இந்த வாழ்வென்பது – 5 (1)

“தேனு” என்று முத்தம்மா அழைக்க, “இதோ வர்றேன் அம்மாச்சி” என்று பதில் குரல் கொடுத்த தேன்மொழி, அப்போதுதான் பள்ளி முடிந்து வீடு திரும்பியிருந்தாள்.

“தேனு..” இம்முறை அழைத்தது அவளின் இரண்டாவது அண்ணன் ஜெயபாலன்.

“தே…னு..”

“நீ எத்தனை முறை தொண்டை வலிக்கக் கத்தி கத்திக் கூப்பிட்டாலும் நான் வர மாட்டேன் ண்ணா..” என்று அவனைப் போலவே பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னாள்.

“எம்மா, உன் பொண்ண பாரும்மா. என்னைய மதிக்க மாட்டேங்கறா. எனக்கு, அண்ணேன்னு கொஞ்சமாச்சும் மரியாதை கொடுக்கிறாளாமா உன் பொண்ணு? என்னம்மா பொண்ணு வளர்த்திருக்க நீ?” என்று அவன் கத்தி முடிக்கப் படாரென்று தேன்மொழியின் அறைக் கதவு திறந்தது. கூந்தலை பின்னலிட்டபடியே அண்ணனை முறைத்துப் பார்த்தாள்.

ஜெயபாலன் கூடத்தில் நின்றிருந்தவன், “தேனு” என்றான் பற்கள் தெரிய சிரித்து.

“சிரிக்காத.” என்றாள் கோபமாக.

“இல்ல, தேனு”

“பேசாத.”

“சரி சாரி” என்று அவளை நெருங்கினான்.

“அம்மா, என்னைய சரியா வளர்க்கலன்னு சொன்ன?”

“அது தெரியாம சொல்லிட்டேன் தேனு”

“அப்படியா?” அவள் புருவங்கள் சுருக்கி சந்தேகமாகக் கேட்க, “காரியம் இல்லாம கழுதை ஏன் கால்ல விழப் போகுது. உங்கண்ணனுக்கு என்னா காரியம் ஆகணும்ன்னு மொத கேளு தேனு” என்று பொற்கொடி உள்ளிருந்து குரல் கொடுக்கவும், ஜெயபாலன் முகம் மாறக் கடுப்புடன் பல்லைக் கடித்தான்.

“இருண்ணா வர்றேன்” என்று அவனிடம் சொன்ன தேன்மொழி, பொற்கொடியிடம் சென்றாள்.

“பெரியம்மா, கால் வலி இப்போ எப்படியிருக்கு? டீ குடிக்கறீங்களா? டீ எடுத்துட்டு வரவா?” என்று கேட்டாள்.

சமீபமாகப் பொற்கொடிக்கு மூட்டு வலி தொந்தரவுப் படுத்தி எடுக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன் மேய்ச்சலுக்கு மாட்டை ஓட்டிச் சென்றவர், கால் தடுக்கி கீழே விழுந்திருந்தார். பெரிதாக அடியில்லை. லேசான வீக்கமும், சிராய்ப்பும்தான். ஆனால், அதனோடு வீட்டு வேலைகளைச் செய்யவும் சோர்ந்து படுத்து விட்டார்.

பொதுவாக மதிய உறக்கம் எல்லாம் அவருக்குக் கிடையாது. எப்போதும் பள்ளி விட்டுப் பிள்ளைகள் வீடு வரும் போது பளிச்சென்று நின்றிருப்பார். அவர்களுக்கு உண்ண ஏதாவது சிற்றுண்டி தயாராக இருக்கும். உடனேயே தேநீரும் வைத்துக் கொடுப்பார். அதிசயமாக எப்போதாவதுதான் இப்படி உடல் நலமில்லாமல் படுப்பார்.

தேன்மொழி அவரின் பாதம் தொடங்கி முட்டி வரை மென்மையாகப் பிடித்து விட்டபடியே கேட்க, “இரு தேனு. அம்மா எந்திருச்சு மொத மூஞ்சிய கழுவிட்டு வர்றேன்” என்று படுக்கையில் கையூன்றி எழ முயற்சித்தார்.

தேன்மொழி அவருக்கு உதவினாள்.

அப்போது ஜெயபாலன், “ம்மா..” என்றழைத்தபடி அறை வாசலுக்கு வர, “என்னடா அம்மா? உனக்கு ஏதாவது வேணும்னா மட்டும் அம்மான்னு வா. மத்த நேரம் என்னைய கண்டுக்காத. நா மேலுக்கு முடியாம படுத்திருக்கேன். என்னானு கேட்டியா நீ? பாப்பாவை கொறை சொல்ல மட்டும் வாய் நீளுது. உடம்புக்கு என்னம்மான்னு ஒத்த வார்த்த கேட்காத” என்று மகனைக் கத்தினார்.

“இதுக்குத்தான் டா மக வேணுங்கறது. அம்மாப்பாக்கு ஒன்னுன்னா அதுகளுக்குத்தான் துடிக்குது. எங்களையும் தேனுதான் பார்க்கறா. நீங்களும் இருக்கீங்களே ரெண்டு பேரு, தடிமாடுக மாதிரி..” என்று அவனைத் திட்ட, உடனே ஓடி வந்து,

“நான் ஹெல்ப் பண்றேன்ம்மா உனக்கு. இரும்மா” என்று அவரைத் தாங்கிக் கொண்டான். மற்ற நேரமாக இருந்திருந்தால் அம்மா பேசினால், பதிலுக்குப் பதில் பேசி விடுவான். ஆனால், இன்று காரியம் ஆக வேண்டியிருந்தது. ஆகையால், அமைதியாகக் கேட்டுக் கொண்டான்.

