இந்த வாழ்வென்பது – 5 (2)

“ஏய்.. தேனு”

“நீ என்ன கேட்டாலும் நான் ஹெல்ப் பண்ண மாட்டேன் போ”

“பண்ண மாட்டியா?”

“மாட்டேன்”

“கெஞ்சி கேட்டா கூடவா?”

“நீ எப்படிக் கேட்டாலும் செய்ய மாட்டேன்.” நடந்து கொண்டிருந்தவள், திரும்பி நின்று அவன் முகம் பார்த்துத் திட்டவட்டமாகச் சொன்னாள்.

ஏதோ திட்ட போனவன், தன்னைக் கட்டுப்படுத்தி, “பிளீஸ்” என்றான்.

“சரி, என்னன்னு சொல்லுண்ணா..” பாவம் பார்த்து இரங்கினாள்.

“எனக்குச் சென்னை காலேஜ்ல சீட் கிடைச்சதுல்ல? அங்க போய்ச் சேரலாம்னு இருக்கேன்”

“நீதான் இங்க காலேஜ் போறியேண்ணா? அப்புறம் எதுக்குச் சென்னைக்குப் போற?”

“அதுவொரு டுபாக்கூர் காலேஜ். அந்தக் கோர்ஸ் படிச்சால்லாம் நல்ல வேலை கிடைக்காதாம். அதான் சென்னை போகலாம்னு..” என்று இழுத்தான்.

“வேலை கிடைக்காதா? யாரு சொன்னா?”

“அதெல்லாம் நீ கேட்காத. நான் சொன்னா உனக்குப் புரியுமா?”

“அப்புறம் எதுக்கு என்கிட்ட சொல்றண்ணா..”

“ஆ, என் நேரம். நீ சொன்னா தானே உங்கப்பாரு கேட்பாரு. அதான்” என்றான் கடுப்புடன்.

அவன் சொன்னது புரியாமல், “போண்ணா நீ என்னைய திட்ற போலத் தெரியுது. எனக்கு நேரமாகுது. நான் கோவிலுக்குப் போறேன்” என்று திரும்பினாள்.

“ஐயோ, தேனு. எனக்குச் சென்னை காலேஜிக்கு போகணும். அதுக்காக நீதான் அப்பாம்மாகிட்ட பேசணும்.” அவளைப் போக விடாமல் தடுத்துக் கெஞ்சினான்.

“நீதான் இங்க காலேஜ் போறியேண்ணா”

“அதான் போகப் பிடிக்கல சொல்றேன் இல்ல?” என்று அவன் கோபமாகச் சொல்லவும், அண்ணனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவனுக்குக் கல்லூரி தொடங்கிச் சில மாதங்கள் முடிந்திருக்க, இப்போது போய்ச் சென்னை சென்று படிக்கிறேன் என்று சொன்னால், வீட்டில் நிச்சயமாய் ஒரு பூகம்பம் வெடிக்கும்.

கல்லூரிக்கு நிறையப் பணம் வேறு கட்டியதாகப் பேசிக் கொண்டது அவளுக்கு லேசாக நினைவில் இருக்கிறது.

“காலேஜ்ல கட்டின ஃபீஸ் திருப்பித் தருவாங்களாண்ணா”

“என்னதே? அதைத் திருப்பித் தந்துட்டுதான் மொத வேலை பார்ப்பானுங்க. ஏன்னா அது நம்ம மாமா மணிவண்ணன் காலேஜ் பாரு” என்று கிண்டலாகச் சொன்னவன், “டோனேஷன் பணம்லாம் திருப்பித் தர மாட்டாங்க லூசு” என்று அவளின் தலையில் தட்டினான்.

“நிஜமாவா?”

“இல்ல, கதை விடுறேன்”

“போண்ணா..” சட்டென விலகி நடக்கத் தொடங்கினாள்.

ஏற்கெனவே பெரிய அண்ணன் சுதாகரன் சென்னை சென்று படிப்பதற்கும் வீட்டில் அவள்தான் பேசியிருந்தாள். பெரிதாக ஒன்றும் இல்லை.

