சுகாஸ் சொன்னது தன் வாழ்வில் அல்ல, மாறாக மனைவி நந்தனாவின் வாழ்வில் நிஜமாகப் போவது தெரியாமல் அவன் சிரித்துக் கொண்டிருக்க, அவனை நெருங்கி இருந்தாள் அவனின் மனைவி நந்தனா.
“ஹாய்” என்றாள் இருவரையும் பொதுவாகப் பார்த்து. அதுவரை அவளுடன் நடனமாடிக் கொண்டிருந்த ரியாவும் அங்கு வர, நால்வரும் ஒன்றாக நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
நிரஞ்சன், நந்தனா இருவரையும் நெருக்கமாக நிற்க வைத்து வித விதமாக, பல கோணங்களில் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினான் சுகாஸ்.
அடுத்தப் பத்தாம் நிமிடம் அவர்களது திருமணப் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு உலகிற்கு அவர்களது திருமணத்தை அறிவிக்கவும் செய்தான் அவன்.
“மற்றுமொரு விக்கெட் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் வீழ்ந்தது. (There goes another wicket successfully and happily.) தன் மனம் கவர்ந்த நந்தனாவை கரம் பிடித்தார் நிரஞ்சன் கிருஷ்ணகுமார். என் மனதுக்கு நெருக்கமான இருவர், இன்று திருமணப் பந்தத்தில் இணைந்தனர். அவர்களுக்கு என் அன்பும், நல்வாழ்த்துகளும்” என்ற வாழ்த்து செய்தியோடு சுகாஸ் அவர்களின் திருமணப் புகைப்படத்தைப் பகிர, நொடிகளில் இணையத்தில் தீயாகப் பரவத் தொடங்கியது செய்தி.
“மீடியா யாரும் இங்க, நம்மைத் தேடி வந்து தொல்லை பண்ண மாட்டாங்க தானே?” நிரஞ்சன் எச்சரிக்கையாகக் கேட்க,
“இல்ல, வாய்ப்பில்ல. இந்த ஃபோட்டோஸ் பார்த்தா சென்னையில் எடுத்த மாதிரியா இருக்கு? இந்தப் பேக் கிரவுண்ட் செட்டிங், பின்னாடி இருக்கக் கடல் எல்லாம் சென்னை மாதிரியிருக்கா? இல்லைல்ல? ஏதோ வெளிநாடுன்னு நினைச்சுப்பானுங்க. நீ கவலைப்படாம என்ஜாய் பண்ணு நிரஞ்” என்றான் சுகாஸ், அவன் தோளில் தட்டி.
ரியாவுடன் சிரித்துக் கொண்டிருந்த நந்தனாவிற்கு அந்நிமிடம் யார் குறித்த கவலையும் இல்லை. மதி முகத்தில் முழுமையான நிறைவு.
கணவனின் பார்வையில் மெல்ல அவனை நெருங்கி அவனுடன் கரம் கோர்த்துக் கொண்டாள் நந்தனா.
அவன் பார்வை மனைவியின் கழுத்திலேயே இருந்தது. பொன் தாலி உரசிய கழுத்தெலும்பில் வரிசையாய் பறந்து கொண்டிருந்த மூன்று சின்னஞ்சிறிய பறவைகளின் மேல் நிலைத்திருந்தது அவன் கண்கள்.
எப்போதும் அவனை இழுக்கும் அந்த டாட்டூ இன்று அதிகமாக ஈர்க்க, ஒற்றை விரல் கொண்டு அதை வருடினான் அவன். அதை எதிர்பாராத நந்தனா, ஆழமாய் மூச்சை உள்ளிழுத்தாள்.
“சாரி” என்றான் மென்மையான புன்னகையுடன்.
அந்நேரம் அவனது பெற்றோர் அங்கு வர, லேசாக இடைவெளி விட்டு நின்றனர் இருவரும்.
முதல் பார்வையிலேயே நிரஞ்சனின் அம்மா புவனாவிற்கு, நந்தனாவை பிடிக்கவில்லை. மகனை மறுத்தது முதல் காரணம், அவளது குடும்பப் பின்னணியும், பார்க்கும் வேலையும் இரண்டாவது காரணம்.
இத்தனைக்கும் அவரைச் சந்தித்த முதல் நாளே சட்டெனக் காலில் விழுந்து ஆசிர்வாதம் கேட்டு அவரின் மனதை கரைக்கத் தான் செய்தாள் நந்தனா.
