அன்பழகன் அக்காவின் கையை ஆவலாக பற்றி அவள் முகம் பார்த்தான்.
“வாக்கா” என்று சிரிப்புடன் அவளை வரவேற்றான். அந்தச் சிரிப்பு அவனைச் சிறுவனாகச் சித்தரித்தது. ஆனால் அவளது உயரத்திற்கு வளர்ந்து விட்டிருந்தான்.
“டேய் அன்பே, அதென்ன டா கையில..” என்று அவன் கையில் இருந்த பாட்டிலை கைப் பற்ற முயற்சித்தார்கள் அண்ணன்கள் இருவரும்.
“விடே. இது அக்காக்கு..” என்று கத்தி, கையில் இருந்த பானத்தைப் பத்திரமாக அக்காவிடம் நீட்டினான்.
“ஏன்டா, உங்கக்காக்கு மட்டும் தானா? அப்போ எங்க மேலலாம் உனக்குப் பாசம் இல்லையா? எங்களுக்குத் தர மாட்டியா? என்னாது டா அது பாட்டில்ல?” என்று ஜெயபாலன் கேட்க, “சர்பத்து, அக்காக்கு” என்றான் அன்பு.
“சர்பத்தா? பாருடா. காலையிலேயே எந்திரிச்சி கலக்கி வச்சியா? எங்களுக்கும் கொஞ்சம் குடுடா. நாங்களும் உன்னைய பார்க்கத் தானே வேகாத மதுர வெயில்ல வெந்து வந்திருக்கோம்” என்று சுதாகரனும் வம்பிழுக்க, அன்பழகன் திரும்பி அக்காவைப் பார்த்தான்.
“அங்கனகுள்ளயே நின்னு என்னடா பேசிட்டு இருக்கீங்க. வீட்டுக்குப் போலாம். வாங்கடா. தேனு, அன்புவ கூட்டிட்டு வா” அவர்களுக்கு முன்னால் இரண்டு கையிலும் பைகளுடன் நடந்து கொண்டிருந்த பொற்கொடி, அவர்களைப் பார்த்து குரல் கொடுத்தார்.
“இந்தா வர்றோம்மா” என்று கத்திய ஜெயபாலன், தம்பியை நகர விடாமல் இறுக்கிக் கொண்டான். அன்பு அதிசிரத்தையுடன் பாட்டிலை அக்காவிடம் நீட்டினான்.
தேன்மொழி அதை வாங்கி, ஒரு வாய் குடித்து விட்டு சிரிப்புடன் அண்ணன்களிடம் கொடுத்தாள்.
“நீ வா, நாம வீட்டுக்குப் போகலாம்” என்று தம்பியை அழைத்தாள். குரங்கு குட்டியை போல அக்காவின் கைப் பிடித்துத் தொங்கியபடி நடந்தான் அன்பழகன்.
“ஹைட்டா வளர்ந்துட்டக்கா” எக்கி அவளின் தோளோடு தோள் பதித்து நிற்க முயன்று அவன் சொல்ல, “நீதான் நல்லா வளர்ந்துட்ட அன்பு” என்றாள் வாஞ்சையாக, அவனின் தலையைக் கலைத்து விட்டு.
முன்பு அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள். அப்பத்தா தவறிய பிறகு சந்திப்புகள் குறைந்து விட்டது. பெரியவர்களின் வேலை பளு, பிள்ளைகளின் பாசத்திற்கு இடைஞ்சலாக வந்து நின்றது.
நீண்ட நெடிய நாள்கள் பார்த்துக் கொள்ளாதது போலப் பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்தார்கள் அக்கா, தம்பி இருவரும். விளையாட்டாக அதைக் கேலி செய்தபடி பின்னால் வந்தார்கள் அண்ணன்கள்.
“தேனு, வாடா” என்று அன்பாக மருமகளை வரவேற்ற மணிவண்ணன்,
“வாங்க மாப்ளைகளா, காலேஜ் படிப்புலாம் எப்படிப் போகுது?” என்று மருமகன்களையும் நலம் விசாரித்தார்.
“அந்தக் கொடுமைய ஏன் மாமா கேட்கறீங்க. என்னையும் சென்னைக்குத் தூரத்தி விட்டுட்டாங்க மாமா” என்று புலம்பினான். அவன் அடம் பிடித்து, ஒரே பிடியாக நின்று சென்னை செல்வதைச் சொல்லவில்லை அவன். ஆனாலும், அவருக்குத் தெரியாதா என்ன?
“சரி, விடுங்க மாப்ள. இங்கன மதுரயில நல்ல காலேஜா பார்த்து மாமா சேர்த்து விடறேன். பணத்தையும் நானே கட்டிடுறேன். நம்ம வீட்லருந்தே காலேஜ் போய்ட்டு வாங்க. என்ன சொல்றீங்க மாப்ள?” என்று அவர் கேட்கவும், “அய்யய்யோ மாமா. ஆள விடுங்க. நான் வரல இந்த ஆட்டத்துக்கு” என்று கையெடுத்து கும்பிடு போட்டு அவரிடமிருந்து தப்பித்தான்.
“நான்தான் மாமா அவனைச் சென்னை வரச் சொன்னேன். அவனுக்கு வண்டிங்க மேல இன்ட்ரெஸ்ட்டு. அதான், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சா நல்லா வருவான்னு, சென்னைக்குக் கூப்பிட்டுக்கிட்டேன்” என்று விளக்கம் சொன்னான் சுதாகரன்.
“அப்படித்தான் ஏதாவது இருக்கும்னு நினைச்சேன் மாப்ள. நல்லா படிங்க ரெண்டு பேரும்” என்று அவர்களின் தோளை தட்டிச் சொன்னவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
கந்தன், பொற்கொடி இருவரும் கூடத்தில் ஓய்வாக அமர்ந்திருக்க, மணிவண்ணன் மக்கள் தேன்மொழியைப் பிடித்துக் கொண்டார்கள்.
அன்பழகன் மட்டும் அடுப்படிக்கும், அக்காவுக்கும் இடையே ஓடிக் கொண்டிருந்தான். அத்தை நிர்மலா சூடாகக் கருப்பட்டி பணியாரம் செய்து கொண்டிருக்க, அதைத் தட்டில் வைத்து எடுத்து வந்தவன், “பெரிப்பா சாப்பிடுறீங்களா? பெரிம்மா நீங்க சாப்பிடுறீங்களா? சுதாண்ணா நீ சாப்பிடுறியா? ஜெயாண்ணா நீ சாப்பிடுறியா?” என ஒவ்வொருவரிடமும் கேட்டு அவர்கள் மறுப்பாகத் தலையசைக்கவும், “இந்தாக்கா, சாப்பிடு” என்று அக்காவிடம் நீட்டினான்.
பணியாரத்தைக் கொஞ்சமாகப் பிட்டு ஊதி தம்பிக்கு ஊட்டி விட்டாள் தேன்மொழி.
“நம்ம கோழிக் குஞ்சு பொறிச்சுருக்கு தேனு, பதிமூனு குஞ்சு. கலர் கலரா, குட்டி குட்டியா அழகா இருக்கு. வா உனக்குக் காமிக்கறேன்” என்று மணிவண்ணன் மகள் பத்மபிரியா சொல்ல, “பதிமூனு இல்ல பதினாலு டி லூசு” என்று சொன்ன சரவணகுமார் தங்கையின் தலையில் தட்டினான்.
“இல்ல. நான் எண்ணுனேன். பதிமூனுதான் இருந்துச்சு.”
“பதினாலு பைத்தியமே. அண்ணே சொன்னா சரியா இருக்கும். தெரியும் தானே?” என்று தலையை ஆட்டி ஆட்டி மிதப்பாக அவன் சொல்ல, தங்கை கடுப்பாகி அடிக்க அண்ணன் மேல் பாய்ந்தாள்.
“விடு பத்மா, அவனை அடிக்காத. நாம எண்ணிப் பார்க்கலாம். வா” என்று அவளைப் பிடித்திழுத்தாள் தேன்மொழி.
தங்கையைத் தடுக்க அவளின் முடியை கொத்தாகப் பிடித்திருந்த சரவணகுமார், மச்சான்கள் இருவரையும் பார்த்ததும், “உன்ன அப்புறமா கவனிச்சுக்கறேன்.” என்று சொல்லி, நாக்கை துருத்தி காண்பித்து விட்டு அவர்களிடம் ஓடினான்.
பத்மபிரியா, தேன்மொழியுடனேயே இருந்தாள்.
“நீ வாக்கா, நாம கோழிக் குஞ்சு பார்க்கலாம்” என்று அன்பழகன் அழைக்க, மூவரும் பின் கட்டுக்குச் சென்றார்கள்.
“பத்மா, தேனு, அங்க எங்க பின்னாடி பக்கமா போறீங்க? பசிக்கலையா பசங்களா? சாப்பிடுங்க வாங்க?” என்று சமையல் அறையில் இருந்து கத்தினார் நிர்மலா.
