இனியொரு பிரிவேது – 11

தனக்கு எதிரில் நின்றவனை நேர்ப் பார்வை பார்த்தாள் நந்தனா.

இதுவரை கணவனாகவும் சரி, கிரிக்கெட்டராகவும் சரி, இப்படி ஒரு முகத்தை நிரஞ்சன் அவளிடம் காட்டியதேயில்லை.

ஆடுகளத்தில் நிதானத்திற்குப் பெயர் போன மிகச் சில இந்திய வீரர்களில் அவனும் ஒருவன். ஆனால், இன்று கண்களில் கோபக் கனலுடன் நின்றவனைப் பார்க்க நந்தனாவிற்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

அவளது பாராட்டை அவன் சரியாகப் புரிந்து கொள்ளாத வருத்தம் மனதை என்னவோ செய்தது.

அவள் பொய்யாக அவனைப் பாராட்டவில்லை என்று நிரூபிக்க அவளின் முன்னிருந்த வீடியோ க்ளிப்பை ஓட விட்டு அவன் பக்கமாகத் திருப்பினால் போதும். அவளது வார்த்தைகளில் இருந்த உண்மையை அவன் உணர்ந்துக் கொள்வான்.

ஆனால், அதைச் செய்யவில்லை அவள். செய்யத் தோன்றவும் இல்லை.

“அச்சோ, நிரஞ்சன். நான் போய் உங்களை நக்கல் பண்ணுவேனா?” என்று வீண் வார்த்தைகளால் அவனை வருடிக் கொடுக்கவும் விரும்பவில்லை அவள்.

முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் அவனை அப்படியே பார்த்திருந்தாள்.

தன் முன் நிற்பவன் கிரிக்கெட்டர் நிரஞ்சன், தன் கணவன் அல்ல என்று மீண்டும் மீண்டும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள்.

அவளது விழிகளை அதற்கு மேல் சந்திக்க இயலாது, “சாரி” என்ற நிரஞ்சன் வேகமாக உடை மாற்றும் அறையை நோக்கி நகர்ந்திருந்தான்.

கண்களைத் தேய்த்து விட்டு, வேலையில் கவனத்தைத் திருப்பினாள் நந்தனா.

அடுத்து வந்த இரு நாட்களும் போட்டி ஆரம்பிக்கும் முன் கணவனைக் காண்பதையே தவிர்த்தாள் அவள். போட்டிக்கு பின்னர் அவன் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவே இல்லை அவள்.

அவனும் அப்படியொன்றும் எளிதாகப் பின் வாங்கி விடவில்லை. மனைவியைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். ஆனால், சரியான பதில் வந்தால் தானே?

பகலில் வெயிலாகக் காய்ந்து, இரவில் நிலவாகக் குளிர்ந்த கணவனின் மனமும், குணமும் நந்தனாவிற்குத் தொடக்கத்தில் புதிராகத் தான் இருந்தது.

“விளையாட்டைக் கற்றுத் தா” என்று முன்னர் அவன் கேட்டதை நினைக்கையில் இப்போது நகைக்கத் தோன்றியது. அவனுக்கு எல்லாமே தெரியும் எனும் போது அவள் என்ன கற்றுத் தந்து விட முடியும்?

ஒவ்வொரு நாளும் அன்றைய அவனது ஆட்டம் குறித்த கணவனது கேள்விகளை மிக லாவகமாகப் பதில் அளிக்காமல் தவிர்த்தாள் அவள்.

அவனது கோபம் வன்மையாக, வார்த்தைகளாக வெளிவந்தது.

சில நேரங்களில் வார்த்தைகள் வாளாக வெட்டினாலும், வாழ்க்கையின் வண்ணத்தை வாட விடாமல் இருக்க வாளாவிருந்தாள் நந்தனா.

அவள் இதை ஏற்கனவே எதிர்பார்த்தும் இருந்ததால், அவளால் அவனைச் சுலபமாகக் கையாள முடிந்தது.

மூன்றாம் நாள் போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அத்தொடரை வென்று விட, உலக அளவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் இந்தியாவிற்கு நிச்சயம் அது பின்னடைவு தான்.

இந்திய அணியினர் எப்போதும் போலப் பலமாக விமர்சிக்கப்பட்டனர்.

