இந்த வாழ்வென்பது – 6 (2)

அதே ஊரைச் சேர்ந்த தோழி ஒருத்தி விடுமுறை தினங்களில் பூந்தோட்டத்தில் கூலிக்கு பூ பறித்துக் காசு சேர்க்கிறேன் என்று சொல்லவும், அவளையும் அந்த எண்ணமும், ஆசையும் தொற்றிக் கொண்டது.

அதைச் சொன்னதும் பெரியம்மா கோபித்துக் கொண்டார்தான். அவளைப் போகவே கூடாது என்று மறுத்தும் விட்டார். ஆனால், பெரியப்பா அனுமதி தரவும் மகிழ்ச்சியுடன் வந்து இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.

“அட, அதுக்குள்ள நிறையா பூ பறிச்சுட்ட போல.. மருத மல்லின்னு சொன்னதும் காம்பு பெருசாகிடுச்சு போல, வேகமா பறிக்க வருதே” என்ற சீண்டல் குரலை கேட்டதும் அவனென்று புரிந்து போனது. தலையை உயர்த்தினால் தானே பதில் சொல்ல வேண்டும். தேன்மொழி பூ பறிக்கும் வேலையில் மும்முரமாக இருந்தாள்.

மேலே எதுவும் சீண்டாமல் அவனும் பூவை பறிக்க ஆரம்பித்தான். கைக் கொள்ளும் அளவு பூ சேர்ந்ததும் அவளிடம் கொடுத்தான்.

“எதுக்கு என்கிட்ட குடுக்கறீங்க, உங்க பூ எனக்கொன்னும் வேணாம்”

“எம்மா தாயே, நான் ஒன்னும் பூவ உனக்குக் கொடுக்கல. பூ போட கையில பை எடுக்காம வந்துட்டேன். அதனால உங்கிட்ட குடுத்தேன். தப்புதான் தாயே. விடு என் பாக்கெட்ல போட்டுக்கறேன்” என்று சட்டைப் பையைக் காண்பித்து அவன் சொல்லவும், சிரித்து விட்டாள்.

“சரி, சரி. குடுங்க” என்று வாங்கியும் கொண்டாள். அவனிடம் இருந்து பூக்களை வாங்கும் போதுதான் அவன் கையைப் பார்த்தாள் தேன்மொழி. அதன் பிறகு பூக்களைப் பறிப்பதும், அவன் கையைப் பார்ப்பதுமாகவே இருந்தாள்.

ஒரு செடியை முடித்து, நான்காவது செடிக்கு மாறி விட்டார்கள். அப்போதும் அவள் பார்வை மாறவில்லை.

தர்மா அதைக் கவனித்ததும், “என்னத்துக்கு எங்கையையே மொறைக்கற? நாந்தேன் இப்படிப் பறிக்கணும்னு அப்போதவே சொன்னேன்ல” என்று மீண்டும் அவன் முதலிரண்டு விரல்களையும் பிடித்துக் காண்பிக்க, மெல்ல விரல் நீட்டி அவனது கைக் கடிகாரத்தைச் சுட்டிக் காண்பித்து, “எம்புட்டு?” என்று கேட்டாள்.

“என்னது? என்ன சொன்ன?”

“இது எம்புட்டுன்னு கேட்டேன்”

“ஓ? எங்காதுல என்னுட்டுன்னு கேட்டுச்சு. அதேன் ஷாக்காகி என்னான்னு கேட்டேன். நீதான் ரொம்ப ரோசக்காரியாச்சே, எங்க தோட்டத்து பூவையே சும்மா வாங்க மாட்டேன்னு காசு கொடுத்தவ, எப்படி என் கையில இருக்க வாட்சை உன்னோடதுன்னு சொல்லுவன்னு பார்த்தேன்” என்று அவன் நமுட்டு சிரிப்புடன் விளக்கமளிக்க, ரோசக்காரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

அவர்கள் இருவரும் ஒரே ஊர் என்றாலும், இருவரின் வீடும் எதிரெதிர் திசையில் இருந்தது. ஆனால், அதென்ன மாயமோ தெரியாது திலகவதி அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவர் கையில் பூக்கள் இருக்கும்.

