இந்த வாழ்வென்பது – 7 (1)

தர்மதுரை திரும்பி அப்பத்தாவைப் பார்த்து, “என்னா அப்பத்தா? இரு வர்றேன்” என்றான் எரிச்சலுடன்.

“பொறும சாமி” என்றார் அவர்.

“பேரன் என்ன சொல்ல வர்றான்னு கொஞ்சம் பொறுமையாத்தேன் கேளேன்ப்பா. அவன் பேசி முடிக்க முன்னாடி நீ போய் டிவி முன்னாடி உட்கார்ந்திட்டா என்னா அர்த்தம்.” என்று அவர் மகனைப் பார்த்து கேட்க, “இப்ப உனக்கு என்னம்மா வேணும்?” என்று சுந்தரராஜன் தொலைக்காட்சியில் இருந்து பார்வையைத் திருப்பி அம்மாவை பார்த்தார்.

“எனக்கென்னா வேணுமா? எனக்கு ஒன்னும் வேணாம்யா. பேரனுக்குத்தான் ஏதோ வேணுமாம், அவன் சொல்றதை கேளு நீ” என்று மகனை அதட்டிய பவுணு அம்மாள், பேரனை பார்த்து, “இப்போ என்னன்னு சொல்லுப்பே. உங்கப்பன் கேட்பான்” என்று கிசுகிசுத்தார்.

“வெள்ளிக்கிழம காலையில நம்ம தோட்டத்துக்கு ரெண்டு பேர் வந்தாங்க இல்லப்பா?” என்று தர்மதுரை கேட்க,

“ஆமா, கார்ல வந்தாய்ங்களே அவெங்களா? அவனுங்க பூ கேட்டு வந்தாய்ங்க” என்றார்.

“ஆமாப்பா. வெளிநாட்டுக்கு அனுப்ப நம்மகிட்ட பூ கேட்டு வந்தாங்கப்பா”

“ம்ம். நெனைவிருக்கு. அதான் முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டோம் இல்ல தம்பி? அப்புறம் எதுக்கு இப்போ அந்தப் பேச்சு?”

“இல்லப்பா. நான் அவங்களுக்குப் பூ குடுக்கணும்னு சொல்லல”

“பெறவு? வேற என்ன சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல.” என்ற சுந்தரராஜனின் கவனம் மீண்டும் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பியது.

“மொத அவன் என்ன சொல்ல வர்றான்னு முழுசா கேளுங்க. அதை விட்டுட்டு தைய தக்கான்னு நீங்க குதிச்சா, அவன் எப்படிச் சொல்லி முடிப்பான்? அவன் சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிக்காம உங்களுக்கு எப்படிப் புரியும்? இதுல இவருக்குப் புரியலையாம்” என்று சமையல் அறையில் இருந்து வெளியில் வந்து நின்ற திலகவதி கணவரைச் சாட, “அப்படிச் சொல்லுத்தா. பேரனை பேசவே உட மாட்டேய்ங்கறான் உன் புருஷன்..” என்று பவுணு அம்மாளும் மருமகளுடன் சேர்ந்து கொண்டார்.

“நீ சொல்லுப்பே” என்று பேரனை இழுத்து தன் பக்கம் இருத்திக் கொண்டார்.

சுந்தரராஜனின் குடும்பம் பல தலைமுறைகளாகப் பூ விவசாயம் செய்து வருகிறார்கள். அவரின் அப்பா காலம் வரை மல்லி, முல்லை, பிச்சி, கனகாம்பரம் போன்ற பூக்களும், அதில் வாசனைக்குச் சேர்த்துக் கட்டப்படும் மரிக்கொழுந்து, மருகு போன்றவையுமே அதிகம் பயிரிடப்படும். பின்னர் அவர் காலத்தில் தேவைக்கு ஏற்ப செண்டு பூ, பன்னீர் ரோஜா, சம்பங்கி, கோழிக் கொண்டை, சாமந்தி என அனைத்தையும் பயிரிடத் தொடங்கினார்கள்.

பூக்கள் என்றால் அவை அப்படியே பூத்து குலுங்கி விடுவதில்லை. அவற்றுக்கும் பருவம் உண்டு. கோடையில் ஒரு ஏக்கரில் அம்பதில் இருந்து சமயங்களில் நூறு கிலோ வரைக்கும் கூடப் பூக்கள் இருக்கும். ஆனால் பொதுவாகப் பூ வரத்து அதிகரித்தால் விலை குறைந்து விடும். பண்டிகை, முகூர்த்த நாள்கள் என்றால் மட்டும் நல்ல விலை இருக்கும். பூ விவசாயிகளின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யும் காலம் அதுவே.

ஒரு கிலோ மல்லிகை ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து ஐநூறு வரைக்கும் கூட விலை ஏறி, அவர்களின் சந்தோசத்தின் அளவை கூட்டியதென்றால், பருவம் இல்லாத காலத்தில் கிலோ இருநூறு வரை இறங்கி அவர்களின் கையைக் கடிக்கவும் செய்யும். அவர்கள் நஷ்டப்படாமல் தப்பித்தாலே போதும் என்றிருக்கும். அவர்களுக்கும் பூச்செடிகளின் பராமரிப்பு, ஆள் கூலி, போக்குவரத்துச் செலவு என எத்தனை இருக்கிறது?

அதே போலப் பருவம் தப்பிப் பூ வரத்துக் குறைந்தாலும், பூக்களுக்கு எப்போதும் மார்கெட் இருப்பதால் அப்பொழுது விலை கூடுதலாகவே இருக்கும்.

அதுவும் சுந்தரராஜன் குடும்பம் போல, இதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு, பூக்களின் பருவம், விலை நிலவரம் அதற்கான தேவை என அனைத்தும் அத்துப்படி. அதனாலேயே அவர்களால் இத்தொழிலில் இத்தனை காலமும் தாக்குப் பிடிக்க முடிகிறது.

இப்போதெல்லாம் பூ விவசாயம் செய்யப் பலரும் முன் வருவதில்லை.

மொட்டு மலர்ந்தால் விலை போகாது. அதற்காக அதிகாலையில் எழுந்து பூக்களைப் பறிக்க வேண்டும். பெரும்பாலும் வீட்டு ஆட்கள்தான் வேலை செய்வார்கள். ஏக்கர் கணக்கில் பயிரிட்டிருந்தால் மட்டுமே கூலிக்கு ஆள்களைக் கூட்டிக் கொள்வார்கள். அதற்கும் இப்போது ஆட்கள் கிடைப்பதில்லை.

ஊரைச் சுற்றிலும் நிறையத் தொழிற்சாலைகளும், வேலை வாய்ப்புகளும் அதிகரித்து விட்டபடியால் கூலிக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாகி விட்டது. இதனாலேயே பலரும் பூ விவசாயத்தைக் கைவிட்டு விட்டிருந்தனர்.

அந்தக் காலத்தில் படிப்பறிவு பெரிதாக இல்லை. ஆனால், இப்பொழுது கல்லூரி முடிக்கும் இளவட்டங்கள் விவசாயத்தில் ஈடுபட விரும்பாமல், படிப்புக்கு தகுந்த வேலைக்குச் செல்ல விரும்புவதால், பூ விவசாயம் மட்டுமல்ல, விவசாயமே பொதுவாக விரும்பா தொழிலாகக் கை விடப்பட்டது என்று சொல்லலாம்.

சுந்தரராஜனை பொறுத்தவரை அவருக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. அவரின் மகன் படிப்பதே விவசாயம்தானே.

தர்மதுரை சிறு வயதில் இருந்தே தோட்டத்தில்தான் இருப்பான். அப்போதே அவர்களுடன் சேர்ந்து பூ நாற்றுகள் வைப்பான், களை எடுப்பான், உரம் வைப்பான், பூவும் பறிப்பான்.

வீட்டினர் அனைவரும் அதிகாலையில் எழுந்து தோட்டத்திற்குச் செல்கையில் அவனும் அவர்களோடு தொற்றிக் கொள்வான்.

“பச்சப் புள்ள, நீ எதுக்குப்பே எங்களோட வர்ற? நீ தூங்கு சாமி”

என்று அப்பத்தா சொன்னாலும், அடமாக அவர்களுடன் செல்வான்.

“நீ ஒழுங்கா பூவ பறிக்க மாட்ட. ஓரமா போய் உக்காருப்பே” என்பதும் அவன் காதில் விழுந்ததேயில்லை.

அம்மாவுடன் சேர்ந்து பூ பறிப்பான். அக்கா அன்புக்கரசி போட்டு வைத்திருக்கும் தேநீரை சைக்கிளில் சென்று வாங்கி வந்து தோட்டத்தில் கொடுப்பான். அதன் பிறகே பள்ளிச் செல்வான். அவன் வளர, வளர வேலைகளும் வளர்ந்தது. அதைச் செய்யவும் நன்றாகப் பழகிக் கொண்டான்.

இப்போது பூ நாற்று வாங்குவதில் இருந்து, அதன் பராமரிப்பு, வரவு, செலவு என அனைத்து நுணுக்கங்களும் அவனுக்குத் தெரியும்.

பூக்களைத் திண்டுக்கல் மார்கெட் கொண்டு சென்று விலை நிலவரம் அறிந்து, வியாபாரியிடம் சேர்ப்பிப்பது வரை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான்.

அவர்கள் தோட்டத்துப் பூக்களுக்கு மார்கெட்டில் தேவையும், மதிப்பும் எப்போதும் இருந்தது.

