பத்து மாதங்கள் கழித்து…
ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமத்தின் உதவியே தேவைப்படுகிறது என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி.
அப்படியிருக்க ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை வளர்ப்பது அத்தனை சுலபமா என்ன? அதிலும் முதல் பிள்ளையும், இன்னும் குழந்தையாக இருக்கையில் எத்தனை சிரமங்கள் வரும்? ஆனால், இரண்டு குடும்பங்களின் உதவியோடு இரட்டை பிள்ளைகளோடு மகளையும் சிறப்பாகப் பார்த்துக் கொண்டாள் தேன்மொழி.
இத்தனைக்கும் இப்போது ரம்யாவும் கைக் குழந்தையை வைத்திருக்கிறாள். சரவணன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். எல்லாமே சந்தோஷ நிகழ்வுகள்தான். பொற்கொடி மகளைப் பார்த்தது போலவே மருமகளையும் பார்த்துக் கொண்டார்.
“இளஞ்சேரன், இளஞ்செழியன்” இருவருக்கும் ஆறு மாதம் இருக்கையில் அவர்கள் மாமன் அன்பழகனுக்குச் சந்தியாவைத் திருமணம் பேசி, முறையாகப் பூ வைத்து, பரிசம் போட்டார்கள். ஆறு மாதம் கழித்துத் திருமணத் தேதியை குறித்திருந்தார்கள்.
குழந்தைகள் இருவருக்கும் பதினோராம் மாதம் நடக்கையில் பூவிழிக்கு மூன்று வயது தொடங்கியிருந்தது. அதற்காகவே காத்திருந்தது போல உடனடியாகக் காது குத்து விழா நடத்த முடிவு செய்தார்கள்.
இம்முறை எந்த வாக்குவாதமும் இல்லாமல் முறையே அன்பழகன், சுதாகரன், ஜெயபாலன் என மூன்று தாய் மாமன்கள் பெயரையும் போட்டுப் பத்திரிக்கை அடித்தார்கள்.
விழா தினத்தன்று அழகிய நல்லூர் கிராமமே அலங்கரித்து நின்றது. ஊரின் முக்கியப் பகுதிகளில் மைக் செட் கட்டி பாட்டை அதிர விட்டார்கள்.
நெருங்கிய உறவுகளை அழைத்துக் குல தெய்வக் கோவிலில் பொங்கலிட்டு படைத்து, குழந்தைகள் மூவருக்கும் மொட்டை போட்டார்கள்.
மறுநாள் காலையில் ஊரையும், உறவையும் அழைத்து வீட்டின் முன்னே பெரியதாகப் பந்தல் போட்டு காது குத்து விழா நடத்தினார்கள்.
மறுபக்கம் மணக்க மணக்க கறி விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
ஊரே வாயில் கை வைத்து வியந்து பார்த்து, இனி வரும் காலம் முழுதும் பேசும் வண்ணம், தாய் மாமன்கள் சீரை சிறப்பாகப் பிரம்மாண்டமாகச் செய்தார்கள்.
தர்மாவின் புது வீட்டுக் கூடத்தில் சீர் பொருட்களை வைக்க இடம் போதவில்லை.
பட்டு வேட்டி சட்டையில் இருந்த மாமன்களுக்கு இணையாகப் பூவிழி பட்டுப் பாவாடை சட்டையில் மனத்தைக் கொள்ளை கொள்ள, இளஞ்சேரன், இளஞ்செழியன் இருவரும் குட்டி பட்டு வேட்டி சட்டையில் இருந்தார்கள்.
முன்தினம் மொட்டை போட்ட அசதியே இன்னும் தீரவில்லை அவர்களுக்கு.
விழாக்கு வந்தவர்களை ஜோடியாக நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் தர்மதுரை, தேன்மொழி.
“என்னடி தலையில இத்துணூண்டு பூ வச்சிருக்க..” என்று மனைவியை முறைத்து ஒரு பந்து பூவை எடுத்து வந்து அவள் கையில் தராமல் அவனே சூடி விட்டான்.
“மாப்ள நடக்கட்டும், நடக்கட்டும்..” என்று உறவுகள் கேலி செய்ததை அவன் பொருட்படுத்தவேயில்லை.
மஞ்சள் பட்டில் அவன் மனத்தை மயக்கினாள் மனைவி. எப்போதும் போலப் பட்டு வேட்டியில் இருந்த கணவனைக் கண்ணால் களவாடினாள் மனைவி.