“இந்தா தேனு பூ வச்சுக்கோ” என்று மல்லி, முல்லைச் சரத்தை அவள் கூந்தலில் அவரே சூட்டி விடுவார். சமயங்களில் உதிரிப் பூக்களைப் பை நிறையப் போட்டு கொடுத்தும் விடுவார். பெரும்பாலும் அவள் வயது பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் நின்று பூ கொடுத்துச் செல்வார்.

முதல் முறையாக அவர் பூ கொடுக்கும் போது, “பூவை வேணாம்னு சொல்லக் கூடாது தேனு. வாங்கிக்கோ” என்று பொற்கொடி சொன்னது நினைவில் இருக்க, திலகவதி பூ கொடுக்கும் போதெல்லாம் மறுக்காமல் வாங்கிக் கொள்வாள்.

அதுவே நடைமுறை ஆகவும், ஒருமுறை பெரியம்மாவிடம் கேட்டே விட்டாள்.

“அந்த அத்தை எப்போ பாரு எனக்குப் பூ குடுக்கறாங்க பெரிம்மா. ஏன்?”

“அவங்க பூந்தோட்டம் வச்சுருக்காங்க தேனு. அதேன்”

“பூந்தோட்டமா? அதெங்கருக்கு?”

“நம்ம ஊர்லதான். அடுத்த முறை பஸ்ல போகும் போது அம்மா காமிக்கறேன் பாரு. மல்லி, முல்ல, பிச்சி, கனகாம்பரம், செண்டுப்பூன்னு எல்லாம் இருக்கும்”

“அம்புட்டு பூவா?”

“ம்ம். ஆமா” என்று பொற்கொடி சொல்ல,

“பெரிய வண்டில மூட்டை மூட்டையா பூவெடுத்துட்டு போவாங்க மார்க்கெட்டுக்கு. நம்ம ஊருக்குள்ள கூடக் கேட்கறவங்களுக்கு மல்லிப் பூ விப்பாங்களே நீ பார்க்கல” என்று முத்தம்மா கேட்க, தெரியாதென்று உதட்டை பிதுக்கினாள்.

பின்னர்க் கவனித்துப் பார்க்கையில் அம்மாச்சி சொன்னது போல, திலகவதியிடம் சிலர் காசு கொடுத்து பூ வாங்கிச் சென்றதை பார்த்திருக்கிறாள். ஆனால் அவளிடம் மட்டும் ஒருநாளும் பூவிற்குப் பணம் வாங்கியதில்லை அவர்.

“நம்மகிட்ட மட்டும் ஏன் காசு வாங்க மாட்டேங்கறாங்க பெரிம்மா?” என்று பொற்கொடியிடம் மீண்டும் கேள்வியுடன் சென்றாள். அடுப்பில் வேலையாக இருந்தவர், “உனக்கு ஆசையா குடுத்திருப்பாங்க. அதுக்கெல்லாம் காசு வாங்க மாட்டாங்க தேனு” என்றார்.

ஏனோ தேன்மொழிக்கு அந்தப் பதில் பிடிக்கவில்லை. அவளுக்குப் பாவம், பரிதாபம் பார்த்துக் கொடுக்கப்படும் எதுவும் பிடிப்பதில்லை.

“அந்தப் பிள்ள பாவம்”

“பாவம், தேனுக்குக் கொடுப்பா. ஆத்தா அப்பன் இல்லாத புள்ள” என்று யாரேனும் சொன்னாலே கோபம்தான் வருகிறது. அதனாலேயே திலகவதி அடுத்த முறை பூ கொடுத்ததும் மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டவள், அதற்குரிய காசை பெரியம்மாவிடம் கேட்டு வாங்கிப் போய் அவரிடம் கொடுத்திருந்தாள்.