“விடுடா என்னைய..” என்று அவன் கையை உதறி, பொற்கொடி ஓய்வறைக்குள் நுழைந்து கொண்டார்.

“தேனு..” கெஞ்சல் குரலில் மெல்ல அவன் அழைக்க, “இருண்ணா வர்றேன்” என்றாள். சட்டெனக் கோபத்துடன் அறையை விட்டு வெளியேறினான்.

பொற்கொடி முகம் கழுவி வந்து படுக்கையில் அமர, அவரின் கொண்டையைக் கலைத்து, சிக்கெடுத்து பின்னலிட்டாள் தேன்மொழி.

“கங்கையம்மன் கோவிலுக்குப் போய்ட்டு வருவோமா பெரிம்மா? அண்ணன் கிட்ட சொன்னா வண்டியில கொண்டு போய் விடும்”

“வண்டியா? இந்தப் பயலை வண்டியை தொட விடக் கூடாதுன்னு உன் பெரியண்ணன் கண்டிஷனா சொல்லிட்டு போயிருக்கான். மறந்துட்டியா?”

“இல்ல பெரிம்மா. ஒரு நாளைக்குத் தானே? உங்களால அவ்ளோ தூரம் நடக்க முடியாதேன்னுதான் சொன்னேன்.”

“இல்ல, வேணாம். வேணாம். இவென் வண்டியை தொடவே வேணாம். அவனைத் தொணைக்கு வரச் சொல்றேன், நீ கோவிலுக்குப் போய்ட்டு வா. என்னா?” என்று அவர் கேட்கவும் தலையசைத்தாள்.

“இந்தாடா தட்டாங்கா அவிச்சேன். சூடா சாப்பிடு” என்று வெளியே முத்தம்மா சொல்வது கேட்டது.

“கொடி, தேனு” என்று அவர் அழைக்க, இருவரும் எழுந்து வெளியில் சென்றார்கள்.

“நான் டீ போடவா அம்மாச்சி?”

“நான் போட்டுட்டேன்த்தா. டீ கொதிச்சுக்கிட்டு இருக்கு. இந்தா இதைச் சாப்பிடுங்க மொத..” தோலுடன் அவித்த தட்டாம் பயிறு காய்கள், ஆவி பறக்க பறக்க சூடாக இருந்த பெரிய தட்டை அவளிடம் நீட்டினார். அதை வாங்கி அண்ணன் கையில் கொடுத்த தேன்மொழி, “நீங்களும் உக்காந்து சாப்பிடுங்க அம்மாச்சி. நான் போய் டீயை வடிகட்டி எடுத்துட்டு வர்றேன்” என்றவள், அவர் மறுக்கும் முன் சமையல் அறையை நோக்கி நடந்து விட்டாள்.

நான்கு பேருக்கும் அவள் தேநீர் எடுத்து வர, சூடான பயறை பேரனுக்கு உரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் முத்தம்மா.

எல்லாருக்கும் தேநீர் கொடுத்து விட்டு அவளும் அமர, உரித்த பயறு இப்போது அவள் கைகளுக்கு வந்தது.

“வேணாம் அம்மாச்சி. அண்ணனுக்குக் குடுங்க. நான் கோவிலுக்குப் போய்ட்டு வந்து சாப்பிடுறேன்”

“சரி, சரி. இந்தா இதை மட்டும் வாயில போட்டுக்கோ” என்று அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள்.

“எனக்கு உரிச்சு கொடுத்த, அவளுக்கு ஊட்டி விடுற. ம்ம், நீ கூட ரொம்ப ஓர வஞ்சனை பண்ற கிழவி. இந்த வீட்ல ஒருத்தனும் என்னைய மதிக்க மாட்டேங்கறீங்க” என்று முத்தம்மாவை முறைத்துச் சொன்ன ஜெயபாலன், தேன்மொழியின் பார்வையைக் கண்டதும், “அய்யய்யோ” என்றான் சத்தமாக.

அதைக் கண்டு பெரியவர்கள் இருவரும் சிரிக்க, “நீ வா, தேனு. அண்ணா உன்னைக் கோவிலுக்குக் கூட்டிட்டு போறேன்” என்றான் பொறுப்பாக, பாசமாக. அப்போதும் அவளின் பார்வை மாறவில்லை.

“அய்யய்யோ ஆத்தா மலையேறுதே..” என்று முணுமுணுத்தான்.

தேன்மொழி பெரியவர்கள் இருவரிடமும் சொல்லிக் கொண்டு, கோவிலுக்குச் செல்லத் தயாரானாள்.

“தேனு.. தேனு.. தேனு..”

“நீ ஒன்னும் எனக்குத் தொணைக்கு வர வேணாம்ண்ணா. எனக்குக் கோவிலுக்குப் போக வழி தெரியும்”

“உனக்கு வழி தெரியும்னு இந்த ஊருக்கே தெரியுமே. ஆனா, உன் பெரியாத்தா..” என்று நக்கலாகச் சொல்ல ஆரம்பித்தவன், பட்டென்று நிறுத்தி விட்டு, “நில்லு தேனு. அண்ணா வண்டியை எடுக்கறேன்” என்றான்.

அவளோ அதற்குள் விறுவிறுவென்று நடந்து வாசலைக் கடந்து சாலைக்குள் ஏறியிருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top