இந்த வாழ்வென்பது – 8 (2)

ஊருக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு, தோட்டம், கரிசக் காடு என அந்தப் பக்கமும் மேற்பார்வை முடித்து மதிய உணவு கடந்த பின்னரே வீடு வந்தார்கள்.

அவர்களுக்கு அந்த நாளே அத்தனை விரைவாக இனிமையாகக் கழிந்திருந்தது.

மாலை வேளையில், “இப்பவே கிளம்புனாதான் ஊர் போய்ச் சேர சரியாருக்கும்” என்று பொற்கொடி சொல்லவும், தேன்மொழியின் முகம் வாடி விட்டது.

“அன்பே, அண்ணனுங்கள பார்க்க சென்னை வாடா. நாம பீச்சுக்குப் போகலாம். மெரினா பீச். வர்றியா?” என்று அன்பழகனை கழுத்தோடு சேர்த்தணைத்து சுதாகரன் கேட்க, “நான் அக்கா வரும் போது வர்றேன்” என்றான் அவன்.

“பாருடா. அப்போ கூட உங்கக்கா வந்தாதான் வருவியா? எங்களைப் பார்க்க வர மாட்டியா?”

“நானா எப்படி வர முடியும்?”

“மாமாவை கூட்டிட்டு வாடா.”

“ம்ம்” என்று மண்டையாட்டினான்.

“அன்பே..” என்று அவனை நெருக்கி செல்லமாய் அழைக்க, “அவனை விடுண்ணா” என்று வந்த தேன்மொழி, தம்பியின் கைப் பிடித்துக் கடிகாரம் கட்டி விட்டாள்.

அனைவர்க்கும் முன்பு தம்பியை வாழ்த்தி விட வேண்டும் என்ற ஆவலாதி அவளுக்கு.

“ஹேப்பிப் பர்த்டே தம்பி” பெரும் புன்னகையுடன் வாழ்த்தினாள்.

“வாட்ச் சூப்பரா இருக்கு கா. எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு” கையைத் திருப்பித் திருப்பி ஆசையாக அழகு பார்த்தான் அன்பழகன். அதில் சரியாக நேரம் பார்த்து அக்காவிடம் சொன்னான்.

“உனக்கு டைம் பார்க்கத் தெரியுமா டா அன்பே, பாருடா பெரிய ஆள்தான்.” என்று அண்ணன்கள் கேலி செய்ய, தம்பியின் கண்கள் கடிகாரத்தின் மேலேயே இருந்தது.

“உங்கக்காவே காசு சேர்த்து உனக்கு வாங்கிக் கொடுத்திருக்கா டா அன்பு பயலே” என்று மகளைக் குறித்துப் பெருமையாகச் சொன்ன பொற்கொடி, “ஊர்ல அன்பு அவங்க வீட்டு தோட்டத்துல பூ பறிக்கப் போய்க் காசு சேர்த்தான்னா பார்த்துக்கோங்களேன்” என்றார் நிர்மலாவிடம். அதைக் கேட்டதும் மணிவண்ணன் உணர்ச்சி வசப்பட்டார். சட்டெனத் தொண்டையைச் செருமினார்.

கந்தன், பொற்கொடி பிள்ளைகள் மூவருக்கும் வாங்கி வந்திருந்த புது உடைகளை எடுத்துக் கொடுத்தார்கள். அன்பழகனுக்குத் திருநீறு பூசி விட்டுக் கையில் காசும் கொடுத்தார்கள்.

“இந்தா டா அன்பே..” என்று அண்ணன்கள் இருவரும் கிரிக்கெட் பேட், பாலை கொடுக்க, அதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டான்.

அத்தை, பெரியம்மா கொடுத்த காசை பொறுப்பாக வாங்கிச் சேர்த்து, அக்காவின் கையில் கொடுத்தான். எப்போதும் போல.

தேன்மொழியும் சிரிப்புடன் அவனை இழுத்துப் போய், அந்தக் காசை அவன் கையாலேயே அவனது உண்டியலில் போட வைத்தாள்.

“காச சேர்த்து வைக்கணும் டா அன்பு”

“நான் சேர்த்து வச்சு என்னக்கா பண்ண போறேன். அதுக்கு நீ வச்சுக்கலாம் இல்லக்கா?” என்று மனத்தாங்கலுடன் கேட்டான். அவள் பதில் சொல்லும் முன், “வேலைக்குப் போனியா கா? கஷ்டமா இருந்ததா?” என்று கேட்கையிலேயே அவன் குரல் உடைய, கண்களும் உடையப் போகிறேன் என்று குளம் கட்டி நின்றது.

“வேலைக்கு இல்லடா. அது பூ பறிக்கப் போனேன். பூ பறிக்கறது கஷ்டமா இருக்குமா? நீயே நம்ம வீட்ல எத்தனை நாளு அக்காக்கு பூ பறிச்சுக் குடுத்திருக்க, அப்ப உனக்குக் கை வலிச்சதா?”

“இல்லதான்”

“அக்காக்கும் கை வலிக்கலடா. ஜாலியா இருந்தது தெரியுமா? நீ ஊருக்கு வரும் போது உன்னையும் கூட்டிட்டு போறேன். நீ பார்த்திருக்க அந்தத் தோட்டம், நிறையப் பூ இருக்கும். ரொம்ப அழகாருக்கும்”

“நிறையப் பூன்னா ரொம்ப நேரம் பறிச்சியா கா?” என்று மடக்கி கேள்வி கேட்டவனின் மண்டையில் செல்லமாகக் கொட்டினாள். சிரிப்புடன் நின்றான் அன்பு.

தேன்மொழி அங்கிருந்த புகைப்படங்களைப் பார்த்தாள். அப்பா, அம்மா, அப்பத்தாவின் புகைப்படங்கள். அவர்கள் புன்னகைப்பது போலிருக்க, அவளும் புன்னகைத்தாள்.

“பர்த்டே அன்னைக்கு அக்கா போன் பண்றேன் அன்பு. நீ ஸ்கூலுக்குப் போய்ட்டு வந்துட்டு அத்த கூடக் கோவிலுக்குப் போ, என்ன?”

“ம்ம், சரிக்கா. ஜெயாண்ணாவும் மெட்ராஸ் போறானா?”

“ஆமா டா. அட்மிஷன் போட்டாச்சு. அங்க படிச்சாதான் நல்ல வேலை கிடைக்கும்னு சுதாகர் அண்ணா சொல்லுச்சு டா. அதுனால ஜெயாண்ணா போகுதா இருக்கும்”

“நீ என்னக்கா படிக்கப் போற? எங்க படிக்கப் போற?”

“என்ன படிக்கிறதுன்னு தெரியலையே அன்பு. அண்ணனுங்க மாரியே இன்ஜினியரிங் படிக்கவா?” என்று பதிலை கேள்வியாக்கினாள். என்ன படிப்பதென்ற எந்தவொரு திட்டமும், கனவும் அவளிடம் இல்லை. ஆனால், எங்குப் படிப்பதென்று சமீபமாகத்தான் முடிவு செய்திருந்தாள்.

அண்ணன்கள் இருவரும் சென்னையில் படிக்க, அவள் மதுரையைத் தேர்வு செய்தாள். அங்குதான் சிறந்த கல்லூரி இருக்கிறது, நன்றாகப் படிப்பிப்பார்கள், அங்குப் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலைக் கிடைக்கும் என்ற பட்டியல் எல்லாம் அவளிடம் இல்லை.

மதுரை கல்லூரியில் சேர்ந்தால் மாமா வீட்டில் இருந்து கல்லூரி செல்ல முடியும். மதுரைக் கல்லூரி என்றால் கண்டிப்பாக அவளை விடுதியில் சேர்க்க மாட்டார்கள். திண்டுக்கலில் இருந்து தினம் போய் வரவும் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணம்தான். எப்படியும் மாமா வீடுதான் அடைக்கலம். அப்படியென்றால் கல்லூரி காலம் முழுமைக்கும் தம்பி அன்புவுடன் இருக்கலாம். குறைந்தபட்சம் மூன்றாண்டுகள், பொறியியல் என்றால் நான்காண்டுகள்.

“உனக்கு என்ஜினியராகணும்னு ஆசையா கா?”

“ஏன் உனக்கு ஆசையா?”

“இல்லல்ல. ஆமா, என்ன படிச்சா கவர்மென்ட் வேலைக்குப் போக முடியும்?”

“கவர்மென்ட் ஆபீசர் ஆகணுமா டா உனக்கு?” சிரிப்புடன் அவள் கேட்க, “ஆமாகா” என்றான் வேகமாக.

“அதுக்கு என்ன படிக்கணும்னு தெரியல டா அன்பு. அண்ணாவை கேட்டா தெரியும். ஆனா, ஊர்ல ஒரு அக்கா அதுக்குன்னு தனியா படிச்சு எக்ஸாம் எழுதினாங்கடா. கவர்மென்ட் வேலைக்குன்னுதான் சொன்னாங்க”

“அம்மாக்கு நாம கவர்மென்ட் வேலை பார்க்கணும்னு ஆசையாம். அன்னைக்கு மாமா சொன்னாங்க” என்றான், அக்காவின் முகம் பார்த்து.