“அண்ணா ஆசைப்படுது ப்பா. அந்தக் காலேஜ்லயே சேர்த்து விடுங்க பெரிப்பா” என்று அண்ணனுக்காகச் சில வார்த்தைகள்தான் பேசியிருந்தாள்‌. சுதாகரன் அத்தனை நாள் போராடி சம்மதிக்காதவர்கள், அவள் கேட்கவும் சற்றே இறங்கி வந்து அறிந்தவர், தெரிந்தவர்களிடம் சென்னை கல்லூரி குறித்து விசாரித்து மகனை அந்தக் கல்லூரியில் சேர்த்திருந்தார்கள்.

இப்போது பொறியியல் மூன்றாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருக்கிறான் அவன்.

அதற்கு நேர்மாறாக ஜெயபாலன் இங்குதான் படிப்பேன் என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லி, திண்டுக்கல்லில் இருந்த கல்லூரியிலேயே பொறியியல் பாடப் படிப்பில் சேர்ந்து சில மாதங்கள் கழிந்த பின்பு மனம் மாறியிருக்கிறான்.‌‍ அவனிடம் வீட்டில் முதலிலேயே கேட்டிருந்தார்கள்.

“உங்கண்ணேன் கூடப் போய்ச் சென்னையில படிக்கறியா டா? இல்ல, இங்கேயே மதுரயில சேர்த்து விடவா? மதுரன்னா வீட்லருந்தே காலேஜ் போய்ட்டு வந்துடுவ இல்ல?” என்று கந்தன் கேட்டதற்கு, “இல்லப்பா. நான் இங்கயே படிக்கறேன்” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டான்.

இப்பொழுது அவன் மனம் மாறியிருக்க, பெற்றோர்கள் மனம் மாறுவது கடினம்தான்.

“ஏய் தேனு, அண்ணாக்காக உங்கப்பாகிட்ட பேசுவியா மாட்டியா?” ஜெயபாலன் மிரட்டலாகக் கேட்க, “மாட்டேன்” என்றாள் அழுத்தமாக.

“உன்னைப் போய் நம்பினேன் பாரு, என்னைச் சொல்லணும். பிசாசு.. இது கோவிலுக்குப் போறதுக்கு நாங்க தொணைக்கு வேற போறாங்க”

“நீ ஒன்னும் வர வேணாம் போ”

“நீயும் எனக்காகப் பேச வேணாம் போ, பிசாசே”

“நீ என்னைப் பேசச் சொன்னாலும் எனக்குப் பேசத் தெரியாது” என்று கத்தினாள்.

“பிசாசு. அப்படியே ஒத்தயில போ உனக்கு எதுக்கவே பேய் தொணைக்கு வரும் பாரு.” என்று கடுப்புடன் கத்தி விட்டு வீட்டை நோக்கி நடந்தான்.

தேன்மொழிக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும், அண்ணனுக்காக என்ன பேசுவதென்று தெரியாமல், எப்படி விளக்குவதென்று தெரியாமல், பெரியப்பாவிடம் எப்படி எடுத்துச் சொல்வாள் அவள்?

வீட்டிற்கு விஷயம் தெரியட்டும், அப்புறம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்துடன் நடந்தாள்.

அந்த வளைவில் அவள் திரும்பப் போக, எதிரே வந்த இரு சக்கர வாகனம் அவள் முன் சத்தத்துடன் ப்ரேக்கிட்டு நின்றது.

“ஏய்..” என்று கோபமாகக் கை நீட்டினான் எதிரில் வந்தவன். அவள் தடுமாறி நிற்க,

“என்னா தொர, கண்ண என்ன பொடனியிலயா வச்சிருக்க? எதிர்க்க ஆள் வர்றது தெரியலயா உனக்கு? ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியோட்டுப்பா” என்று தூரத்தில் இருந்து கத்தினான் ஜெயபாலன்.

“நீ போ தேனு” என்று அவன் சொல்ல, எதிரே வண்டியில் அமர்ந்திருந்தவன் இம்மியளவும் நகராமல் அவளையே முறைத்துக் கொண்டிருந்தான்.

“ஆத்தாடி இவனா?” என்று மனத்திற்குள் அலறினாலும், வெளியில் கெத்தாக ஒரு, சாரியை சொல்லி விட்டு விரைந்து முன்னே நடந்து விட்டாள். அவனும் திரும்பிப் பார்த்து அவளை நன்றாக முறைத்து பின்னரே வண்டியை நகர்த்தினான்.

கோவிலை நெருங்கியதும் அனைத்தையும் மறந்தவளாக, தெய்வத்தின் முன் கண் மூடி நின்றாள். மனம் முழுவதும் குடும்பத்தினருக்கான வேண்டுதல்களே நிறைந்திருந்தது.

அன்பு ஆசைப்பட்டபடி இம்முறை பசு, காளை கன்று ஈன வேண்டும். அண்ணா ஆசைப்பட்ட படிப்புப் படிக்கப் பெரியப்பா சம்மதிக்க வேண்டும், அம்மாச்சி, மாமா என்று நீண்டதொரு பட்டியலை அம்மனிடம் வைத்து விட்டு அவள் கண் திறக்க, எதிரே பிரார்த்தனையுடன் நின்றிருந்த திலகவதி, அவளைப் பார்த்ததும் புன்னகைத்தார்.

“என்ன தேனு, நல்லாருக்கியா? வேண்டுதல்லாம் பலம் போல?” என்று அவர் கேட்க, “இல்லத்த..” என்றாள் கூச்சப் புன்னகையுடன்.

“நீ வேண்டினது எல்லாத்தையும் ஆத்தா குடுப்பா” என்று ஆருடம் சொன்னவர், அவள் நெற்றியில் குங்குமம், திருநீறு வைத்து விட்டார்.

“பதிலுக்கு உங்க வேண்டுதல் எல்லாம் நிறைவேறும்னு நான் சொல்லணுமாத்தே?”

“ஹாஹா, சேட்டையைப் பாரேன். சொல்லேன். நீ சொல்லி ஆத்தா காதுல விழுந்து என் வேண்டுதல் நிறைவேறினா எனக்கும் நல்லதுதானே?” என்று அவர் கேட்க, பட்டெனத் திரும்பி, “கங்கையம்மா, எங்க அத்த கேட்டதை எல்லாம் செஞ்சு குடுத்துடு. பதிலுக்கு எங்க அத்த உனக்கு நிறையச் செய்வாங்க.” என்றாள்.

“என்னத்த, செய்வீங்க தானே?” என்று திரும்பி அவரைப் பார்த்து அவள் கேட்க, “என்ன செய்யணும்னு நீயே சொல்லு தேனு, செஞ்சுரலாம்” என்றார் புன்னகையுடன்.

அவள் பதில் சொல்லும் முன், “அம்மா..” என்ற அழைப்பு பின்னிருந்து கேட்டது. அங்கே திலகவதியின் மகன் தர்மதுரை நிற்கவும், சற்று முன்னர் அவன் வண்டியில் மோத போனதும், பதிலுக்கு அவன் முறைத்ததும் நினைவு வர, “அப்போ நான் வர்றேன்த்தே” என்று அவரிடம் சொல்லி விட்டு விலகி, முன்னே நடந்தாள் தேன்மொழி.

சட்டென அவளின் கைப் பிடித்து நிறுத்தி, தன் பையில் இருந்து பூவெடுத்து அவளின் பின்னலில் வைத்து விட்டார் திலகவதி.

தர்மதுரையின் கையில் கொத்தாக அல்லியும், செந்தாமரையும் இருக்க, “ரெண்டு பூ குடுடா தம்பி” என்று மகனிடம் கேட்டார்.

பூவை இறுக்கமாகப் பற்றியபடி நின்றான் அவன்.

“நான் கேட்டது காதுல விழுதா இல்லையாடா?” எட்டி மகன் கையில் இருந்த பூவை வாங்கினார்.

“நான் வர்றேன்த்தே” என்று தேன்மொழி விலகவும், “இரும்மா” என்று எரிந்து விழுந்தவன், இரண்டு பூக்களை அவளிடம் நீட்டினான்.

ஒல்லியாக, உயரமாக, உர்ரென்ற முகத்துடன் முறைத்துக் கொண்டு நின்றவனைப் பதிலுக்கு முறைத்து பூவை மட்டும் வாங்கிக் கொண்டாள் தேன்மொழி.

