இந்த வாழ்வென்பது – 4 (2)

அவர் எவ்வளவு சொல்லியும் கந்தனின் மனம் வருத்தத்தில் உழன்று கொண்டேயிருந்தது. நன்றாகத் தெரிந்தே பெரிய தவறு செய்து விட்டு குற்ற குறுகுறுப்பு அவரை அழுத்தியது.

எல்லாம் தன்னால் தானோ? தம்பி பிள்ளைகளுக்குத் தான் தகப்பனாக நின்றிருக்க வேண்டுமோ? தன் பொறுப்பில் இருந்து தனயனாக, தமையனாக, பெரிய தகப்பனாகத் தவறி விட்டோமோ என்றும் பெரிதும் வருந்தினார். காலம் சென்ற பின் எதுவுமே அதன் மதிப்பை இழந்து விடுகிறது, அல்லவா? அவரால் வருந்த மட்டுமே முடிந்தது. அம்மாவின் மனத்தை, முடிவை எவ்வளவு முயன்றாலும் மாற்ற முடியாதென விளங்கவும் மௌனமாகி விட்டார் அவர்.

“நீ மனசை போட்டு உழப்பிக்காத கந்தா. புள்ளைங்க ஜாதகத்துல கூட அதுக ரெண்டும் பிரிஞ்சுதான் இருக்கும்னு எழுதியிருக்கு. அன்னைக்கு எனக்குப் புரியல. ஜோசியக்காரன கண்டமேனிக்கு வஞ்சிட்டு வந்தேன். இப்போ இதான் விதின்னு எடுத்துட்டுதான் மனச தேத்திக்கறேன்..” என்றவருக்கு வார்த்தைகளை விடக் கண்ணீரே முந்தியது.

“தேனும், அன்பும் எங்க இருந்தாலும் ரெண்டும் ஒன்னு மேல ஒன்னு கொள்ளப் பாசமாதான் இருக்கும்ங்க. நீ வேணா பாரு” என்று ஆருடம் சொன்னார்.

அம்மாவை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு திண்டுக்கல் திரும்பினார் கந்தன்.

பொற்கொடி அவர் வந்ததும் பிடித்துக் கொண்டார்.

“உங்கம்மா என்னா சொன்னாங்க?”

“எங்காத்தாக்கு ரெண்டு கண்ணுலயும் பொரை விழுந்திருக்காம். அது பயந்துக்கிட்டு ஆப்பரேஷன் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுது”

“பயமா? அதுக்கா? இருக்கும், இருக்கும். அதை விடுங்க. அதெல்லாம் பேத்தி சொன்னா கேட்டுக்கும். அன்புவை இங்க விடச் சொல்லி கேட்டீங்களா? அதுக்கென்னா சொல்லுச்சு?”

“முடியாதுன்னு சொல்லிடுச்சு. நாம மொதவே நாங்க புள்ளைங்க பொறுப்பெடுத்துக்கறோம்னு பொறுப்பா சொல்லலையாம். அது சொல்றதும் சரிதானே? நான் இத்தனை வருஷத்துல என் ஆத்தா அப்பனுக்கே எதுவும் செய்யல. அப்புறம் அதுக்கு என்னை எப்படி நம்பத் தோனும்?”

“என்னங்க இப்படிச் சொல்றீங்க? நாம அவுங்களுக்கு எத்தனை செஞ்சிருப்போம்?”

“அவுங்க கூட இருந்து பார்த்துக்கறது போல வருமா கொடி?”

“இல்லங்க..”

“இப்பயும், பச்ச புள்ளய இழுத்துட்டு பேத்தியை பார்க்க வாராவாரம் நாந்தான் உன் வீட்டுக்கு ஓடியாறேன்‌. நீ எங்களைப் பார்க்க வரல. புள்ளைங்க பிரிஞ்சு இருக்குதுன்னு கவலைப்படுறவன் ஒரு நாளாவது, பேத்தியை கூட்டிட்டு வந்து அவளுக்கு அவ தம்பியை காட்டினியா? அவ வளர்ந்த வீட்டை காட்டினியான்னு.. எங்கம்மா கேட்கும் போது என்னால பதில் சொல்ல முடியல கொடி” என்றார் மிகுந்த மனவருத்தத்துடன்.

