இனியொரு பிரிவேது – 1 (2)

முப்பது நிமிடங்கள் அமைதியை தொடர்ந்து கூட்டம் மீண்டும் கொண்டாட்டங்களைத் தொடங்க, வர்ஷாவின் தோழிகள் நடனத்தைத் தொடங்கி இருந்தனர்.

நந்தனா தன்னாலான மட்டும் அவர்களிடம் இருந்து தப்பிக்கத்தான் பார்த்தாள். ஆனால், அவளையும் உள்ளே இழுத்துக் கொண்டது அந்தக் கூட்டம். ஒரே வயதிலான இளமையான பெண்கள் கூட்டம். அத்தனை பெண்களை, ஒரே இடத்தில் புடவையும், பொன்னகையும், புன்னகையுமாகப் பார்க்கையில் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

பல நாட்கள் பயிற்சி எடுத்தது போல, ஒருவரை பின்பற்றி மற்றவர் ஆடத் தொடங்க, நொடிகளில் ஒரே லயத்துடன் ஆடத் தொடங்கி இருந்தனர்.

நந்தனா தனக்குப் பக்கத்தில் நின்றவளை கூர்ந்து கவனித்து அபிநயம் பிடித்தாள்.

அதுவரை பாடிக் கொண்டிருந்த ஹிந்தி பாடல் முடிந்து, இப்பொழுது தமிழ் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

“யமுனை ஆற்றிலே..” நந்தனாவின் தயக்கம் இப்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. தனை மறந்து நடனத்தில் மூழ்கி இருந்தாள் அவள்.

அப்போது தான் கூட்டத்தில் அந்தச் சலசலப்பு எழுந்தது.

ஏழெட்டு ஆண்கள் குழுவாக அறைக்குள் நுழைந்தனர்.

மெல்ல பார்வையை அவள் நிமிர்த்த, நேராக அவள் விழிகளில் விழுந்தான் அவன். ஒரு நொடி உறைந்து அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ? ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ?” என்ற வரிகளுக்கு அவள் அபிநயம் பிடித்த நொடி அவன் கண்களில் வந்து போன பாவம் கண்டு, ஒரு நொடி மிரண்டு, அசைய மறுத்து அபிநயம் பிடித்தபடி சிலையாக உறைந்து நின்றாள் நந்தனா.

“இது நடக்கறது தான்” குரலில் துள்ளிய கேலியுடன், அவளின் தோளில் இடித்துச் சொன்னாள் வர்ஷா.

“அவர் யாருனு தெரியுதா?”

அன்றைக்கும் நந்தனாவிடம் இதே கேள்வி தான் கேட்கப்பட்டது.

அன்று தெளிவாகப் பதில் சொன்னாள் நந்தனா.

அவனை யாருக்குத் தான் தெரியாமல் இருக்கும்?

இங்கு அவனை அறியாதவர் மிகக் குறைவு. அவனது சொந்த மாநிலமான தமிழ் நாடு மட்டுமல்லாது, இப்போது இருக்கும் மும்பை, அவ்வளவு ஏன் இந்தியா முழுக்கப் பிரபலமான முகம் அவனது.

அவனைப் பின் தொடர, ஆராதிக்க, கொண்டாட அலாதி அன்பும், ஒருவித போதையும், பைத்தியக்காரத்தனமும் நிறைந்த விசிறிகள் நிறைந்த கூட்டம் இங்கிருக்கையில், அவனை அடிக்கடி விளையாட்டுப் போட்டிகளில், விளையாட்டுச் செய்திகளில், சமூக வலைத்தளங்களில், வீடியோக்களில் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவனைத் தெரியாமல் இங்கு ஒருவர் இருக்க முடியுமா?

அன்று முணுமுணுப்பாக என்றாலும், தெளிவாகவே அவன் பெயரை சொன்னாள் நந்தனா.

“நிரஞ்சன் கிருஷ்ணகுமார்”

அதற்குள் ஒரு கூட்டம் அவனைச் சுற்றி வட்டமிருந்தது.

நந்தனா நன்றாகத் திரும்பி வர்ஷாவை பார்த்தாள்.

“டீம் இந்தியாவோட முக்கியமான பிளேயர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்ன்னு எல்லாத்துலயும் கலக்கும் ஆல் ரவுண்டர். எங்க தமிழ் நாட்டின் பெருமை, கொல்கத்தா ஐபிஎல் டீமோட செல்லப்பிள்ளை” நந்தனா ஆங்கிலத்தில் சொல்லி முடிக்க, வர்ஷா குறும்பாகக் கண் சிமிட்டினாள்.

“கிரிக்கெட் பைத்தியங்கள்” உதடு சுழித்து அவள் சொல்ல, நந்தனாவின் முகத்தில் லேசான எரிச்சல் ரேகைகள் தோன்ற ஆரம்பித்தது.

“ஆமா வர்ஷ். அதுக்கு என்ன இப்போ? நீ தான் கிரிக்கெட் பைத்தியம் இல்லையே? அப்போ எதுக்கு அவங்களை உன் வீட்டுக்கு இன்வைட் பண்ண?” நந்தனா கோபமாகக் கேட்டுக் கொண்டிருக்கையில்,

“ஹலோ” என்ற கரகரத்த வசீகர ஆண் குரல் அவர்களின் பேச்சில் இடைப்புகுந்து கலைத்தது.

நந்தனாவின் தலை தானாக அவன் புறம் திரும்பியது.

நிரஞ்சனை அன்று தான் முதன் முதலாக, நேருக்கு நேராகச் சந்திந்தாள் நந்தனா.