“கோழிக் குஞ்சு பார்க்க போறோம்மா” பத்மா பதிலுக்குக் கத்த, “அதை அப்புறமா பார்க்கலாம். மொத வந்து சாப்பிடுங்க” என்றார் கண்டிப்புடன்.
உடனே வீட்டுக்குள் வந்து விட்டார்கள்.
காலையிலேயே கறிக் குழம்பு வாசம் வீடு முழுக்க மணத்தது. பொற்கொடியும் சென்று அவருக்கு ஒத்தாசையாக நின்று ஊர்க் கதைகள் பேசிக் கொண்டிருந்தார்.
“பொறுப்பே இல்லாம இந்தச் சின்னவன் செலவு வச்சுட்டான்..” என்று சின்ன மகன் செயலை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் பொற்கொடி.
“காலம் கெட்டுப் போய்க் கிடக்கு அண்ணி. காசை பார்க்காம புள்ளைங்க ரெண்டும் ஒரே இடத்துல தெரியாத ஊர்ல ஒருத்தருக்கொருத்தர் துணையா ஒரே காலேஜ்ல படிப்பானுங்க இல்ல. அதைப் பாருங்க”
“அதைச் சொல்லித்தேன் என்னைய மண்டையாட்ட வச்சுட்டானுங்க” என்று அங்கலாய்த்தார்.
“செலவு கெடக்குதுன்னு விட்டாலும், எம்புட்டு அலைச்சல்?”
“நிர்மலா, இந்தா வாழஎல கேட்டியே..” என்று மணிவண்ணன் குரல் கொடுக்கவும், பெண்களின் பேச்சுப் பாதியில் நின்று போனது.
அனைவருக்கும் காலை உணவை எடுத்து வைத்தார்கள்.
பிள்ளைகள் ஆறு பேரும் வரிசையாக அமர, ஆண்களும் அவர்களுடன் அமர்ந்தனர்.
“மருமவனுக்குக் கொடலு குழம்பு பிடிக்கும். அதைக் கொண்டா நிர்மலா” என்று மணிவண்ணன் கேட்டு வாங்கி, சுதாகரன் இலையில் குடல் குழம்பை ஊற்றினார்.
“இந்தாங்க ஈரலை தேனு இலையில வைங்க. அவ விரும்பி சாப்பிடுவா” ஈரல் அவள் இலைக்கு வரும் முன்னே தன் இலையில் இருந்ததை எடுத்து அக்காவுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான் அன்பு.
தேன்மொழி தம்பிக்கு பிடித்த நல்லி எலும்பை தட்டி அவனிடம் நீட்டினாள்.
“நீ சாப்பிடு தேனு. அன்புக்கு நான் குடுக்கறேன்” என்று நிர்மலா சொன்னாலும், பிள்ளைகள் பகிர்ந்துதான் உண்டு கொண்டிருந்தார்கள்.
“அம்மா அன்புக்கு தோச” என்று பத்மபிரியா சொல்லவும், மெத்தென்று தோசை ஊற்றி எடுத்து வந்து அனைவருக்கும் வைத்தார் நிர்மலா.
உணவு முடித்ததும் பின் கட்டுக்கு ஓடி விட்டார்கள். அங்கே ஆடு, மாடுகள் எண்ணிக்கையில் இப்போது கூடியிருந்தது. கொட்டகையும் பெரிதாகி இருந்தது. கோழிகள் கொல்லை புறம் எங்கும் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருந்தன.
அங்கிருந்த பஞ்சாரத்தை மெதுவாகத் திறந்து, “அக்கா, இங்க பாரு. கோழிக் குஞ்சு” என்று ரகசிய குரலில் சொன்னான் அன்பு.
“டேய், அத தொடாத டா. கோழி கொத்தும்” என்று பத்மா அவனைத் தடுக்க, “காலையில கோழிக்கு நான்தான் இரை போட்டேன். அது என்னை ஒன்னும் பண்ணாது” என்றான் அன்பு அலட்டிக் கொள்ளாமல்.
“போன வாட்டி கொத்து வாங்கினியே, மறந்துட்டியா?”
“உன்னைய கொத்துச்சா டா அன்பு. அப்போ தொடாத” என்று தேன்மொழியும் சொல்ல, “அது வேற கோழிக்கா. இது கொத்தாது” என்று சொல்லி புன்னகைத்து, கோழி தலையை ஒற்றை விரலால் தொட்டான்.
