தேன்மொழியின் கண்கள் கலங்கித் தளும்பி நிற்பதைப் பார்த்ததும், பெரியநாச்சியின் மனம் கலங்கி விட்டது.
“ராசாத்தி, அப்பத்தா தெரியாம அடிச்சிட்டேன்த்தா. மன்னிச்சுடுத்தா” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.
தேன்மொழி அப்படியே இறுக்கமாக நிற்க, “இப்படி என் பேத்தியை அடிச்சு அழ வச்சு பாக்கற அளவுக்குக் கல் நெஞ்சக்காரியா போனேனே” என்று அழுகையுடன் புலம்பினார்.
“அப்பத்தாவுக்கு மட்டும் உன்னிய இங்க விட்டுட்டு போக ஆசையா ராசாத்தி? நா எல்லாம் உன் நல்லதுக்குத்தான் செய்யுறேன். புரிஞ்சுக்கோ தேனு” என்று அவளின் முகவாயை பிடித்துக் கெஞ்சலாகக் கேட்க, அழுத்தமாக அவரையே பார்த்திருந்தாள்.
அவரின் காரணங்கள் அவளுக்குப் புரியும் வயதில்லையே.
“உன் பெரியாத்தா சொல்றதைக் கேட்டு நல்ல புள்ளையா இருக்கணும் தேனு. என்னா?” என்று அவர் கேட்க, அதற்கு மட்டும் மெதுவாகத் தலையசைத்தாள்.
பேத்தியின் முதுகை தடவி தடவிக் கொடுத்தவர், தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி, அவளுக்கு உருப்போட்டு அங்கிருந்து விடைபெற்றார்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த பொற்கொடிக்கு மனம் கேட்கவில்லை.
“எப்படித்தான் இப்படிப் பிள்ளைகளைப் பிரிக்க இந்தக் கிழவிக்கு மனசு வருதோ? அதுவே பிரிச்சு விட்டுட்டு, அவள மனசாட்சி இல்லாம அடிக்கவும் செய்யுது பாரும்மா” என்று அம்மாவிடம் புலம்பினார்.
“பிள்ளைகளை உன் மாமியா பிரிக்கல. நாமதான் பிரிச்சுட்டோம்” என்றார் முத்தம்மா.
“என்னம்மா சொல்ற?”
“நிஜந்தான் சொல்றேன்.” என்றவரின் பார்வை ஆணி அடித்தது போலத் தேன்மொழியின் மீதிருந்தது.
“நீ பிள்ளைகளைத் தூக்கிட்டு போய் உன் மாமியா வீட்ல இருந்திருந்தா, இந்நேரம் அந்தப் பிள்ளைங்க ரெண்டும் உன்கிட்ட ஒன்னா வளர்ந்திருக்கும்ங்க” என்றவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் பொற்கொடி.
இம்முறை அக்காவை பிரிய அன்பழகன் அதிகம் அழவில்லை. அப்பத்தா ஊருக்கு எடுத்துச் செல்லவென மூட்டை மூட்டையாகப் பொருள்களை வண்டியில் ஏற்றிய பெரியப்பா, அத்தோடு சேர்த்து தன்னையும் போட்டு ஊருக்கு அனுப்பி விட மாட்டாரா என்று ஏக்கத்துடன் பார்த்த தேன்மொழியும் கூட அதன் பிறகு ஓரிரு நாள்களில் தேறி விட்டாள்.
குழந்தைகள் தங்களின் சூழ்நிலைக்குள் சீக்கிரமே பொருந்தி போவார்கள் என்பதை ஓரளவிற்கு உண்மையாக்கும் வகையில் இருந்தது அக்கா, தம்பியின் நடவடிக்கை.
அந்த வாரத்தில் ஒருநாள் அம்மா வீடு சென்றார் கந்தன். பெரியநாச்சியை வற்புறுத்தி மதுரையில் இருந்த பிரபலமான கண் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார்.
பெரியவருக்கு மகனைப் பார்த்ததும் பெருத்த ஆச்சர்யம்தான். முதலில் மருத்துவமனை வரவே மாட்டேன் என்று மறுத்தவர், மணிவண்ணன் நான் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லவும்தான், மகனுடன் செல்ல சம்மதித்தார்.
அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர்கள், “இரண்டு கண்ணிலும் புரை விழுந்திருக்கிறது. ஆக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” என்றார்கள். கூடுதலாக அவருக்குக் கண் அழுத்தமும் இருக்க, அதற்குத் தனியாகச் சிகிச்சை பெற்று, பின்னரே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்றார்கள்.
அவ்வளவுதான், பயந்து விட்டார் பெரியவர்.