நிரஞ்சனுக்கு விமர்சனங்கள் புதிதல்ல. ஆனால், இப்போதெல்லாம் அவனால் அதைச் சரியான முறையில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

யார் என்ன சொன்னாலும் பெரிதாகக் கண்டு கொள்ளாதவன், மனைவியின் வார்த்தைகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுத்தான். ஆனால், அவள் வாயை திறந்தால் தானே?

“நந்து? கோபமா?” போட்டி முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். விமானம் நடுவானில் இருக்க, நகரும் மேகங்களை ரசித்துக் கொண்டிருந்தாள் நந்தனா.

“எதுக்குக் கோபப்படனும்?” பார்வையை விலக்காமல் அவள் கேட்க,

“இல்ல. அது வந்து, நான் எது கேட்டாலும் பதில் சொல்லவே மாட்டேங்கற. அதான் கோபமா கேட்டேன்?”

“இப்போ கூட உங்களுக்குப் பதில் சொல்லிட்டு தானே இருக்கேன்?”

“எதிர்கேள்வி தான் கேட்கற. பதில் சொல்லல. அண்ட் நான் இதைச் சொல்லல. கிரிக்கெட் பத்தி பேச மாட்டேங்கற, என் பெர்பார்மன்ஸ் பத்தி கேட்டாலும் பதில் வரதில்ல. அதைச் சொன்னேன்” அவள் முகத்தை அவனை நோக்கி இழுத்து அவன் கேட்க,

“என்கிட்ட பேச வேற விஷயமே இல்லையா உங்களுக்கு?” என்று இப்போதும் பேச்சை மாற்றினாள் அவள்.

அவன் கண்களில் லேசாகக் கோபம் எட்டிப் பார்க்கவே செய்தது.

“நான் தூங்கப் போறேன்” இருக்கையில் சாய்ந்து கண் மூடிக் கொண்டான் நிரஞ்சன்.

ஒரு மணி நேரத்தில் விமானம் மும்பையில் தரையிறங்க, அவரவர் சிந்தனையில் மூழ்கியபடி வெளியில் வந்தனர் இருவரும்.

அங்கே இந்திய அணியினருடன் பேசுவதற்காக ஆவலுடன் காத்திருந்தார்கள் பத்திரிக்கையாளர்கள்.

அதைப் பார்த்ததும் அவர்கள் பார்வையில் படாமல் நழுவி விட நினைத்தாள் நந்தனா. நிரஞ்சனுக்கு அப்படியொரு எண்ணமில்லை போலும், மனைவியின் இடுப்பில் கரம் கோர்த்துப் புகைப்படங்களுக்குப் புன்னகைத்து நின்றான் அவன்.

அவனைத் திரும்பி முறைக்கவே செய்தாள் நந்தனா. அவளின் கண்களைக் குளிர் கண்ணாடி மறைத்திருக்க, மற்றவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், நிரஞ்சன் மனைவியின் பிடித்தமின்மையைக் கண்டுக்கொண்டான்.

முழுதாக இரண்டு நிமிடங்கள் அங்கு நிற்பதற்குள் அவளுக்குப் பெரும் அவஸ்தையாய் இருந்தது.

மறுகணம் பத்திரிக்கையாளர்கள் வீரர்களைக் கேள்வி கேட்கத் தொடங்க, மெல்ல அங்கிருந்து நகர்ந்தாள் நந்தனா.

இருவரும் அவர்களுக்காகக் காத்திருந்த காரில் ஏறி அமர, “இட்ஸ் ஜஸ்ட் அ ஃபோட்டோ நந்து” என்றான் நிரஞ்சன்.

அவளுக்குத் தெரியும், ஒரு பிரபலத்தின் மனைவியாக இதையெல்லாம் தாண்டி தான் வர வேண்டும். இதெல்லாம் தவிர்க்கவே முடியாத ஒன்று என்று. ஆனாலும், மனதில் லேசான எரிச்சல்.

சமீபமாகக் கணவன் செய்யும் அனைத்துமே அவளை எரிச்சலடைய தான் செய்கிறது. எந்நேரமும் கிரிக்கெட் குறித்த பேச்சு. அதில் நூறு கேள்விகள். அவள் சொல்வதைக் கேட்கப் போகிறானா? கிடையாது. பிறகு எதற்கு அதைப் பற்றிப் பேச வேண்டும்?

இதோ, இப்போது அவளுக்குப் பிடித்தமில்லை என்று தெரிந்தும் புகைப்படத்திற்கு நின்றது கூட அவளின் கோபத் தீயில் நெய்யை வார்த்தது.