“நீ இன்ஜினியராகு கா. நான் கவர்மென்ட் வேலைக்குப் போறேன்” என்று சொன்னவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தாள்.

அன்பழகன் சொன்னது போலத் தேன்மொழி கல்லூரி படிப்பிற்காகப் பொறியியல் படிப்பைத்தான் தேர்ந்தெடுத்தாள்.

பதினோராம் வகுப்பு படிக்கும் போதிருந்தே என்ன படிப்பது? மதுரையில் எந்தக் கல்லூரியில் சேர்வது? என்ற ஆராய்ச்சிதான் அவளுக்கு.

அவளின் பள்ளி ஆசிரியர்கள், தோழிகளிடம் எல்லாம் விசாரித்து, சிறந்த கல்லூரியை தேர்வு செய்து விட்டாள்.

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று ஆவலாகக் காத்திருக்கையில், “என்ன படிக்கப் போற தேனு? இங்கேயே உனக்குக் காலேஜ் பார்க்கவா? நீயும் சென்னையில படிக்கறியா?” என்று அவளிடம் கேட்டு விட்டான் சுதாகரன்.

சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன். ஜெயபாலனும் கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்து ஒரு வருடமாகிறது.

“இல்லண்ணா, எனக்கு ரிசல்ட் வரட்டும்”

“அது பொறுமையா வரட்டும். நாம அதுக்கு முன்னாடி அட்மிஷன் போட்டுடுவோம். இல்லனா இங்க சீட் கிடைக்காது” என்றவன், “நீ ஏன் இப்படிப் பேக் அடிக்கிற? ஏய், தேனு பாஸ் ஆகிடுவ தானே?” என்று கேலி செய்தான்.

“ண்ணா” என்று பல்லைக் கடித்தாள்.

“சரி, விடே. சொல்லு, என்ன கோர்ஸ் எடுக்கற?” என்று அவன் கேட்க, “ரிசல்ட் வரட்டும் ண்ணா” என்று பிடிவாதமாகப் பதில் சொல்லாமல் தவிர்த்தாள்.

அந்த வார இறுதியில் அண்ணன்கள் வீடு வந்தார்கள்.

“தேனு சென்னையில் படிக்கட்டும். நான் அவள கையோட கூட்டிட்டு போய் அட்மிஷன் போட்டுடுறேன். இல்லனா, நீங்களும் வர்றதா இருந்தா வாங்க ப்பா” என்றான்.

“ம்ம் சரிப்பா” என்றார் கந்தன், யோசனையாக.

“பெரிம்மா நான் இங்கேயே படிக்கறேன்”

“நீ ஏன் எப்போ கேட்டாலும் சென்னைக்கு வர மாட்டேன்னு சொல்ற?” என்று ஜெயபாலன் கேட்க, “இங்கேயே நல்ல காலேஜ்லாம் இருக்கேண்ணா. அதுனாலதான்” என்றாள் அமைதியாக.

“அந்த நல்ல காலேஜ்லாம் எங்களுக்கும் நல்லா தெரியும். நீ பேசாம சென்னைக்கு வர்ற. கேட்டுச்சா?”

“நான்தான் இங்கேயே படிக்கறேன்னு சொல்றேன் இல்ல?”

“அண்ணே சொல்றான் இல்ல பாப்பா, ஏன் பிடிவாதம் பிடிக்கிற?” என்று பொற்கொடியும் புரியாமல் கேள்வி கேட்க, எதற்கும் அடம் பிடித்து, அழுது பழக்கம் இல்லாத தேன்மொழிக்கு தன் மனத்தில் இருந்த ஆசையைச் சொல்லவே முடியவில்லை.

மாமா வீட்டில் போய்ப் படிக்கிறேன் என்று சொன்னால், “அப்போ நாங்க உன்னைய நல்லா பார்த்துக்கலையா?” என்ற கேள்வி வருமோ என்ற பயம் அவளுக்கு.

அவளின் ஆசையைச் சொன்ன போது, அவளின் நெருங்கிய தோழி ரேணுகா கூட அதைத்தானே சொன்னாள்.

“உங்க பெரிம்மா ஃபீல் பண்ண போறாங்க டி” என்றிருந்தாள்.

“நான் இங்கேயே படிக்கிறேன் பெரிம்மா” என்றாள் திடமாக.

“அவள, அவ இஷ்டத்துக்கு விடுங்க டா” என்று மகன்களைக் கண்டித்தார் பொற்கொடி.

அதனால் அண்ணன்கள் அவளிடம் பேசாமல் கோபித்துக் கொண்டு சென்னை சென்றார்கள். சில நாள்கள் கழித்து அவளின் தேர்வு முடிவுகள் வர, சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாள். அவ்வளவுதான். அண்ணன்கள் மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள்.

