இனியொரு பிரிவேது – 1 (1)

சென்னையின் பிரபலமான தனியார் மருத்துவமனை.

தான் மருத்துவமனையில் இருப்பதையே உணராத வண்ணம் படுக்கையில் இருந்தவளை சுற்றிலும் ஆழ்ந்த அமைதி. மருத்துவ உபகரணங்கள் தொல்லை செய்யாத மெல்லிய ஒலியுடன் இயங்கிக் கொண்டிருந்தது.

பகலா, இரவா, இல்லை இரண்டுக்கும் நடுவிலான அந்தியா? என்று பிரித்து அறிய முடியாத காலநிலை அங்கு நிலவி கொண்டிருந்தது. அவளுக்குப் பழக்கமே இல்லாத, அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்காத அமைதி அறையை நிறைத்திருக்க, ஆழ்ந்த மயக்கத்தில் அமிழ்ந்திருந்தாள் அவள்.

மெல்ல விழிக்கத் தொடங்கிய அவள் மனதிற்கு அவளைச் சூழ்ந்திருந்த இரவும் இருளும் அச்சமூட்டுவதாக இருக்க, படபடவென்று இமைகளை அடித்து, இருளை விலக்க விழிகளைத் திறக்க முயன்றாள். ஆனால், இமைகள் இரும்பாய் கனத்து, இறுகிக் கொண்டு திறக்க மறுக்க, அவள் மூச்சில் வேகம் கூடியது.

வெகு பிரயத்தனப்பட்டு மீண்டும் இமைகளைத் திறக்க அவள் முயன்ற நொடி, யாரோ அவளைப் பெயர் சொல்லி அழைக்கும் உணர்வு.

அந்நேரம் மெலிதாய் ஒலியெழுப்பியது இயந்திரம் ஒன்று, அதனையும் மீறி ஒலித்தது அவன் குரல்.

அந்தக் குரல், ஏன் இத்தனை பரிதவிப்புடன் ஒலிக்கிறது? யாருக்கு என்னவாயிற்று? தனக்கு மிகவும் நெருக்கமான, பரிட்சயமான குரலாக அது பட, அவளுக்கு மனதில் அவஸ்தையாய் ஒரு வலி. என்னவென்று விசாரிக்க நினைத்தாள். ஆறுதல் சொல்ல நினைத்தாள். ஆனால், கண்களைத் திறக்க முடியாதது போல, இப்போது உதடுகளையும் பிரிக்க முடியவில்லை.

பல முறை முயன்று சோர்ந்து போனவளாக மனதினுள் சலித்துக் கொண்டு, இறுதி முறையாக இமைகளைப் பிரித்தாள். பளிச்சென்று கண்ணில் பாய்ந்தது ஒளி வெள்ளம். அவளையும் அறியாமல் அனிச்சையாய் ஒரு முறை விழி மூடி திறக்க, “டாக்டர்” என்ற அவனின் கதறல் அவளை விழி மூட விடவில்லை.

“ந….ந்…து.. நந்தனா..” மென்மையும், அழுத்தமும், பரிதவிப்புமான அழைப்பு. இமைகளை நன்றாகப் பிரித்து, விழிகளை அவன் பக்கமாகத் திருப்பினாள். பரபரப்பும், படபடப்புமாக அவளைப் பார்த்தான் அவன்.

இமைக்காமல் அவனையே பார்த்தாள் அவள்.

மறு நொடி, அவள் விழிகள் தானாகவே உணர்ச்சிகளைத் துடைத்துக் கொண்டதோ?

“நந்து…” என்றான் மீண்டும். விழிகளை அவனை நோக்கி உயர்த்தினாள். உயிரற்ற அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவன் தொண்டை குழி தன்னிச்சையாய் ஏறி இறங்கியது. உறக்கமின்றி வறண்டு போயிருந்த அந்தக் கண்களில் சோர்வும், சோகமும் அப்பட்டமாக அப்பிக் கிடந்ததை அவளால் தெளிவாகக் காண முடிந்தது.

“ஹலோ, மிஸ் நந்தனா” என்ற குரலில் இருவரும் கலைந்து குரலுக்குச் சொந்தக்காரரை ஏறிட்டனர். புன்னகைக்க முயன்றாள் அவள். ஆனால், அது அத்தனை எளிதாய் இல்லை.

“ஹலோ, ஐ ஆம் டாக்டர் விஷால். நீங்க இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க நந்தனா?”

“முழுசா ரெண்டு நாள் மயக்கத்தில் இருந்திருக்கீங்க. எல்லோரையும் ரொம்பப் பயமுறுத்திட்டீங்க”

“சின்ன ஆக்சிடென்ட் தானே? உங்களுக்கு ஒன்னும் ஆகல. வைட்டல்ஸ் எல்லாம் நார்மல்.” சொல்லிக் கொண்டே போனவர், சட்டென நிறுத்தி புன்னகைத்து அவளுக்குப் பதில் அளிக்க,

அவளின் விழிகள் வினவிய வினாவிற்கு விடைக் கிடைத்த பின்பு, வேறு எதுவுமே அவளுக்குப் பெரிதாகப்படவில்லை.