நல்ல நேரத்தில் மூன்று மாமன்களும் வரிசையாக அமர, அன்பழகன் மடியில் பூவிழி அமர்ந்தாள். சுதாகரன் மடியில் இளஞ்சேரன், ஜெயபாலன் மடியில் இளஞ்செழியன் இருந்தான்.
அதைக் காணவே கண்ணு பட்டு விடும் போல் அத்தனை அழகாக இருந்தது.
“எம் புள்ளைங்க மேல ஊரு கண்ணே பட்டிருக்கும். ராத்திரி சுத்தி வைக்கணும்” என்று புலம்பினார் பவுனு அம்மாள்.
“ராசாத்தி..” மனம் நெகிழ பேத்தியின் பிள்ளைகளைப் பார்த்திருந்தார் முத்தம்மா, அவருடன் நின்றிருந்தார் கருப்பண்ணசாமி.
பொற்கொடி கந்தன் தம்பதிகள் அந்த வயதிலும் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தார்கள். பல வருடங்களுக்கு முன்பு பெரியநாச்சி அவர்களிடம் ஒப்படைத்த பெரிய பொறுப்பு தேன்மொழி. ஆனால், ஒரு நாளும் அவளைப் பொறுப்பாக மட்டுமே அவர்கள் பார்த்ததில்லை.
தேன்மொழி அவர்களின் மகள். அவ்வளவுதான். அவளின் பிள்ளைகளையும், அவளையும் நிறைவோடு கண் நிறையப் பார்த்தார்கள்.
தங்கை மகளை ஆதூரமாகப் பார்த்து நின்றார் மணிவண்ணன். அவரோடு நிர்மலா, சரவணகுமார் குடும்பமும் நின்றிருந்தார்கள்.
மீனாட்சி, சேகரன், பெரியநாச்சி இன்று இருந்திருந்தால் தேன்மொழி வாழ்வை கண்டு மனம் நிறைந்திருப்பார்கள் என்று மனைவியிடம் சொன்னார் மணிவண்ணன்.
சுந்தரராஜன், திலகவதி அந்த வயதிலும் பரபரப்புடன் சுழன்று வந்தவர்களைக் கவனிக்க, அவர்களுக்கு முன்னே நின்று அனைத்தையும் பார்த்தார்கள் அன்புக்கரசி, லோகேஷ்வரன் தம்பதிகள்.
குமந்தைகள் மூவருக்கும் காது குத்த, வலியில் கத்தி அழுதார்கள்.
“அழ கூடாது சிங்கக் குட்டி. அழக் கூடாது பூக்குட்டி” என்று சமாதானப்படுத்திய மாமன்களின் கண்களும் கலங்கியிருந்தது.
“அவ்ளோதான் முடிஞ்சது. யாருடா என் மருமகன அடிச்சது” என்று அலைப்பறையைக் கூட்டிக் கொண்டிருந்தான் ஜெயபாலன்.
பூவிழிக்கு அப்பாதான் எல்லாம் என்றால், மகன்கள் அம்மா பிள்ளைகள்.
பூவிழியை அன்பழகன் வைத்திருக்க, சேரன், செழியனை தர்மாவும், தேனுவும் தூக்கிக் கொண்டார்கள். அப்போதுதான் அவர்களின் அழுகை சற்றே குறைந்தது.
“என்னடா அன்பே. அண்ணனை கவனிக்காம உன் ஆளையே பார்த்திட்டு இருக்க?” என்று தம்பியின் தோளில் கைப் போட்டான் ஜெயபாலன்.
“ண்ணே. என்னைய விடே..” என்று பல்லைக் கடித்து விலகினான் அன்பழகன்.
“என்னடா அன்பே.. டேய் ஆபிசர். பெரிய ஆள் ஆனதும் அண்ணனை கழட்டி விட்டுட்ட பார்த்தியா?” என்று சோக ராகம் பாடினான். உடனே சிரித்தான் அன்பழகன்.
“அப்படிச் சிரிடா..” என்றான். அந்தச் சிரிப்பு அவனுக்கு அல்ல என்று அவனிடம் யார் சொல்வது.
“வாண்ணே” என்று அண்ணனின் தோளில் கைப் போட்டான் அன்பு. அதைக் கண்டதும் அவர்களை முறைத்தாள் பத்மப்ரியா.
அவ்வாறாகக் கலாட்டாவும் சிறப்புமாக ஊரே மெச்சும் வண்ணம் தர்மா தேனு பிள்ளை செல்வங்களின் காது குத்து விழா சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.
