இந்த வாழ்வென்பது – 6 (1)

அவனது முறைப்பில் இப்படி எடுத்தெறிந்து ஏளனமாகப் பேசியிருக்கக் கூடாதோ என்று தேன்மொழிக்கே தோன்றியிருக்க, தர்மதுரையின் கேள்வியும் அதையே உணர்த்தியது.

“ஏன் வெளிநாட்டுக்கு போற பூவுன்னாதான் மரியாதை குடுப்பீங்களோ?” என்று கேட்டவனின் கைகள் பூவை லாகவமாகப் பறித்துக் கொண்டிருந்தன.

“பூவுக்கு மரியாத குடுக்க மாட்டேன்னு நான் சொல்லவேயில்லையே? மொட்டோட அரும்பையும் தெரியாம சேர்த்து பறிச்சுட்டேன்.”

“ஹாங்..”

“அதுக்கு நீங்க என்னைப் பேசினீங்கல்ல? அதான் பதிலுக்கு நானும் தெரியாம.. உங்களை இல்ல பூவை பேசிட்டேன்” என்றாள், அவன் முகம் பார்த்து.

தர்மதுரை சிரமப்பட்டுச் சிரிப்பை அடக்கினான். ஆனாலும், அவள் வெளிநாட்டுக்கு போகின்ற பூவா எனக் கேட்டது அவன் மனத்தில் ஓடிக் கொண்டேயிருந்தது.

அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவளைக் கவனித்தான்.

இன்னமும் பூ பறிக்கும் லாகவம் கை வராமல், அரும்பையும், வெறும் காம்பையும் சேர்த்துப் பறித்துக் கொண்டிருந்தாள்.

“ஹே.. இங்க பாரு”

“தேன்மொழி என் பேரு..”

“ஆமா, உன் பேர் தெரியாது பாரு. அதான் இப்போ ரொம்ப முக்கியம். நான் சொல்றதை கவனி” என்றான் சுள்ளென்று. அவளுக்குச் சும்மாவே அவனைக் கண்டால் ஆகாது. அதிலும் கடந்த ஆண்டுத் திருவிழாவின் போது அவளது அண்ணன் சுதாகரனை, தர்மதுரை அடித்து விட, அவள்தான் இருவருக்கும் இடையே சென்று பிரச்சினைக்கு அந்நேரம் முற்றுப் புள்ளி வைத்திருந்தாள்.

அவர்களுக்குள் என்ன பிரச்சினை, எதற்காகச் சண்டை என்று எதுவும் அவளுக்குத் தெரியாது. என்னவென்று கேட்டுக் கொள்ளவும் இல்லை அவள். ஆனால், தர்மதுரை எப்படித் தன் அண்ணனை அடிக்கலாம்? என்ற கேள்வியும், கோபமும் அப்போது அதிகமாக இருந்தது. இன்றும் நீரு பூத்த நெருப்பாக அடிமனத்தில் இருக்கிறது. அந்தக் கோபம் அவனைக் காணும் போதெல்லாம் வெளிப்படுகிறது.

“ஏய், இங்க கவனி..” என்று மீண்டும் அவன் அதட்டவும், தலையைச் சிலுப்பி அவனைப் பார்த்தாள்.

“சிலுப்பி..” மெலிதாக மனத்திற்குள்தான் முணுமுணுத்தான். பின்னே அவளுக்குக் கேட்டால் அவ்வளவுதான். தொலைந்தான்.

“இப்படி நேக்கா பூவை மட்டும் பறிக்கணும். காம்போட சேர்த்து பறிக்காத, செரியா? அப்படிப் பறிச்சா அரும்போட சேர்ந்து அம்புட்டும் கொத்தா புடுங்கிட்டு வந்திடும்” என்று செய்து காட்டினான். அவனைப் பின்பற்றி அவளும் அவனைப் போலவேதான் செய்தாள். ஆனாலும், அந்தக் கலை அவளுக்குக் கை வரவில்லை.

“இதென்ன ரோஜாவா? இல்ல சாமந்தியா? மல்லிகைப் பூ தாயே. ரெண்டு விரலால பறிக்கணும். பெருவிரலையும், ஆட்காட்டி விரலையும் மட்டும் யூஸ் பண்ணு”

“ம்ம்..”

“நீ இப்படி ஒவ்வொரு பூவா பறிச்சு பறிச்சு போட்டா, என்னைக்கு மொத்த பூவையும் பறிச்சு முடிக்க? இந்த வேகத்துல நீ போனா இன்னைக்குள்ள உன் பை நிறையாது”

சடாரென்று திரும்பி அவனை முறைத்தாள். மெல்ல மேலேழுந்து கொண்டிருந்த சூரியன் அவளின் தலைக்குப் பின்னால் உதயமாகிக் கொண்டிருந்தான். அதன் தகிப்பு அவள் முகத்தில் தெரிய, பதிலுக்கு அவளை முறைத்து, “ஒவ்வொரு பூவா பறிச்சு போடாம, கை நிறையப் பூ சேர்ந்ததும் பையில போடு. அப்போதான் பூவும் வேகமா பறிக்க முடியும். உன் பையும் வேகமா நெறையும். புரிஞ்சுதா?” என்று கேட்டான்.

“ம்ம்” என்றவள், அவன் சொன்னது போலக் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் மட்டும் உபயோகித்துப் பூக்களைப் பறிக்கத் தொடங்கினாள். கைக் கொள்ளும் அளவு பூக்கள் சேர்ந்ததும், இடையோடு சேர்த்துக் கட்டியிருந்த துப்பட்டா பையில் அதைச் சேமித்துக் கொண்டாள்.

இப்போது ஒரளவு அவளின் வேகம் கூடியிருக்க, அரும்புகளையும் சேர்த்துக் கொய்வது மட்டும் நிற்கவில்லை.

“ப்ச்” என்றாள் சலிப்புடன்.

“இதெல்லாம் நடக்குறதுதான். கண்டுக்காம விட்டுட்டு பூவை பறி” என்றான்.

“காம்பு ரொம்பச் சின்னதா இருக்கு. மொட்டும், அரும்பும் பக்கத்தில பக்கத்தில இருக்கு.” என்று அவள் புகார் படிக்கவும், “இதுக்கு முன்னாடி மல்லிப் பூ பார்த்தது இல்லயா நீ? அது இப்படித்தான் நெருக்கமா இருக்கும். செடிக்கு ஒன்னு பூக்க இதென்ன ரோஜாவா? அங்குட்டு திரும்பி பாரு. ரோஜாவே இப்போ கொத்துக் கொத்தாதான் பூக்குது”

என்றவன், பார்வை எட்டும் தூரத்தில் இருந்த ரோஜா தோட்டத்தைக் கண் காட்டினான்.

“உங்க தோட்டத்துப் பூதான் இப்படி இருக்கு. எங்க ஊர் மதுரை மல்லி எம்புட்டு பெருசா இருக்கும் தெரியுமா? எங்கூட்ல செடி வச்சிருக்கோம். அது எம்புட்டு பெரிய பூவா பூக்கும் தெரியுமா? அது பறிக்க அம்புட்டு ஈஸியா இருக்கும்” என்று பிறந்த ஊரின் பெருமை பேசினாள்.

“ஆஹாங், அப்படியா? எங்க தோட்டத்துப் பூதான் மோசமா உனக்கு? சரிதான். அப்படின்னா ஒன்னு பண்ணு, நேரா வீட்டுக்குப் போய் உங்கூட்டு மல்லிச் செடில பதியம் போட்டு, எங்களுக்கு நாலு கன்னு கொண்டாந்து குடு. உன் புண்ணியத்துல நாங்களும் மதுரை மல்லி வளர்த்து காசு பார்த்துடுறோம்” என்று தீவிரமாகச் சொன்னவன், “அந்தச் செடில வர்ற பூவையாவது வந்து ஒழுங்கா பறிச்சு குடு தாயே” என்று சொல்லவும்தான், அவன் கேலி செய்கிறான் என்பது புரிய, அவனை முறைத்தாள்.

அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தவனின் கைகள் பரபரவெனப் பூக்களைப் பறித்துக் கொண்டேயிருந்தது.

“பூ பறிக்க வந்துட்டு எதுக்கு என்னைய முறைச்சுட்டு இருக்க?” என அவன் கண்களைச் செடியில் இருந்து விலக்காமல் கேட்க, தேன்மொழியும் வேலையில் கவனமானாள்.

“ஆடத் தெரியாதவன்தான் தெரு கோணல்னு சொல்வான். செடியை குறை சொல்லாம பூவை பறி”

“ஐயோ, தெரியாம சொல்லிட்டேன்” என்று அவள் அடிக்குரலில் முணுமுணுக்க, “ம்ம், தெரியுது” என்றான் சத்தமாக.

அவள் சட்டென நிமிர, அவளின் விழியில் விழி பதித்து, ஒற்றை விரல் நீட்டி மல்லிகை தோட்டம் முழுவதையும் சுட்டிக் காட்டினான்.

“இங்க நீ பார்க்கறது பூரா மருத மல்லிச் செடிதான். பூவும் மருத மல்லிதான். பார்த்து பறிம்மா” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

“மருத மல்லிக்கே நாத்து ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இருந்துதான் வருது. இனிமே உங்க வீட்ல இருந்து மதுரைக்கு நாத்து சப்ளை பண்ணுவோம் என்னா?” என்று அவன் தீவிரமாகக் கேட்கவும், காதே கேட்காதது போலப் பூக்களைக் கர்ம சிரத்தையுடன் பறித்தாள். அவளுக்குச் சிரிப்பும், கோபமும் சேர்ந்து வந்து தொலைத்தது. தலையை நிமிர்த்தவேயில்லை அவள்.

சின்னப் பெண் ஏதோ தெரியாமல் சொல்லி விட்டாள். அவளிடம் போய் மதுரை மல்லிகை நாற்று எங்கிருந்து வருகிறது என்பதெல்லாம் அதிகப்படி பேச்சு என்பது அவனுக்கே புரியவும், அங்கிருந்து நழுவி விட்டான்.

எண்பதுகளின் திரையிசை பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, அதைக் கேட்டபடியே முப்பதுக்கும் மேலானோர் ‍அங்கு பூப்பறித்துக் கொண்டிருந்தார்கள்.

தேன்மொழியின் விரல்கள் இப்போது ஒரளவு சீரான லயத்துடன் பூக்களைப் பறிக்கத் தொடங்கியிருந்தது.

இரண்டு நாள்களுக்கு முன்பு பள்ளியில் அவளது வகுப்புத் தோழியிடம், தன் தம்பிக்கு பிறந்தநாள் வருவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

அன்புக்கு என்ன பரிசு கொடுப்பது? எப்படி வாங்கிக் கொடுப்பது? தம்பிக்கு என்ன பிடிக்கும்? என்று அவளின் சிந்தனைகளைத் தோழியிடம் பகிர, அவளோ தன் சித்தப்பா வெளிநாட்டில் இருந்து தனக்காக வாங்கி வந்திருந்த பேனா, பென்சிலை காட்டி பெருமை பேசினாள்.

“என் பென்சில் செட்டை எந்தம்பிக்கு குடுத்துட்டேன்ப்பா” என்று சொன்னவள், அத்தோடு நிறுத்தியிருக்கலாம். அன்றைய நாள் முழுக்க அதையே பெருமையாகப் பேசி, மீண்டும் மீண்டும் பேனாவை எடுத்துக் காண்பிக்கத் தேன்மொழி கடுப்பானாள்.

“நான் வீட்ல இன்னொரு பேனா வச்சுருக்கேன்ப்பா. புதுசுதென், எங்க சித்தப்பா வாங்கிட்டு வந்தது. நாளைக்கு எடுத்துட்டு வந்து தரவா? நீ உந்தம்பிக்கு குடுத்துடு” என்று தோழி சொல்லவும், அத்தனை வேகமாக மறுத்திருந்தாள்.

