மெல்ல குனிந்து ரிமோட்டை கையில் எடுத்தாள் நந்தனா. நின்ற இடத்தில் இருந்தே தொலைக்காட்சியைப் பார்த்தாள்.
அங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வீரர் அமர்ந்திருந்தார்.
ஐபிஎல் தொடங்கியதில் இருந்து அடிக்கடி அவரைத் தொலைக்காட்சி விவாதங்களில் காணலாம். நகைச்சுவை, விமர்சனம் என்ற பெயரில் எதையாவது உளறி வைப்பது அவரின் இயல்பு என்பது உலகறிந்த உண்மை.
அவரின் வார்த்தைகளைப் பொதுவாக வீரர்கள் பொருட்படுத்துவதில்லை.
அவரைப் பார்க்கும் நிரஞ்சனின் கண்களில் எப்போதும் கசப்பிருக்கும்.
‘இப்போது என்ன சொல்லி இருப்பார்? கணவன் இத்தனை கோபப்படும் அளவு?’ என்ற யோசனையுடன் உடலின் சோர்வும், மனதின் சோர்வும் சேர்ந்து அவளை அழுத்த, கணவனுக்கு அருகில் சென்றாள் நந்தனா.
சில மாதங்களாகவே நிரஞ்சன் அவனாகவே இல்லை. அவள் அறிந்த நிரஞ்சனாகவே இல்லை. இப்போதெல்லாம் அவனுக்கு அதிகமாகக் கோபம் வருகிறது. விமர்சனங்களை விபரீதமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான் அவன்.
அதன் விளைவு? காட்டுக் கத்தல் தான். அனைத்தையும் அவள் தானே கேட்டாக வேண்டும். அவனுக்கு இருக்கும் அழுத்தத்தைக் கேளாமலேயே அவளுக்கும் கடத்தி விடுவான் அவன்.
அவர்கள் இருவருக்குமே அடுத்தப் போட்டி மிக மிக முக்கியமானது. இருவருக்கும் நல்ல ஓய்வு தேவை. நந்தனாவின் மூளை முழுதாக வேலையில் இறங்க வேண்டும். நிரஞ்சனுக்கு உடல், மனம் இரண்டின் ஆரோக்கியமும் முக்கியம்.
அதற்கு அவர்களுக்கு ஓய்வு இன்றியமையாதது. ஆனால், நிலைமையைப் பார்த்தால், ஓய்வு வாய்க்காது என்பதைப் புரிந்து கொண்ட நந்தனா, எப்போதும் போலச் சூழ்நிலையைச் சரிவரக் கையாளாமல் அதில் இருந்து தப்பிக்க வழி தேடினாள்.
கணவனைப் பார்த்தாள். அவன் எதுவும் சொல்வது போலத் தெரியவில்லை என்றதும், ரிமோட்டை ஓரமாக வைத்து விட்டு, திரும்பி அறைக்குள் சென்று கதவடைக்கப் போனாள்.
மின்னல் வேகத்தில் எழுந்து வந்து கதவைப் பிடித்தான் நிரஞ்சன்.
“என்ன? இன்னைக்கு உங்கப்பா வீட்டுக்குப் போகல?” கத்தியாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.
“ரெண்டு நிமிஷம் முன்னாடி போகணும்னு தான் நினைச்சேன். ஆனா, இந்நேரம் ப்ளைட் இருக்காது, இல்லையா? அதுவும் இல்லாம நாளைக்குக் காலையில எப்படியும் ஊருக்கு தானே போறோம். அப்போ…” அவன் பார்வையில் படர்ந்த கோபத்தில் பேச்சை பட்டென நிறுத்தினாள் நந்தனா.
“எப்பவும் என்னை விட்டு ஒடிட்டே இரு. எதுக்கு ஓடுறன்னு தான் எனக்கும் புரியல” அலுத்துக் கொண்டான்.
‘பிரச்சனைகளைச் சந்திக்க முடியாமல் தான் ஓடுகிறேன். பேச்சை தொடங்குவது எளிது தான். ஆனால், அது எங்குப் போய் முடியும்?’ என்று நினைக்கையிலேயே அவளுக்கு உள்ளுக்குள் உதறியது.
