இந்த வாழ்வென்பது – 36 (2)

“தேன்னு” தவித்தது அவன் குரல்.

“இந்த டெஸ்ட் கிட் ரொம்ப நாளைக்கு முன்னாடி வாங்கி வச்சது தர்மா. இந்த ரிசல்ட் சரியா இருக்குமா?” என்று அவள் தயக்கத்துடன் கேட்கவும், “வா, ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடுவோம்” என்றான்.

“இப்பவா?”

“அப்புறம்? உன்னால காலைல வரைக்கும் வெயிட் பண்ண முடியுமா?”

“ம்ஹூம்” வேகமாக, மறுப்பாக ஆடியது அவள் தலை.

“அப்போ போகலாம் வா.” இருவரும் கிளம்பி வெளியில் வர, அன்பழகனும் வீடு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான்.

“நான் வீட்டுக்கு கிளம்பறேன்க்கா. மாமா போய்ட்டு வர்றேன்” இருவரிடமும், வீட்டு பெரியவர்களிடமும் சொல்லிக் கொண்டு வெளியேறினான்.

அவனிடம் அப்போதே சொல்லிவிடத் தேன்மொழி துடித்தாலும், முதலில் மருத்துவமனை சென்று உறுதி செய்து விடலாம். பின்னர்ச் சொல்லலாம் என்று தள்ளிப் போட்டாள்.

“ம்மா, நாங்க திண்டுக்கல் வரைக்கும் போய்ட்டு வந்துடுறோம்” தர்மா, திலகவதியிடம் தெரிவிக்க, என்ன இந்நேரத்திற்கு என்று கேட்கப் போனவர், “ஏதும் முக்கியமான ஜோலியாப்பா தொர? நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க. சின்னக் குட்டி வீட்ல இருக்கட்டும். நீங்க வீடு திரும்ப நேரமாகும்ல? எதுக்கு அவளையும் கூட்டிட்டு அலஞ்சுட்டு? ஏற்கனவே இன்னைக்கு மதுர போய்ட்டு வந்தது அசந்துட்டா பாப்பா..” என்று அவர் சொல்லவும், மனைவியின் முகம் பார்த்தான் அவன்.

தேன்மொழிக்கு மகளையும் அழைத்துச் செல்ல ஆசை. ஆனால், அத்தை சொல்வதும் சரியெனப்பட மகளை வீட்டிலேயே விட்டுச் செல்ல தீர்மானித்தாள்.

“பாப்பா..” என்று அவள் அழைக்க, பதிலுக்கு மகளின் சத்தமான அழுகுரல்தான் கேட்டது.

“மா..மா..” என்று கத்தி அழுதுக் கொண்டிருந்தாள் பூவிழி. மகளின் குரல் வந்த திசையான வாசலை நோக்கி ஓடினாள் தேன்மொழி.

மதில் கதவை பிடித்தபடி, தெருவில் நின்றிருந்த மாமனை போக விடாமல், “மாமா.. தூக்கு..” என்று கத்தி அழுது கொண்டிருந்தாள்.

அப்பத்தா மதில் சுவரில் சாய்ந்து நின்று கொள்ளு பேத்தியை பார்த்துக் கொண்டிருந்தார்.

“மாமா..” பூவிழி மீண்டும் கத்தியழவும் திரும்பி வந்து தூக்கிக் கொண்டான் அன்பழகன். மாமனின் தோளில் ஏறியதும் அழுகை விசும்பலாகக் குறைய, மாமன் துடைத்து விட்ட கண்களை விரித்து அவனைப் பார்த்து சிரித்தாள்.

“பய புள்ள எம்புட்டு நடிப்பு நடிக்குது?” அப்பத்தா சிரிப்புடன் அங்கலாய்க்க, “எம் புள்ள அழுறத பார்த்துட்டே நிக்கிறியே அம்மாச்சி. அவள கையில தூக்குனா என்னா?” என்று அவரிடம் காய்ந்தாள் தேன்மொழி.