மருத்துவர்கள் பயப்படத் தேவையில்லை என்று சொன்னதெல்லாம் அவரின் காதில் ஏறவேயில்லை. கந்தனும் எடுத்துச் சொல்ல, “நான்லாம் புள்ள பெக்க கூட ஆஸ்பத்திரி பக்கம் போகாதவய்யா. என்கிட்ட போய் ரெண்டு கண்ணுலயும் கத்தி வைக்கணும்னு சொன்னா, பயந்து வருதா இல்லையா?” என்று மகனிடம் எகிறினார்.
“காலம் போன காலத்துல எனக்கெதுக்குக் கண் ஆப்பரேஷன். நான் இப்படியே பொழப்ப ஓட்டிக்கறேன். எங்கண்ணு நல்லாதான் தெரியுது” என்றார்.
“ஆத்தா..”
“நீ பேசாம இருய்யா” என்று மகனை அதட்டியவர் கொஞ்சமும் மசியவில்லை.
“சரி ஆத்தா, நீ கண் ஆப்பரேஷன் பண்ணிக்க வேணாம். அந்த வயித்து வலிக்கு போய் டாக்டரை பார்த்திட்டு வந்திடுவோம், வா”
“வேணாம்யா. அங்கன நாலு இல்லாத பொல்லாதத சொல்லி நம்மள பயமுறுத்தி விடுவாய்ங்க. எதுக்கு? நான் வரல. என் உடம்பு நல்லாத்தான் இருக்கு. எனக்குத் தெரியும். நீ வா, நாம வீட்டுக்கு போவோம். எனக்கு வவுறு வலிக்கல” என்று பரபரத்தார்.
“ஆத்தா, இதெல்லாம் அப்பப்போ பார்த்துடணும். சொன்னா கேளு. இப்படியே பாக்காம விட்டு பெருசா இழுத்து வச்சுக்காத. ஒழுங்கா என் கூட வா. இப்பவே என்னனு பார்த்திட்டு வீட்டுக்கு போவோம். என்னால இன்னொரு நாள் வர முடியாது.”
“ஓஓஓ, வர முடியாதாமா? வர முடியாட்டி போடா. என்னைய பார்த்துக்க எனக்குத் தெரியும்” என்று கோபமாகச் சொன்னவர், அதற்கு மேல் கந்தன் எத்தனை கெஞ்சியும் இறங்கி வரவில்லை.
வயதான அம்மாவை வந்து பார்க்க முடியாத அளவுக்கு உனக்கு வேலை இருக்கிறதென்றால், நீ வரவே வேண்டாம் என்ற வயதானவர்களுக்கே உரிய வீம்பில், பிடிவாதமாக நின்றார்.
“சரிம்மா. கண் ஆப்பரேஷன் எப்போ பண்ணலாம் அதைச் சொல்லுங்க. நான் கொடியை கூட்டிட்டு வந்து விடுறேன், உங்களுக்குத் துணைக்கு…”
“என்னைய பாக்க யாரும் வர வேணாம். நான் எங்கேயும் போறதா இல்ல”
“நீ என்னாத்தா சின்னப் பிள்ளை கணக்கா அடம் பிடிக்கிற எல்லாத்துக்கும்” என்று சற்றே குரலை உயர்த்தி விட்டார் கந்தன்.
பெரியநாச்சி மகனை முறைக்க, “பிள்ளைகளைப் பிரிச்சு விடுற. ஆடு, மாடுகளையும் பிரிச்சு விடுற. அன்பு பயலை நாங்க வளர்க்கறோம்னு கேட்டா, அவனை அடமா உன் கூட வச்சுட்டு ஆடு, மாடை கொண்டாந்து விடுற. உனக்கென்ன கிறுக்கா ஆத்தா பிடிச்சிருக்கு” என்று கோபமாகக் கேட்டார் கந்தன்.
கண் மருத்துவமனை வளாகத்தில்தான் இன்னமும் இருந்தார்கள். பெரியநாச்சிக்கு வந்த கோபத்திற்குப் பொது இடமாக இருந்ததால் கந்தன் தப்பித்தார்.
“ஆமாய்யா மவனே, எனக்குக் கிறுக்குதான் பிடிச்சிருக்கு. கிறுக்குதான். இல்லனா, என் மூத்த மவனை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பி வைப்பேனா நான்?” என்று கேட்டார்.
“என்னம்மா பேசுற..”
“நீ பேசாதய்யா, பேசாத. இத்தினி வருஷம் பேசாதவன் இப்போ மட்டும் பேசாத, சொல்லிபுட்டேன். நான் புள்ளைங்கள பிரிச்சிட்டேன், பிரிச்சுட்டேன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்றியே… அதுங்கள கொடுமைப்படுத்துறேன்னு இப்போ வந்து புருஷனும், பொண்டாட்டியும் கத்துறீங்களே, அந்தப் புள்ளைங்க ஆத்தா செத்தப்போ நீங்க என்னடா பண்ணீங்க? சரி, அப்பத்தான் எதுவும் செய்யல விடு. என் மவன், உந்தம்பி போய்ச் சேர்ந்தப்போயாச்சும் ஏதாச்சும் ஆறுதலா சொன்னியா? இல்லையே.. நீ எதுவும் சொல்லலியே..”