வெளிநாட்டு பொருள் இல்லையென்றாலும், விலை கூடியது இல்லையென்றாலும், அவர்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கித் தர அன்பான உறவுகள் அவளுக்கு இருக்கிறது. அதிலும், அப்பத்தா உயிரோடு இருந்தவரை, அவர்களின் பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து ஒரு வாரத்திற்கு முன்பே வந்து கடைத் தெருவுக்கு அழைத்துச் சென்று புத்தாடை வாங்கித் தந்திடுவார்.

தேன்மொழிக்கு மட்டும் அந்த ஆடைக்குப் பொருத்தமான அணிகலன்களும் சேர்ந்திடும். அவர்களுக்கு மட்டுமில்லை, பொதுவாக எல்லாப் பேரன் பேத்திகளுக்கும் அதைச் செய்வார் பெரியநாச்சி. ஆனால் தேன்மொழி, அன்பழகன் என்றால் கொஞ்சம் விஷேசம்தான் அவருக்கு. அவர்களுக்கு மட்டும் கவனிப்பு சிறப்பாகவே இருக்கும்.

இந்நேரம் அப்பத்தா மட்டும் இருந்திருந்தால் என்று நினைக்கையிலேயே அவளுக்குக் கண்கள் கலங்கி, தொண்டையடைத்தது.

இப்போது அவரில்லாமல் முதல் பிறந்த நாளை கொண்டாடப் போகிறான் அன்பழகன். அவன் பிறந்தது முதல் அவரிடம்தான் வளர்ந்திருக்கிறான். அக்கா அவள் பிரிந்த பின்பு உண்டான இடைவெளியையும் அவனுக்கு அன்பால் இட்டு நிரப்பியவர் அப்பத்தாதான். இப்பொழுது அன்புக்கு அனைத்து உறவுமாக இருந்து அவள்தான் அன்பு செலுத்த வேண்டும் என்ற உந்துதல் அவளுக்கு.

அவள் வயதிற்கு உறவுகள் குறித்த புரிதலெல்லாம் ஓரளவிற்கு வந்திருந்தது.

அவளைச் சுற்றி அத்தனை பாசமான உறவுகள் இருந்தாலும் தம்பியின் நினைவு எப்போதும் அவளுக்கு இருந்து கொண்டேயிருந்தது.

தம்பியின் பிறந்த நாளுக்கு ஏதாவது விசேஷமாக வாங்கிக் கொடுத்திட வேண்டும் என்பது மட்டுமே அவள் மனத்தின் ஆசையாக இருந்தது . அதற்காகக் காசு சேர்க்கத்தான் அவள் பூ பறிக்க வந்தது. இங்கு வந்ததும், தோழியின் பேச்சு நினைவில் வர, “பெரிய வெளிநாட்டுக்கு போற பூவு” என்று பேசி, அந்தக் கோபத்தைத் தர்மதுரையிடம் காண்பித்திருந்தாள்‌.

மாமா மணிவண்ணனும் சரி, பெரியம்மா பொற்கொடியும் சரி, அவர்கள் ஆசைப்பட்ட அனைத்தையும், அவர்களுக்குத் தேவையென்றால் நிச்சயமாக வாங்கித் தந்து விடுவார்கள்.

இப்போதும் அவளின் சேமிப்பில் கணிசமான தொகை இருந்ததுதான். அவளின் உண்டியலை உடைத்தால் அன்புவின் இந்தப் பிறந்த நாளுக்கு என்ன, அடுத்து வரும் நாலைந்து பிறந்த நாளுக்கு அவளால் பரிசுகளை வாங்கிட முடியும். அவளின் உண்டியலில் இருந்த காசு பெரும்பான்மையானது அப்பத்தா தந்தது. மேலும், மாமா இங்கு வரும் போதும், விஷேச நாள்களின் போதும் பிரியமாகத் தந்தது. அது போகப் பெரியம்மா, பெரியப்பா, அம்மாச்சி, தாத்தா என வீட்டினர் அவ்வப்போது அவளுக்குத் தந்த பத்தும், இருபதும், நூறும் அந்த உண்டியலில்தான் குட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. ஏனோ அதை உடைக்க அவளுக்கு மனம் வரவில்லை.

error: Content is protected !!
Scroll to Top