“அப்புறம்…” தொடர்ந்து பேசிய மருத்துவரின் வார்த்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க முயன்று தோற்றவளாக, கண்களை மீண்டும் இறுக மூடிக் கொண்டாள் நந்தனா.

“நந்து…” மீண்டும் அவன் குரல். அனிச்சையாய்ச் சுருங்கியது அவள் முகம்.

சிறிது, சிறிதாக உயர்ந்து கொண்டிருந்த அவளது இரத்த அழுத்தத்தைக் கணினி திரையில் பார்த்து பயந்தவறாக, “மிஸ். நந்தனா” அழுத்தமாய் அழைத்தார் மருத்துவர்.

அவளின் கண்களும், உதடுகளும் ஒன்றாகப் பிரிந்தன. நாவால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, “நான்.. நான்.. நான்” என்றவளுக்கு மேலே பேச வார்த்தைகள் சிக்கவில்லை.

மருத்துவரின் முகம் அவசரமாகப் பதட்டமாகியது.

“நீங்க நல்லா இருக்கீங்க மிஸ். நந்தனா. பயப்படாதீங்க. ரிலாக்ஸ். நல்லா, நார்மலா மூச்சு விடுங்க.”

“இப்போ, எங்க இருக்கீங்கன்னு உங்களுக்குத் தெரியுது தானே? கடைசியா என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா?” தொடர் வண்டியாய் நீண்டன அவரின் கேள்விகள்.

அத்தனைக்கும் அசையாமல் அவரைப் பார்த்தாள் நந்தனா.

மருத்துவரின் கண்களில் தோன்றிய அதிர்ச்சியை அவளால் அந்நேரம் போக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

“இவர் யாருனு சொல்லுங்க” என்று அவளின் படுக்கைக்கு மிக நெருக்கமாக அமர்ந்து, அவளின் விரல்களை மென்மையும், அழுத்தமும் கலந்து பற்றியிருந்தவனைக் கைக் காட்டி அவர் கேட்க, விழிகளை அவன் மேல் தீர்க்கமாய்ப் பதித்தாள் அவள்.

“யாருனு தெரியுதா மிஸ். நந்தனா?” சில நொடி ஆழ்ந்த குழப்பமான அமைதிக்குப் பின், மறுப்பாக அசைந்தது அவள் தலை.

அவன் விழிகள் சட்டென்று ஈரமாகி மின்ன, அவளுள் மின்னலாய் ஒரு வலி.

“நான் யார் சொல்லுங்க”

“டாக்டர்” என்றாள் உதடசைத்து, அவள் விழிகள் மீண்டும் அருகில் இருந்தவனில் பதிய, “ரிலாக்ஸ் மிஸ். நந்தனா. ஜஸ்ட் ரிலாக்ஸ். ரொம்ப யோசிச்சு மனசுக்கும் மூளைக்கும் ஸ்ட்ரெஸ் கொடுக்காதீங்க.” என்றவரின் பார்வை அவனிடம் எதையோ தெரிவிக்க, புரிதலுடன் தலையசைத்தான் அவன்.

“ஒரு டென் மினிட்ஸ்ல வரேன்” சொன்ன மருத்துவர், அந்த அறையில் இருந்து வெளியேறிய கணமே விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள் நந்தனா.

சில நிமிட அமைதிக்குப் பின் மெலிதாக அவள் செவியை எட்டியது அந்தப் பேச்சு வார்த்தை.

“என்ன மிஸ் நந்தனா, மிஸ் நந்தனானு சொல்லிட்டு இருக்கீங்க?” அடிக் குரலில் சீறினான் அவன்.

“அவளுக்கு என்ன நடந்ததுன்னு, நான் உங்களுக்கு விளக்கமா ஏற்கனவே சொல்லிட்டேன். அப்புறமும் ஆக்சிடென்ட் சொல்றீங்க?”

“இங்க என்ன நடக்குது? எனக்கு ஒன்னும் புரியல?”

“சொல்லுங்க டாக்டர்? என்ன சொல்லப் போறீங்க? அவளுக்கு எல்லாம் மறந்து போச்சுன்னா? தலையில பட்ட லேசான அடிக்கே அம்னீஷியாவா? ஷார்ட் டெர்ம் மெமரி லாஸா? இல்ல, கம்ப்ளீட் மெமரி லாஸ்?” வேதனையுடன் வெளிவந்த அந்தக் கேள்விக்கு, பதிலை யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.

அவனோ தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். “நீங்க என்னவேனா சொல்லிக்கோங்க. நான் நம்பத் தயாராயில்லை. எனக்கு நந்து, அவ நல்லா இருந்தா போதும்.” திட்டவட்டமாக அவன் சொல்ல, அந்த அன்பில் மனம் நெகிழ்வதை அவளால் தவிர்க்கவே முடியவில்லை.

மேலும், ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அத்தனையும் உறங்கும் பாவனையில் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் நந்தனா.

