று அத்தனை பேர் மேலும் விமர்சனங்கள் எழும். எப்போதும் போல அதை அவர்கள் காயம் படாமல் கடந்து வர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாள் அவள்.
மைதானத்தை விட்டு நிரஞ்சன் வெளியில் வர, அவனோடு இணைந்து உடை மாற்றும் அறைகளை நோக்கி நடந்தாள் நந்தனா.
அவனிடம் ஆழ்கடலின் ஆபத்தான அமைதி.
அவன் மார்பில் கை வைத்து, “அடிபட்டிருக்கா நிரஞ்சன்?” என்று கேட்டவளை திரும்பி முறைத்தான் அவன்.
“கப்பை அலேக்கா தூக்கி மும்பைக்காரன் கையில கொடுத்துட்டு வந்திருக்கேன். எப்படி இருக்கு தெரியுமா? அசிங்கமா, அவமானமா.. உனக்கு இப்போ காயம் தான் ரொம்ப முக்கியம். இல்ல?” அவன் கர்ஜிக்க, தானாகப் பின்னடைந்தாள் நந்தனா.
வெற்றியை விட மோசமாகத் தோல்வியைக் கையாண்டான் நிரஞ்சன்.
சென்னை அணியின் தோல்விக்குத் தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டான் அவன்.
உண்மையில் சென்னை அணி ரசிகர்கள் அந்தத் தோல்வியை நல்ல முறையில், ஸ்போர்ட்டிவ்வாகத் தான் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், மற்ற கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை அணி வீரர்களை அக்குவேர் ஆணி வேராகப் பிரித்து மேய்ந்து விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
அவள் எதிர்பார்த்தது போலச் சுகாஸ் மற்றும் நிரஞ்சன் மேல் தான் அத்தனை விமர்சனங்களும் குவிந்தது.
நிரஞ்சனுக்கு இதொன்றும் புதிதல்ல. கிரிக்கெட் வாழ்வில் பல தோல்விகளைக் கடந்து வந்தவன் தான் அவன். ஆனால், இம்முறை ஏனோ துவண்டு போனான் அவன்.
இந்திய அணிக்கு அடுத்தடுத்த போட்டிகள் எதுவும் இல்லாதிருக்க, ஓய்வில் இருந்தான். ஆனால், அறைக்குள் அடைந்து கிடந்தான் அவன்.
நாட்கள் நகர, அவன் நகரவில்லை. நந்தனா தன்னால் முடிந்தளவு அவனை வெளியில் கொண்டு வர முயற்சித்தாள். ஆனால், அவன் மனது வைத்தால் தானே அது முடியும்? ஏதோ சிந்தனையில் மூழ்கி, வீட்டிலேயே அடைந்து கிடந்தான் அவன்.
வெறும் வாய் வார்த்தைகள், வாக்கு வாதங்களாக முற்றி, சண்டையில் முடிந்து, அவனிடம் முறைத்துக் கொண்டு அடிக்கடி மும்பைக்கு ஓடினாள் நந்தனா. அங்கே அவனில்லாமல் ஒரு நாள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது மீண்டும் அவனிடமே வந்து நின்றாள் அவள்.
உதடு வளைத்த கோணலாகப் புன்னகை மட்டுமே அவனிடமிருந்து வெளிப்பட, அவளுக்கு ஆத்திரமாக வந்தது.
“உங்களுக்கு என்ன தான் பிரச்சனை நிரஞ்சன்? வாயை திறந்து, மனசு விட்டுப் பேசினா தானே எனக்குப் புரியும்? என்னாச்சு உங்களுக்கு? எத்தனை முறை நான் இதையே கேட்கறது? ஏன் இப்படியிருக்கீங்க? பயமா இருக்கு எனக்கு” அழுத்தம் தாளாமல் வெடித்தாள்.
அவளை வெறுப்பேற்றும் விதமாகச் சத்தமாகச் சிரித்தான் நிரஞ்சன்.
மனம் திறக்கவில்லை அவன். எதையோ பறி கொடுத்தவன் போல எந்நேரமும் அமர்ந்திருந்தவனைப் பார்க்க பார்க்க அவளுக்குத் தான் பயமாக வந்தது.
அன்றைக்கு வேலை முடித்து அவள் வீட்டிற்கு வரும் போதே நிலவு வந்திருந்தது.
படுக்கை அறைக்குள் நுழைந்து, உடையைக் களைந்து, குளிக்கத் தயாரானாள் அவள்.
அப்போது பால்கனியில் அசைவு தெரிய, உடையை மார்பில் இட்டு, திடுக்கிட்டு திரும்பினாள்.
உடை நழுவ, “பயந்துட்டேன் நிரஞ்சன்” என்றவள், மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளியிட்டாள்.
“நீங்க இந்நேரம் வீட்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நெட் பிராக்டீஸ் போகல? இது நீங்க ஜிம் போற டைம் தானே?” அவள் கேள்விகளை அடுக்க, அவனோ நிதானமாக அவளை நோக்கி நடந்து வந்தான்.
“ஜிம் போய்…?” சோம்பலாக அவன் கேட்க,
“உடற்பயிற்சி பண்ணனும். வேற என்ன…?” அவளைப் பேச விடாமல், இழுத்து அணைத்தவன், சமீப வழக்கமாக அவனது உடற்பயிற்சியைப் படுக்கை அறையில் செய்து கொண்டிருந்தான்.
“நிரஞ்சன்…” மூச்சு வாங்க அவள் அழைக்க,
“இதுவும் எக்சர்சைஸ் தான் பொண்டாட்டி. நாம மட்டும் தான் பண்ண முடியும். ஆனா, எவ்வளவு கேலரி பர்ன் ஆகும் தெரியுமா? இதுனால, ஹேப்பி ஹார்மோன்ஸ் எல்லாம் சரியா வேலை செய்யும். இப்போ சொல்லு? எது பெட்டர்?” அவளின் கழுத்தெலும்பில் இருந்த டாட்டுவில் முத்தமிட்டபடி அவன் கேட்க, அவனைத் தவிர அனைத்தையும் மறந்திருந்தாள் அவள்.
தலை உயர்த்தி மனைவியின் கண்ணோடு கண் கலந்து கண்ணடித்தான் நிரஞ்சன். கோபமாய், அழுத்தமாய், தாபமாய் அவன் தோள்களைப் பற்றியது நந்தனாவின் கரங்கள்.
“நீ மட்டும் என் கூடவே இரு பொண்டாட்டி. அது போதும் எனக்கு” கிசுகிசுத்தவன், அவளோடு கலந்திருந்தான்.
நிரஞ்சன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவனது அணைப்பில் இருந்த நந்தனாவின் மனம் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது.