“தம்பி புள்ளய இங்கனக்குள்ளேயே படிக்க வச்சீங்கன்னு ஊர் பேசும்” என்று சுதாகரன் சொன்னதே அவளுக்கு மீண்டும் மீண்டும் மனத்தில் வந்தது. தன்னை வளர்த்தவர்களுக்குத் தன்னால் எந்தக் கெட்டப் பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனாலும், உள்ளம் தவிக்கத்தான் செய்தது.
சொந்த ஊரில், தம்பியுடன் வாழ தனக்கு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் கண்ணீரை அடக்கியபடி அமர்ந்திருந்தாள்.
“தேனு, சாப்பிட வாடா. எங்க இருக்க ராசாத்தி?” என்று முத்தம்மா குரல் கொடுக்கவும், மாடியில் அமர்ந்திருந்தவள் கீழிறங்கினாள்.
“புள்ள மூஞ்சிய பாக்க முடியல. பேசாம அவ படிக்கறேன்னு சொல்ற காலேஜ்ல சேர்த்து விட்டாதான் என்னா நீங்க?” என்று மகளைக் காய்ந்தார் முத்தம்மா.
“இவனுங்க ரெண்டு பேர் சொல்றதையும் கேட்டுட்டு தேனு சொல்றத கேட்க மாட்டேங்கறீங்க புருஷனும் பொண்டாட்டியும். உன் புள்ள இந்தச் சின்னவனுக்குத் திண்டுக்கல் காலேஜ்ல அம்புட்டுப் பணத்தைக் கட்டி சேர்த்துப்புட்டு, நான் மெட்ராஸ் போய்தான் படிப்பேன்னுட்டு அவன் வரவும், உடனே மெட்ராஸ் காலேஜ்ல சேர்த்து விடலயா நீங்க. அவன் கேட்டதும் சரின்னுட்டு, ஏன் தேனு கேட்கையில வேணாங்கறீங்க?”
“நீ வேற செத்த சும்மா இரும்மா. நான் மட்டும் வேணாம்னா சொல்றேன். எனக்கு அவ இங்கனயே இருந்தா ரொம்பச் சந்தோஷம்தேன். உன் பேரனுங்கதான் அவ மெட்ராஸ் வந்தே ஆகணும்ன்னு குதிக்கறானுங்க. இவளையும் மெட்ராஸ் அனுப்பிட்டா வீடு வெறிச்சோடி போகும் மா” என்றார் சோகமாக.
“ஆமா, இப்பயும் உன்னய பத்தி மட்டுமே யோசி..” என்று மகளைக் கடிந்தார்.
தேன்மொழி உள்ளே வரவும், “தேனு, நான் அப்பாகிட்ட பேசுறேன். நீ இங்கருந்தே படிடா” என்றார் பொற்கொடி. அவருக்காகவும், அவளுக்காகவும் யோசித்து அவர் சொல்ல, “என்ன இங்கனக்குள்ளன்னு சொல்ற கொடி. அவ மதுரயில இருக்கக் காலேஜ்ல போறேன்னா..” என்று முத்தம்மா முறைக்க, “சரி, சரி. இந்தா இருக்க மதுர தான? மெட்ராஸ் போறதுக்கு இது பரவால்ல. காலேஜ பக்கமா பார்த்துக்குவோம். அப்பாகிட்ட நான் பேசுறேன்” என்றார்.
தேன்மொழிக்கு நம்பிக்கை சிறு கீற்றாக ஒளிர, சரியெனத் தலையசைத்தாள்.
அன்றிரவு வீடு வந்த கந்தனும் கூடக் கிட்டத்தட்ட சம்மதித்து விட்டார்.
ஆனால், மறுநாள் அக்காவை பார்க்க வீடு வந்த அன்பழகன், “சுதாகர் அண்ணா எல்லாம் சொல்லுச்சு. நீ படிக்கச் சென்னை போக்கா. நானும் காலேஜ் படிக்கச் சென்னைதான் வரப் போறேன். அங்கதான் டிஎன்பிஎஸ்சி கோச்சிங் நல்லா இருக்கும்னு எங்க சார் சொன்னார் கா” என்று பெரிய மனிதன் போல யோசனை சொன்னான், பத்தாம் வகுப்பு முடித்திருந்தவன்.