திலகவதி மகனை முணுமுணுவென்று திட்டுவது முன்னால் நடந்தவள் காதில் தெளிவாக விழவும் சிரித்துக் கொண்டாள்.

அந்நேரம் காட்டு வேலை முடித்து வீடு திரும்புபவர்களுடன் இணைந்து அவளும் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

“போதும், திட்டாதம்மா. வா, வீட்டுக்குப் போகலாம்” என்று தர்மதுரை சொல்லவும், “பூ கேட்டா குடுக்கணும் டா. உனக்கு எத்தனை தடவ சொல்றது?” என்று மீண்டும் திட்டத் தொடங்கினார்.

“நீ பூ கொடுத்தா அவ அப்படியே வாங்கிடுறா பாரு? அவளுக்குப் போய் எப்பப் பாரு பூ குடுக்கற?” என்று எகிறிய மகனை எரித்து விடுவது போலப் பார்த்தார்.

அவனுக்கு முதல் முறையாக அந்தச் சின்னப் பெண்ணிற்குப் பூ கொடுக்க மறுத்ததற்கு அம்மாவிடம் திட்டு வாங்கியது இன்னமும் நினைவில் இருக்கிறது.

அம்மா எப்போது பூ கொடுத்தாலும் வாங்க மறுப்பவளை பார்த்தாலே முறைக்கத்தான் செய்வான்.

“அது சின்னப் பிள்ளடா, அதுக்கு என்ன தெரியும்? நீ வா” என்று அவர் முன்னே நடக்க, அவனும் சென்று தன் இரு சக்கர வாகனத்தை ஆக்கிரமித்தான்.

அந்தப் பூக்களை அவன் அக்காவுக்காகதான் எப்போதும் ஆசையாகப் பறிப்பது. அதைப் போய் அவளுக்குக் கொடுக்கச் சொன்னால், அவனுக்கு எப்படி மனம் வரும்?

இன்றும் அந்தப் பூக்களைப் பத்திரமாகக் கொண்டு வந்து அக்கா அன்புக்கரசியிடம் கொடுத்தான் அவன். அதை ஆசையாக வாங்கிக் கொண்டாள் அன்புக்கரசி.

“பூ அழகா இருக்குடா. அதுலயும் இந்தச் செந்தாமரை கொள்ள அழகு” என்றாள்.

“ஏன்டி, அவன்தான் ஆத்த மாட்டாம உனக்காகக் குளத்துல இருந்த மொட்டை பூரா புடுங்கிட்டு வந்திருக்கான்னா, நீயும் அழகா இருக்குனு சொல்லிட்டு இருக்க” என்ற திலகவதி, “இதுகளோட..” என்று சலித்துக் கொண்டே வீட்டில் சாமி படங்கள் வைத்திருந்த அலமாரியை நோக்கி நடந்தார்.

“நீயென்ன டா அம்மா சொல்றது மாதிரி இன்னும் சின்னப் புள்ள கணக்கா எனக்காகப் பூ பறிச்சுட்டு வந்துட்டுருக்க? அல்லியும், தாமரையும் அது பாட்டுக்கு குளத்துல அழகா இருந்திருக்குமேடா?” என்று அவள் கேட்க, “இனிமேட்டுக்கு பறிக்கல கா. போதுமா?” என்று கோபமாகக் கேட்டவன், சட்டென அறைக்குள் புகுந்து கொண்டான்.

தர்மதுரைக்கு அக்காவின் மேல் அன்பு அதிகம். அதிலும் அவள் திருமணமாகி போன இந்த இரண்டு மாதங்களில் பிரிவு, அவன் பாசத்தை இன்னும் அதிகமாக்கியிருந்தது.

அக்கா வீடு வருகிறாள் என்பதை அறிந்ததும், வெள்ளிக்கிழமை விடுமுறை கேட்டு வாங்கி, அந்த வார இறுதி விடுமுறைக்கு அவனும் கல்லூரி விடுதியில் இருந்து வீடு வந்து விட்டான்.

error: Content is protected !!
Scroll to Top