அப்படியென்ன அவர்கள் உலகத்திற்குக் காண்பிக்க வேண்டும்? நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் தான் என்ன? என்று அவளின் யோசனை செல்ல, இன்றிரவு அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் என்பதை நினைக்கையிலேயே கணவன் மேல் கடுப்பாகத் தான் வந்தது.

மும்பையின் சாலைகளில் கார் ஊர்ந்து கொண்டிருக்க, “என்னை எங்க வீட்ல ட்ராப் பண்ணுங்க” என்றாள் அவள்.

“ஏன்? என் கூட வரலையா நீ? எனக்கு வேலை இருக்கு…”

அவனை முழுதாகப் பேசவே விடவில்லை அவள்.

“நீங்க உங்க வேலையைப் பாருங்க நிரஞ்சன். நான் வீட்டுக்குப் போறேன்”

அந்தக் குரல் அவனை மேலே எதையும் கேட்க விடவில்லை.

மனைவியின் கோபத்தை உணர்ந்தாலும், சமாதானப்படுத்த முனையவில்லை அவன்.

இருபது நிமிடங்களில் அவளது வீட்டின் முன் கார் நிற்க, தனது பையை மட்டும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அவள். அவனை உள்ளே அழைக்கவும் இல்லை. அவன் வரவும் இல்லை.

“நந்து, வா.. வா.. மாப்பிள்ளை எங்க?” பூர்ணிமா மகளைக் கண்ட மகிழ்ச்சியில் ஓடி வந்து அவளின் கைகளைப் பற்றினார். அப்படியே மருமகனை அவர் விசாரிக்க, “வருவார் மா” என்று விட்டு நடந்தாள் அவள்.

கார்த்திகேயன் மகளின் கைகளில் இருந்த பையை வாங்கிக் கொண்டார்.

அவளது அறைக்குச் சென்று முகம் கழுவி, உடை மாற்றி அவள் வெளியில் வர, கையில் டீ மற்றும் சிற்றுண்டியுடன் காத்திருந்தார் பூர்ணிமா.

“பசிக்குதா நந்து? இப்போ டீ குடி. நைட் மாப்பிள்ளை வந்ததுக்கு அப்புறம் சாப்பிடுவ” என்றபடி கிண்ணத்தை அவளிடம் நீட்டினார் அவர்.

அதைக் கையில் வாங்கியதும், நிரஞ்சனுக்குப் பிடித்த கொழுக்கடை என்று தான் நினைத்தாள் நந்தனா.

அவளுக்கு உண்ணவே விருப்பவில்லை. அம்மாவை வருத்தப்பட வைக்க மனமின்றி ஒன்றை கையில் எடுத்துக் கொண்டாள்.

தொலைக்காட்சியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் ஹைலைட்ஸ் (Highlights) ஓடிக் கொண்டிருக்க, அவளுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தார் கார்த்திகேயன்.

நிரஞ்சன், சுகாஸ், ஷர்மா என்று இந்திய அணி வீரர்கள் மாற்றி மாற்றிச் சிக்ஸ் மற்றும் ஃபோர் பறக்க விட்டுக் கொண்டிருந்தார்கள்.

“நிரஞ்சன் நல்லா ஆடினார் இல்ல நந்து? ஆனா, என்ன ஆஸ்திரேலியா டீம் அவரைப் பாலை தொட விடவேயில்ல. எங்க இந்தப் பாலை தொட்டுப் பார்னு, மனுஷனை மிரட்டிட்டானுங்க. பட், கிரவுண்ட்குள்ள அவர் இருந்த வரை மாப்பிள்ளை அசத்தலான ஆட்டம் ஆடினார் டா. பவுலிங்ல சில சொதப்பல்கள் இருந்தது தான். ஆனாலும், ஆறு விக்கெட் எடுக்கறது எல்லாம் பெரிய விஷயம் டா” கார்த்திகேயன் பேசிக் கொண்டேயிருக்க, நந்தனாவின் கண்கள் தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தது. செவியில் விழுந்த தந்தையின் வார்த்தைகள் மனதிற்கு விநோத அமைதியை தந்தது.

‘இதைத் தானே நானும் சொன்னேன்? ஆனால், கணவன் அதை எப்படிப் புரிந்து கொண்டான்?’ என்றது அவள் உள்மனம். இப்போது கையில் இருந்த தேநீர் கூடக் கசக்கும் உணர்வு.