மும்பையில் வளர்ந்த பழக்கம், பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்கும் வழக்கத்தை அவள் இங்கும் தொடர, மருமகளின் மேலான கோபத்தை அவரால் இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
ஆனாலும், அவருக்கு ஏதோ ஒரு அதிருப்தி.
இந்தியாவே கொண்டாடும் தங்களின் ஒரே மகனுக்கு ஊரைக் கூட்டி பிரம்மாண்டமாகத் திருமணம் செய்ய முடியவில்லை என்று அவர் வருந்த, அவரைச் சமாதானப்படுத்த தான் முயன்றான் நிரஞ்சன். ஆனால், அவரோ இறங்கி வருவது போலத் தெரியவில்லை. தொட்டதற்கு எல்லாம் குற்றம், குறைகள் கண்டுபிடித்து அவர் சொல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் நிரஞ்சன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
நந்தனா அனைவரையும் தன்னால் இயன்ற மட்டும் அரவணைத்து தான் போனாள். மாமியாரின் மன சுணக்கம் அவளுக்குப் புரியவே செய்தது.
நாத்தனார் அவளிடம் முதல் கேள்வியாக, “உங்களுக்குத் தமிழ் பேச தெரியுமா, அண்ணி?” என்று கேட்டப் போது, பளிச்சென்று புன்னகைத்து திருக்குறள் ஒன்றைச் சொன்னாள் அவள்.
நிரஞ்சனின் தங்கை நிவேதா பக்கென்று சிரித்து விட்டாள். அதன் பின் அவளிடம் இயல்பாகத் தான் பழகினாள்.
மாமனார் கிருஷ்ணகுமார் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவராக இருந்தார். அவளிடம் நன்றாகப் பேசினார், மரியாதையாக நடத்தினார்.
அனைத்திற்கும் மகனை ஆலோசித்தார் அவர்.
இப்போதும் மகனிடம், “அப்புறம் நம்ம வீட்டுக்குக் கிளம்பலாமா தம்பி? இன்னும் எவ்வளவு நேரம் ஹோட்டல்ல இருக்கறது? சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் பாக்கியிருக்கு இல்ல?” என்று தான் கேட்டுக் கொண்டிருந்தார்.
“போகலாம் ப்பா” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான் நிரஞ்சன்.
முதலில் நிரஞ்சனின் பூர்வீக வீட்டிற்குச் சென்றனர். அங்குச் சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து விட்டு, அவர்கள் நிரஞ்சனின் தற்போதைய அடையார் வீட்டிற்கு வரும் போது முழுதாக இரவாகி இருந்தது.
நந்தனாவின் மனம் முழுவதும் இப்பொழுது பெற்றோர் ஆக்கிரமித்துக் கொண்டனர். பல நாட்கள் பெற்றோரை பிரிந்து இருந்திருக்கிறாள் தான். ஆனால், திருமணம் அதன் பின்னான இந்தப் பிரிவை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அவளால்.
கார்த்திகேயன் வார்த்தைகளை வீணடிக்கவில்லை. கண்கள் பனிக்க மகளின் தலைக் கோதி ஆசிர்வதித்தார் அவர்.
பூர்ணிமாவிற்குத் தான் மிகுந்த கலக்கமாக இருந்தது. மகளுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்லிக் கொண்டேயிருந்தார் அவர்.
இருவரையும் பிரிந்து காரில் ஏறிய நொடி, அவளையும் அறியாமல் அழுது விட்டாள் நந்தனா. அவளைத் தோளோடு அணைத்து ஆற்றுப்படுத்தினான் நிரஞ்சன்.
“நந்து, வா. வீட்டுக்குள்ள போகலாம்” கணவனின் குரல் அவளைக் கலைக்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.
நிவேதா ஆரத்தி தட்டுடன் வீட்டு வாசலில் நிற்க, பட்டென்று காரிலிருந்து இறங்கினாள் அவள்.
அங்கும் விளக்கேற்றி, தெய்வங்களை வணங்கினர். நிவேதா சொன்னவற்றை மறுப்பின்றிச் செவ்வனே செய்தாள் நந்தனா.
அரை மணி நேரம் கழித்து அவர்களும் கிளம்பி விட, நிரஞ்சன் கதவை பூட்டிக் கொண்டிருக்க, வேக வேகமாக மாடிக்கு ஓடினாள் நந்தனா.
அது இரண்டு கிரவுண்ட் நிலத்தில், இரண்டடுக்குள் கொண்ட விஸ்தாரமான தனி வீடு. அக்கம் பக்கம் இருந்த வீடுகள் தனித் தீவுகள் போல ஒதுங்கி நின்றன.
