அன்று சரவணகுமாருக்குத் திருமணம். மணமகள் குடும்பமும் மதுரைதான். ஆனால், தற்போது வசிப்பது சென்னையில். சரவணன் அங்கு வேலை பார்ப்பதால் சென்னையில் இருக்கும் பெண்ணாகத்தான் தேடியிருந்தார்கள். சுற்றி வளைத்து பார்த்தால் சொந்தம்தான்.
உறவுகள் அனைவரும் வந்திருக்க விமர்சையாக நடைபெற்றது அவன் திருமணம்.
“டேய் அன்பே, டக்குனு திரும்பிப் பாக்காத. அப்படியே மெதுவா எங்கிட்டோ பாக்கற மாதிரி லேசா திரும்பி லெஃப்ட் சைடு பாரு. அங்க நிக்குற சிவப்பு சேலை உன்னயவே கண்ணெடுக்காம பாக்குது டா” என்று தம்பியின் தோளில் சாய்ந்து கிசுகிசுத்தான் ஜெயபாலன்.
“பேசாம இருண்ணே. நீ சைட் அடிக்குறதுக்கு நான் ஆளு இல்ல”
“டேய் அன்பே, அண்ணன பார்த்து என்னா வார்த்தடா சொல்லிட்ட. நான் உங்கண்ணி பத்மா விரதன்டா. அவளைத் தவிர யாரையும் திரும்பி கூடப் பார்க்க மாட்டேன்”
“ஏன் திரும்பி பார்க்க பயமாண்ணே?”
“இல்ல.. ஆமா, பத்மா என்னைய கொன்னேபுடுவா” என்று அவன் சொல்லவும், பக்கென்று சத்தமாகச் சிரித்து விட்டான் அன்பழகன்.
“டேய், திரும்பி பாரு டா. அந்தப் பொண்ணு திரும்பி திரும்பி உன்னையதான்டா பாக்குது”
அன்பழகன் லேசாகத் திரும்பிப் பார்த்தான். அண்ணன் சொன்னது உண்மைதான். அந்தப் பெண் அவனைத் திரும்பி திரும்பி பார்க்காதது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னடா அன்பே?”
“என்ன என்னடா? அண்ணே மாதிரி பேசுண்ணே..”
“அடிங்க..” என்று ஜெயபாலன் அவனை இடிக்க, அந்தப் பெண் அவர்களை நோக்கித்தான் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளோடு தேன்மொழியும் வந்தாள்.
அன்பழகன் சட்டென எழுந்து அவன் இருக்கையை அக்காவுக்குக் கொடுத்தான்.
ஜெயபாலன் கூட எழுந்து விட்டான். பின்னே தங்கை இரண்டு குழந்தைகளை அல்லவா சுமந்து கொண்டிருக்கிறாள்.
அது தெரிந்த நாளில் அவன் செய்த ஆர்ப்பாட்டம் இருக்கிறதே.
“மாப்ள, மாமன்ஸ் ஹாப்பி மாப்ள..” என்று தர்மா எதிர்பாராத நேரத்தில் அவனைத் தோளோடு சேர்த்தணைத்து விடுவித்தான்.
சும்மாவே தங்கையை அன்பாகக் கவனிப்பான். இப்போது ஒரே பாச மழைதான்.
“ஒரு வாரமா சந்தோஷ செய்திய சொல்லாம விட்டுட்டீங்களே எங்கிட்ட..” என்று போலியாகக் கோபித்தும் கொண்டான்.
“உக்காரு தேனு” என்று தங்கையை அமரச் சொன்னான்.
“இருக்கட்டும்ண்ணா. இது சந்தியா. என் சின்ன மாமியார் பொண்ணு.” என்று அவர்களுக்கு அந்தப் புதிய பெண்ணை அறிமுகப்படுத்தினாள்.
அவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் இருந்தது. ஆனால், ஜெயபாலனுக்கு அடையாளம் தெரியவில்லை.
தங்கை அறிமுகப்படுத்தவும் பொதுவாக அவளின் படிப்பு, வேலை குறித்து விசாரித்தான்.
