கோயம்பத்தூரில் அமைந்திருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி விவசாயப் படிப்பின் இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கிறான்.
“கோபத்தைப் பாரேன் மா இவனுக்கு?” என்று சிரித்தாள் அன்புக்கரசி.
அங்கே தேன்மொழி வீட்டில், ஜெயபாலன் தன் சென்னை செல்லும் ஆசையைச் சொல்லவும், “என்னடா தம்பி விளையாடுறியா? இப்பத்தானே அம்புட்டுப் பணத்தைக் கட்டி உன்னைக் காலேஜ்ல சேர்த்தோம். அப்பவே வேணாம்னு சொல்றதுக்கு என்னடா? இப்போ வந்து மெட்ராஸிக்கு போறேன்னு சொல்ற? காசு என்ன மரத்துலயா காய்க்குது உனக்கு?” என்று கையில் தோசைக் கரண்டியுடன் நின்று மகனைப் பேசினார் பொற்கொடி.
“எம்மா கொடி, அவனுக்குக் காலேஜ் ஃபீஸ் மொத்தத்தையும் நான் கட்டுறேன். பிள்ளை ஆசைப்படுறத படிக்க வைத்தா” என்று கருப்பண்ணசாமி பேரனுக்காகப் பேச, முத்தம்மா கணவரின் பேச்சுக்கு மண்டையை ஆட்டினார்.
“நான் என்ன சொல்றேன்னா நீ காலேஜே படிக்கப் போக வேணாம்டா தம்பி. பேசாம இப்பவே உங்க தாத்தாவோட கலர் கம்பனிக்கு வந்துடு. அதான் சரிப்படும். காசு அருமை தெரியாதவன்லாம் எதுக்குக் காலேஜ் போய்ப் படிக்கணும்? வந்து கம்பெனியை பாரு நீ. அங்க வந்து காசோட அருமையைக் கத்துக்கோ” என்று கந்தன் ஒரே போடாகப் போட, “என்னது கலர் கம்பனிக்கா? நானா?” என்று கோபமாகக் கேட்டான் ஜெயபாலன்.
“என்னப்பா கலர் கம்பெனியான்னு அம்புட்டு இளக்காரமா கேட்கற? அந்தக் கலர் கம்பனியாலதான் நீங்க கலர் கலரா சட்டை போட்டீங்க. உங்க காலேஜிக்கு கட்டுன பணமும் அந்தக் கலர் கம்பனி காசுதான்” என்றார் மகனிடம்.
“அதுக்காக..” என்று மகன் கேட்க, “எகத்தாளமா பேசாத டா.” என்று எச்சரித்தார்.
“நாம கட்டுன காசை காலேஜ்ல திருப்பித் தர மாட்டாங்க தானே?”
“அதெப்படி தருவான்? அதெல்லாம் தர மாட்டான். நீங்க பேசாம இருங்க. மெட்ராஸ் காலேஜ் ஃபீஸ் நான் கட்டுறேன் மாப்ள” என்று மீண்டும் கருப்பண்ணசாமி சொல்ல, கந்தனின் பார்வை முழுக்க மகன் மீதுதான்.
“நீ படிக்கவே போ வேணாம். வீட்ல இரு. பின்னாடி ஆடு, மாடு இருக்குல்ல அதைப் பார்த்துக்கோ” என்றார். ஜெயபாலன் முகம் மாற, “பெரிப்பா” என்றாள் தேன்மொழி.
“நீ பேசாத. பெரிப்பா சொன்னது சொன்னதுதான்” என்றார் கண்டிப்பாக.
அதற்கு மெல்ல தலையசைத்த தேன்மொழி, அவர் தட்டில் இட்லியும், தோசையும் வைத்து, சாம்பாரை ஊற்றினாள்.
“சுதாகர் அண்ணா படிக்கிற காலேஜ்தான் பெரிப்பா” அவள் மெல்ல சொல்ல, காதில் வாங்கிக் கொள்ளாதது போல உண்டார்.
“நீங்க வேணும்னா அண்ணாகிட்ட கேட்டு பாருங்க பெரிப்பா”
“உன்னைய பேசாம இருன்னு சொன்னேன்” என்று அவர் குரலை உயர்த்த, சட்டென அமைதியானாள். ஜெயபாலன் கோபத்துடன் சத்தமாக முனகிக் கொண்டே வெளியில் சென்றான்.
மறுநாள் விடிந்ததும் திரும்பவும் வீட்டில் அதே பஞ்சாயத்துதான். ஆனால், கந்தன் தீர்ப்பை மாற்ற முடியாதென்று விட்டார்.
அந்நேரம் அவர் முன் சென்று தேன்மொழி தயக்கத்துடன் நிற்க, “என்ன தேனு?” என்று கேட்டார்.
“பெரிப்பா, நானு.. வந்து..”
“ம்ம்.. வந்து..” என்று சிரிப்புடன் கேட்டவர், காலையிலேயே வெளிவேலையாக அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தார்.
“நானு அன்பு அவங்க தோட்டத்துல பூ பறிக்கப் போகவா?” என்று கேட்டு விட்டு அவரையே பார்த்திருந்தாள்.
“நான்தான் நேத்து நீ கேட்டப்போவே உன்னைய போகக் கூடாதுன்னு சொல்லிட்டேன் இல்ல தேனு. அப்புறம் என்ன போய்ப் பெரியப்பா கிட்ட சிபாரிசுக்கு நிக்கற? அதெல்லாம் எங்கேயும் போக வேணாம் நீ. பேசாம வீட்ல உக்காரு” என்று அவளை அதட்டினார் பொற்கொடி. கையில் சொம்புடன் வந்தவர் அதைக் கணவரிடம் நீட்டினார்.
அதிலிருந்த நீராகாரத்தைப் பருகிய கந்தன், “ஏன் கொடி வேணாம்னு சொல்ற. புள்ள ஆசைப்படுதுல்ல, போய்ட்டு வரட்டுமே” என்றார்.
“தேனு உள்ள அம்மாச்சி கூப்பிடுது பாரு. போய் என்னானு கேளு” என்று தேன்மொழியை அங்கிருந்து விரட்டி விட்டார் பொற்கொடி.
“உங்க புள்ள ஆசைப்படுது. ஆமா, கலெக்டர் வேலைக்குப் போறதுக்கு ஆசைப்படுது பாருங்க. ஆரத்தி எடுத்து அனுப்பி வைக்கிறேன். பூ பறிக்கப் போறாளாம் பெரிய மனுஷி. பூ பறிக்கப் போற வயசா இவளுக்கு?”
“அவ வயசுல நீ போகலையா?” சிரிப்புடன் கந்தன் மனைவியை மடக்கினார்.
“பேச்சை பாரு மனுஷனுக்கு. நான் போனேன்னா.. அது அந்தக் காலம். இவளுக்கு என்ன கஷ்டகாலம் வந்ததுன்னு காசுக்கு பூ பறிக்கப் போறேன்றா?”
“காசுக்குக் கஷ்டம் வந்தாதான் வேலைக்குப் போகணுமா கொடி?”
“பின்ன? இவ கூலிக்கு போய் வேலை பார்த்தா பார்க்கறவங்க என்ன பேசுவாங்க?”
“என்னமும் பேசிட்டு போறாங்க. நமக்கென்ன வந்தது? நம்ம புள்ள என்ன திருட போறேன்னா சொல்லுது? வேலைக்குத் தானே போறேன்னு சொல்றா? போகட்டும் விடு. அவளே அதிசயமா ஆசைப்பட்டுக் கேட்கறா, எதுக்கு வேணாம்னு சொல்லிட்டு. அங்க எல்லாம் நமக்குத் தெரிஞ்ச மனுஷங்க தானே. போய்ட்டு வரட்டும். அவ அண்ணனை கொண்டு போய் விட்டுட்டு தோட்டத்துக்கு ஆளுங்ககிட்ட பார்த்துக்கச் சொல்லிட்டு வரச் சொல்லு”
“இல்லல்ல, நானும் போறேன் அவ கூட..”
“யாருடி இவ? அதுக்கு நீயே எம்புட்டு காசு வேணும்னு கேட்டு அவ கையில குடுத்திடலாம் இல்ல?” என்று அவர் சொல்லவும், “ஆமா இல்லங்க.” என்றார் பொற்கொடி.
“தேனு..” என்று பொற்கொடி அழைக்கவும், “கொடி..” என்றார் கந்தன் அழுத்தமாக. அதற்கு மேல் மறுத்துப் பேசாமல் மண்டையாட்டி விட்டார் அவர்.
ஜெயபாலன், அவன் பங்கிற்கு நாலு திட்டு திட்டி, போக விடாமல் தடுக்கப் பார்த்து, தங்கை பிடிவாதமாக நிற்கவும், வேறு வழியின்றி அவளுடன் சென்றான்.
சூரியன் மெல்ல மேலேழுந்து கொண்டிருந்த அழகான காலைப் பொழுது. ஊரில் இருந்து அரைக் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்தப் பூந்தோட்டம். பல ஏக்கர் பரப்பளவில் திரும்பிய பக்கம் எல்லாம் பல வண்ணங்களில் பூக்கள்தான் நிறைந்திருந்தது.
அதில் மல்லிகை தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவரிடம் பேசி, தங்கையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, ஜெயபாலன் வீடு திரும்பினான்.
தேன்மொழி புன்னகையுடன் வேலையில் இறங்கினாள்.
அவளுக்குப் பூ பறித்துப் பழக்கம்தான். ஆனால், அது வீட்டுச் செடியில் அன்றாடம் மலரும் கொஞ்சமே கொஞ்சப் பூக்கள். இங்கோ செடி முழுக்க மொட்டாகப் பூரித்து நின்றது. அவை மலர்வதற்கு முன் பறித்து மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அவளைச் சுற்றியிருந்த அனைவரின் கண்களும், கைகளும் ஒரே இசைவில் வேகவேகமாக இயங்க, அவளோ தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் தோட்டத்திற்குள் நுழைந்த தர்மதுரையின் கண்கள் அவள் மேல் படவும், கண்ணைச் சுருக்கி அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
வேக நடையுடன் அம்மாவிடம் சென்று, “அங்க நிக்குறது, கந்த மாமா மவ தானே மா?” என்று கேட்டான்.
“ஆமா டா, தேன்மொழிதான்” என்றார்.
“இந்தப் புள்ளய யாரும்மா பூ பறிக்க அனுப்பினது?” என்று கோபமாகக் கேட்டான்.
“ஏன்டா, அவளுக்கு என்ன? அவ பூ பறிக்க வரக் கூடாதா?” அவளையே பார்த்தபடி அவர் கேட்க, “எதுக்கு வரணும்னு கேட்கறேன். ஏன் அவங்க வீட்ல வேலைக்குப் போகச் சொன்னாங்களாமா அவள? ஸ்கூலுக்குப் போற பிள்ளய போய்… இரு, நான் போய் அவளை வீட்டுக்கு அனுப்பிட்டு வர்றேன்” என்று கோபமாக முன்னேறியவனின் முதுகில் அடித்து, “விடுடா. ஏதோ ஆசையா வந்திருக்கா. நான்தான் செய்யட்டும்னு விட்டேன். நீ போய் உன் வேலையைப் பாரு” என்று அவனிடம் இருந்த பையை வாங்கினார்.
“நீதான் விட்டியா? எதுக்கும்மா? அப்படியே பத்து கிலோ பூவை பறிச்சு குமிச்சுட போறா பாரு?”
“பூவே பறிக்காம போனாலும் நமக்கு ஒரு நட்டமும் இல்ல. போடா”
“சரிதான்” என்றவன், அவளை நோக்கி நடக்க, “டேய் தொர, ராசா” என்று மகனை பிடித்திழுத்தார்.
“விடும்மா. நான் அவளை ஒன்னும் பண்ண மாட்டேன். எப்படிப் பூ பறிக்கறதுன்னு சொல்லிக் குடுத்துட்டு வர்றேன்ம்மா. ஹெல்ப்தான் பண்ணப் போறேன். கத்தாத” என்று குரலை தாழ்த்தி சொல்லி விட்டுப் போனான். சிரித்தார் திலகவதி.
தேன்மொழி மொட்டோடு சேர்த்து முகிழ், மொக்கு, அரும்பு என அனைத்தையும் பறித்துப் பதற்றமானாள்.
“அச்சோ..” என்று முணுமுணுத்துக் கொண்டே மொட்டுக்களை மடியில் கட்டியிருந்த துப்பட்டா பையில் போட்டாள்.
அவளின் கவனம் எல்லாம் மல்லிகை குத்துச் செடியின் மேலும், அதிலிருந்த மொட்டுக்களின் மேலும் குவிந்திருந்தது. திடீரென்று ஒரு கை அவளின் மறுபக்கமாக நீண்டு பூக்களைப் பறிக்க, பதறி நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆத்தாடி இவனா?” அனிச்சையாக மனத்தில் அலறினாள்.
அவனோ அவளைப் பாராதது போல வேலையில் கவனமாக இருக்க, ‘இது இவங்க தோட்டம்னு மறந்து, இங்க வந்துட்டியே தேன்மொழி’ என்று மனத்திற்குள் புலம்பினாள்.
சில நொடிகள் அவள் யோசனையாக நின்று விடவும் நிமிர்ந்து அவளை முறைத்தான் தர்மதுரை.
“இந்தாங்க உங்க தோட்டத்துப் பூவுக்குக் காசு.” என்று முன்பொரு முறை அவனிடம் கோபமாகக் காசைத் திணித்தது அவளுக்கு அந்நேரம் பார்த்து நினைவில் வந்து தொலைத்தது.
“உனக்குப் பூ பறிக்கத் தெரியாதுன்னா எதுக்கு இங்க வந்த? அரும்பை பூரா கிள்ளி போட்டுட்டு இருக்கப் பாரு.” என்று அவன் சொல்லவும், சட்டெனக் கையை உதறினாள்.
“பெரிய வெளிநாட்டுக்கு போற பூவு. ரொம்பத்தான். தெரியாம கிள்ளிட்டேன். அதுக்குப் போய்..” என்று அவள் முணுமுணுத்தது, அருகில் நின்றவனுக்குத் தெளிவாகவே கேட்டது. அவளை முறைத்துப் பார்த்தான் அவன்.