இந்த வாழ்வென்பது – 7 (2)

அன்புக்கரசி கல்லூரி படிப்பை முடித்து ஓராண்டு காலம் கூட முழுமையாக வீட்டில் இருக்கவில்லை. அதற்குள் அவளைப் பெண் கேட்டு மதுரையில் இருந்து நல்ல வரன் வரவும் மணமுடித்து அனுப்பி விட்டார்கள்.

மாப்பிள்ளை லோகேஷ்வரன் பொறியியல் படித்திருக்கிறான்‌. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறான். பெரிய பதவி இல்லையென்றாலும் நல்ல சம்பளம்தான்.

இப்போது வார இறுதி விடுமுறைக்காக வீடு வந்திருந்தவர்கள், அன்றிரவு சென்னை செல்கிறார்கள். தர்மதுரையும் கல்லூரிக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.

ஆக, பிள்ளைகள் இருவருக்கும் தேவையான அனைத்தையும் பெட்டிக் கட்டிக் கொண்டிருந்தார் திலகவதி.

“இந்த ரெண்டு பையையும் கொண்டு போய் வெளில வை தொர. அன்பு ஊருக்குக் கொண்டு போக எடுத்து வச்சேன். மறந்துட போறா” என்று திலகவதி நீட்டிய பைகளை வாங்கிக் கொண்டு போய் வெளியில் வைத்த தர்மா, தானும் கல்லூரி செல்லக் கிளம்பினான்.

ஒன்றரை மணி நேரம் கழித்து, வீட்டினரிடம் விடை பெற்று திண்டுக்கல் செல்ல விரைந்தார்கள்.

சென்னை செல்லும் பேருந்து வர இன்னமும் நேரமிருந்தது. ஆகையால், அன்புக்கரசி, லோகேஸ்வரன் இருவரும் தர்மதுரையைக் கோயம்பத்தூர் பேருந்து ஏற்றி விட அவனுடன் நின்றிருந்தார்கள்.

அன்புக்கரசி, தம்பியிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டாள். அவன் பதில் சொல்வதாகவே இல்லை. அவளும் ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் அப்பத்தாவிடம் என்னவென்று விசாரிக்க மறந்து விட்டாள். இல்லையென்றால் இந்நேரம் அப்பத்தாவிடம் இருந்து விஷயத்தைக் காம்பு முதல் பூ வரை வாங்கி இருப்பாளே.

“இப்போ என்னானு சொல்லப் போறியா இல்லையா டா?” என்று குரலை தழைத்துக் கோபமாகத் தம்பியிடம் அவள் கேட்க, “நீயேன்க்கா, இப்படிப் போட்டு மண்டையை உடைச்சிட்டு இருக்க? நான்தான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டேன் இல்ல? அத்தோட விடேன்” என்றான் பொறுமையாக.

“அப்படியெல்லாம் விட முடியாது” என்றவள், “என்னன்னு சொல்ல மாட்ட இல்ல? அப்போ என்கிட்ட பேசாத போடா” என்று கோபித்துக் கொண்டு கணவனிடம் சென்று நின்றாள்.

“என்னா மாப்ள? வீட்ல என்னா பிரச்சினை?” கணவனிடம் என்ன சொன்னாளோ, இப்போது அவர் விசாரணையில் இறங்க, “ஐயோ மாமா. ஒன்னுமில்ல” என்று சமாளிக்கப் பார்த்தான்.

அன்புக்கரசியின் கண்கள் சட்டெனக் கலங்கவும், மனம் கேட்காமல் வீட்டில் நடந்த அனைத்தையும், தன் விருப்பத்தையும் சொல்லி விட்டான். மிகக் கவனமாக அதை அக்காவைப் பார்த்தே சொன்னான் அவன்.

“பூ எக்ஸ்போர்ட்டா? அட நல்ல ஐடியாவா இருக்கே மாப்ள” என்று லோகேஷ்வரன், அவன் தோளில் கைப் போட்டு மெச்சுதலாகச் சொல்லவும், தர்மதுரையின் உதட்டில் புன்னகை அரும்பாகியது. அந்தப் புன்னகை மொட்டாகி மலர சரியாக ஒரு வருடம் பிடித்தது.

“ஐடியா நல்லாருக்குதான். ஆனா, சரியான ஆளுங்கள தெரியாம எப்படி அனுப்புவ?” என்று அன்புக்கரசி அக்கறையுடன் கேட்க, “கோயம்பத்தூர்ல என் கூடப் படிக்கிற பையனோட அப்பாவுக்கு எக்ஸ்போர்ட் பிஸினஸ்க்கா. கேரளாக்காரன். அவங்க டீ, காஃபி, மிளகுலாம் துபாய்க்கு அனுப்பறாங்க. அவனைக் கேட்டா தெரியும்க்கா” என்றான்.