“உன்னைய அம்மா கூப்பிறாங்க வாண்ணே” தேனு அழைக்கவும், தம்பியை பார்த்துக் கண் சிமிட்டி விட்டு தங்கையோடு நடந்து விட்டான் ஜெயபாலன். அன்பழகன், சந்தியா இருவரும் தனியாகப் பேசிக் கொண்டார்கள்.
திருமண வீட்டில் தானே பல திருமணங்கள் முடிவாகிறது.
அதற்குள், “தேன்னு..” என்று மனைவியைத் தேடி வந்து விட்டான் தர்மா.
அடர் பழுப்பில் மயில்கள் நெய்யப்பட்டிருந்த மென்பட்டில் இருந்தாள் அவள். அவளின் மேடிட்ட வயிறு நன்றாக வெளியில் தெரிந்தது.
நீண்ட பின்னலில் நிறைந்திருந்த மல்லிகையும், பொன் நகையும், புன்னகையும் அவளை அழகுற மிளிர செய்தது.
“ஒரு எடத்துல உக்காரேன் தேன்னு. கால் வலிக்கப் போகுது” என்று அவளின் கைப் பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமரச் செய்து தானும் அமர்ந்தான்.
“எனக்கு வேலையிருக்கு. வீட்டுக்கு கிளம்புவோமா?” என்று அவன் கேட்க, அவளுக்காகத்தான் கேட்கிறான் என்று அவளுக்கும் தெரிந்திருக்க, “இருங்க, அத்தைக்கிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்று எழுந்தாள் தேன்மொழி.
“நீங்க கிளம்புங்க மாப்ள. இங்க நான் பார்த்துக்கறேன்” என்றான் ஜெயபாலன். பின்னே அது அவனது மச்சான் திருமணம் அல்லவா. அதுவரை ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அப்போதுதான் ஓய்வாக அமர வந்திருந்தான். இப்போது மீண்டும் வேலைகளைக் கவனிக்க ஓடினான்.
நிர்மலாவிடம் சொல்லிக் கொண்டு வீடு திரும்பி விட்டார்கள் தர்மா குடும்பத்தினர்.
அன்பழகனின் பார்வை அடிக்கடி சந்தியா பக்கம் செல்வதைப் பார்த்ததும் அக்கா, மாமா முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“அம்மா.. பாப்பா.. ல்ல.. தம்பி… தம்பி பாப்பா..” என்று அம்மாவின் மேடிட்ட வயிறை தொட்டு தொட்டு சொன்னாள் பூவிழி. அவளுக்குத் தங்கை வேண்டுமாம், தம்பியும் வேண்டுமாம். தம்பிதான் அடிக்கடி கேட்கிறாள்.
“பாப்பா, தம்பி ரெண்டுமே கேளு செல்லக் குட்டி.” என்று மகள் கேட்கும் போதெல்லாம் சொல்வான் தர்மா.
“தம்பிதான்” என்பாள் தேன்மொழி.
“உங்களைப் போலவே ரெண்டு பசங்க வேணும் எனக்கு”
“ஆனா, எனக்கு உன்னைய போலவே இன்னொரு பொண்ணு வேணுமே டி சிலுப்பி. அதுனால உன்னைய போல ஒரு பொண்ணு. உனக்காக ஒரு பையன். சரியா?” என்று அவன் கேட்கையில், “ம்ம்” என்று தலையசைத்து சிரிப்பாள். ஆனாலும், உள்மனத்தில் மகன் ஆசையே அவளுக்கு நிறைய இருந்தது.
பேரன் பொண்டாட்டி இரட்டை பிள்ளைகளைச் சுமக்கிறாள் என்று சொன்னதும் அப்பத்தாவை கையில் பிடிக்க முடியவில்லை.
“அப்பனே முருகனே..” என்று கை உயர்த்திக் கடவுளை கண் மூடி பிரார்த்தித்தார்.
“இந்த மொற பேரனை பெத்துக்குடுத்தா” என்றார் தேன்மொழியிடம்.
“ஏ அம்மாச்சி, பேத்தி வந்தா வேணாம்னு சொல்லுவீங்களா?”
“ஆத்தே. நீ நல்லபடியா புள்ளைய பெத்துக்குடுத்தா. அது போதும். ரெட்டை உசுரு. சூதானமா இருக்கணும் நீ” என்றார் அவளிடம் தீவிரமாக.
அவள் நிற்க, நடக்க, உட்கார என எல்லாவற்றுக்கும் விதிகள் விதித்தார். அதற்குச் சரியான காரணங்களும் இருக்க, தேன்மொழி அமைதியாகக் கேட்டுக் கொண்டாள்.
இரண்டு வீட்டுப் பெரியவர்களும் அவளைக் கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொண்டார்கள்.
தர்மாவை பற்றிச் சொல்லவே தேவையில்லை. மனைவியை அப்படித் தாங்கினான்.
ஐந்தாம் மாதமே ரம்யா, பத்மா இருவரும் சேர்ந்து அவளுக்கு வளையல் போட்டு ஜடை தைத்துச் சின்னதாக வளைகாப்பை வீட்டிலேயே நடத்தி விட்டார்கள்.
அவளுக்குப் பிடித்ததைச் செய்து கொடுப்பது, கை வைத்தியம் பார்ப்பது எல்லாம் அன்புக்கரசியின் வேலை. அவளுக்கு ஜடை தைத்து நிறையப் புகைப்படங்கள் எடுத்தார்கள்.
சரவணன் திருமணத்தில் இருந்து வீடு திரும்பியதும், “நீ வீட்ல இரு தேன்னு. நான் தோட்டத்துக்குப் போய்ட்டு கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என்று சொல்லி சென்றான் தர்மதுரை.
“நீ போய்ச் சேலையை மாத்திட்டு வா தேனு. நான் சூடா டீ போடுறேன்” என்றார் திலகவதி.
“இருங்கத்தே. நான் வந்து டீ போடுறேன்” பத்து நிமிடத்தில் உடை மாற்றி வந்தாள்.
“ம்மா.. தீ..” திலகவதியின் இடுப்பில் அமர்ந்திருந்த பூவிழி கேட்கவும், “டீ வேணுமா டி தங்கப் புள்ள. இரு உங்கம்மா போட்டு தருவாங்க” என்றார் திலகவதி.
மகளின் கன்னம் வருடி விட்டு, அடுப்பில் பாலை ஏற்றினாள் தேன்மொழி.
“தேனு, நீ சந்தியா கிட்ட பேசினியா? உனக்கு அவள புடுச்சுருக்கா..?”
“எனக்கென்ன சந்தியாவ தெரியாதா அத்த? எத்தன மொற நம்ம வீட்டுக்கு வந்திருக்கா.”
“ம்ம். என் தங்கச்சிக்கு, சந்தியாவ அன்பழகனுக்குக் கட்டணும்னு ஆச..”
“அதான் சொன்னீங்களே அத்த. அன்புவும் அவளும் இன்னைக்குப் பேசிக்கிட்டாங்க. நான் அப்புறமா அன்புக்கு போன் பண்ணி பேசிட்டு என்னானு சொல்றேன்த்தே” என்றாள்.
“ம்ம், நல்ல செய்தியா சொல்லு” என்றார், எதிர்பார்ப்புடன்.
அன்றிரவே அவர் எதிர்பார்த்த சந்தோஷ செய்தி பதிலாக வந்திருந்தது.
தேன்மொழிக்கு எட்டாம் மாதம் நடக்கையில் அன்பழகன் – சந்தியா திருமணப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்திருந்தார்கள் இரண்டு குடும்பத்தினரும். இரு பக்க சம்மதத்துடன் அவர்களுக்குள் பேசி வைத்துக் கொண்டார்கள்.
“என்னடா, ஏன் இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்ற? உனக்குச் சந்தியாவ பிடிச்சிருக்கு தானே?” அன்பழகன் திருமணத்தைத் தள்ளி போட நேரடியாக அவனிடமே கேட்டு விட்டாள் தேன்மொழி.
“பிடிச்சிருக்கு கா. ஆனா, இன்னும் ஒரு வருஷம் போகட்டும்”
“ஏன் டா? நீ வேலைக்குப் போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆகப் போகுதே? இன்னமும் எதுக்காக வெயிட் பண்ற?” என்று தேன்மொழி கேட்டுக் கொண்டிருக்கும் போதே மகளைத் தோளில் சுமந்தபடி மாடிக்கு வந்தான் தர்மா.