அதனாலேயே அவர்களைத் தேடி வந்து, “வெளிநாட்டுக்குப் பூக்களை அனுப்புகிறோம். உங்கள் தோட்டத்துப் பூக்களை எங்களுக்குத் தர முடியுமா?” எனக் கேட்டிருந்தார்கள்.

சுந்தரராஜன் தன் முடிவாக, அவர்களிடம் மறுப்பு சொல்லி திருப்பி அனுப்பி விட்டிருந்தார். இப்போது மகனும் அதைப் பற்றியே பேசவும், அவன் பேச்சை கேட்க விரும்பவில்லை அவர்.

மகனைப் பார்த்து, “அந்தக் கம்பெனிக்காரங்களுக்குப் பூ குடுக்கலாம்னு சொல்றியாப்பா?” என்று கேட்டார்.

“இல்லப்பா. நாமளே அனுப்பலாம்னு சொல்றேன்” என்றான் தர்மதுரை.

“நாமளேன்னா? எப்படிப்பா? வெளிநாடு என்ன மதுர பக்கமா இருக்கு?”

“அதெல்லாம் அதுக்குத் தக்கன ஆளுங்க இருப்பாங்க. எல்லாம் விசாரிச்சு தேன் அனுப்பணும். வெளிநாடுன்னா பூ பறந்து போய்டுமா? பேசாம பேரன் என்ன சொல்றான்னு கேளுப்பா” என்று பவுணு அம்மாள் நொடிக்க, இந்த வயதிலும் சுந்தரராஜன் அம்மாவுக்குப் பயந்தவராக மகனைப் பார்த்தார்.

அவனுக்கும் பெரிதான திட்டங்கள் ஏதுமில்லை. வெளிநாட்டுக்கு அனுப்பினால் பெரிய அளவில் முன்னேற்றம் காணலாம் என்ற அளவில் மட்டுமே அவனது சிந்தனை சென்றிருந்தது.

அதை அப்பாவுக்கு எப்படிப் புரிய வைக்க என்று அவன் தயக்கத்துடன் பார்க்க, “மல்லி மலர்ந்து போச்சுன்னா மார்க்கெட் போகாது தம்பி. உனக்குத் தெரியாதது இல்ல இந்தத் தொழிலு. நமக்கு வருஷம் பூரா மார்கெட்ல டிமாண்ட் இருக்கு. நாமளே அனுப்பாட்டியும் அவன் ஆள் அனுப்பி, வண்டி வச்சு பூவை வாங்கிட்டுப் போய்டுவான். நம்ம பூவுக்கு அம்புட்டு மவுசு. அதென் நான் வெளில யார் கேட்டாலும் பூ குடுக்கறது இல்ல. செண்ட்டு கம்பெனிக்காரன் எத்தனை தரம் நம்மகிட்ட வந்து வியாபாரம் பேசிட்டு, திரும்பி போய் இருப்பான். அவன் கூடுதலா விலை குடுக்கறேன்னு சொன்னாலும், வேணாம்னுட்டு ரெகுலரா குடுக்குற மார்க்கெட் வியாபாரிகிட்ட தானே கொடுக்கறோம். ஏன்? வார்த்தை முக்கியம்ப்பா.” என்றார் சுந்தரராஜன், மகனுக்குப் புரிய வைத்து விடும் நோக்கில்.

“வார்த்தை முக்கியம் தான்ப்பா. அதுக்காக வாழ்க்கையில் மேல போக வேணாமா? பேரனும் உன்னய மாதிரியே மார்க்கெட்டுக்கும், வீட்டுக்கும் அலையணும்னு சொல்றியா? கைக்கும், வாய்க்கும் போதாம போராடிட்டு..” என்று அப்பத்தா பேச,

“நீயும் புரியாம பேசாதம்மா. பூவ பறிச்சு, அத சரியான நேரத்துக்கு மார்கெட் கொண்டு போகலைன்னா மலர்ந்து போகும். இந்தா இருக்கத் திண்டுக்கல்லு மார்க்கெட்டை சொல்றேன் நானு. இதுல உன் பேரன் வெளிநாட்டுக்கு பூ அனுப்ப ஆசைப்படுறான். கடல் கடந்து போற வரைக்கும் பூ மலராம இருக்குமா? அப்படி மலராம இருக்கக் கெமிக்கல் போட்டா பூ மணக்குமா?” என்ற நியாயமான சந்தேகத்துடன் படபடத்தார்.

“நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்கப்பா” என்ற தர்மதுரை, “பூ ஃபாரினுக்கு ஃப்ளைட்ல தான்ப்பா போகப் போகுது. நாம காலையில பறிக்கிற பூவு சாயந்தரம் அது மலர்றதுக்குள்ள சிங்கப்பூர் போய்டும் ப்பா. நம்மகிட்ட பூ கேட்ட கம்பெனிக்காரங்க அப்படித்தான்ப்பா அனுப்பறாங்க” என்றான் நிதானமாக.