“இரு, நான் அம்மாவை கூப்ட்டு எடுத்து தரச் சொல்றேன்”
“வேணாம். நானே எடுப்பேன்”
தாய்க் கோழியின் ரெக்கையை வீடாக்கி அதில் பதுங்கி இருந்தன கோழிக் குஞ்சுகள். சில தலைகள், சில கால்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. அத்தனையும் எப்படி உள்ளே பதுங்கியது? எப்படி அவைகளுக்கு இடம் பற்றியது? என்ற ஆராய்ச்சியுடன் கண் முன் தெரிந்தக் காட்சியை இமைக்காமல் பார்த்திருந்தாள் தேன்மொழி. அவளுக்கும் மங்கலாக இது போல அம்மாவின் அணைப்பில் தானும், தம்பியும் சுருண்டிருந்த குழந்தை பருவம் நினைவில் வந்தது. அம்மாவின் கதகதப்பும் அது தரும் பாதுகாப்பும், ஏக்கத்துடன் தாய்க் கோழியைப் பார்த்தவள், தம்பியின் தோளில் கைப் போட்டு, அவன் தலையில் செல்லமாக முட்டினாள்.
“ஒரே ஒரு கோழிக் குஞ்சு கொத்தாம குடே. எங்கக்காக்கு காட்டணும்.” என்று தாய்க் கோழியிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தான் அன்பு.
பத்மா குடுகுடுவென்று வீட்டுக்குள் ஓடிப் போனாள். மறுநொடி கை நிறைய அரிசிக் குருணையுடன் ஓடி வந்து, அதைக் கோழியின் முன் தூவலாகப் போட்டாள்.
“தேனு தள்ளி வா. அப்போதான் கோழி இரை எடுக்க எழுந்து வரும்.” என்று தேன்மொழியைப் பிடித்துப் பின்னே இழுத்தாள்.
தாய்க் கோழி தலையை நான்கைந்து முறை திருப்பி, அவதானித்து, மெல்ல கீழிறங்கி, இரையைக் கொத்தியது. அதற்காகவே காத்திருந்த அன்பு, மெதுவாகக் கீழிறங்கிய கோழிக் குஞ்சுகளில் இரண்டை கவனமாகப் பிடித்து அக்காவின் கையில் கொடுத்தான். அவள் உள்ளங்கையில் வைத்து அழகு பார்த்து, “குட்டியா இருக்குடா அன்பு” என்றாள் சிரிப்புடன். கோழிக் குஞ்சு அவள் கையில் குறுகுறுப்பூட்டியது.
“கருப்புதான் அழகா இருக்கு, இல்ல பத்மா..”
“நீ வேணா வீட்டுக்கு எடுத்துட்டு போய் வளர்க்கறியா தேனு? ரெண்டு எடுத்துக்கோ. அம்மா ஒன்னும் சொல்லாது” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை. அக்காவும், தம்பியும் பதறி, “இல்லயில்ல வேணாம்” என்றார்கள்.
“அது அம்மா கூட இருக்கட்டும், பிரிக்க வேணாம்” என்றாள் தேன்மொழி.
“அட கோழிக்குஞ்சு பிடிச்சு விளையாண்டுட்டு இருக்கீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்த ஜெயபாலன் ஒரு கோழிக் குஞ்சை பிடிக்க, அதுவரை அமைதியாக இரை எடுத்துக் கொண்டிருந்த தாய்க் கோழி ஆவேசத்துடன் பறந்து வந்து அவனைக் கொத்தியது.
“அய்யய்யோ, அம்மா..” என்று அவன் அலற, “இப்படி வந்துடுண்ணா” என்று கத்தி அவனை அழைத்தாள் தேன்மொழி.
“ஏய்.. ச்சூ..” என்று கோழியை விரட்ட முற்பட்டான் அன்பழகன்.
இவர்களின் சத்தத்தைக் கேட்டு, “ஏன்டா கத்துறீங்க?” என்று உள்ளிருந்து ஓடி வந்தார் நிர்மலா.
ஜெயபாலனை பின்னே இழுத்துக் கோழியிடம் இருந்து காப்பாற்றி விட்டாள் பத்மப்ரியா. மறுகணம் குஞ்சுகள் அனைத்தையும் பாதுகாப்பாகத் தன் சிறகில் பதுக்கிக் கொண்டது தாய்க் கோழி.
“கோழிக்கிட்ட கொத்து வாங்காம வீட்டுக்குள்ள வந்து விளையாடுங்க பசங்களா” என்று நிர்மலா சொல்லிச் செல்ல, அதற்குச் சரியெனத் தலையசைத்து விட்டு, ஆடு, மாடுகள் பக்கம் சென்றார்கள். இளம் கன்றுகளை அப்படியெல்லாம் ஓரிடத்தில் அடைத்து விட முடியுமா என்ன? அவர்கள் விருப்பத்துக்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.