“அதானே. இன்னமும் எதுக்கு வெயிட் பண்ற அன்பு?” என்று தர்மாவும் கேட்டான்.
மூவரும் மொட்டை மாடித் தோட்டத்திற்காகப் போடப்பட்டிருந்த கூரையின் கீழ் கால் நீட்டி அமர்ந்தார்கள்.
“மா..மா” என்று கத்தி அன்புவிடம் தாவினாள் பூவிழி.
“உனக்கு அத்த வேணுமா என் பூச்செண்டு?” தர்மா மகளிடம் கேட்க, “அத்த..” என்று மிழற்றினாள் மருமகள்.
“பாரு அன்பு. பாப்பாக்கு அத்த வேணுமாம்”
“சும்மா இருங்க மாமா..”
“அட..” என்று மேலும் அவனைக் கேலி செய்யப் போன கணவனை முறைத்தாள் தேன்மொழி.
“இப்போ என்ன பிரச்சினை உனக்கு அன்பு. எங்கிட்ட சொல்லு. சந்தியா எந்தங்கச்சின்னு அவளுக்குச் சரின்னு சொல்லாத. அவளைப் பிடிக்கலன்னா சொல்லு. வேற பொண்ணு பார்ப்போம். என்ன சொல்ற?”
“நான் இப்போதைக்குக் கல்யாணமே வேணாங்கறேன் மாமா”
“அதான் ஏன்?”
“அக்கா டெலிவரிக்கு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கறேன் மாமா”
“உன் கல்யாணத்துக்கும் உங்கக்கா டெலிவரிக்கும் என்னடா சம்மந்தம்?” என்று கேட்ட மாமனை முறைத்தான் அன்பழகன். பின்னே இரட்டை பிள்ளைகளைச் சுமந்து கொண்டு அக்கா தன் கல்யாண வேலைகளைச் செய்ய அன்பு தம்பி அன்பழகனுக்கு மனம் வருமா? அதனாலேயே மறுத்தான்.
“சரி அன்பு. இப்போ பரிசம் போட்டுட்டு ஆறு மாசம் கழிச்சுக் கல்யாணத்தை வச்சுப்போம். சரியா?” என்று தர்மா கேட்கவும் சம்மதித்தான் அன்பு.
மொட்டை மாடியில் வீசிய தென்றல் பூவிழியை வருடி செல்ல அப்படியே கண்ணயர்ந்திருந்தாள் குழந்தை.
அன்பழகன் வாகாகச் சரிந்து படுக்க, அவன் மார்பில் உறங்கியபடி, அப்பாவின் ஒற்றை விரலை இறுகப் பற்றியிருந்தாள்.
“தேனு, சாப்பிட வாங்க” என்று திலகவதி கீழிருந்து அழைக்க, தேன்மொழி இறங்கி கீழே சென்றாள்.
அவள் திரும்பி வரும் போது தர்மா, அன்பு இருவருமே உறங்கியிருந்தார்கள். அவர்களுக்கு நடுவே பூவிழி பூச்செண்டும் உறங்கியிருந்தாள்.
தம்பி இப்படி அவளோடு இருப்பதற்கு எத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. அவள் கண் முன் கவிதையாக விரிந்திருந்த காட்சியைக் காண்கையில் அவளுக்குப் புன்னகையும், கண்ணீரும் ஒன்றாகத் துளிர்த்தது.
அந்நேரம் அவளின் மனநிலை உணர்ந்தது போல, வயிற்றிலிருந்த குழந்தைகளும் உதைத்துத் தங்களின் இருப்பை வெளிப்படுத்தினார்கள்.
“அ..ம்மா..” என்று அவள் வயிற்றை மென்மையாகப் பிடித்து நிற்க, “தேன்னு, என்னடி..” என்று பதறி எழுந்து விட்டான் தலைவன்.
“ஒன்னுமில்லங்க. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஓங்கி உதைச்சு விளையாடுறாங்க” என்றாள் சிரிப்புடன்.
“உன்னைய யாரு தனியா மாடி ஏறி வரச் சொன்னது? உங்கத்த எப்படி அனுப்பினாங்க?” என்று கோபித்துக் கொண்டான்.