புயல் வேகத்தில் நிரஞ்சனின் படுக்கை அறைக்குள் நுழைந்து, அதையொட்டி இருந்த பால்கனிக்கு சென்று, கிரில்லில் கையூன்றி சாய்ந்து நின்று, “அப்பாடா” என்றாள் சத்தமாக.
இளஞ்சிரிப்புடன் அவளைப் பின் தொடர்ந்து வந்து, அவளையொட்டி நின்றான் நிரஞ்சன்.
இருளும், கருமேகமும் இணைச் சேர்ந்து மழைக்கு அழைப்பு விடுத்திருக்க, நிலவு எங்கோ போய் ஒளிந்து கொண்டது.
காற்றில் கூடியிருந்த ஈரப்பதம் தென்றலாய் அவர்கள் மேனியை வருட, சிலிர்த்தாள் அவள். அவளின் சிலிர்ப்பை நெருங்கி நின்று உணர்ந்தான் நிரஞ்சன்.
“உள்ளப் போகலாம் வா, நந்து” அவன் அழைத்த நொடி, மழை பூந்தூறலாக விழத் துவங்க, முகத்தை வானத்தை நோக்கி நிமிர்த்திக் கண் மூடி நின்றாள் நந்தனா.
அவனுக்கு மழையை ரசிக்கும் மனநிலை என்றுமே இருந்தது கிடையாது. அதுவும் கிரிக்கெட்டிற்கு வந்த பின், மழை நாட்களை வெறுத்தான் என்றே சொல்லலாம். மழையின் பின் விளைவாகப் போட்டிகள் தாமதமாவதும், சமயங்களில் நடைபெறாமல் போவதுமே அதற்குக் காரணம்.
ஆனால், இன்று மழையை ரசிக்கும் மனைவியை ரசித்தான் அவன். அவளின் ரசனையை ரசித்தான். அவள் நனைய, நனைய அவன் தேகம் குளிர்ந்தது.
“நந்து ரொம்ப நனையாத. உடம்புக்கு முடியாம போகப் போகுது” கண்டித்தான். அவளோ கேட்கும் நிலையில் இல்லை. அவனையும் அருகில் இழுத்தாள்.
“பட்டுச் சேலை நனையுது பாரு பொண்டாட்டி”
“பொண்டாட்டி நனையறா, அந்தக் கவலை இருக்கா பாரு பேட்ஸ்மேனுக்கு?” சீண்டினாள்.
“நீ நனையலாம் டி. சேலை தான் நனைய கூடாது” என்றான் சரசமாக.
அவளின் கைகள் இயல்பாகச் சேலையைத் தளர்த்தி விடத் தொடங்க, “ஓய், என்ன பண்ற?” விழிகள் அலைபாய, தடுமாறினான் நிரஞ்சன்.
உதடு கடித்துப் புன்னகைத்து, “இருங்க, ஒரே நிமிஷம். சேலையைப் பத்திரமா உங்க கையில தர்றேன். அப்புறம் நான் முழுசா நனைஞ்சுக்கறேன்” அவள் கண்ணடித்துச் சொல்ல, அங்கே நிதானத்திற்குப் பெயர் போன அந்தப் பேட்ஸ்மேன், தடுமாறி “க்ளீன் பௌல்ட்” (Clean bowled) ஆனான்.
தலைக்குப்புற தரையில் வீழ்ந்தாலும் அவனது வழக்கமாகப் பட்டென்று சுதாரித்தான் நிரஞ்சன்.
மனைவியின் இரு கைகளையும் தன்னோடு பிணைத்து அவளைச் சேர்த்தணைத்தான். அவன் கண்கள் தானாகச் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது.
“டையர்ட்” என்று அவன் மார்பில் முணுமுணுத்தாள் அவள்.
“யாரு நானா? இல்லையே? அதுவும் இன்னைக்கு? நோ வே பொண்டாட்டி” என்றவன்,
“ஒரு நாள் முழுக்க மொட்ட வெயில்ல கால் கடுக்க நின்னு, கட்டாந்தரையில் கிரிக்கெட் ஆடுறவன் மா, நானு. 50,100 ரன் எடுக்க எவ்வளவு ஓடனும்? அப்பவே டையர்ட் ஆக மாட்டேன். இப்பவா, ஆகிடப் போறேன்” அவன் கேட்க, கேட்க அவள் முகத்தில் குறும்பு சிரிப்பு.