“மதுரைக்கு வழி வாயில” என்ற பழமொழியின் அர்த்தத்தை விரைவிலேயே புரிந்துக் கொண்டார்கள்.

மல்லிகை நாற்று வைத்தால் ஆறே மாதத்தில் மொட்டு வைத்து விடும். ஆனால், மல்லிகை ஏற்றுமதி தொழிலுக்கு அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக உழைக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு ஏற்றுமதி பற்றிய போதிய அறிவும், அனுபவமும் இல்லாதது ஒரு காரணம் என்றால், தூரமும் ஒரு காரணமாகிற்று. தர்மதுரை கோயம்பத்தூரில் படித்துக் கொண்டிருக்க, லோகேஷ்வரன் சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கையில், திண்டுக்கல்லில் எப்படிச் சுயதொழில் தொடங்க முடியும்?

அதிலும் சுந்தரராஜனுக்கு விருப்பமில்லாத போது, அவர் ஒருவராக எப்படி வேலை செய்வார். ஆக, முதலாவதாக லோகேஷ்வரன் சென்னை வேலையை விட்டுவிட்டு மனைவியுடன் திண்டுக்கல் வந்தான்.

தர்மதுரையும் கல்லூரி விடுமுறைகள் மட்டுமில்லாது, வார இறுதிக்கும் கட்டாயம் வீடு வந்தான். தொழிலில் கவனம் செலுத்தினான். அவர்களின் ஆர்வத்தைப் போலவே தொழிலும் முன்னேறியது.

தர்மதுரை கல்லூரி முடித்து வெளிவரும் போது, அவனது பூ ஏற்றுமதி தொழில் ஏறுமுகத்தில் இருந்தது. முழுமையாக மலர்ந்திருந்தது. நாள் ஒன்றுக்கு மல்லிகை மட்டுமே ஐநூறு கிலோ ஏற்றுமதி செய்து கொண்டிருந்தான். அவர்களது தோட்டம் மட்டுமல்லாது, அவர்கள் ஊரிலிருந்த பலரிடமும் பூக்களை வாங்கி, அதை நேர்த்தியாகத் தொடுத்து, அழகாக அட்டைப் பெட்டிகளில் பாதுகாப்பாகப் பொதிந்து விமானத்தில் வெளிநாடு அனுப்பினான்.

அந்தத் தொழிலின் வெற்றி அவனுக்கு இன்னும் பல தொழில்களைப் பரிசோதித்துப் பார்க்கும் ஊக்கத்தை அளித்தது. அதற்கு அவனது குடும்பமும் இப்போது துணையிருந்தது. முதலில் மறுப்பு சொன்ன சுந்தரராஜனுக்கே இப்போது மகனது முன்னேற்றத்தில் மிகவும் பெருமைதான். பெண்களைக் கேட்கவே வேண்டாம், “என் மகன், என் பேரன்” எனப் பெருமை பேசியே ஓய்ந்துப் போனார்கள்.

அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் அது மட்டுமல்ல. மகள் அன்புக்கரசியும், மருமகனும் கூட அவர்களோடு தொழிலில், குடும்பத்தில் இணைந்து விட்டதில் கூடுதல் மகிழ்ச்சி.

தர்மதுரையின் இந்த ஆசைக்கு வித்திட்டது, ஒரு சிறு பெண்ணாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேற காரணமாக இருந்த அக்கா அன்புக்கரசியும் தன்னோடு இருப்பதில் அளவில்லா ஆனந்தம் கொண்டான் அவன்.

***

வீட்டுக்குப் பின்புறம் இருந்த மாட்டுக் கொட்டகையில் நின்றிருந்தாள் தேன்மொழி.

“ம்ம்ம்ம்மா..” என்று மீனு பசுக் குரல் கொடுக்கவும், “வந்துட்டேன்” என்று சிரிப்புடன் சொன்னவள், புல்லை எடுத்துப் போய் அதனிடம் நீட்டினாள். அவள் கையை நக்கி விட்டு புல்லை வாங்கியது பசு.

“தேனு..” ஜெயபாலன் அழைக்க, “என்னண்ணா?” என்றாள் திரும்பாமல்.

“என்னைய நேத்து போன்னு திட்டிட்டு போன? இப்ப திரும்ப வந்திருக்க?” என்று அவள் கேட்கவும், “தெரியாம சொல்லிட்டேன் தங்கச்சி. சாரி” என்றான்.

தேன்மொழி கிளுக்கி சிரித்து, “என்னண்ணா?” என்று கேட்கவும், “அப்பா வீட்லதான் இருக்கார். அவர்கிட்ட நான் பேசிக்கறேன்‌‌‍. நீ என் கூட வந்து நில்லு போதும்” என்று கெஞ்சினான்.