அதைக் கேட்டதும் தேன்மொழியின் கண்களில் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. அவளுக்கு வேண்டியது, ஏதோ ஒரு வகையில் தம்பியின் அண்மை. அவ்வளவுதான்.
அவன் சில வருடங்களுக்கு முன்பு அரசாங்க வேலைக்குச் செல்வேன் என்றதும், அது குறித்துப் பல முறை பேசியதும் அவளுக்கு நினைவில் வந்தது. அவன் கனவை நனவாக்க அவளால் முடிந்ததைச் செய்வாளே தவிர, அதற்குத் தடையாக ஒருநாளும் இருக்க மாட்டாள்.
இன்னும் இரண்டே வருடங்களில் தம்பியே சென்னை வரப் போகிறான். தான் மட்டும் மதுரையில் படித்து, அவன் சென்னை செல்கையில் தனியாக இருக்க வேண்டுமா? அதற்குச் சென்னை என்ன, எந்த ஊராக இருந்தாலும் தம்பியுடன் சேர்ந்திருக்கக் கிடைக்கும் சில வருட வாய்ப்பை அவள் தவற விட விரும்பவில்லை. ஆக, கல்லூரி படிப்பிற்காகச் சென்னை செல்வதென முடிவு செய்தாள்.
அதையே வீட்டிலும் தெரியப்படுத்தினாள்.
“உன் பொண்ணே சரின்னு சொல்லிட்டால்ல. இப்போ உனக்கு நிம்மதியா ம்மா?” என்று சுதாகரன் கேட்க, பொற்கொடியின் முகத்தில் வருத்த ரேகைகள்.
“பாப்பாவும் உங்க கூட வந்துட்டா வீடே வெறிச்சுனு போகும்” என்று புலம்பினார்.
“பேசாம நீயும் உன் புள்ளைங்க கூடவே போயேன்” என்று முத்தம்மா சொல்ல, “அப்புறம் தேனுவ ஹாஸ்டல்லயா போட போறீங்க? அங்கன சாப்பாடுலாம் நல்லா இருக்குமா? அது நம்ம புள்ளைக்குச் சரிபடுமா? பேசாம நீயும் கூடவே போ கொடி. புள்ளைக்குச் சமைச்சு போட்டு பார்த்துக்கோ” என்றார் கருப்பண்ணசாமி.
“நம்ம மாரி மகன் கல்யாணம் முடிச்சு அங்கதான் இருக்கான். அவனைக் கேட்டா தெரியும். பேசாம அவன் வீட்லயே இருந்துடுறீங்களா?” என்று அவர் கேட்க, “என்ன மாமா பேசுறீங்க, மாரி வீட்ல போய் நம்ம புள்ளய தங்க வைக்கிறதா. அதெல்லாம் சரிப்படாது, வசதியும் படாது” என்றார் கந்தன் எரிச்சலுடன்.
அப்போதுதான் வீட்டினுள் நுழைந்தவருக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்து போய் நீட்டினாள் தேன்மொழி.
“காலேஜ் ஹாஸ்டல் எப்படி இருக்குனு பார்ப்போம். புள்ளக்கு பிடிக்கலைன்னா வேற ஏதாவதுதான் பார்க்கணும்.” என்றார் யோசனையுடன்.
“ஏன்ப்பா, நாங்க ரெண்டு பேரும் ஹாஸ்டல்ல இருந்து தானே காலேஜ் படிச்சோம். இப்போ தேனுக்கு மட்டும் வேணாங்கறீங்க.” என்ற ஜெயபாலன், “மக மட்டும் எப்பவும் உசத்தி” என்று தேன்மொழியை முறைத்தான்.