அந்தச் சத்தத்தில் அன்பு எழுந்து விட, மகளோடு கீழிறங்கினார்கள்.
அன்று முழுக்கக் குழந்தைகள் உறங்கவே இல்லை. அவள் வயிற்றில் ஓடி பிடித்து விளையாடினார்களோ என்னவோ. அதில் பூவிழிக்குதான் ஒரே கொண்டாட்டம்.
“பாப்பா.. தம்பி.. ம்மா, நானு..” என்று அம்மாவின் வயிற்றில் அடிக்கடி கை வைத்து பார்த்து குதூகலித்து, முத்தம் கொடுத்து கொடுத்து ஓய்ந்து ஒரு வழியாகத் தூங்கினாள்.
தேன்மொழிக்கு தூக்கமே வரவில்லை.
“நீ மட்டும் போதும்னு சொன்ன எனக்கு ஆண்டவன் அள்ளி கொடுத்துட்டான் டி” தன் பிள்ளைகளின் அசைவை உணர்ந்தபடி உள்ளார்ந்த குரலில் சொன்னான் தர்மா.
தேன்மொழிக்கு இப்போது இது போதும் என்ற மனநிலை வாய்த்திருந்தது. இந்த வாழ்க்கைக்கு இவனது அன்பு போதும் என்று பூரண மனநிலை.
மெல்ல அவன் தோள் சாய்ந்து ஒருக்களித்துப் படுத்தாள்.
“நீ சொன்ன ஒரு வார்த்தைதான் என்னோட தொழில் வளர்ச்சி எல்லாத்துக்கும் காரணம். என் வாழ்க்கைக்கு அர்த்தமே நீதான்டி” அவள் முகத்தைக் கையில் ஏந்தி மனதாரச் சொன்னான்.
அவள் வேண்டியது, விரும்பியது எல்லாம் அவளுக்கென ஒரு குடும்பம். அது அவனால் வாய்த்தது. அவள் மனம் நிறைந்திருக்க வார்த்தைகளுக்குப் பஞ்சமாகிப் போனது. கணவனின் மீசையைப் பிடித்திழுத்து அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.
அவளுக்குக் கொடுத்திருந்த பிரசவ தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே மனைவியைப் பிரசவத்துக்காக மருத்துவமனை அழைத்துச் சென்று விட்டான் தர்மா.
அவளுக்குச் சுகப் பிரசவம் சாத்தியம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் சிக்கலாகிப் போகக் குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்தார்கள்.
தேன்மொழி ஆசைப்படி மகன்கள் பிறந்தார்கள். தர்மதுரைக்கு அதில் இரட்டை மகிழ்ச்சிதான்.
பொற்கொடி, திலகவதி இருவரும்தான் பேரன்களை முதலில் வாங்கினார்கள். அடுத்து அவர்களைக் கையில் ஏந்தினார்கள் மாமன்கள், அன்பழகன் மற்றும் ஜெயபாலன்.
பூவிழி தம்பிகளைக் கண்டதும், “தம்பி, தம்பி” என்று குதித்துக் கொண்டாடி விட்டாள். அப்பாவின் கைப் பிடித்துத் தம்பிகளைத் தொட்டு பார்த்து சிரித்தாள்.
“அம்மா” என்று பாய்ந்து தேன்மொழியை அணைக்கப் போனவளை தடுத்துப் பிடித்தான் தர்மா.
“அப்பா பிடிச்சுக்கறேன். நீங்க அம்மாக்கு உம்மா குடுங்க” என்று மகளை மனைவியின் முகத்துக்கு நேராகத் தூக்கினான்.
மகள் ஈரமாக்கிய மனைவியின் கன்னத்தைத் துடைத்து விடும் சாக்கில் அவனும் அழுத்தமாகத் தன் உதடுகளைப் பதித்து விலகினான்.
அந்தக் கணம் தேன்மொழியின் உலகமே அவள் எதிரில் இருந்தது. கண்கள் மின்ன கணவனையும், பிள்ளைகளையும் மாறி மாறி பார்த்து புன்னகைத்தாள்.
தர்மா, பூவிழி முகத்திலும் அவளின் புன்னகை தொற்றிக் கொண்டது.