இனியொரு பிரிவேது – 10 (1)

சீராகச் செதுக்கிய புல்வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த நிரஞ்சனின் காதில் கடல் அலைகள், அலை மோதிக் கொண்டேயிருந்தது.

அதன் சீரான லயத்தில் மனதில் இனம் புரியா அமைதி பரவப் புன்னகையில் பிரிந்தன அவன் இதழ்கள். அத்துடன் அனுமதி இல்லாமல் உடலை தழுவிய காற்றும் அலையோசையோடு இணை சேர, அவன் மனது இறுக்கம் தளர்ந்து இளகத் தொடங்கியது.

அகம் நிறைத்த மகிழ்வுடன், அவளையே அகத்தில் நிறைத்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

அவர்களைச் சுற்றியிருந்த கடலும், வானும் அவளுக்கு நீலத்தைக் கடன் கொடுத்திருந்தது.

மிதமான பட்டு சரிகையோடிய இளநீல காஞ்சிப்பட்டில் இருந்தாள் அவள். காதில் இருந்த குடை ஜிமிக்கி கன்னத்தோடு உறவாடி அவனது பொறாமையைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. நெற்றி வகிட்டில் பளிச்சென்று குங்குமம், அதை முத்தமிட்டுக் கொண்டேயிருந்தது, நெற்றி சுட்டி.

“ம்ம்” என்ற பெருமூச்சுடன் நீண்ட பின்னலையும், அதில் சுற்றியிருந்த மல்லிகையையும் பார்த்தவன், மெல்ல நிமிர, சேலை மறைக்காத மெல்லிடையும் அதில் தவழ்ந்த மெல்லிய தங்க சங்கிலியும் அவனை மூச்சடைக்க வைத்தது.

மிகச் சிரமப்பட்டு விழிகளை அவன் உயர்த்த, கழுத்தை ஒட்டியிருந்த நெக்லஸை உரசிக் கொண்டு, புடவைக்கு வெளியே அவள் மார்பில் உரிமையாய் உறவாடி கொண்டிருந்தது கனமான பொன் சங்கிலியில் கோர்க்கப்பட்ட, அவன் கையால் பூட்டப்பட்ட திருமாங்கல்யம்.

ஹிந்தி, தமிழ் படப் பாடல்கள் மாறி மாறி ஒலிக்க, இசைக்கு ஏற்ப இசைந்தாடிக் கொண்டிருந்தாள். அவளின் அசைவுக்கு, அசைந்தாடிக் கொண்டிருந்த மாங்கல்யத்தில் நிலைத்து நின்றது அவன் பார்வை.

மிக நிதானமாக அவளது நடனத்தின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். நளினமும், நேர்த்தியும் சேர்ந்திருந்த நடனத்தில், பட்டும், நகையும், அலங்காரமும் அவளைக் கூடுதல் பொலிவுடன் காட்டியது.

அவனால் இன்னமும் கூட நடப்பதை நம்பவே முடியவில்லை.

அங்கிருந்த கூட்டத்தில் தனித்துத் தெரிந்தாள் அவள். ஐந்தாறு பெண்கள் இணைந்து நடனமாடிக் கொண்டிருக்க, அவள் மட்டுமே ஓவியமாக அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.

“நந்தனா நிரஞ்சன்” உதடசைத்து மென்மையாக முணுமுணுத்தான். சட்டெனத் திரும்பி அவனைப் பார்த்து புன்னகைத்தாள் நந்தனா.

அவன் மனைவி நந்தனா, நினைக்கையிலேயே நெஞ்சில் கதகதப்பாய் ஒரு உணர்வு.

“இது எப்படிச் சாத்தியமானது?” நூறாவது முறையாகத் தனக்குள் கேட்டுக் கொண்டான் நிரஞ்சன்.

நிரஞ்சன் காதல் என்று கண் மூடித்தனமாக அவள் பின் சுற்றவில்லை தான். ஆனாலும், அவளிடம் வாழ்க்கை குறித்துப் பேசிய பல தருணங்களில் மறுப்பை மட்டுமே பதிலாகத் தந்தவள், அவனை உதாசீனப்படுத்தி விட்டு சென்றவள், எப்படி அவனுக்கு அடிபட்டதும் சட்டெனச் சம்மதித்தாள்? அவனுக்கு இன்னும் அந்தக் கேள்வி மனதை குடைந்து கொண்டு தானிருந்தது.

அவள் மருத்துவமனையில் வைத்து பேசியவை அவனது மனதில் வந்து போனது. அதற்கு முன்பே அவளது இந்த முடிவை ஒருவகையில் அவன் எதிர்பார்த்திருந்தான் தான்.

ஆனால், கார்த்திகேயன்? மகளின் ஒற்றைக் கேள்வியில் மனிதன் அப்படியே கட்சி மாறி விட்டாரே.

