மறுநாள் காலையில் அந்த அமைதியை மீண்டும் குலைத்துப் போட்டது மூத்த வீரரின் விமர்சனம்.
அந்த அதிகாலை வேளையில் சென்னை அணி மொத்தமும் தூக்கக் கலக்கத்துடன் பெங்களூர் செல்லும் விமானத்தில் இருந்தது.
சென்னைக்கு இன்னும் இரண்டே நாட்களில் பெங்களூருக்கு எதிரான, கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டி இருக்க, பெங்களூர் நோக்கி பறந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.
நிரஞ்சன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ரியா பின்னிருந்து பேச்சு கொடுத்துக் கொண்டேயிருக்க, எழுந்து அவளிடம் போனாள் நந்தனா.
பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் பெண்கள்.
“சீக்கிரமா ஐபிஎல்லயும் யோ- யோ டெஸ்ட் கொண்டு வரப் போறாங்க போலச் சுகாஸ். ஃபிட்டா இருந்தா தான் பிளேயர்ஸை விளையாட ஆலோவ் பண்ணனும்னு மேலிடத்தில் பேச்சு ஓடிட்டிருக்கு. கொஞ்சம் உன்னோட ஹெல்த் அண்ட் ஃபிட்னெஸ் மேல அக்கறை காட்டுச் சுகாஸ். இப்படியே இருந்தா எப்படி? திரும்ப இந்தியன் டீம்குள்ள வர வேணாமா நீ?” அவள் ஆதங்கத்துடன் கேட்க, கை விரல்களைக் கோர்ப்பதும், பிரிப்பதுமாக இருந்தான் சுகாஸ்.
“டிரெண்டிங் நியூஸ் பார்த்தியா நந்து?” என்று அவன் வேறொன்றை பற்றிக் கேட்க, முறைத்தாள் அவள்.
“சோஷியல் மீடியா பார்த்தியா? மீம்ஸ்? டிவிட்ஸ்?”
மறுப்பாகத் தலையசைத்தாள் நந்தனா. அவள் பொதுவாகவே அதையெல்லாம் செய்வதில்லை என்பதை அறிந்த சுகாஸ், குரலை தழைத்து,
“நிரஞ்சனோட பொறுமையை ஓவரா சோதிக்கறானுங்க. இஸ் ஹி ஓகே?” என்று அவன் கேட்க, நந்தனாவிற்கு முந்தைய இரவில் கணவன் உணர்ச்சிகரமாகப் பேசியது நினைவில் வந்தது.
மனம் அலைப்புற, “ட்ரெண்ட் ஆகுற அளவுக்கு நேத்து அவர் என்ன பேசினார்?” பயத்துடன் கேட்டாள் அவள்.
அலைபேசியை உயிர்ப்பித்து அவளிடம் நீட்டினான் சுகாஸ். ஒரே ஒரு பக்கத்தை மட்டும் புகைப்படம் எடுத்து வைத்திருந்தான் அவன்.
நல்லவேளையாக நடுவானில் இணைய இணைப்பு இல்லாததால், அவர்களால் இணையத்தைப் பார்வையிட முடியவில்லை. இல்லையேல், கொதித்துப் போய் இருப்பாள் நந்தனா.
“மாமனார் கிட்ட கிரிக்கெட் கத்துக்கணும் நிரஞ்சன்”
விமர்சனமாக, கேலியாக, கிண்டலாக, சுடச்சுட மீம்களாக (meme) உருமாறியிருந்தது அவரின் நகைச்சுவை.
அலைபேசியை அழுத்தமாய்ப் பற்றினாள் நந்தனா.
“ஜஸ்ட் இக்னோர் நந்து. இதெல்லாம் நீ எதிர்பார்த்தது தானே?” சுகாஸ் கேட்க, பதில் சொல்லவில்லை அவள்.
எதிர்ப்பார்ப்பை மிஞ்சியதாக அல்லவா இருக்கிறது எதார்த்தம். எப்படி எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும்?
இரண்டிற்கும் இடையே மாட்டிக் கொண்டு முழிப்பது அவள் அல்லவா?
நிரஞ்சனை இந்திய அணிக்கு தேர்வாக விடாமல் இருக்க அத்தனை வேலைகளையும் செய்து விட்டு, இன்று அவன் சாதித்து, நிலையாக நிற்கும் போது, சறுக்கும் கணத்தை எதிர்பார்த்து காத்திருந்து, அவனை வலிக்கத் தாக்க வேண்டும் என்றே விமர்சனம் வைத்தால், அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?