“நானா புள்ளைக பேச்செடுக்கவும் தானே என்னா பண்றதுன்னு எம்மூஞ்சியைப் பார்த்தீங்க. அன்னைக்கு ஒரு வார்த்தை, நான் இருக்கேன் ஆத்தா, நீ கலங்காத. தம்பி புள்ளைங்கள நான் பாத்துக்கறேன்னு நீ சொல்லியிருந்தா, நான் ஏன்யா அந்தப் பச்ச மண்ணுங்களைப் பிரிக்கப் போறேன் நீயே சொல்லு?”
“ஆத்தா.. என்னிய மன்னிச்சுரு.. அந்நேரம் எனக்கு அது தோனல ஆத்தா..” என்றார் உள்ளே போய் விட்ட குரலில்.
“ஏன்னா அதுக உன் தம்பி பிள்ளைக தானே?”
“அப்படிச் சொல்லாத ஆத்தா”
“வேற எப்படி ராசா சொல்ல சொல்ற? எனக்கு எல்லாம் கெட்ட கனா போலருக்கு. உங்கப்பாரு திரும்ப வந்தா எல்லாம் சரியா போவும்னு இருக்கு. மருமவளும், சேகரும் வந்துட்டா..” மேலே பேச முடியாமல் சேலைத் தலைப்பால் வாய் பொத்தி சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தார்.
“எனக்கு மட்டும் பிள்ளைகள பிரிக்க ஆசையா? நான் என்னதான் செய்வேன்? நீ உன் மாமியா வீட்டோட இருக்க. நாங்க எப்படிய்யா அங்க வர்றது? அவுக நல்ல மனுஷங்கதேன்னாலும், நா அங்க வந்து சோத்துக்கு உக்கார முடியுமா? எம் பேரன் பேத்தியையும் சேர்த்து வளர்த்து குடுங்கன்னு அவங்ககிட்ட வந்து இரங்கி நிக்க முடியுமா? அது நல்லாருக்குமாயா நீயே சொல்லு? அப்படி வந்து நின்னா எங்களை ஊரு என்னா பேசும்?”
“ஊர் பேசுறதயெல்லாம் பார்த்தா காரியம் ஆவுமா ஆத்தா?”
“எனக்குக் காரியம் எதுவும் ஆக வேணாம்யா. என் பேரப் பிள்ளைக நல்லா இருக்கணும். அம்புட்டுதென்” என்றார். நீண்ட நெடுமூச்சை வெளியிட்டு.
“நீ ஒத்த வார்த்தை சொல்லியிருந்தா உன்கிட்ட அதுங்களை ஒப்படைச்சுட்டு நான் நிம்மதியா கண்ண மூடுவேன்”
“ஆத்தா..”
“ஆனா, உன்னால மாமியா வீட்டை விட்டு வர முடியாதேய்யா.. உன் புள்ளை குட்டி பொழப்பு எல்லாம் இப்போ அங்கத்தானே இருக்கு? அதென், உன்னால வர முடியல. எனக்கு விளங்குது. இந்த வயசுல புள்ள குட்டிய கூட்டிட்டு திரும்ப நம்ம வீட்டுக்கு உன்னாலயே வர முடியலன்னா.. இத்தனை வருஷம் வாழ்ந்த ஊரையும், வீட்டையும் விட்டுட்டு நான் மட்டும் எப்படிய்யா பொண்ணெடுத்த வீட்ல வந்து உக்காருவேன்? பேத்திக்காக வாம்மான்னு நீ சொல்லலாம். தேனுவ, நீயும், உன் பொண்டாட்டி குடும்பமும் நல்லா பார்த்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும் ராசா. பொம்பளை புள்ள இல்லாத வீடு. நீங்க அவள நல்லா பார்த்துப்பீங்க. அதென் அவள உங்ககிட்ட விட்டேன்”
“வீட்ல ஒரு ஆம்பளையாளு இல்லாம எல்லாத்தையும் நான் ஒருத்தி எப்படியா தனியா சமாளிக்க முடியும்? காடு, கழனி, தோட்டம், தொரவுன்னு எத்தனைய நான் ஒருத்தி பார்க்கறது? சரி, எங்களைப் பார்த்துக்க நீ இருக்கன்னு, இங்கன அப்படியே எல்லாத்தையும் அம்போன்னு விட்டுட்டு நான் வர முடியுமா? நாளைக்கு இந்தச் சொத்துப் பத்துலாம் நம்ம பிள்ளைகளுக்கு உதவும்ல? அதை யாரு பாத்து காப்பாத்தி விடுறது? நான் உன் வீட்ல வந்து உட்கார்ந்திட்டா, இங்க யாருய்யா பாப்பா?”