“நம்மோட முதல் இன்னிங்ஸ் (innings) இன்னைக்குத் தான் ஸ்டார்ட் ஆகப் போகுது. அப்படியே மயக்கம் வர்ற அளவுக்கு எனக்கு டையர்டா இருந்தாலும், உன்கிட்ட தான் மயங்கி விழுவேனே தவிர…”
“ஷ்ஷ்ஷ்” ஒரு விரலை அவன் உதட்டில் வைத்துப் பேச்சை நிறுத்தினாள் நந்தனா.
அவன் பார்வை மனைவியின் முகத்தில் உல்லாசமாய் உலாவியது. எப்போதும் போலக் கழுத்தில் தடுமாறி நின்றது.
மெல்ல குனிந்து அவளின் கழுத்தெலும்பில் பறந்து கொண்டிருந்த பறவை டாட்டூவில் அழுத்தமாய் இதழ் பதித்தான். முதல் முறையாக உணர்வு பூர்வமான தொடுகை இருவருக்கும் சிலிர்த்தது.
நந்தனாவின் கரங்கள் கணவனின் தோளில் இறுக்கமாகப் பதிய, “இதுக்கு என்ன அர்த்தம்?” என்று அந்நேரம் சந்தேகம் கேட்டான் அவன்.
அவளோ விடுகதையைக் கேட்டது போல விடை தெரியாமல் விழித்தாள்.
அவன் என்ன கேட்கிறான் என்றே விளங்கவில்லை அவளுக்கு.
“இந்தப் பறவைகள்..” ஒற்றை விரல் கொண்டு அவன் வருட, பல்லைக் கடித்தபடி, “ஃபிரீடம்” (Freedom) என்றாள்.
“என் மனசுக்கு பிடிச்ச மாதிரி, சுதந்திரமா, எல்லையில்லா வானத்தில், எந்தக் கவலையும் இல்லாம, ரெக்கை விரிச்சு பறக்கணும். இந்தப் பறவைகளைப் போல…” அவள் சொல்லி முடிக்கும் முன்பே அழுத்தமாய் அவன் இதழ்கள் அங்குப் பதிந்து மீண்டன.
அவன் கழுத்தில் முகம் பதித்து நின்ற மனைவியை அப்படியே கையில் அள்ளிக் கொண்டு, அறைக்குள் நுழைந்தான் நிரஞ்சன்.
இருவரும் நன்றாக நனைந்திருந்தனர். பால்கனி திரைசீலையை மட்டும் அவன் இழுத்து விட, மழைச் சாரலாக அவர்களை நனைத்துக் கொண்டேயிருந்தது.
மனைவியை மொத்தமாகத் தன் வசத்தில் கொண்டு வந்திருந்தான் நிரஞ்சன்.
அவனைத் தன் வசமாக்கும் முயற்சியில் பெண்ணின் கைகள் அவனது சட்டையை வேகமாக பற்றி அகற்ற முனைய, நெளிந்தான் அவன்.
“அடப்பாவி நிரஞ்சன்” என்று மயக்கத்திலும் தெளிவாக வியந்து, விழி விரித்து முணுமுணுத்தாள் நந்தனா.
“என் கண்ணை மட்டும் பாருடி பொண்டாட்டி” என்று சொல்லி, தான் ஒரு கூச்ச சுபாவி என்று தானே அப்பட்டமாக நிரூபித்தான் நிரஞ்சன்.
அவன் முகத்தில் தெரிந்த வெட்கத்தில் கிளுக்கி சிரித்தாள் நந்தனா. அவனுக்கும் சிரிப்புதான் வந்தது.
“கண்ணை மட்டும் பார்த்து எப்படி….” என்று அவள் தொடங்க, மேலே அவளைப் பேச விடவில்லை அவன்.
மென்மையாக அவளை உணர்ந்து, அவனை உணர வைத்து, பித்துக் கொள்ள வைத்து, இருவரையும் ஒன்றாக்கி இருந்தான்.
இரு விழிகளும் ஒருவரையொருவர் விழுங்கியபடி மூடிய கணம், நிரஞ்சன் நந்தனாவாகி இருக்க, நந்தனா நிரஞ்சனாகி இருந்தாள்.
அவர்களின் மோகத்திற்கு, காதலுக்கு, கூடலுக்கு இரவும், மழையும் வலுச்சேர்த்தது.
அத்தனை மகிழ்வாகத் தொடங்கியது அவர்களது திருமண வாழ்வு. ஒவ்வொரு நாளும் இனிமை கூடிக் கொண்டே தான் போனது.