“இங்க பாருங்க சார், என்னால எதுவும் சொல்ல முடியல. அவங்க இரண்டு நாளைக்கு அப்புறம் மயக்கத்தில் இருந்து முழிச்சுட்டாங்கன்னு சந்தோஷப்படுவோம். ஒருவேளை நினைவு திரும்பக் கொஞ்ச நேரம் எடுத்தா..”

“என்ன உளறிட்டு இருக்கீங்க டாக்டர்?”

“தலையில் அடிப்பட்டா மட்டும் தான் மெமரி லாஸ் வரும்னு அவசியம் இல்ல. ஸ்ட்ரெஸ்னால கூட..”

“பிளீஸ்…” கை நீட்டி மருத்துவரை மேலே பேச விடாமல் தடுத்தான் அவன்.

அதிர்ச்சியும், அயர்வும் கால்களைத் துவள செய்ய, பொத்தென்று இருக்கையில் அமர்ந்தான்.

“அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் சார். எங்களுக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க. சில டெஸ்ட்ஸ் எடுத்துப் பார்த்திடலாம். இல்லனா, வெயிட் பண்ணி பார்ப்போம். கொஞ்ச நேரத்தில் அவங்க நார்மலாக வாய்ப்பிருக்கு. அதுவரை அவங்க இங்கேயே, எங்க கண்காணிப்புல இருக்கறது தான் பெட்டர். பிளீஸ்” மருத்துவர் தயக்கத்துடன் சொல்ல,

“புரியுது டாக்டர். இட்ஸ் ஓகே” என்றான் அவன்.

நந்தனா அத்தனையும் கேட்டுக் கொண்டு அமைதியாகப் படுத்திருந்தாள். தன் மனம் எப்போதிருந்து இத்தனை குரூரமாக மாறியது?

மருத்துவர் அறையில் இருந்து வெளியேற, மெதுவாகக் கண்களைத் திறந்து அருகில் அமர்ந்திருந்தவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள் நந்தனா.

“எனக்கு ஒன்னும் ஆகல நந்து” அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.

“இதுவரை, இந்த மூணு வருஷத்துல முப்பது தடவைக்கு மேல என்னைப் பிரிய முயற்சி பண்ணிட்ட. ஆனா, உன்னால முடியாது நந்து. இல்ல, முடியும்னு நீ நினைக்கிறியா நந்து? உடலளவில் நமக்கு நடுவுல பிரிவை கொண்டு வர டிரை பண்ண, அது தோல்வியில் முடிஞ்சதும், மனசளவில, இல்ல, இல்ல என்னை மறந்து நிரந்தரமா ஒரு பிரிவை கொண்டு வரப் பார்க்கறியா?” பதில் அளிக்க முடியா கேள்விகள் அவர்களுக்கு நடுவில் அமர்ந்து கொள்ள, இருவரின் பார்வையும் இணைந்து நின்றது.

நந்தனா தன் வலக் கரத்தை உயர்த்திப் பாதுகாப்பாகத் தன் வயிற்றின் மேல் வைத்துக் கொண்டாள். அவனின் இடக் கரமும் அங்கிருந்ததை ஒரு திடுக்கிடலுடன் உணர்ந்து படக்கென்று கண்களை மூடிக் கொண்டாள் நந்தனா.

எதில் இருந்தோ மீண்டும் தப்பிக்கும் எண்ணம். ஆனால், இம்முறை அது முடியாத காரியமாகப் பட்டது.

அவள் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது அந்தக் கேள்வி.

“இவர் யாருனு சொல்லுங்க”

“ப்ச்” மெலிதாகச் சலித்துக் கொண்டாள்.

அது நவராத்திரி சமயம். மும்பை மாநகரமே திருவிழா கோலம் பூண்டிருந்தது.

அப்போது அவள் பணி நிமித்தமான பயிற்சி மேற்கொண்டிருந்த நேரம். தோழி ஒருத்தியின் மறுக்க இயலா அழைப்பின் பெயரில் அவள் வீட்டு கொலுவிற்குச் சென்றிருந்தாள் நந்தனா.

அந்தச் சூழல் அவளுக்கு மிகவும் புதிது.

அந்த வீட்டின் அலங்காரமும், பூக்களும், பிரம்மாண்ட படிகளில் நிறைந்திருந்த கொலு பொம்மைகளும், பஜனைகளும், பாடல்களும், பூஜையும், அங்கிருந்த சூழலும் நந்தனாவை பரவச மூட்டின.

வெகு நாட்கள் கழித்துப் பட்டு கட்டியதால் ஒருவித அசௌகரியமும், கூச்சமுமாக அந்தப் பெரிய கூடத்தின் ஓரத்தில் ஒதுங்கி நின்றவளை கைப் பிடித்து இழுத்துக் கூட்டத்தில் கலக்க விட்டாள் அவளின் தோழி வர்ஷா.

“வர்ஷ்” என்று மறுத்துப் பின் வாங்கப் போனவளின் கைகளில் திணிக்கப்பட்டது பிரசாதம் வழங்கும் பொறுப்பு.

error: Content is protected !!
Scroll to Top