நிரஞ்சனை ஏற்றுக் கொள்ள முழு மனதுடன் தயாராகி விட்டார் அவர்.

அன்று காலை அவர்களின் திருமணமே முடிந்து விட்ட போதும், அவனுக்கு எல்லாமே கனவு போலத் தானிருந்தது.

சரியாக இருபது நாட்களுக்கு முன்பு தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தான் நிரஞ்சன்.

தலையில் அடிபட்டதில் அவன் நந்தனாவை மறக்கவில்லை. அவ்வளவு தான். ஆனால், மருத்துவர்கள் கூறியது போல, “மெமரி லாஸ்” இருக்கத் தான் செய்தது.

அவன் முழுமையாகக் குணமாகும் வரை, காயம் காரணமாகக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டான். அவனுக்கும் அந்த ஓய்வு அப்போது தேவையாகத் தானிருந்தது.

அடுத்து வந்த நாட்களில் தன் உடல் நலத்தின் மேல் அதிகக் கவனம் செலுத்தினான் அவன். அதே நேரம் அவனுக்குக் கிடைத்த வாய்ப்பையும் தவற விட விரும்பவில்லை அவன்.

இரு வீட்டினரையும் சென்னையில் சந்திக்க ஏற்பாடு செய்தான்.

பிள்ளைகளின் விருப்பம் அறிந்த பெற்றோர், அவர்களுக்காகத் தங்களுக்குள் இருந்த மனஸ்தாபத்தைப் பேசி சரி செய்து கொண்டார்கள்.

அதன் பிறகு அனைத்துமே எளிதாகவும், விரைவாகவும் நடந்து முடிந்திருந்தது.

இரண்டே வார இடைவெளி இருவரையும் இணைப்பதற்குப் போதுமானதாக இருந்தது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் தாஜ் குழுமத்தின், ஃபிஷேர்மென் கோவ் (Fisherman’s Cove) ஐந்து நட்சத்திர விடுதி. கடலை தொட்டுக் கொண்டிருந்த ஹோட்டலில், கடலலை தொடும் இடத்தில் அவர்களுக்காக ப்ரத்தியேகமாக மிகப் பிரம்மாண்டமாய் வடிவமைக்கப்பட்டிருந்தது கல்யாண மேடை.

தேர்ந்தெடுத்த மிகச் சிலருக்கு மட்டுமே அழைப்பு. அவர்களின் திருமணம் குறித்த எந்தச் செய்தியும் உலகுக்கு வெளியிடப்படாமல் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

அன்று காலை தமிழ் பாரம்பரிய முறைப்படி நேர்த்தியாகத் திருமணம் முடிய,

இருவரும் திருமணப் பந்தத்தில் இணைந்து தம்பதிகளாகி இருந்தனர்.

மாலை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், சூரியன் மெல்ல கடலுக்குள் இறங்கிக் கொண்டிருந்தான். அவனது ஆரஞ்சு கதிர்கள் அவள் மேனியில் பட்டுப் பெண் பொன்னென மின்ன, விழிகளை அவள் மேலிருந்து அகற்ற முடியாமல் தவித்தான் நிரஞ்சன்.

“அவ உன்னோட வைஃப் நிரஞ்சன். எதுக்கு இப்படி ஓரமாக நின்னு அவளை ரகசியமா சைட்டடிச்சுட்டு இருக்க?” சுகாஸின் கேள்வியில் சட்டென எழுந்து நின்று அவனைப் பார்த்த நிரஞ்சன்,

“ரகசியமாவா? பகிரங்கமா தான் சைட் அடிக்கறேன் மேன்.” என்றவனின் குரல் சிரிக்க,

“ஹ்ம்ம்” என்றான் சுகாஸ்.

“என்ன பிரச்சனை?” நிரஞ்சனை நேராகப் பார்த்து அவன் கேட்க, பதிலின்றி ‍மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவனின் ஆழ்மனதில் இருந்த கேள்வியை அறிந்தவன் போல, பேச ஆரம்பித்தான் சுகாஸ்.

“நந்தனா, எனக்குத் தெரிஞ்ச வரை, அவ பார்க்கற வேலையில் மட்டுமில்ல, வாழ்க்கையிலும் ஒரு முடிவெடுக்க ஆயிரம் முறை யோசிப்பா. பிளஸ், மைனஸ், பின் விளைவுகள்னு‌‍ எல்லாத்தையும் பார்ப்பா. பட், ஒரு முறை முடிவெடுத்துட்டா அதிலிருந்து என்னைக்கும் மாறவே மாட்டா” என்று அவன் சொல்ல, நிரஞ்சன் அதைக் காதில் வாங்கியது போலக் காட்டிக் கொள்ளவேயில்லை.