“அப்படி எல்லாத்தையும் விட்டுட்டு உங்கிட்ட வந்தா, நீ ஒருத்தன் சம்பாதிச்சத எத்தன பங்கா போட முடியும் நீ? நான் காரணம் இல்லாம எதையும் செய்யல கந்தா”
“தாய் இல்லாம போனா என்னய்யா, தாய் மாமன் நான் தாங்கிக்கறேன்னு மணிவண்ணன் வந்து நிக்கயில என்னால மறுக்க முடியலய்யா. அதுக்காக மொத்த சுமையையும் அவென் தோளுல ஏத்தவும் மனசில்ல, அவனுக்கே ரெண்டு பிள்ளைக இருக்கையில நம்ம சொத்தை காபந்து பண்ணி எத்தனை பிள்ளைகளைக் கரை சேர்ப்பான் அவனும்? அவன் மொத்த உழைப்பையும் போட்டு வளர்த்து விட்ட சொத்தை அப்படியே அள்ளி நம்ம பிள்ளைக கையில கொடுக்க.. அவனுக்கு மனசு வரும்தான். மணிவண்ணன் நல்லவந்தான். ஆனா, நல்லவங்களையும் ரொம்பச் சோதிச்சு பார்க்கக் கூடாது இல்லையா?”
“உந்தம்பி போய்ச் சேர்ந்த நாள்லருந்து எம்புட்டு யோசிச்சாலும் எனக்கு இந்த ரோசனதான் சரியா பட்டுது கந்தா. அதான் காரியத்தில் இறங்கிட்டேன். உனக்கு அதுல உடன்பாடில்லன்னா நீ அன்னைக்கே சொல்லியிருக்கணும்யா.”
“அன்னைக்கு உங்க பேச்சை மீற முடியாமதான்..” என்ற மகனை சட்டென இடைமறித்தார் பெரியநாச்சி.
“என்னய்யா பேச்சை மீற முடியல? எல்லாம் என் முடிவை கேட்டீங்களே தவிர, இதைச் செய் ஆத்தா. பிள்ளைங்க சேர்ந்து வளரட்டும்னு யாரும் சொல்லலையே.” என்று அங்கலாய்த்தார்.
“அன்னைக்கு எதுவுமே பேசாம எழுந்து போனாளே என் மக பரமு, உன் கூடப் பிறந்தவ மாதிரி நீயும் கண்டுக்காம போய் இருந்தா.. இந்தப் பேச்சே..”
“ஆத்தா, ஏன் இப்படிப் பேசுற..”
“பின்ன என்னய்யா, பொம்பள புள்ள இல்லாத நீ, என் பேத்தியை தங்கமா பார்த்துப்பன்னுதான் உன்னை நம்பி அவளை அனுப்பினேன். நாளைக்கே நான் போய்ச் சேர்ந்தாலும், அவள ஏதோ ஒன்ன படிக்க வச்சு, மதிப்பா கட்டிக் கொடுத்துடுய்யா அது போதும்”
“தேனு, என் தம்பி பொண்ணு ஆத்தா. எனக்கும் மகனு அவ ஒருத்திதான் இருக்கா. என்னைய நம்பு ஆத்தா. அவளை நல்லபடியா வளர்த்து, நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்க வேண்டியது எம் பொறுப்பு” என்றார் தீர்க்கமாக. சத்தியம் போல. பெரியநாச்சியின் இதழ்கள் கோடாக விரிய, பார்வையை மறைத்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
“நீ வருந்தாத கந்தா. பிள்ளைங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பாங்க. உந் தம்பி, தம்பி பொண்டாட்டி நல்ல மனசுக்கு அவங்க புள்ளைங்க ரொம்ப நல்லாருப்பாங்க. அந்தக் குட்டி பய அன்பை எங்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்காதய்யா. அவனும் என்கூட இல்லன்னா.. இந்தக் கட்டை..”
“ஆத்தா…” என்றார் அதட்டலாக.
“எனக்கிருக்க ஒரே பிடிப்பு அவன்தான்யா. அவேன் மாமா மணிவண்ணன் பாசக்காரன்யா, பணம் காசை விட மனுஷங்களை மதிக்கிறவன். பிற்காலத்துல பேரனை பெரிய ஆளா கொண்டு வருவான் பாரு. நான் சொல்றேன். நீ வேணா எழுதி கூட வச்சுக்கோ” என்றார் அழுத்தமான நம்பிக்கையுடன்.