பெரும்பான்மை கிரிக்கெட் ரசிகர்களைப் போல, அவளுக்கும் அவனை நன்றாகத் தெரியும். ஆனால், அவனுக்கு அவளை யாரென்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

அந்நேரம் அவனது கவனத்தை ஈர்த்த அழகிய பெண்ணாகத் தான் அவளைப் பார்த்தான் அவன்.

ஆனால், மிக விரைவிலேயே அவளை வியந்து நோக்கி, ஆச்சரியத்தில் விழியகல நின்றான் அதே நிரஞ்சன். அன்று அவனைக் கவர்ந்தது நிச்சயம் அவளது அழகல்ல, அதையும் தாண்டிய ஒன்று. அது தான் அவர்களைப் பலமாக இணைத்தது, பல முறை பிரிக்கவும் பார்த்தது.

“மிஸ். நந்தனா” நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளை, நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது அந்தக் குரல்.

மெதுவாகத் தலையைத் திருப்பி, விழிகளை மட்டும் உயர்த்தி மருத்துவரை பார்த்தாள் நந்தனா.

“பிளீஸ் டாக்டர், எனக்குப் பெருசா என்னமோ நடந்திடுச்சுன்னு சொல்லுங்க. நடு மண்டையில, மூளையில பலமான அடின்னு சொல்லுங்க. நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்னு சொல்லுங்க. என்ன பார்க்கறீங்க? முடியாதா? ப்ச், என் லைஃப்ல லாஸ்ட் த்ரீ யியர்ஸை மட்டுமாவது மறந்துட்டேன்னு சொல்லக் கூடாதா? அட்லீஸ்ட் இவரை மட்டுமாவது மறந்துட்டேன்னு சொல்லுங்க. பிளீஸ்..” கோபமும், கெஞ்சலும், வாழ்வின் மீதான வெறுப்பும் கலந்து அவள் வெடிக்க, மருத்துவர் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தார்.

அதுவரை அவளது படுக்கையின் ஓரம் தலை சாய்த்து, அவளை ஒட்டிக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன், இப்போது படக்கென்று உயிர் பெற்று நிமிர்ந்து அமர்ந்தான்.

அதனை எதிர்பார்க்காத நந்தனாவின் கண்கள் பயத்தில் பெரிதாக விரிய, உதடுகள் பட்டென்று மூடிக் கொண்டது.

“மிஸ். நந்தனா” மருத்துவர் அழைக்க, அவன் முகம் கோபச் செந்தனலை பூசிக் கொள்ள, தாடைகள் இறுகியது.

“ஸ்டாப் காலிங் ஹெர் மிஸ். நந்தனா.” சீறியபடி வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“அவ மிஸ். நந்தனா இல்ல, டாக்டர் விஷால். ஷி இஸ் மிஸ்ஸஸ். நந்தனா…”

“நிரஞ்சன்..” கடைசி வார்த்தையை ஒன்று போலச் சொல்லி முடித்தார்கள் இருவரும்.

அதுவரை போட்டிருந்த போலி முகமூடியை கழற்றி எறிந்திருந்தாள் நந்தனா. அவன் பெயரை அவள் உச்சரித்த நொடி அவன் முகத்தில் வந்து போன உணர்வில், ஆசுவாசத்தில் அவளுக்குக் கண்கள் கலங்கியது.

இருவரும் ஒன்றாக, “நிரஞ்சன்” என்று உரக்கச் சொன்ன கணம், அதுவரை அமைதியாய் இருந்த அவர்களின் ஐந்து மாத சிசு சட்டென்று, அவளின் வயிற்றில் அசைந்து, பலமாய் உதைத்து தன் இருப்பை அவர்களுக்கு வெளிக்காட்டியது.

அதை உணர்ந்த நிரஞ்சனின் இடக்கரம் அழுத்தமாய் அவள் வயிற்றில் பதிந்தது.

வார்த்தைகளில் வடித்திட முடியா உணர்வுகள் கண்களில் வழிந்திட, மனைவியைப் பார்த்தான் அவன்.

அதுவரை அவர்களின் மனதில் இருந்த அத்தனை கோப, தாபங்களும் அந்நொடி அர்த்தமற்று போய் விட, அவர்கள் இருவரையும் இணைத்த அந்த அற்புத உணர்வில், உறவில் மெய் மறந்து, விழிகளும், விரல்களும் கோர்த்திருக்க ஒருவித மாயச் சுழலுக்குள் அமிழ்ந்திருந்தனர்.

அதனை அறுத்தது பின்னால் தொலைக்காட்சியில் இருந்து ஒலித்த செய்திக் குறிப்பு.

“இன்னும் இரண்டே தினங்களில் ஆரம்பிக்கவிருக்கும், இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா தமிழக வீரர் நிரஞ்சன் கிருஷ்ணகுமார்? காரணம் என்ன? ஏற்கனவே அவரின் மனைவியும், சென்னை ஐபிஎல் அணியின்…” இயல்பிலேயே நிரஞ்சனுக்கு வேகம் வாய்த்திருக்க, ரன் எடுக்கும் வேகத்துடன் இயங்கியவன், வெறும் நான்கே எட்டில் தொலைக்காட்சியை நெருங்கி, அதை அணைத்திருந்தான்.

ஆனால், நந்தனாவின் மனதில் செய்திக் குறிப்பு மீண்டும், மீண்டும் ஓடிக் கொண்டேயிருந்தது.

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top