“அவளுக்குப் பிடிக்காத எதையும் ஒருநாளும் செய்ய மாட்டா. அவளுக்குப் பிடிச்சதை எதுக்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டா” இப்போது நிரஞ்சனின் முகத்தில் மெலிதான அதிர்வு வந்து போனது.

“பல வருஷமா நம்ம இந்தியன் டீம் கூடத் தான் அவளும் இருக்கா. சிவராஜ் சார் கூடவே. ஆனா, உன் முன்னாடி ஒரு நாள் கூட அவ வந்தது கிடையாது தானே? நாட் ஒன்லி யூ, நம்ம டீம்ல இருக்கப் பல பேருக்கு அவளைத் தெரியாது. ஏன்னு யோசிச்சுப் பாரு நிரஞ்சன். இத்தனைக்கும் அவ உன்னோட மிகப் பெரிய ரசிகை. உன்னோட பேட்டிங் வீடியோ கிளிப்ஸ் போட்டு எனக்கு எத்தனை நாள் க்ளாஸ் எடுத்திருப்பா தெரியுமா?”

“எனக்குத் திறமை இருந்தும், நான் பெருசா பேசப்படலைன்னு அவளுக்கு வருத்தம் உண்டு. அதான், என்னை ஏதாவது சொல்லிட்டே இருப்பா. என்னை மட்டும் தான். மத்த யார்கிட்டயும் நெருங்கவே மாட்டா. அவங்க அப்பா, கார்த்திகேயன் சார் ரெக்கார்ட் எடுத்து பார் ஒரு நாள். மனுஷன் ரன்ஸ் அடிச்சு துவைச்சு இருப்பார். ஆனா, இந்தியன் நேஷனல் டீம்ல அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்ல. அந்தக் கோபம், வருத்தம் அவளுக்குள்ள இருந்துட்டே இருக்கு நிரஞ்சன்.”

அவர்களைச் சுற்றி அனைவரும் திருமணக் கலகலப்பில் இருக்க, அதிரடி ஆட்டக்காரர்கள் இருவரும் அமைதியாய் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒருவன் பேச, மற்றவன் செவிசாய்த்துக் கொண்டிருந்தான்.

“கார்த்திகேயன் அங்கிளுக்கு இந்தியன் டீம்ல இடமே கிடைக்கப் போறதில்லன்னு முடிவா தெரிஞ்சா அன்னைக்கு, மனுஷன் உடைஞ்சுப் போய் வீட்டுக்கு வந்திருக்கார். அவர் விஷயத்தை வீட்ல சொல்ல, அவங்க அம்மாவால தாங்கிக்க முடியல. மனசு முழுக்க வலியோட தான் நந்தனாவை பெத்திருக்காங்க. ஆனா, பொண்ணைக் கையில வாங்கினதும் அங்கிள், “நந்தனா” அப்படினு கூப்பிட்டு இருக்கார்”

“ம்ம்” கலவையான உணர்வுடன் கேட்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

“நந்தனா பேருக்கு அர்த்தம் தெரியுமா நிரஞ்சன்?” மறுப்பாக அசைந்தது அவன் தலை.

“நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வருபவர் (The one who brings happiness)”

‘உண்மை தான்’ என்றது

நிரஞ்சனின் மனம்.

அவன் கண்கள் அனிச்சையாய் மனைவியைத் தொட்டு மீள, அவன் பார்வையை உணர்ந்தவள் நேராக அவனை நோக்கி நடந்து வந்தாள்.

“உன்னோட வாழ்கையில் மகிழ்ச்சியை மட்டுமில்ல நிரஞ்சன், நிம்மதி, மன அமைதினு எல்லாத்தையும் அவ கொண்டு வருவா. ஆனா, அவ உன்னோட சந்தோசமா இல்லைனு தெரிஞ்சது…” என்று சுகாஸ் இழுக்க, கண்ணைச் சுருக்கி கேள்வியாக அவனைப் பார்த்தான் நிரஞ்சன்.

“நீ கிரிக்கெட்டை மறக்க வேண்டியிருக்கும்.” என்றான் அழுத்தமாக. அந்த மிரட்டல் ஏனோ நிரஞ்சனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

‘என்னது கிரிக்கெட்டை மறப்பதா? அவனா? என்னை, என்ன செய்து விடுவான் இவன்? கை, காலை உடைத்து விடுவானா? இல்லை, அணியில் அவன் பெயர் இடம் பெற விடாமல் செய்து விடுவானா?’ சுகாஸால் தன்னை ஒன்றுமே செய்ய முடியாது என்ற எண்ணத்துடன் சத்தமாக வாய் விட்டுச் சிரித்தான் நிரஞ்சன்.

error: Content is protected !!
Scroll to Top