அவள் அசையாமல் நிற்க, “நாளைக்கு உன்னைய திண்டுக்கல் கூட்டிட்டு போறேன் தேனு.” என்றான் சிரித்து.

“சிரிக்காத”

“உனக்கு என்ன வாங்கணும்னு சொல்லு. அண்ணா வாங்கித் தர்றேன்” என்று அவன் மேலும் இறங்கி வரவும், அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“பெரிப்பா நான் சொல்றத கேட்க மாட்டாங்கண்ணா”

“அதெல்லாம் கேட்பார். நீ, வா”

“பெரிம்மா இல்லனா அம்மாச்சியைக் கேளுண்ணா. அவங்க சொன்னா பெரிப்பா கேட்பார்”

“இந்தா குட்டி பிசாசே. அது எனக்குத் தெரியாது பாரு. ஏற்கெனவே காலேஜ் மாத்தணும்னு சொன்னதுல இருந்து அம்மா என்னைய திட்டிட்டே இருக்கு. இதுல இப்போ போய் அது முன்னாடி நின்னா அடி வெளுத்துடும்”

“ஏன்? பெரிம்மா அடிக்கல்லாம் மாட்டாங்களே”

“நானும், அப்பாவும் போய்க் கேட்டோம். காலேஜ்ல கட்டுன காசை திருப்பித் தர மாட்டேன்னு சொல்லிட்டானுங்க. அம்மா அந்தக் கோபத்துல இருக்கு. இப்போ நான் போய் எனக்காக அப்பாகிட்ட பேசும்மான்னு கேட்டா அடிக்காம கொஞ்சுமா உங்கம்மா?”

“ஐயோ, அப்படியா?”

“என்ன நொப்புடியா?”

“ஃபீஸ் திருப்பித் தர மாட்டாங்களா?”

“ஏய், தேனு. அதென்ன உன் மாமா மணிவண்ணன் காலேஜா?” என்று அவன் நேற்று போல நக்கலாகக் கேட்கவும், தேன்மொழியின் முகம் வாடியது.

“சரி, சரி. உங்க மாமாவை சொல்லல. அழாத” என்று அவளைச் சமாதானப்படுத்தியவன், “எனக்குச் சென்னைக்குப் படிக்கப் போகணும். ஹெல்ப் பண்ணு” என்றான் பிடிவாதமாக.

“அம்மாச்சிகிட்ட கேட்டியாண்ணா..”

“அம்மாச்சி, தாத்தான்னு எல்லாரும் பேசியாச்சு. அப்பா கேட்கிறதா இல்ல” என்றான் கடுப்புடன்.

“சுதாகர் அண்ணா முன்னாடியே உன்னைச் சென்னை வரச் சொல்லுச்சுதானே. நீ அப்பவே போய் இருக்கலாம் இல்லண்ணா? அப்ப போகாம இப்ப போகணும்னு சொன்னா அப்பா கோபப்படாம என்ன செய்வாங்க?”

“உங்கப்பா மாரியே பேசாத பிசாசே. இப்பயும் உன் பெரிய அண்ணன்தான் என்னைய சென்னைக்கு வரச் சொன்னது. அவனாலதான் வீட்ல திட்டு வாங்கறேன் நானு”

“சுதாகர் அண்ணா வரச் சொல்லுச்சா?”

“ஆமா”

“அப்போ அண்ணாவே அப்பாகிட்ட பேசலாம் இல்ல?”

“எதுக்கு அண்ணனையும் உங்கப்பா கத்தவா?”

“பெரிப்பா அப்படியெல்லாம் திட்ட மாட்டார்”

“திட்ட மாட்டார் இல்ல? அப்போ நீ வா, வந்து அவர்கிட்ட பேசு” என்றான் கண்டிப்பாக.

“அண்ணா ஏன் உன்னைச் சென்னை வரச் சொல்லுச்சு?”

“நீயும் உங்கப்பா மாதிரியே கேள்வி கேட்காம வா தாயே” என்று அவளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

“நீ காலேஜ் போகும் போது அண்ணா உனக்கு ஹெல்ப் பண்ணுவேன். இப்போ எனக்கு நீ ஹெல்ப் பண்ணு”

“நான் இங்கருக்கக் காலேஜ்லதான் படிப்பேன். வெளியூர்லாம் போக மாட்டேன்” என்றாள்.

“அதை அப்போ பாப்போம். இப்போ வா..” என்று அழைத்துச் சென்றான்.