கணவன் டிவி ரிமோட்டை தூக்கி அடித்ததின் காரணம் இப்போது தான் அவளுக்குப் புரிந்தது. அவனது கோபமும், மனக்காயமும் ஆழமானது என்று உணர்ந்தாள் நந்தனா.
இந்த ஒப்பிடுதல் (Comparison) போல மோசமான ஒன்று இருக்கிறதா என்ன? உலகின் எந்த மூலைக்குப் போனாலும், இது ஒரு பெரிய தொல்லை.
ஒரு தனி மனிதனை அவனது திறமையை வைத்து மட்டுமே மதிப்பிட வேண்டும். அதை விட்டு விட்டு அதே வட்டத்தில் இருக்கும் அப்பா, ஆட்டுக்குட்டியுடன் எல்லாம் ஒப்பிட்டால் எப்படிச் சரியான முறையாக இருக்கும்?
நிரஞ்சன் சிறந்த கிரிக்கெட் வீரன். கார்த்திகேயன் இன்று சிறந்த பயிற்சியாளர். இருவருமே அவரவர் பாதையில் வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்க, மருமகனை மாமனாருடன் ஒப்பிட்டால் மோசமான ஒப்பிடாக அல்லவா அது இருக்கும்?
அவரிடம் போய்ப் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் எத்தனை பெரிய முட்டாள்தனம்.
அவள் தன் சிந்தனையில் மூழ்க, சுகாஸ் பேசத் தொடங்கியிருந்தான்.
“என் கிரிக்கெட் வாழ்க்கை அவ்ளோ தான் நந்து. எனக்குத் தெரிஞ்சு, இனி மேல் என்னைக் கட்டாயமா டீமுக்கு எடுக்க மாட்டானுங்க” அவன் உறுதியாகச் சொல்ல, அதிர்ந்து திரும்பியது அவள் கண்கள்.
“ம்ம். உண்மையைத் தான் சொல்றேன் நந்து. எனக்கும் விளையாடின வரை போதும்னு தோனிடுச்சு. இனி ஐபிஎல் மட்டும் ஆடிட்டு, அப்படியே இருந்திடலாம்னு இருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு ரிட்டயர்மென்ட் அனௌன்ஸ் பண்ணிடுவேன்.” உணர்ச்சி துடைத்த குரலில் அவன் சொல்ல,
“என்ன வயசாச்சுன்னு ரிட்டயர்மென்ட் அனௌன்ஸ் பண்ணப் போற நீ? இவன் என்ன பேசுறான் ரியா? மூளை குழம்பிடுச்சா இவனுக்கு?” கணவன், மனைவி இருவரையும் மாறி, மாறி பார்த்து அவள் படபடக்க, நிதானமாகப் பேசினான் சுகாஸ்.
“ப்ச், போதும் நந்து. இன்னும் கொஞ்ச நாள் இந்தியாக்கு ஆடினா, கிரிக்கெட்டை வெறுத்துடுவேன் போலத் தோணுது, அவ்ளோ பாலிடிக்ஸ் இங்க. கேப்டன் கூடச் சேர்ந்து நானும் மூணு டிராபிஸ் தூக்கின இந்தியன் பிளேயர் நந்து. உன் ஆள் மாதிரி ரெண்டு வேர்ல்ட் கப் அடிச்சவன் இல்ல தான் நான். ஆனாலும்…”
அண்டர் – 19 மற்றும் இந்திய ஆண்கள் ஆணி வென்ற உலகக் கோப்பைகளைக் குறிப்பிட்டு அவன் சொல்ல, நந்தனாவின் முகத்தில் கணவன் குறித்த அப்பட்டமான பெருமித புன்னகை.
“அவரும் சரி, நானும் சரி. அவரோட முதல் வேர்ல்ட் கப் எக்ஸ்பீரியன்ஸை தான் பெருசா பார்க்கறோம். ரெண்டாவது வேர்ல்ட் கப் அடிச்ச பெருமை எல்லாம் நீங்க தானே தட்டிக்கிட்டீங்க. நீ, கேப்டன், யுவா. எவ்ளோ சீனியர் பிளேயர்ஸ் இருந்தீங்க. அப்போ நிரஞ்சன் பெருசா பேசப்படல.”