அவர்களின் நாட்களுக்கு மேலும் சுவாரசியம் சேர்த்தது அவர்களின் வேலை.
நிரஞ்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தான். நந்தனா எப்போதும் போலத் தனது வேலைகளில் மூழ்கியிருந்தாள்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்காகத் தென் ஆப்ரிக்கா சென்றிருந்தது.
அன்றைய ஆட்டம் தொடங்கும் முன்பு மனைவியின் முன் வந்து நின்றான் நிரஞ்சன். அவனைக் கேள்வியுடன் ஏறிட்டாள் நந்தனா.
“என்கிட்ட எதுவும் சொல்லணுமா?” என்று அவன் கேட்க, “இல்லையே” என்றாள் இயல்பாக.
ஒரு நொடி நின்று நிதானித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
“நல்லா ஆடுங்க. ஜஸ்ட் ஃபோகஸ்” என்று சொன்னதைத் தவிர, வேறொன்றும் சொல்லவில்லை நந்தனா.
அவன் கண்களில் அசாதாரணமாக ஏதோ ஒன்று வந்து போனதை அவள் கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை.
தொடர்ந்த நாட்களிலும் அவன் அதே கேள்வியைக் கேட்க, பெரும் தயக்கத்துடன் சிலவற்றைச் சொன்னாள் நந்தனா.
இந்தப் பாலை (ball) தொட வேண்டாம், இந்தப் பவுலரின் பாலை இறங்கி, அடித்து ஆடுங்கள் என்றாள். மைதானத்தில் இருக்கும் வரை கவனத்தை அங்கு மட்டுமே குவிக்க மீண்டும் மீண்டும் அறிவுறுத்தினாள்.
“சிக்ஸ் அண்ட் ஃபோர் மட்டுமில்ல, ஒற்றை ரன்களும் ரொம்ப முக்கியம். சோ, யோசிக்காம ரன் எடுக்க ஒடுங்க. அப்புறம் பவுலிங் பண்ணும் போது அவாய்ட் நோ பால் அண்ட் வைட் (wide)”
மனைவி சொன்னதை மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டான் நிரஞ்சன். ஆனால், ஒன்றையும் செயலில் காட்டவில்லை.
இந்தியா அந்தத் தொடரை வெற்றிகரமாக வென்றது. தன் அபாரமான ஆட்டத்தினால் அத்தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டு, “தொடர் நாயகன்” (Man of the series) விருதை வென்றான் நிரஞ்சன்.
அவனது மகிழ்ச்சி அவன் கண்களில் அப்பட்டமாக வழிந்தது. எதிர் அணியினரிடம் கூட மிக இயல்பாகச் சிரித்துப் பேசி கலகலத்துக் கொண்டிருந்தான் அவன்.
“ஆட்ட நாயகன்” விருது பெற்ற சுகாஸ் போட்டி முடிந்ததும் அமைதியாய் மனைவி ரியா மற்றும் நந்தனாவிடம் வந்து நின்றான்.
ஆனால், கணவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தனா.
அன்றிரவு அவனது அதீத மகிழ்வை மனைவியோடும் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை நிரஞ்சன்.
அடுத்த மாதமே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் (Test matches) ஆரம்பமாகின.
நிரஞ்சன் அவனே எதிர்பாராத விதமாக மிக மோசமாகச் சொதப்பினான்.
முதல் நாள் போட்டி முடிந்ததும், “ரொம்ப நல்லா ஆடுனீங்க நிரஞ்சன்” என்று பாராட்டிய மனைவியை அதிர்ச்சியுடன் பார்த்தான் அவன்.
வெற்றியை போலவே யாரும் தோல்வியைக் கையாள்வது இல்லையே?
“என்ன உளர்ற? நான் எவ்வளவு மோசமா, கேவலமா பெர்ஃபார்ம் பண்ணேன். நீயே பார்த்த தானே? அப்புறமும் நல்லா ஆடுனேன் சொல்ற? என்ன நக்கலா?” பேட்டை இறுக்கமாகப் பிடித்திருந்தவனின் வார்த்தைகள் அதை விட இறுக்கமாக வந்து விழுந்தன.
நிதானம், அமைதி, எப்போதும் சாந்தமான முகம் என்று மட்டுமே ஆடுகளத்தில் அவனைப் பார்த்திருக்கிறாள் நந்தனா.
இந்த முகம் அவளுக்குப் புதிது, அதிர்ச்சியுடன் அவனை அண்ணாந்து பார்த்தாள் நந்தனா.
ஆட்டம் தொடரும்…