“இந்த மார்க்க வச்சுட்டு நீ இங்கயே படிக்கப் போறியா? ஒழுங்கா சென்னை வா” என்று கிட்டத்தட்ட மிரட்டினார்கள்.

“இல்ல, நான் மதுரயில படிக்கறேன்”

“அங்க மட்டும் எந்த நல்ல காலேஜ் இருக்காம்?”

“அதெல்லாம் நிறைய இருக்கு” என்றவள், ரோசத்துடன் நாலைந்து கல்லூரி பெயர்களைச் சொன்னாள். எல்லாமே மாமா மணிவண்ணன் ஊருக்கு நெருக்கமாக இருந்த கல்லூரிகள். அதை யாரும் கண்டுப்பிடிக்கவில்லை. அவளும் விளக்கிச் சொல்லவில்லை.

“ஏன் டா, என் புள்ளய போட்டு இப்படிப் பாடாப்படுத்தி எடுக்கறீங்க? அவதான் இங்கேயே படிக்கறேன்னு சொல்றா இல்ல? விடுங்க டா அவள” என்று மகன்களைத் திட்டினார் பொற்கொடி.

“அவ எங்க இங்க படிக்கறேன்னு சொன்னா? திண்டுக்கலு, மதுரன்னு மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கா”

“ராசாத்தி நீ சொல்லு. உனக்கு எந்த ஊரு காலேஜ்ல படிக்கணும்?” என்று அதுவரை அமைதியாக இருந்த முத்தம்மா பேத்தியிடம் கேட்க, “மதுர அம்மாச்சி” என்றாள் வேகமாக.

“அம்புட்டு தான் டா. மதுர காலேஜ்ல விசாரிச்சு சேர்த்து விடுங்க” என்றார் முடிவாக.

“மதுரைக்குப் போறவ சென்னைக்கு வர மாட்டாளாமா? ரொம்பப் பிகு பண்ணாத தேனு”

“பெரியவனே பேசாம இரு” என்று மகனை அதட்டினார் கந்தன்.

“படிக்கிற புள்ள எங்கனாலும் படிக்கும் டா. புள்ள ஆசைப்படுற போல மதுர காலேஜ்ல சேர்த்துவுட்டு, அப்படியே அவங்க மாமா..” மாமா என்ற வார்த்தையைக் கேட்டதும் அவளின் முகம் அந்தியின் மல்லியாய் மலர்ந்து விட்டது. அவளின் ஆசை நிறைவேறப் போகையில், உள்ளே புகுந்து உழப்பி விட்டான் சுதாகரன்.

“எனக்கென்ன.. உங்க மகளாச்சு, நீங்களாச்சு. என்னமோ பண்ணுங்க” என்று கத்தினான்.

“அவங்க புள்ளைங்க ரெண்டு பேரையும் மெட்ராஸ் அனுப்பி நிறையா பணம் கட்டி படிக்க வச்சாங்க. தம்பி புள்ளய இங்கனக்குள்ளேயே பேருக்கு ஒரு காலேஜ்ல சேர்த்து வுட்டுட்டாங்கன்னு ஊருக்குள்ள பேசிப்பாங்க. நல்லா பேச்சு கேளுங்க” என்று அவன் கோபமாகச் சொல்லவும், “என்னப்பா பேசுற, ஊர் ஆய்யிரம் பேசும். அதுக்காக.. தங்கச்சி ஆசப்படுறத பார்க்க வேணாமா?” என்று கந்தனும் கோபமாகப் பேசினார்.

“அவளுக்கு என்னப்பா தெரியும்? அவளைப் போய்க் கேட்டுட்டு இருக்கீங்க? சென்னைல பெரிய காலேஜ்ல படிச்சா, என்னைய மாரி நாளைக்குப் பெரிய வேலைக்குப் போவாப்பா. உங்களுக்கு அவளைப் பெருசா பார்க்க ஆசையில்லயா?” என்று கேட்டான்.

அவ்வளவுதான், மகனது பேச்சில் இருந்த நியாயம் அவர்களைச் சம்மதிக்க வைத்தது. மகனின் பேச்சை அப்படியே ஏற்றுக் கொண்டார் கந்தன். அங்கே மகளின் பேச்சு எடுபடாமல் போனது.

மகளின் வளமான எதிர்கால வாழ்வுக்காக அந்த முடிவெடுத்தார்கள்.

“நான் ஆசைப்பட்ட எதுவுமே எனக்கு எளிதாகக் கிடைக்காதா?” என்ற ஆதங்கத்துடன் தேன்மொழி பல வருடங்களுக்குப் பிறகு விரக்தியுடன் வானை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top