“அதுல உனக்கு ரொம்ப வருத்தம் போல” என்று கேலி செய்து சிரித்த சுகாஸ், உடனே தீவிர பாவத்துக்குத் தாவினான்.
“50 ஓவர் வேர்ல்ட் கப், டி 20 வேர்ல்ட் கப், சாம்பியன்ஸ் டிராபின்னு சாதிச்ச நிமிஷங்கள் மனசுல அழுத்தமா, அழகா பதிஞ்சுருக்கு நந்து. அப்படியே போய்டுறேன் நான். இனி வரப் போற யங்ஸ்டர்ஸ்க்கு வழி விடணும். அவங்களுக்கும் இந்தியன் டீம்ல ஆட ஒரு வாய்ப்பு கொடுக்கணும், தானே? அதுக்கு என்னை மாதிரி சீனியர்ஸ் ஒதுங்கினா தான் உண்டு” அவனது தர்க்கத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
கணவனின் முடிவில் ரியாவும் அதிருப்தியுடன் அமர்ந்திருப்பது அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
தனது கோபத்தை ஒற்றைப் பார்வையில் தெரிவித்து விட்டு, அங்கிருந்து எழுந்து தனது இருக்கைக்குப் போனாள் நந்தனா.
நல்ல உறக்கத்தில் இருந்த, கணவனின் தோள் சாய்ந்து அவளும் கண் மூட, விமானம் தரையிறங்க தயாரானது.
பெங்களூரில் நிரஞ்சன் பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்க, நந்தனா தன் வேலையில் மூழ்கியிருந்தாள்.
போட்டி நாளும் வந்தது. ஒவ்வொரு வருடமும், “இந்த வருடம் கப் எங்களுக்கே” என்று முழக்கமிடும் பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூடக் கோப்பையை வென்றிருக்கவில்லை.
இந்த வருடமும் அவர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது.
அன்றைய போட்டியில், “தலைவன் இருக்கிறான்” என்று சென்னை அணி ரசிகர்களை மார்தட்டிக் கொள்ளச் செய்தார் கேப்டன்.
தொடக்க வீரர்கள் நால்வரும் சொற்ப ரன்களில் வெளியேறியிருக்க, நிரஞ்சன் மற்றும் கேப்டன் மட்டுமே நின்று அணிக்கு வெற்றியை தேடித் தந்திருந்தனர்.
அவர்களின் வழக்கமாகக் கடைசிப் பந்து வரை ஆட்டத்தை இழுத்து, ரசிகர்களின் இதயத் துடிப்பை இரு மடங்காக்கி, தலைவன் பாணியில் நிரஞ்சன் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடிக்க, எப்போதும் உணர்ச்சிகளை வெளிக்கட்டாத நந்தனா கூட இருக்கையில் இருந்து எழுந்து நின்று, ஆர்ப்பரித்துக் கைத்தட்ட தொடங்கியிருந்தாள்.
சென்னை அணி அந்த வருடமும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட, நிரஞ்சனை கையில் பிடிக்க முடியவில்லை.
சென்னை அணி நிர்வாகம் அனைவரையும் பாராட்டி தட்டிக் கொடுத்தது.
நிரஞ்சன் அளவுக்கு இல்லையென்றாலும் நந்தனாவும் வெளிப்படையாக மகிழவே செய்தாள். ஆனால், நிரஞ்சனின் மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.
தோல்வியை விட வெற்றியை கையாள்வது தானே கடினம்?
மனைவியிடம் மட்டுமல்ல அனைவரிடமுமே அதீத அன்பு காட்டினான் அவன். நந்தனா அவனைக் கவலையுடன் பார்த்தாள்.
“வாட்ஸ் ராங் வித் ஹிம்?” நிரஞ்சன் எதிரணி வீரனிடம், கலகலத்துக் கொண்டிருக்க, நந்தனாவிடம் காய்ந்தான் சுகாஸ்.