“ஐய்யோ” என்று பொற்கொடி நெஞ்சில் கை வைத்துச் சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்து விட்டார்.

“புள்ளைங்களை உன் மாமியா பிரிக்கல. நாமதான் பிரிச்சுட்டோம்” என்று முன்பு அம்மா சொன்னது இப்போது அவர் மனத்தில் வந்து போனது. மிகப் பெரிய தவறு செய்து விட்ட தவிப்பு அவரிடம். எதை எதையோ சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.

முடிவாக, தேன்மொழியை நன்றாக வளர்க்க வேண்டும் என்று மனத்தில் உறுதி பூண்டார்.

அவர்களுக்கு, அவரவர் நியாயம். அது மற்றவருக்கு அநியாயமாகப்பட்டாலும், சுயநலமாகத் தோன்றினாலும், அதை விதியென்று ஏற்றுக் கொண்டு, பெரியவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அமைதியாகி விட்டார்கள்.

ஆனால், பிள்ளைகள்?

அவர்களுமே பிரிவுக்குப் பழகி விட்டார்கள். இதுதான் வாழ்வென்று, விரைவிலேயே விளங்கிக் கொண்டார்கள். அதற்கேற்ப வாழவும் பழகிக் கொண்டார்கள். அதற்கு அவர்களிடம் வீட்டினர் காண்பித்த அன்பும், அரவணைப்பும் பெரிதும் உதவியது.

அடுத்து வந்த வாரம் தேன்மொழியை அழைத்துக் கொண்டு, கந்தன் தன் குடும்பத்தோடு அம்மாவை பார்க்கச் சென்றார்.

அவர்கள் முன்பே கணித்தது போலப் பேத்தி பேசி பேசி கரைக்கவும்தான் கண் அறுவைச் சிகிச்சை செய்ய ஒப்புக் கொண்டார் பெரியநாச்சி. பிள்ளைகளின் பள்ளியாண்டு விடுமுறை சமயம் அவருக்கு அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது.

அதன் பிறகு பார்வை ஓரளவு நன்றாகத் திரும்பியிருக்க, வயிற்று வலியும், தலை வலியும் குறையவில்லை.

அதற்கும் மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள். வயிற்று புண்ணுக்குத் தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக் கொண்டார். அவரின் உடல்நலம் நல்ல நிலையில் இருக்கும் போதே சொத்துகள் அனைத்தையும் பிரித்து எழுதி விட்டார்.

ஏக்கர் கணக்கில் இருந்த நிலங்களை மொத்தம் நான்கு பங்காகப் பிரித்து, கந்தன், தேன்மொழி, அன்பழகன், மணிவண்ணனுக்குக் கொடுத்தார். யாரின் மறுப்பையும் அவர் பொருட்படுத்தவில்லை. கைவசம் இருந்த சேமிப்பை நிர்மலாவிடம் கொடுத்து விட்டார். அவர்களின் வீட்டை அன்பழகனுக்கும், அவர் வசமிருந்த நகைகள் மொத்தத்தையும் தேன்மொழிக்கும் எனக் கொடுத்து விட்டார். ஒரு நல்ல நாளில் பேத்தியின் பங்கு நகைகளை மூத்த மகனிடம் ஒப்படைத்தும் விட்டார்.

இப்போதெல்லாம் பிள்ளைகளை வைத்து இரண்டு குடும்பங்களுக்கு நடுவிலும் போக்குவரத்தும், நெருக்கமும் அதிகமாகி இருந்தது.

பண்டிகைகள், நல்ல நாள்கள், திருவிழாக்கள், விசேஷங்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒன்றாகச் சென்றார்கள். நான்கு நாள்கள் விடுமுறை என்றாலும் ஒரே வீட்டில் கூடி விட்டார்கள்.