“உங்களுக்கு என்னய்யா ஆம்பளை பசங்க. எப்போனாலும் வெளில போய் வேண்டியத வாங்கிச் சாப்பிட்டுக்குவீங்க. அதுவுமில்லாம நீங்க ரெண்டு பேரும் ஒன்னா படிச்சீங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் தொணையா இருந்திருப்பீங்க. தேனு அப்படியா? பொம்பளை புள்ள தனியா வெளில போகத் தயங்கும் இல்ல? அது மட்டுமா புள்ள பாதுகாப்பு, பத்திரம்னு நாலையும் யோசிக்கணுமா இல்லையா?” என்று முத்தம்மா கேட்கவும்,
“நீ கவலைப்படாத அம்மாச்சி. உன் பேத்தி ஊரையே வித்துடுவா. அவ பூ பறிச்சு, பூ கட்டியே கொள்ளக் காசு சேர்த்து வச்சுருக்கா தெரியுமா?” என்று ஜெயபாலன், பணக் கட்டை விசிறி காட்டுவது போலச் செய்ய, “என்கிட்ட ஒன்னும் அவ்ளோ காசுலாம் இல்ல” என்று தேன்மொழி பட்டெனப் பதில் கொடுத்தாள்.
“பேசாம இருங்கடா” என்று மகன்களை அதட்டி அடக்கிய பொற்கொடி, “நீங்க நாளைக்கே தேனுவ கூட்டிட்டு மெட்ராஸ் போய்ட்டு வாங்க. அப்புறமா மத்தது முடிவு பண்ணலாம்” என்றார்.
ஆனால் முத்தம்மா, கருப்பண்ணசாமி தவிர மற்ற அனைவரும் சென்னை சென்றார்கள். பள்ளி விடுமுறை என்பதால் அன்பழகன் கூட அக்காவுடன் சென்னை வந்தான்.
சுதாகரன் ஏற்கெனவே எல்லாமே விசாரித்து வைத்திருந்தான். ஆக, அவளைக் கல்லூரியில் சேர்ப்பது எளிதானது. ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அண்ணன்கள் இருவரும் படித்திருக்க, தங்கை கணினிப் பொறியியல் படிப்பில் சேர்ந்தாள்.
சுதாகரன், ஜெயபாலன் இருவரும் சென்னையில் வேலைப் பார்ப்பதால், இருவரின் அலுவலகத்திற்கும் பொதுவான பகுதியில் வசிக்கிறார்கள். இரட்டைப் படுக்கை அறை கொண்ட வீட்டில் ஒரு அறையை அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்தார்கள். மற்றொரு அறையில் அவர்களைப் போலவே வெளியூரில் இருந்து வந்து வேலைப் பார்க்கும் மூவர் தங்கியிருக்கிறார்கள்.
கல்லூரி விடுதி தேன்மொழிக்கு பிடித்து விட்டது. ஆனால், கந்தன், பொற்கொடிக்குதான் அவளைத் தனியாக விட மனமில்லை.
“தேனுக்கு ஹாஸ்டல் வேணாம்னு சொல்லிடுப்பா. பாப்பா தனியா இருக்க வேணாம்”
“தனியா இருக்க வேணாம்னா, நீயும் கூடவே வந்து இரும்மா. உன் பொண்ணை மடியிலேயே கட்டிக்கோ என்னா..” என்று எரிந்து விழுந்தான் சுதாகரன்.
“நீங்க ரெண்டு பேரும் இங்கன இருக்கும் போது பாப்பா ஏன்ப்பா தனியா இருக்கணும்? புள்ள வீட்டுக்கு ஏங்கி போகுமேன்னு சொன்னேன்”
“அதுக்கு நீ அவளைப் படிக்க வைக்காம, உன் கூடவே வச்சுக்கோ மா”
“பெரியவனே பேசாம இரு” என்று சொன்ன கந்தன் மனத்தில் பல்வேறு சிந்தனைகள்.
திண்டுக்கல் திரும்பிய பின்னரும் வீட்டில் அது குறித்த கலந்துரையாடல்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது.
“இம்புட்டு பேசுற நீயே வந்து உன் பேத்தியை பார்த்துக்கோ அம்மாச்சி” என்று ஜெயபாலன் விளையாட்டாகச் சொன்னது, கந்தனுக்குச் சரியான தீர்வாகப்பட்டது.