கடந்த நான்கு மாதங்களில் ஐந்து முறைக்கு மேல் கணவனிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்குத் தனியாகச் சென்று நின்றாள் நந்தனா. அவனும் பின்னால் துரத்தி கொண்டே வந்து விடுவான் தான். அவளும் எளிதில் சமாதானம் ஆகியும் விடுவாள் தான். ஆனால், ஒவ்வொரு முறை அவள் தனியாக வீடு வரும் போதும், பெற்றோருக்கு பதறியது.
கடைசி முறை மகளிடம் நேரடியாகச் சொல்லியே விட்டார் பூர்ணிமா.
“உனக்கு என்ன பிரச்சினை நந்து மா? இப்படித் தொட்டதுக்கு எல்லாம் மாப்பிள்ளை கூடக் கோவிச்சிட்டு வந்தா, எங்களுக்குப் பயமா இருக்குடா. எதையும் பேசி சரி பண்ணப் பார்க்கணும். இப்படி ஓடி வந்துட்டா? பிரச்சினை தானே ஓடிப் போய்டுமா, என்ன?” அம்மாவை மௌனமாய் வெறித்தாள் நந்தனா.
“என்னடா? மாப்பிள்ளை எதுவும்…”
“ச்சே, ச்சே. இல்லம்மா. சும்மா, சின்னதா சண்டை. ஆனா, நிறைய நேரம் உங்களை மிஸ் பண்ணி தான் பார்க்க வந்தேன்” என்று சமாளித்துத் தான் கணவனோடு வீடு திரும்பினாள் அவள்.
இப்போது மனைவியின் கையைப் பிடித்து இழுத்தபடி அறைக்குள் நுழைந்தான் நிரஞ்சன்.
“என்ன விமர்சனம் பண்ண இந்தாளுக்கு என்ன தகுதி இருக்கு? எப்பப் பாரு, ஏன் என்னையே டார்கெட் பண்றான்? அவன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்திட்டு போக வேண்டியது தானே? பேசுறதுக்குக் காசு கொடுத்தா, என்ன வேணாலும் பேசுவானா?” அறையைக் கால்களால் அளந்தபடி கத்திக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
அமைதியாய் சென்று ஒரு பக்கமாகப் படுக்கையில் சரிந்தாள் நந்தனா.
இதயம் இஷ்டத்திற்குத் துடித்துக் கொண்டிருந்தது.
கணவனுக்கு ஆறுதலாகப் பேச அவளுக்கும் ஆசை தான். ஆனால், என்ன நடந்தது என்று தெரியாமல், என்ன சொல்வாள் அவள்?
“தூங்கலாம் நிரஞ்சன். நீங்க டயர்டா இருப்பீங்க”
நடை தடைப்பட, சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான் அவன்.
“என்னைத் தமிழ்நாடு ரஞ்சி டீம்குள்ள வர விடாம பண்ண இவர் என்னெல்லாம் பண்ணார் தெரியுமா? சொந்தக்காரன், தங்கச்சி பையன், ஒரே ஜாதி இப்படித் தான் டீமுக்கு ஆள் எடுத்தானுங்க. திறமையை மதிச்சதே இல்ல. இன்னைக்குத் திறமையைப் பத்தி பேசுறான் நந்து. கேட்கற எனக்கு எப்படியிருக்கும்?”
அவன் வெடிக்க, எழுந்து அவன் கையைப் பிடித்து இழுத்துப் படுக்கையில் அமர வைத்தாள் நந்தனா.
“இப்போ, பழசை எதுக்குக் கிளறிட்டு இருக்கீங்க?”
“உனக்குப் புரியலையா நந்து?” என்று ஆற்றாமையுடன் கேட்டவன், “உனக்குப் புரியாது நந்து” என்று அவனே முடித்துக் கொண்டான்.
“இந்தியன் டீம்ல என்னைச் செலக்ட் பண்ணதுக்கு அப்புறம் கூட எவ்ளோ கேவலமா அரசியல் பண்ணார் இந்த ஆள். தெரியுமா? நேரடியா செலக்சன் கமிட்டில இருந்தவர் கிட்ட, என்னைப் பத்தி இறக்கி பேசியிருக்கார். எனக்குப் பதிலா வேற ஒருத்தனை எடுக்கச் சொல்லி ரெக்கமண்ட் பண்ணியிருக்கார். அவங்க ஆளுங்க யூ சீ.”
புலம்பியபடியே படுக்கையில் சரிந்தான் அவன்.
“அதுவரை நான் எடுத்திருந்த ரன்ஸ் அண்ட் விக்கெட்ஸ் தான் அன்னைக்கு எனக்காக நின்னு பேசுச்சு நந்து. எப்படி மனசாட்சியே இல்லாம இப்படி நடந்துக்க இவங்களால முடியுதுன்னு அவ்ளோ யோசிச்சு இருக்கேன். அந்தப் பதினெட்டு வயசு நிரஞ்சனுக்கு எப்படி இருந்திருக்கும் ஜஸ்ட் கற்பனை பண்ணிப் பாரேன் நந்து. நூறு கோடி மக்கள் இருக்க நாட்ல, அதிசயமா வாய்ப்பு கிடைச்சு, அதையும் ஒருத்தன் தட்டி விடத் தயாரா நின்னா? பயந்து, உடைஞ்சு, பாத்ரூம்ல கத்தி அழுதுருக்கேன் நந்து.” கணத்தில் அவன் கை வளைவில் இருந்தாள் நந்தனா. வார்த்தைகளால் பகிர முடியாததை ஸ்பரிசத்தால் உணர்த்தினாள்.
“ஷ்ஷ்ஷ் ரஞ்சன். இந்தியா இதுவரை பார்த்த பெஸ்ட் பிளேயர்ஸ்ல நீங்களும் ஒருத்தர். அதை யார் நினைச்சாலும் மாத்த முடியாது. இந்த நிமிஷம் அதான் நிஜம்.” அவள் மென்மையாய் சொல்ல,
“பதினஞ்சு வயசுல படிப்பை கூட ஒழுங்கா முடிக்காம, கிரிக்கெட்குள்ள வந்தேன் நந்து. ஒருவேளை என் வாழ்க்கையில் கிரிக்கெட் இல்லனா என்ன பண்ணி இருப்பேன் நந்து? எங்கப்பா ஹோட்டல்ல எச்சி தட்டு தான் கழுவி இருக்கணும்” கரகரத்த குரலில் அவன் சொல்ல,
“ஏன் இப்படிப் பேசுறீங்க?” ஆதங்கத்துடன் கேட்டாள்.
“இவனுங்க மேல இருந்த கோபத்தை ஆட்டத்தில் காட்டினேன் நந்து. பேட்டிங், பவுலிங், பில்டிங் மூணையும் வெறித்தனமா பண்ணேன். ஆல் ரவுண்டர் நிரஞ்சன், பேர் வாங்க அவ்ளோ அடிபட்டு இருக்கேன். அத்தனை போராட்டத்துக்கு அப்புறம் தான் எனக்கான நிரந்தர இடம் இங்க கிடைச்சது நந்து. அதுவும் வேர்ல்டு கப் வின் பண்ணது எல்லாம், இன்னமும் கனவு போலத் தான் இருக்கு”
இன்றைக்கு ஏதோ ஒன்று கணவனை அதிகமாய்ப் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள் நந்தனா.
என்னவென்று விசாரிக்க எதுவோ ஒன்று அவளைத் தடுத்தது.
“எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு நிரஞ்சன். ஃபைனல் மேட்ச்ல ரெண்டு விக்கெட் எடுத்தீங்க. 60 ரன்ஸ் மேல அடிச்சுருந்தீங்க. ஸ்கூல் விட்டு வந்து ட்ரெஸ் கூட மாத்தாம மேட்ச் பார்த்து அம்மாகிட்ட அப்படித் திட்டு வாங்கினேன். தெரியுமா?”
அவள் சிரிப்புடன் சொல்ல, புன்னகைத்தான் நிரஞ்சன்.
“ஸ்கூலா? ம்ம், ஸ்கூல் தான் படிச்சுட்டு இருந்திருப்ப இல்ல?” என்று புருவம் சுருக்கியவன்,
“அப்போ, உனக்கென்ன ஒரு 13 வயசு இருந்திருக்குமா?” அவன் கேட்க, உதடு கடித்துப் புன்னகைத்தாள் நந்தனா.