நிரஞ்சன் பேசிக் கொண்டிருந்த வீரனை கைக் காட்டி, “அந்தப் பவுலர் போன வருசம், ஏன் இந்த வருஷம் கூட என்னெல்லாம் பண்ணான் தெரியுமா? வேணும்னு பாலை இவன் தலையில போட்டான். ரன் எடுக்க ஒடும் போது இடையில வந்து இடிச்சு தள்ளி விட்டான். இவன் பௌலிங் பண்ண ஓடி வரும் போது, பாதில கைக் காட்டி நிறுத்தி கடுப்பேத்தி இருக்கான். ஆனா, உன் ஆளு.. அவன்கிட்ட போய்ப் பேசிட்டு இருக்கான். இவனுக்கு என்னாச்சு?” சுகாஸ் கொதிக்க,
“ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் (Sportsmanship) கேள்விப் பட்டிருக்கியா?” என்றாள் நந்தனா கிண்டலாக,
“என்ன? ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப்பா? மை ஃபூட் (My foot). அப்படின்னா என்னனு கேட்கற ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருக்கான் உன் ஆளு.” என்றவன்,
“அவனைக் கொஞ்சம் பார்த்துக்கோ நந்து. அப்படியே உன்னையும்…” என்றவனின் பார்வை தீர்க்கமாய் நிரஞ்சனின் மேலிருந்தது.
அந்நேரம் நிரஞ்சனின் கண்கள் நீச்சல் குளத்தின் அருகில் நின்றிருந்தவர்களை நோக்கித் திரும்பியது. மனைவியைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்து அவர்களை நோக்கி வந்தான் அவன்.
ஒரு கையசைப்புடன் விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தான் சுகாஸ்.
“என்னவாம் அவனுக்கு? என்னை முறைக்கறான்?” நிரஞ்சன் கேட்க, “தூக்கம் வருது” என்றாள் அவள்.
சென்னை அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்க, இருவரும் தங்களின் அறைக்கு நழுவினார்கள்.
அந்த வருடம் மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப்பிற்குத் தேர்வாகி இருந்தது.
சென்னை முதலில் மும்பையிடம் தோற்று பின்னர் டெல்லி அணியுடன் மோதி, வெற்றி பெற்று என்று கடின பாதையில் முன்னேறி எட்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அங்கே அவர்களுக்காகக் காத்திருந்தது சென்னையின் பரம எதிரி என்று அழைக்கப்படும் மும்பை அணி.
நீலமும், மஞ்சளும் மும்பையின் வான்கடே மைதானத்தை நிறைத்திருக்க, “சென்னை, மும்பை” என்ற ஆரவார குரல்கள் காற்றில் அலைமோதி கொண்டிருந்தது.
முதலில் களம் இறங்கிய மும்பை அணி சென்னையின் துல்லியமான பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாது எட்டு விக்கெட்டுகள் இழந்து, 140 ரன்கள் அடித்திருந்தது.
141 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி.
ராஜ் மற்றும் ஷான் அசத்தலான ஆரம்பத்தைக் கொடுக்க, ராஜை லாவகமாக வெளியேற்றிக் கொண்டாடியது மும்பை அணி.
அவனைத் தொடர்ந்து இறங்கிய சுகாஸ் இரண்டு ஒவர் நின்றாலும் அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்து விட்டே வெளியேறினான்.
அடுத்து இறங்கிய கேப்டன் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாக மைதானமே மயான அமைதியானது. ரசிகர்கள் சோர்ந்து போய், ஓய்ந்து, சாய்ந்து இருக்கையில் அமர நிரஞ்சன் களத்தில் இறங்கினான்.
ஷான், நிரஞ்சன் கூட்டணி வெகு நிதானமாக ஆடியது. ஒவ்வொரு பந்தையும் துல்லியமாகக் கணித்து ஆடினான் நிரஞ்சன்.
ஷான் 70 ரன்கள் அடித்திருக்க, அவர் முகத்தில் அளவுக்கு அதிகமான சோர்வு. காலை அவர் இழுத்து இழுத்து ஓடுவதைக் கணினி திரை வழியே பார்த்த நந்தனா, “ஹி இஸ் ஹர்ட்” என்று சிவராஜிடம் சுட்டிக் காட்டினாள்.
போட்டி அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்க, அவனைவரின் கவனமும் வெற்றி வாகை சூடுவதில் மட்டுமே இருந்தது. அதைப் பெற்றுத் தரப் போகும் வீரனை குறித்த அக்கறை அங்கே ஒருவருக்கும் இல்லை.