சென்னையில் தனி வீடெடுத்துப் பிள்ளைகள் மூவரையும் தங்க வைப்பது என முடிவானது. நாளையே அன்பழகன் அங்குப் படிக்கச் சென்றாலும், அங்கேயே தங்கிக் கொள்ளலாம், இரண்டு வீட்டினருக்கும் வந்து செல்வது எளிது எனச் சாதகப் பாதகங்களை அலசி முடிவெடுத்தார்கள்.
“இங்கன கலர் கம்பெனிய நான் பார்த்துக்கறேன். நீங்க பேரப் புள்ளைங்களோட போய் இருங்க” என்று முத்தம்மா, கருப்பண்ணசாமியையும் சென்னைக்குப் பேக் செய்து விட்டார்கள்.
பெரியவர்களும் பேரப் பிள்ளைகளுக்காக அந்த வயதில் இடம் பெயர்ந்தார்கள்.
சென்னையில் இருந்த சொந்தக்காரர்களை விசாரித்து, தேன்மொழியின் கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு பார்த்து குடியேறினார்கள்.
“இங்கருந்து என் ஆஃபீஸ் ரொம்பத் தூரம்” என்று ஜெயபாலன் புலம்ப, “அப்போ நீ உன் பழைய ரூமுக்கே போய்க்கோ தம்பி” என்றார் கந்தன்.
“எப்பா..” என்று கத்தியவன், அதன் பிறகு எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சென்று அறையைக் காலி செய்து பெட்டி படுக்கையுடன் வீடு வந்தான்.
அது இரட்டை படுக்கையறை கொண்ட வீடு. அதில் அத்தியாவசிய தேவைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி அடுக்கி விட்டார்கள்.
வயது மூப்பின் காரணமாக முத்தம்மாவினால் வீட்டு வேலைகள் செய்ய முடியாதென மேல் வேலைக்கும், சமையலுக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணியை நாளொன்றுக்கு இரண்டு முறை வருமாறு பணியில் அமர்த்தினார்கள்.
மணிவண்ணன், நிர்மலாவும் சென்னை வந்து எல்லாவற்றையும் பார்த்து, மருமகளுக்கு அறிவுரைகள் சொல்லி, ஆசீர்வதித்துச் சென்றனர்.
“அன்பு..” தேன்மொழி அழைக்க, “நீ ஃபீல் பண்ணாதக்கா. நான் பெரிப்பா, மாமா சென்னை வரும் போதெல்லாம் உன்னய வந்து பாக்கறேன்.” என்று அக்காவிடம் புன்னகையுடன் சொல்லி விடை பெற்றான்.
இதற்கு முன்பும் பலமுறை சென்னை வந்திருக்கிறாள்தான். அன்பழகனையும் கூட அழைத்து வந்திருக்கிறாள். அண்ணன்கள் கல்லூரியில் படிக்கும் போது வந்திருக்கிறார்கள்.
பின்னர் அவர்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கியதும், அடிக்கடி விடுமுறைக்கு வந்திருக்கிறார்கள். சென்னையின் பிரபல சுற்றுலா தளங்களைச் சுற்றி பாத்து விட்டு, அண்ணன்களிடம் பாசத்தையும், வம்பையும் வளர்த்து விட்டு ஊர் திரும்பி விடுவார்கள்.
இப்போதோ அங்கேயே வசிக்க நேரிடுகையில் ஊரே புதியதாகக் காட்சியளித்தது.
அவளுக்குக் கல்லூரி மிகவும் பக்கம் என்றாலும் பாதுகாப்புக்காகக் கல்லூரி பேருந்தில்தான் தினமும் கல்லூரி சென்றாள். அப்படியே பேருந்தை தவற விட்டாலும் அண்ணன்களில் யாரேனும் ஒருவர் கொண்டு போய் விட்டு விடுவார்கள். அதிலெல்லாம் நிரம்பவும் பொறுப்புதான்.
தேன்மொழியும் பொறுப்பாகப் படித்தாள். காலை கல்லூரி செல்லும் முன் வீட்டு வேலைகளை முடிந்த அளவு செய்து விட்டே செல்வாள்.
அம்மாச்சி, சுதாகரன் இருவரும் அவளுக்கு உதவி செய்வார்கள். வெளிவேலைகள் எல்லாம் தாத்தா பார்த்துக் கொள்வார். பாவம், அவரால்தான் அங்கே வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியவில்லை. அடிக்கடி திண்டுக்கல் சென்று தொழிலை பார்த்து விட்டு திரும்ப வருவார்.