“ம்ம். 13 தான். படிப்புல கவனம் இல்ல. எந்நேரமும் என்ன கிரிக்கெட் பார்க்க வேண்டியிருக்குன்னு அம்மா கத்த, அப்பா தான் அம்மாவை சரிகட்டி என்னை மேட்ச் பார்க்க வச்சார். நீங்க பேட் பண்ணும் போதெல்லாம் தொண்டை அடைக்கற அளவுக்கு அப்பா கூடச் சேர்ந்து, “நிரஞ்சன், நிரஞ்சன்” கத்தி இருக்கேன். நீங்க வின் பண்ணதும் வீடே இடிஞ்சு போற மாதிரி, நானும், அப்பாவும் அப்படியொரு ஆட்டம் போட்டோம்.”
அவனது ரசிகையாக நந்தனா பேசுவது அரிது. ஆகையால், இது போன்ற அதிசய தருணங்களை அலாதி ஆர்வத்துடன் கேட்பான் நிரஞ்சன்.
“அன்னைக்கு நைட் ஹோட்டல்ல டின்னர், விதவிதமான சாக்லேட்ஸ், ஐஸ்கிரீம்னு அப்பா, அவரே சாதிச்சது போல எங்களுக்கு ட்ரீட் எல்லாம் கொடுத்தார். அப்படிக் கொண்டாடினோம்”
அவள் சொல்ல, சொல்ல நிரஞ்சன் முகத்தில் இளஞ்சிரிப்பு. இப்போது அவனது மனநிலை முற்றிலுமாக மாறியிருந்தது.
“மறக்கவே முடியாத பொக்கிஷ நாட்கள் நந்து”
அவன் சொல்ல, ஆமோதித்தாள் அவள்.
அவன் பேசிக் கொண்டேயிருக்க, அவளுக்குக் கண்கள் சொருகியது.
“சில மாசத்துக்கு முன்ன, ஆஸ்திரேலியா கூட ஒன் டே மேட்ச் விளையாடின அப்போ, நான் சொதப்பினதா நினைச்ச நாள். நீ ஏன் என்னைப் பாராட்டின நந்து?” அவன் திடீரென்று கேட்க, அரைத் தூக்கத்தில் இருந்தவள் பட்டென்று விழித்து அவனை விழி விரித்துப் பார்த்தாள்.
அவன் கேள்வியாகப் புருவம் உயர்த்த,
“அது…” அவள் இழுக்க,
“அன்னைக்குக் கோச் கூட அதையே தான் சொன்னார். நான் நிறைய நேரங்கள்ல எல்லோரையும் போல நார்மலா தான் கிரிக்கெட்டை பார்க்கறேன். இல்ல? அது என்னோட தப்பு தான். நீ, அப்புறம் கோச் மாதிரி ஆட்கள் டெக்னிக்கலா பார்ப்பீங்கன்னு உன்கிட்ட கோபப்பட்டதுக்கு அப்புறம் தான் எனக்கே ரியலைஸ் ஆச்சு.” என்று மன்னிப்பு கேட்கப் போனவனின் பேச்சை சட்டென்று இடைமறித்தாள் நந்தனா.
“எஸ் நிரஞ்சன். 50, 100 ரன்ஸ் ஒருத்தரே நின்னு அடிக்கறது பெருசு தான். ஆனா, அதே நேரம் டீம்ல இருக்கற ஒவ்வொருத்தர் அடிக்கற 5, 10 ரன்ஸிம் டீமுக்கு இம்பார்டெண்ட் இல்லையா? எல்லாரோட கான்ட்ரிபியூஷனையும் பார்க்கணும் இல்ல? நீங்க கிரவுண்ட்ல நிக்கற ஒவ்வொரு செகண்ட்டும் நமக்கு முக்கியம் தானே? நீங்க தொட்ட ஒவ்வொரு பாலையும் தான் பார்ப்போமே தவிர, ஏன், எப்படி அவுட் ஆனீங்கன்னு மட்டும் ஆராய்ச்சி பண்ணிட்டிருருக்க மாட்டோம்” அவள் அழுத்தமாகச் சொல்ல, அதை ஏற்கனவே அறிந்தவன், மௌனமாய்ப் படுத்திருந்தான்.
மனைவியின் கூந்தலை கோதி, “சாரி” என்றான் தயக்கத்துடன்.
“இட்ஸ் ஓகே.” என்றாள் முணுமுணுப்பாக. மனம் ஆழ்ந்த அமைதியை உணர, அவன் மார்பில் கரம் பதித்து அப்படியே உறங்கிப் போனாள் நந்தனா.