“பெரிப்பா” என்று தேன்மொழி அழைக்க, “டேய், இன்னைக்கும் நீ காலேஜ் போகலன்னு உங்கம்மா சொல்றா? நீ என்னதான் மனசுல நினைச்சுட்டு இருக்க? படிக்கற எண்ணம் இல்லையா உனக்கு? மாடுதான் மேய்க்க போறியா?” என்று மகனைக் கண்டதும் கோபமாக அவன் மேல் பாய்ந்தார்.

கந்தனுக்கு மகன் மேலிருந்த கோபம் சிறிதும் குறையவில்லை.

ஜெயபாலன் அசையாமல் நிற்க, “பெரிப்பா” என்று மீண்டும் அழைத்தாள் தேன்மொழி.

“சின்னப் புள்ளயை பேச சொல்லாதன்னு உனக்கு எம்புட்டு தடவ டா சொல்றது?” என்று அதற்கும் மகன் மேல்தான் பாய்ந்தார்.

“ஜெயா அண்ணா, சுதாகர் அண்ணா கூடப் போய்ப் படிக்கணும்னு ஆசைப்படுது பெரிப்பா” என்றாள் சிறு குரலில்.

“ஓஹோ, தம்பிக்கு என்ன அண்ணன் மேல திடீர் பாசம்?” என்று அதற்கும் அவர் கேள்வி கேட்க சோர்ந்து போனான் ஜெயபாலன்.

அன்றிரவு சுதாகரனே அப்பாவை அழைத்துப் பேசினான். அதன் பிறகுதான் சம்மதித்தார் கந்தன். மறுநாளே இளைய மகனை அழைத்துக் கொண்டு சென்னை சென்று, அவனை மூத்த மகன் படிக்கும் கல்லூரியிலேயே, அவன் விரும்பிய பாடத்தில் சேர்த்து விட்டு வந்தார்.

அந்த வார இறுதியில் தம்பியை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல சுதாகரன் வீடு வந்தான்.

“என்னைத் திண்டுக்கலுக்குக் கூட்டிட்டு போண்ணா” என்று தேன்மொழி அவனிடம் கேட்க, எதற்கென்று கேட்காமல் அவளைத் திண்டுக்கல் அழைத்துச் சென்றான்.

அன்புக்கு அவள் விரும்பிய கைக் கடிகாரத்தை வாங்கிக் கொண்டாள் தேன்மொழி.

மறுநாள் மாமா குடும்பத்தைப் பார்க்க மதுரை சென்றார்கள்.

சொந்த ஊரின் காற்றுக்கே தனி வாசம் இருக்குமோ என்னவோ, தேன்மொழியின் முகம் மதுரையில் இருந்து ஊர் செல்லும் பேருந்தில் ஏறியதில் இருந்து மலர்ந்தே இருந்தது.

வெளியில் பதித்த பார்வையைத் திருப்பவே இல்லை அவள்.

முன் காலைப் பொழுதில் அவர்களை வீரனுரில் இறக்கி விட்டுக் கடந்தது பேருந்து.

தேன்மொழி கடைசிப் படியில் இருந்து காலை தரையில் வைக்க, “அ…க்கா..” என்ற மகிழ்ச்சி கூவல் அவளின் செவியை நிறைத்தது.

தேன்மொழி சட்டென நிமிர, “அ….க்கா” என்று கையசைத்து மீண்டும் கத்தினான் அன்பழகன்.

கருப்பு நிற காற்சட்டையும், இளநீல நிற டிஷர்ட்டும் அணிந்திருந்தவன், அவளின் தோளுக்கு வளர்ந்திருந்தான்.

“அன்பு..” தேன்மொழி அழைக்கவும், பெரிதாகப் புன்னகைத்தான்.

“அடேய், அன்பே..” என்று அவனை இருபக்கமும் வளைத்துப் பிடித்தார்கள் அண்ணன்கள் இருவரும்.

“விடே. என்னய விடுண்ணா..” என்று அவர்களின் பிடியில் இருந்து விடுபடத் திமிறிக் கத்தினான் அவன்.

“எம்புட்டு வளர்ந்தாலும் இந்த விடேவை மட்டும் விட மாட்டேங்கறான்டா இவன்” என்று சுதாகரன் கேலி செய்ய, “ஆமாண்ணா” என்று சிரித்தான் ஜெயபாலன்.

“விடே. அக்கா கிட்ட போகணும்” என்று கத்தியவனைக் காண்கையில், ஐந்து வயது குழந்தையாகப் பொற்கொடியின் கண்களுக்குத் தெரிந்தான் அன்பழகன்.

“அன்பு, எப்படியிருக்க டா?” என்று தேன்மொழி கேட்ட மறுகணம், அண்ணன்களின் கையை உதறி, அன்பழகன் அக்காவிடம் ஓடி வந்தான்.

error: Content is protected !!
Scroll to Top