மாலை கல்லூரி பாடங்களைப் படித்து முடித்ததும், இரவு உணவை சமைப்பது தேன்மொழிதான். அடிப்படை சமையல் ஏற்கெனவே கற்றிருந்தாள். அதை இப்போதுதான் முயன்று பார்க்கிறாள்.
அவள் என்ன செய்தாலும் பெரியவர்கள் சாப்பிட்டு விடுவார்கள். சுதாகரன் கூட அப்படியே.
அவ்வப்போது ஜெயபாலன் மட்டும், “உன்னைய யாரு இப்போ சமைக்கச் சொன்னது? அந்தக்கா பேசாட்டி வந்து சமைச்சு வச்சுட்டு போய் இருக்கும்ல? இதென்ன சட்னி உப்பு, ஒரப்பே இல்லாம? இத்த சாப்பிடுறதுக்கு நான் பட்டினி கெடப்பேன்” என்று கத்தி விட்டு வெளியில் சென்று சாப்பிட்டு வந்து விடுவான். ஆனால் மறக்காமல் அண்ணா, தங்கை இருவருக்கும் உண்ண வாங்கி வந்து, “நீ செஞ்சேன்றதுக்காக அந்தக் கொடுமையை அனுபவிக்கணும்னு அவசியமில்ல. இந்தா உனக்குப் பிடிச்ச சப்பாத்தி, குருமா. சாப்டு” என்று தங்கையிடம் நீட்டுவான்.
“நான் சமைச்சத நீ சாப்பிடல இல்லண்ணா? நீ வாங்கிட்டு வந்தத நான் சாப்பிட மாட்டேன் போ” என்று முறுக்கி கொள்வாள் தேன்மொழி.
“வேணாம்னா போ. காலையில நான் சூடு பண்ணி சாப்பிட்டுக்குவேன். ஆமா காலையில என்ன கொடுமை செய்யுறதா இருக்க?” என்று சிரிக்காமல் சீரியஸாகக் கேட்பான்.
“நான் சமைச்சாதான் உனக்குப் பிடிக்காதேண்ணா. அப்புறம் ஏன் கேக்குற? நீ வெளில போயே சாப்பிட்டுக்கோ”
“ஏ அம்மாச்சி, நாள் பூரா அபார்மெண்ட் கிழவிங்க கூடச் சேர்ந்து நல்லா ஊர் கதை பேசிட்டு கோயிலு, ஷாப்பிங்னு ஊர் சுத்திட்டு எங்களைக் கவனிக்க மாட்டேங்கற நீ. உன்னால வேலைக்கு வர அக்காவும் ஒழுங்கா வர மாட்டேங்குது. எல்லாத்துக்கும் நீதான் காரணம். வா இப்படி” என்று முத்தம்மாவையும் கத்துவான்.
“அம்மாச்சி மாத்ர போட்டு தூங்க போயாச்சு. பேசாம இருண்ணா”
“அதெல்லாம் முடியாது. நீ பண்ற கொடுமைக்கெல்லாம் அதுதான் பதில் சொல்லணும்”
“அம்மாச்சி..”
“ஏன்யா இப்படிக் கத்திட்டு கிடக்க, போய்த் தூங்குவியா. உனக்கு நாளைக்கு ஆஃபீஸ் இருக்குல்ல? டயத்துக்குப் போக வேணாமா?” என்று முத்தம்மாவின் குரல் மட்டுமே வரும், அவர் வர மாட்டார். அத்தனை பேச்சு பேசினாலும் அடுப்படி சென்று, வெளியில் இருந்து வாங்கி வந்திருந்த உணவை பிரித்து, தட்டில் வைத்து தங்கையின் கையில் திணித்து விட்டே செல்வான் அவன்.
அப்படியாக அவளின் கல்லூரி காலம் சுவாரசியமாக நகர, அவளுடன் வந்து இணைந்து கொண்டான் அன்பழகன். அவளின் எத்தனை வருட ஆசை அது.