சுந்தரராஜனின் முகம் சில நொடிகள் யோசனையைக் காண்பித்தது.

“அவங்களுக்கு அங்க ஆளுங்களைத் தெரியும் இல்லப்பா. நமக்கு அங்க யாரை தெரியும்னு நீ இப்படிப் பறக்கற? இதெல்லாம் வேண்டாத வேலைப்பா. சரியா வராது. நாம பேசாம பூவை மார்க்கெட்டுக்கு அனுப்பறதுதான் சரி” என்று முடித்து விட்டார்.

தர்மதுரையின் முகம் வாடவும் அப்பத்தா, அம்மா எனப் பெண்கள் இருவரும் அவனுக்காகச் சுந்தரராஜனிடம் வாதாடினார்கள்.

“உன் பேரன் சொல்றதுக்குல்லாம் தலையாட்டுறத மொதல்ல விடு ஆத்தா நீ. இப்போ என்னா வெளிநாட்டுக்கு பூ அனுப்பி நாம நட்டப்படணும்னு சொல்றியா நீயி?”

“நட்டப்படாம தொழில் பண்ண முடியுமாப்பா. பேரன் பெருசா செய்யணும்னு ஆசைப்படுறான். அதுக்குச் சரின்னு சொல்றதை விட்டுபுட்டு.. அபசகுணமா பேசுற” என்று அங்கலாய்த்தார். ஆனாலும் சுந்தரராஜன் மனம் மாறவில்லை.

அவர்கள் ஆளாளுக்கு மாறி மாறி பேசிக் கொண்டிருக்க, அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்தாள் அன்புக்கரசி. அவளைப் பின் தொடர்ந்து அவளின் கணவன் லோகேஷ்வரனும் உள்ளே வந்தான்.

சடுதியில் வீடே அமைதியானது.

“என்னத்தா அன்பு, புதுப் படம் நல்லாருந்துச்சா?” என்று பேத்தியை விசாரித்தார் பவுணு அம்மாள்.

“உட்காருங்க மாப்ள, டீ எடுத்துட்டு வர்றேன்” என்று மருமகனை கவனித்தார் திலகவதி.

“டீ வேணாம்மா, பஸ்ஸுக்கு நேரமாகுது. நாங்க சாப்டுட்டு கிளம்பறோம்” என்றாள் அன்புக்கரசி.

“சரித்தா. நீங்க போய் ரெடியாகி வாங்க. நான் சூடா இட்லி ஊத்துறேன்” என்ற திலகவதி, “தொர, இங்க வாப்பா.” என்று மகனை அழைத்தார்.

அன்புக்கரசி வீட்டுக்குள் நுழைந்ததும் தம்பியின் வாடிய முகத்தைத்தான் முதலில் கவனித்திருந்தாள்.

அவனை நெருங்கி, “என்னாச்சு டா? ஏன் ஒரு மாரி இருக்க?” என்று விசாரித்தாள்.

“ப்ச், நீ போய்க் கிளம்பு கா. மாமா உனக்காக வெயிட் பண்றாங்க பாரு” என்றான்.

“மாமா வெயிட் பண்ணுவார். நீ சொல்லு” என்று அவனை நெருங்கி நின்றாள்.

“ஒன்னுமில்லக்கா”

“அப்ப ஏதோ இருக்கு. என்னான்னு சொல்லு”

“அக்கா” என்றான் போலி முறைப்புடன். அவளும் பார்வையை மாற்றாமல் அப்படியே நின்றாள்.

“ஒன்னுமில்லன்னு சொன்னா விடேன் கா”

“அப்படியெல்லாம் விட முடியாது டா. நீ சொல்லாட்டி போ. நான் அப்பத்தாகிட்ட கேட்டுக்கறேன்” என்று அவள் முன்னே சொல்ல, “அரசி” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான் லோகேஷ்வரன்.

“உன்ன மாமா கூப்பிடுறாரு போக்கா” என்று அக்காவின் தோள் பற்றி அறையை நோக்கி நகர்த்தி விட்டு, அவனும் அம்மாவிடம் சென்றான்.

அன்புக்கரசி, தர்மதுரையை விட மூன்று வயதே பெரியவள். பெரும்பான்மையான பெண் பிள்ளைகளைப் போலத் தம்பி பிறந்ததில் இருந்து அவள்தான் அவனை அதிகம் பார்த்துக் கொண்டது.

அப்பத்தா, அம்மா, அக்கா எனப் பெண்கள் சூழ வாழ்ந்தவன் அவன். அவர்களின் அன்பிலும், அலாதி பாசத்திலும் வளர்ந்தாலும், கண்டிப்பிற்கும் குறைவில்லை.

error: Content is protected !!
Scroll to Top