“அத்த பூ குடுத்தா, அதுக்குக் காசு குடுப்பியா நீ? யாரு உன் பெரியம்மா கொடுக்கச் சொன்னதா? அவங்ககிட்ட நான் பேசிக்கறேன். நீ வீட்டுக்கு போ. காசை பத்திரமா கொண்டுட்டு போய் உங்கம்மாகிட்ட குடு” என்று சொன்ன திலகவதி, அவள் நீட்டிய காசை வாங்கவே மறுத்து விட்டார்.

அவர்கள் வீடு செல்லும் தெருவில் நின்றிருந்தார்கள். திலகவதி விலகிச் செல்லவும், அவள் திரும்பத் தர்மதுரை வந்து கொண்டிருந்தான்.

சட்டெனக் காசை அவனிடம் நீட்டினாள் அவள்.

இரண்டு புருவங்களையும் சுருக்கி என்னவென்ற கேள்வியுடன் அவளைப் பார்த்தவன், கைகள் காற்சட்டை பையில் மறைந்திருந்தது.

“இந்தாங்க, உங்க தோட்டத்து பூவுக்குக் காசு” என்று நீட்டினாள்.

அவன் வலக் கரம் மெல்ல நீள அதில் பணத்தைத் திணித்து விட்டு வீட்டை நோக்கி பறந்திருந்தாள். அவளின் நேரம் இப்போது அவன் தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருக்கிறாள்.

“வாட்ச் வெல எதுக்குக் கேட்ட?” அவன் கேள்வி அவளின் சிந்தனையைக் கலைத்து, கவனத்தை அவன் புறமாகத் திருப்பியது.

“அன்புக்கு வாங்கிக் குடுக்க” என்றாள் புன்னகையுடன்.

“அன்பா?”

“ம்ம், எந்தம்பி. எங்க வீட்டுக்கு வருவானே? நீங்க பார்த்ததில்ல” என்றாள் இப்போது பளிச்சென்ற புன்னகையுடன்.

“பார்த்திருப்பேன். ஞாபகம் இல்ல.” என்றவன் பதிலுக்குப் புன்னகைக்கவில்லை.

“நீயி? உன் தம்பிக்கு வாங்கிக் கொடுக்கப் போறியாக்கும்?” என்று அவளின் தோழிகளைப் போல அவன் கேலியாகக் கேள்வி கேட்காததே அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் பூவைப் பறித்துக் கொண்டே கைக் கடிகாரத்தின் விலையைச் சொன்னான். அதைக் கேட்டதும் அவள் கரம் பூ பறிப்பதை ஒரு நொடி நிறுத்தி விட்டது.

“அம்புட்டா?” என்று அவள் விழி விரிக்க, “ம்ம்” என்றான்.

அதை இரண்டு மூன்று முறை திரும்பி திரும்பிப் பார்த்தவள், அதன் பிறகு அவன் பக்கம் திரும்பவேயில்லை. வேலையில் மட்டுமே கவனமானாள்.

இரண்டு மணி நேரங்கள் கழித்து இரண்டு கிலோ பூ பறித்துக் கூலியாக நூறு ரூபாய் தாளை கையில் வாங்கியதும் அனிச்சையாகத் தேன்மொழியின் இதழ்கள் விரிந்து அழகாகப் புன்னகைத்தன.

அந்தப் பணத்தைப் பத்திரமாகக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டாள்.

திலகவதிதான் பூக்களை எடைப் போட்டு அவளுக்குப் பணம் கொடுத்தார்.

“தேனு, டீ குடிக்கறியா?” என்று அவர் கேட்கவும், “வேணாம்த்த. எங்கண்ணே வர்றேன்னு சொல்லுச்சு. நான் வீட்டுக்கு போணும்” என்றாள்.