“ஷர்மாவை ஹிட் மேன் சொல்றதில் தப்பேயில்ல நந்து. எப்படி ஆடுறார் பாரேன்”

இது போன்ற பேச்சுக்கள் தந்தைக்கும், மகளுக்கும் இடையில் எப்போதும் நடப்பது என்பதால் பூர்ணிமா ஓரமாக அமர்ந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு நிரஞ்சனின் பேட்டிங்கை வியந்து பாராட்டி, தந்தையிடம் விவாதித்த நாட்கள் நந்தனாவிற்குக் கண் முன் வந்து சென்றது.

“நோ பால் போடாம இருக்கணும் நிரஞ்சன். அவர் பால் போடுறதுக்கு முன்னாடி…” கார்த்திகேயன் பேசிக் கொண்டே போக, நந்தனா சட்டென எழுந்து விட்டாள்.

கணவனைப் பாராட்டும் போது ரசிக்க முடிந்தவளால் அவனைக் குறை கூறும் போது, ஏற்க முடியவில்லை, அவனைப் போலவே.

“தூக்கம் வருது பா” என்ற மகளின் கைகளைப் பிடித்து அமர வைத்த கார்த்திகேயன், “கொஞ்ச நேரம் உட்காரு நந்து மா. இந்நேரம் தூங்கினா, நைட் தூக்கம் வராது” என்று சொல்ல, வேறு வழியின்றி அமர்ந்தாள் நந்தனா.

அலைபேசிக்கு தலையைக் கொடுத்திருந்த பூர்ணிமா, “நந்து ப்பா, இங்க பாருங்களேன்” என்று உற்சாக மிகுதியில் சத்தமாகச் சொல்லி, அலைபேசியைக் கணவரிடம் நீட்ட, அதை மெல்ல எட்டிப் பார்த்தாள் நந்தனா.

“ஃபோட்டோ அழகா இருக்கு நந்து.” என்று சிரித்தவர்,

“மாப்பிள்ளையை முறைக்கறியா என்ன?” என்று கண்ணைச் சுருக்கிக் கேட்க,

“ஏன் மா? முறைக்கற மாதிரியா இருக்கு? அதுக்குப் பேரு ரொமான்டிக் லுக் மா” என்றாள் நந்தனா நமுட்டு சிரிப்புடன்.

பெற்றோர் இருவரும் சிரிக்க, அவளையும் தொற்றியது அச்சிரிப்பு.

மகளின் முகத்தையே ஆராய்ந்தது கார்த்திகேயனின் கண்கள்.

“விளையாட்டை விட வாழ்க்கை முக்கியம் நந்து மா” திடீரென்று அவர் சொல்ல, திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் நந்தனா.

“எங்களுக்கு விளையாட்டு தான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சே ப்பா” என்றவளின்‌ முகத்தில் சிரிப்புத் தொலைந்திருந்தது. பட்டென எழுந்து அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அவளுக்கு மட்டும் மாலையிலேயே இரவு வந்திருந்தது.

“மாப்பிள்ளை கூடச் சண்டை போட்டு வந்திருக்காளா?” பூர்ணிமா கலக்கத்துடன் கேட்க,

“அப்படித் தான் தெரியுது பூர்ணி. ஆனா, கோவிச்சுட்டு தான் வந்திருக்கா. அவரைப் பிரிஞ்சு நந்துவால இருக்க…”

“என்னது? என்ன சொல்றீங்க? பிரிவு, கிரிவுன்னு பேசிட்டு இருக்கீங்க? கல்யாணமாகி முழுசா ஆறு மாசம் கூட ஆகல.” பூர்ணிமா பதற,

“ஐயோ தெரியாம சொல்லிட்டேன் பூர்ணி.”

“அதெப்படி தெரியாம அப்படியொரு வார்த்தை சொல்வீங்க? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உங்களுக்கு?” பூர்ணிமா கணவரை தாளிக்கத் தொடங்க, நந்தனாவை உறக்கம் சூழ்ந்து கொண்டது.

நிலவு வந்து, இரவும் வந்து விட உறங்கும் மகளை எழுப்ப மனமில்லால், அவளுக்கு அருகில் சில நொடிகள் அமர்ந்திருந்து விட்டு, எழுந்து போனார் பூர்ணிமா.

error: Content is protected !!
Scroll to Top