கந்தன் அம்மாவிற்குக் கையடக்க அலைபேசி வாங்கிக் கொடுத்து விட்டார். அதில் அடிக்கடி பேசிக் கொள்கிறார்கள். அந்த அலைபேசியே வழியே பேசி பேசியே அவர்களுக்கு இடையில் இருந்த தூரத்தையும், பிரிவையும் கடக்க முயற்சித்தார்கள்.

அப்பொழுது அக்காவின் பிரிவு தந்த வருத்தத்தில் இருந்து அன்பழகன்தான் முதலில் விடுபட்டான். பிரிவில் இருந்து மட்டுமே. அதற்காகப் பாசம் குறைந்தது என்றில்லை. பாசம், அது அவனைப் போலவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, திடமாக வளர்ந்து கொண்டு தானிருந்தது.

அப்போது அவனுக்குப் பதினொரு வயது. பொங்கலுக்கு வீடு வந்த பெரியப்பா குடும்பம் நான்கு நாள்கள் கழித்து ஊருக்கு கிளம்ப, மிகவும் சோர்ந்து விட்டான்.

விவசாயக் குடும்பத்திற்குப் பொங்கல் எத்தனை பெரிய பண்டிகை. ஆடு, மாடு, வீடு என அத்தனையையும் அழகாக்கி, அலங்கரித்து, அவன் கைப் பிடித்துச் சாமி கும்பிட்ட அக்கா கிளம்பவும், “அக்காவும் நம்ம கூடவே இருக்கட்டும் அப்பத்தா..” என்று பல நாள்கள் கழித்துத் தொண்டையடைக்கச் சொல்லி விட்டான்.

“டேய் அன்பே, சும்மா சும்மா அடம் பிடிச்சு அழக் கூடாது டா. ஏப்ரல்ல நமக்கு ஆனுவல் லீவ் வரும்ல? அப்போ அக்கா இங்க வந்துடுறேன். நமக்கு ஸ்கூல் திறக்கற வரைக்கும் அக்கா இங்கதான் இருப்பேன். சரியா?” என்று தேன்மொழி கேட்க அவன் முகம் தெளியவில்லை.

“அப்பத்தாவுக்கு நீதான் டா தம்பி தொணையா இருக்கணும். அப்பத்தாவை நீதான் பார்த்துக்கணும். சரியா?” அவன் தலைக் கலைத்து அவள் கேட்க, மெதுவாக அவன் முகம் மாறியது. மெலிதாகப் புன்னகைத்துத் தலையசைத்தான்.

இப்பொழுது அவனது வயதும் அதற்குத் துணை புரிந்தது. நிறையவே மாறினான் அன்பழகன்.

பதிமூன்று வயதான பேத்தியை கவனித்து அவளைச் சீவி சிங்காரித்து அழகு பார்க்கையில், பீர்க்கை வளர்த்தியில் நிற்பவளை கண்டு பிரம்மிக்கையில், பெரியநாச்சிக்கு வேறொரு கவலைப் பிடித்துக் கொண்டது.

“என் பேத்தி.. என் பேத்தி..” என்று எப்போதும் அவள் நினைவாகவே, அவளைப் பற்றிய பேச்சாகவே சுற்றினார். அவரின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் அடிக்கடி அவளைப் போய்ப் பார்த்து வந்தார்.

அவரின் மனத்தைத் துல்லியமாகப் படித்த முத்தம்மா, தேன்மொழியை விடுமுறைக்குப் பெரியநாச்சியிடம் கொண்டு விட்டார். அந்த இரண்டு மாத விடுமுறை இனிமையாகக் கழிந்தது.

“பள்ளிக்கோடம் போகையில வர்ரயில கவனமா இருக்கணும் தேனு” என்று ஆயிரம் அறிவுரைகள் பேத்திக்கு சொல்லி பெரிய மகன் வீட்டில் அவளை விட்டு வந்தார் பெரியநாச்சி. ஆனால், அவர்தான் திரும்பி வந்தாரே ஒழிய, மனம் பேத்தியிடமே நின்றிருந்தது.

தேன்மொழி பதினான்கு வயதை எட்டி இரண்டு மாதங்கள் கடக்கையில் பெரியநாச்சியும் அவர்களிடம் இருந்து விடைபெற்று இறைவனடி சேர்ந்திருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top