மெல்ல தலையைத் திருப்பிப் பார்த்தாள். அங்கிருந்த வெட்ட வெளி முழுக்கப் பூக்கள் குவியல் குவியலாகக் குமித்து வைக்கப்பட்டிருந்ததை மலைப்புடன் பார்த்தாள்.

பேருந்து, இருசக்கர வாகனத்தில் இந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம் இந்தத் தோட்டத்தை, பூக்களை, பூ பறிப்பவர்களைப் பார்த்திருக்கிறாள்தான். ஆனால், இவ்வளவு பூக்களை இப்படிக் குன்றாகக் கொட்டி வைத்து பார்த்ததில்லை.

அவள் மலைப்புடன், அதை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். மல்லி, பிச்சி (ஜாதிமல்லி), முல்லை, பன்னீர் ரோஜா, மூக்குத்தி ரோஜா, மரிக்கொழுந்து எனப் பலவகைப்பட்ட பூக்களின் கலவையான நறுமணம் அவள் நாசியை நிறைத்தது. அவளையும் அறியாமல் ஆழ மூச்சிழுத்தாள்.

அங்கே பூக்களை எடைப் போட்டு நேர்த்தியாய் பைகளில் அடைத்து, வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அதற்கு உதவி கொண்டிருந்த தர்மதுரை, அவள் வாயிலை நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் அவளிடம் வந்தான்.

“உனக்கு நாளைக்கும் லீவ் தான?” அவன் கேட்கவும், ஆமென்று தலையசைத்தாள்.

“அப்போ சாயந்தரம் பூ பறிக்க வரியா?” என்று கேட்டான்.

“இப்போதான் எல்லாப் பூவையும் பறிச்சுட்டோமே, அப்புறம் சாந்தரம் எப்படிப் பூ இருக்கும்?” மிகப் புத்திசாலித்தனமாகப் பதில் கேள்வி கேட்டாள்.

மெலிதான புன்னகையுடன், “இப்போ அரும்பா இருக்கறது சாயந்தரம் மொட்டாகிடும். அது பறிக்கணும் இல்ல? அப்புறம் இப்போ விட்டுப் போற தப்பரும்பையும் அப்போ பறிச்சுடலாம்” என்று அவளுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொன்னான்.

“சாயந்தரம் எப்போ வரணும்?” என்று ஆவலாக விசாரித்தாள்.

“மூனு மணிக்கு மேல வா” என்றான். சரியெனத் தலையசைத்து வெளியேறினாள்.

அவளுக்காக வெளியில் காத்திருந்த ஜெயபாலன், “அந்தத் துரை பய கூட எதுக்குப் பேசுற நீ? உங்கிட்ட, அவன் என்ன சொல்லிட்டு இருந்தான்?” என்று அண்ணனாகக் கேள்வி கேட்டான்.

“எனக்குப் பசிக்குதுண்ணா” என்று அவள் சொல்லவும், அமைதியாக வண்டியை நகர்த்தினான்.

தேன்மொழி வீடு சென்றதும் அந்த நூறு ரூபாயை பெரியம்மாவிடம் கொடுத்தாள்.

“இங்க பாரும்மா உன் பேத்தியை, எனக்கு இப்பவே சம்பாதிச்சு குடுக்கறா” அகம் மகிழ வாங்கி, அவள் கன்னத்தில் தட்டி, அந்தப் பணத்தை அவள் கையாலேயே சாமி படத்தின் முன் வைக்கச் செய்தார் பொற்கொடி.

அன்று மாலையும், மறுநாளும் மறக்காமல் பூ பறிக்கச் சென்றாள் தேன்மொழி. திலகவதி, அன்புக்கரசி பெரும்பாலும் அவளுடன் நின்று பூ பறித்து அவளிடமே கொடுத்தனர். அவள் மறுத்தாலும் கேட்கவில்லை.

ஞாயிறு மாலை வேளையில் அவளிடம் வந்த தர்மதுரை, “நான் கட்டியிருக்க வாட்ச்சை விட அழகான வாட்ச் நிறையா இருக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

“நீ எப்படிப் போய் வாங்குவ?”