அத்தனை கேமராக்கள் நிகழ்வை நேரடியாகப் படம் பிடித்து உலகெங்கும் ஒளிபரப்பிக் கொண்டிருக்க, ஒருவர் கண்ணில் கூடவா சிக்கவில்லை அவன் காயம் என்று அரற்றியது அவள் மனம்.
ஓரமாக நின்றிருந்த மெடிக்கல் டீமை அவள் கையசைத்து அழைத்து, நிலைமையை விளக்கினாள். அவர்கள் உள்ளே செல்ல தயாராக நிற்க,
“மெடிக்கல் டீமை உள்ள அனுப்புங்க. அவர் கால்ல ரத்தம் சொட்டுது” அவள் சிவராஜிடம் புலம்பிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பக்கம் மும்பை அணி வீரன் ஒருவன் தவறுதலாக நிரஞ்சனின் மேல் மோத, நிலை குலைந்து கீழே விழுந்திருந்தான் அவன்.
மெதுவாக மார்பை பற்றியபடி எழுந்து நின்றான் நிரஞ்சன். அவன் முகப் பாவத்தில் இருந்தே காயத்தைக் கணித்த நந்தனா கைகளை இறுக மூடினாள்.
பலத்த அடியே பட்டிருந்தாலும் அவளின் கூச்ச சுபாவி கணவன் இத்தனை கோடி பேர் முன்பு சட்டையைக் கழற்ற மாட்டான் என்பது அவளுக்கு நிச்சயம்.
கை, கால்களை உதறி அவன் நன்றாக நிற்கவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
ஆட்டத்தின் கடைசி ஒவருக்கு வந்திருந்தனர்.
ஆறு பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்தாக வேண்டிய சூழல்.
“சென்னை அணி கோப்பையை வெல்ல எட்டே ரன்கள் தேவை” என்று அறிவிப்பு வர, முதல் மூன்று பந்துகளில் ஐந்து ரன்கள் சேர்த்திருந்தனர். நான்காம் பாலில் ஷான் காயம் காரணமாக ஓட முடியாமல் ரன் அவுட்டாக நிரஞ்சன் பதட்டத்துடன் அவரைப் பார்த்து, “சாரி” என்றான்.
அவனுக்குத் தைரியம் சொல்லி விட்டு அவர் வெளியேற மருத்துவக் குழு அவரைச் சூழ்ந்து கொண்டது.
ஐந்தாவது பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்தனர்.
கடைசிப் பந்து. ஆனால், வெற்றி பெற இரண்டு ரன்கள் தேவை. ஆட்டம் டிராவில் முடிந்து, சூப்பர் ஒவர் (Super over) செல்ல ஒற்றை ரன் தேவை எனும் நிலை.
ஆறாவது பந்தை எதிர்க்கொள்ளத் தயாராக நின்றான் நிரஞ்சன்.
“என்னமோ சரியில்லை” என்றார் கணினி திரையையும், மைதானத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்த சிவராஜ். அவருக்கு அருகில் நின்ற கேப்டன், பயிற்சியாளர் இருவரும் ஒன்று போல, “என்ன சரியில்ல?” என்று பதட்டமாகக் கேட்க,
“நடுவர்” என்றாள் நந்தனா.
“என்ன?” அமைதிக்கு பெயர் போன கேப்டன் பதட்டமாக, நிலைமையைத் துல்லியமாகக் கணித்த நந்தனாவிற்கு இதயம் நின்று விடும் வேகத்தில் துடித்தது.
மும்பை அணியின் ரசிகர்கள் கைக் கூப்பிக் கடவுளை வேண்டி கொண்டிருக்க, சென்னை அணி ரசிகர்கள், “நிரஞ்சன், நிரஞ்சன்” என்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.
பந்து வீச்சாளர், பந்து வீச ஓடி வந்து கொண்டிருக்க, “அவர் யார்க்கர் பால் போட போறார்” என்றாள் நந்தனா, சட்டெனச் சரியாகக் கணித்து.
மற்ற மூவரும் அதிர்ந்து, “எஸ்” என்றார்கள் பதட்டமாக. அடுத்து நடக்கப் போவதை இப்போது அவர்களும் கணித்திருக்க, அனைவர் முகத்திலும் பதட்டம் சூழ்ந்திருந்தது.
நந்தனாவின் கண்களில் வைரமாய் மின்னியது ஒற்றைக் கண்ணீர் துளி.
ஆட்டம் தொடரும்…