அன்றைய இரவு குழந்தைகள் மூவரும் உறங்கவே இல்லை. வலியில் சிணுங்கி கொண்டேயிருந்தார்கள்.
பெரியவர்கள் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டாலும் தேனுவிடம் மட்டுமே அமைதியானார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளும் சோர்ந்து போனாள். மகளைத் தூங்க வைத்த தர்மா, “நான் பார்த்துக்கறேன் தேன்னு. நீ தூங்கு” என்று கண்டிப்பாகச் சொன்னதும் அசதியில் உறங்கி விட்டாள்.
அவள் நடுவில் கண் விழிக்கும் போது தர்மா, அன்பு படுத்திருக்க, அவர்களுக்கு நடுவே சேரன், செழியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். பூவிழி அவளுக்கு அருகில் படுத்திருந்தாள்.
மூன்று நாள் விடுமுறை முடிந்து அன்பழகன் வேலைக்குக் கிளம்ப, “மாமா..” என்று கத்தி அழுகையை ஆரம்பித்தாள் பூவிழி.
“நீ ஸ்கூலுக்குப் போகணும் பாப்பா. உள்ள வா. மாமா வேலைக்குப் போகட்டும்” என்று தேன்மொழி சொன்னது எங்கே பூச்செண்டின் காதில் விழுந்தது. அவள்தான் கத்திக் கொண்டிருந்தாளே.
அக்காவைப் பார்த்து தம்பிகளும், “மாமா..” என்று கத்தி அழ, அன்பழகனால் அங்கிருந்து நகரவே முடியவில்லை.
அப்போது தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிய தர்மா, “நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு அன்பு” என்று அவனை வழியனுப்பி வைத்தான்.
அந்தத் தெரு முனையை அன்பழகன் கடக்கும் வரைக்கும், “மாமா..” என்ற அழுகை கேட்டுக் கொண்டேயிருந்தது.
“அப்பா கூடத் தோட்டத்துக்குப் பூ பறிக்க யாரு வர்றா? வண்டியில போகலாம்” என்று தர்மா கேட்க, “நானு..” என்று அழுகையை நிறுத்தி அப்பாவிடம் ஓடினார்கள் மூவரும். மனைவி பிள்ளைகளுடன் அந்தக் காலை வேளையில் பூந்தோட்டத்திற்குச் சென்றான் தர்மதுரை.
அந்தச் சிறிய வீடு அவர்களின் இருப்பால் அழகாகியது அவனுக்கு.
மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், சாமந்தி, ரோஜா எனப் பூக்கள் சூழ்ந்திருந்த இடத்தில், பூ வாசத்தோடு அமர்ந்திருந்தவன் அந்த ஏகாந்த மனநிலையில் மனைவியை மென்மையாகத் தோளோடு அணைத்து அழுத்தமாக அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அப்பாவை போலவே அம்மாவுக்கு முத்தம் கொடுத்தாள் பூவிழி. அதுவரை அங்கும் இங்கும் தளிர் நடைப் போட்டுச் சுற்றிக் கொண்டிருந்த சேரனும், செழியனும் அப்பாவிடம் வந்தார்கள்.
“உம்மா..” என்று மாறி மாறி அம்மா, அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டார்கள்.
அந்த முத்தத்தின் ஈரம் நெடுநேரம் விலகாமல் இருந்தது.
தேன்மொழி கணவனின் தோளில் சாய்ந்து அண்ணாந்து அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள். அதே புன்னகை அவன் முகத்திலும் மலர்ந்தது.
இந்த வாழ்வென்பது வண்ண மயமான மலர்களைப் போன்றது.
மலர் தோட்டத்தைப் போலவே வாழ்விலும் இலையுதிர் காலம் வரும், மழையும் வெயிலும் வரும் பூக்கள் வாடும். ஆனால், அதன் பின் தவறாமல் வசந்தம் வரும், இலைகள் துளிர்க்கும், மொட்டு விடும் பின் முழுதாக மலரும். மனம் கவரும் மணம் பரப்பும்.
வாழ்வு சில நேரம் ரோஜா போன்றது.
அழகான ரோஜாவை அடைய அவ்வப்போது முட்கள் குத்தினாலும், ரோஜாச் செடியை போலவே வாழ்வும் ரோஜாக்களைப் பரிசளிக்கத் தவறுவதில்லை.
இந்த வாழ்வென்பது வரமானது!!!
நிறைந்தது!!!
சுபம்!!!