“எங்கண்ணன் கூடப் போய்..” என்றாள்.

“இந்தா இது பிடிச்சுருக்கா பாரு” என்று அவன் நீட்டிய காகிதத்தைக் கையில் வாங்கினாள். அதில் வரிசையாக டாட்டா நிறுவன கைக் கடிகாரங்களின் படங்களும், விலையும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான கடிகாரங்களின் புகைப்படங்கள்தான் அதிகம்.

“இது பாரு. இது நல்லாருக்கு இல்ல? உனக்குப் பிடிச்சுருக்கா? அன்புக்கு.. உன் தம்பிக்கு பிடிக்குமா?”

“நல்லாருக்கு” என்றாள். அதை வாங்க இந்த இரண்டு நாள்களில் சேமித்த பணம் போதாதுதான். அவள் உண்டியலில் கை வைக்க வேண்டும். அதைத்தான் செய்தாள். அதிலிருந்து தேவையான பணத்தை எடுத்தவள், ஜெயபாலன் முன் சென்று நின்றாள்.

“அண்ணா, என்னைய திண்டுக்கலுக்குக் கூட்டிட்டு போறியா?”

“திண்டுக்கலுக்கா? எதுக்கு?”

“பிளீஸ், கூட்டிட்டு போண்ணா”

“எதுக்கு அம்மா, அம்மாச்சியைக் கேட்காம என்கிட்ட வர்ற? பெரிய மனுஷிக்கு திண்டுக்கல்ல என்னா வேலையாக வேண்டியிருக்கு சொல்லு?”

“அன்புக்கு வாட்ச் வாங்கணும்.”

“ஆஹா. சரி, நான் கூட்டிட்டு போறேன். ஆனா, நான் சென்னை காலேஜ் போக, நீ எனக்காக அப்பா கிட்ட பேசணும்”

“அப்பாதான் முடியாதுன்னு சொல்லிட்டாரே”

“அவர் மட்டுமா சொல்லுவார். நானும் சொல்லுவேன். உன்னை எல்லாம் என்னால திண்டுக்கலுக்குக் கூட்டிட்டு போக முடியாது. போ..” என்றான் கடுப்பாக.

“நீ ஒன்னும் என்னைய கூட்டிட்டு போக வேணாம், போ” என்று அவளும் கோபித்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.

அங்கே தர்மதுரையின் வீட்டில், “அப்பா ஃபாரினுக்குப் பூ அனுப்புவோமா?” என்று தன் அப்பா சுந்தரராஜனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் தர்மதுரை. அவன் மனத்தில் இரண்டு நாள்களாக அந்த எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. ஆக, அப்பாவிடம் கேட்டே விட்டான்.

“ஃபாரினுக்குப் பூ அனுப்பறதா? எது? நேத்து அந்தக் கம்பெனிக்காரன் நம்மகிட்ட வந்து பூ கொடுக்கச் சொல்லி கேட்டுட்டு போனதை சொல்றியா தம்பி? அதெல்லாம் சரி வராதுப்பா. நாம பேசாட்டுக்கு பூவ மார்கெட் வியாபாரிகளுக்குப் போடுறதுதான் சரிப்படு்ம்” என்றார் தீர்மானமாக.

“இல்லப்பா. அவங்களுக்கு இல்ல..”

“யாருக்கானாலும் சரி வராதுப்பா. இங்கன உள்ளூர்ல வியாபாரம் ஆகாத பூவா வெளிநாடு போகப் போகுது. போப்பா, போய் வேலையைப் பாரு..” என்று முடிவாகச் சொல்லி விட்டு, தொலைக்காட்சியில் மூழ்கிப் போனார்.

“அப்பா..” என்றழைத்தவன் கையைப் பிடித்து மெல்ல இழுத்தார் அவன் அப்பத்தா பவுணு அம்மாள்.

error: Content is protected !!
Scroll to Top