“ம்க்கும், உம் மக உனக்கும் மேல இருக்கா. நான் தூக்க கூடாதாம் அவள. பக்கத்துல போனாலே கத்துறாங்கறேன்.‌ நீயென்னனா தூக்க சொல்ற. எதுக்கு உம் பிள்ளைகிட்ட நா அடி வாங்கவா?” என்று அவர் நொடிக்க, “பேரன் புள்ளைக்குக் கிட்ட அடி வாங்க குடுத்து வச்சுருக்கணும்னு நேத்துதான சொன்ன அம்மாச்சி?” சிரிப்புடன் அவரை மடக்கினாள்.

“தங்கப்புள்ள.. மாமா ஊருக்கு போகணும் இல்ல? என்கிட்ட வா தங்கம். கிளி கத சொல்றேன்” என்று பேத்திக்காகக் கை நீட்டினார்.

“வேணாம்..” என்று மறுப்பாக எல்லாப் பக்கமும் தலையசைத்த பூவிழி, மாமனின் கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள்.

“உனக்கு ஏதாவது முக்கியமான வேலையிருக்கா அன்பு? வீட்ல இருக்கியா? நானும் மாமாவும் திண்டுக்கல் வரை போயிட்டு வந்துடுறோம்” என்று அவள் கேட்கவும்,

“சரிக்கா” என்று சம்மதித்து உள்ளே சென்றான். அப்பத்தாவிடம் சொல்லி விட்டு உடனே திண்டுக்கல் சென்றார்கள்.

மருத்துவமனை சென்ற பிறகும் இருவருக்குமே பதற்றமும், படபடப்பும் குறையவில்லை.

மருத்துவரை சந்திக்கையில் தயக்கம் பயம் எனக் கலவையான உணர்வுகள் அவளுக்கு.

பூவிழி இந்த மருத்துமனையில்தான் பிறந்திருந்தாள்.

அதனால் கொஞ்சம் கூடுதல் தயக்கம் தேன்மொழிக்கு. மகளுக்கு இன்னமும் ஒரு வயது கூட நிரம்பவில்லையே.

அவர்களுக்குப் பூவிழியே அபூர்வ மலராக வந்து உதித்த மலரென்றால், இப்போது அவர்களுக்குக் கிடைத்திருப்பது இரட்டை வரம் என்றார் அவளைப் பரிசோதித்த மருத்துவர்.

தேன்மொழி கழுத்தை வளைத்து ஸ்கேன் திரையைப் பார்க்க, தர்மாவின் கண்கள் அந்தத் திரையை விட்டு விலகவேயில்லை. மருத்துவர் அனுமதியுடன் அவனும் அங்கிருந்தான்.

திரையில் புள்ளியாய் இரு பிள்ளைகள். இரட்டை இதயத் துடிப்பு ஒலித்து, அவர்களின் இதயத் துடிப்பையும் இரட்டை வேகத்துடன் துடிக்கச் செய்தது.

மருத்துவரின் அறைக்கு வந்த பிறகும், “எப்படித் தர்மா? அதுவும் ட்வின்ஸ்?” என்று ஆச்சர்யமாய் வினவினாள் தேன்மொழி.

தர்மா கண் சிமிட்டினான்‌. அவனது குறும்பு சிரிப்பில் நிச்சயமாகக் குறும்பான பதில் இருந்தது.

தேன்மொழி தன் சந்தேகத்தை நேரடியாக மருத்துவரிடமே கேட்டு விட்டாள்.

“எங்க குடும்பத்துல யாருக்குமே ட்வின் பேபிஸ் கிடையாது டாக்டர். எங்க ரெண்டு பேர் குடும்பத்துலயும் இல்ல. அப்புறம் எங்களுக்கு மட்டும் எப்படி ட்வின்ஸ் பாஸிபிள்? ஃபேமிலி ஹிஸ்டரி இருந்தா தானே ட்வின்ஸ் பொறக்கும். இல்லையா டாக்டர்?” என்று அவள் கேட்கவும் புன்னகைத்தார் மருத்துவர்.

“அது அப்படி இல்லம்மா. ஃபேமிலி ஹிஸ்டரி கண்டிப்பா இருக்கணும்னு அவசியம் இல்ல. அப்படியில்லாமலும் பொறக்கும். உங்களுக்கு நடந்தது போல. இத ப்ரடேர்னல் ட்வின்ஸ்னு சொல்லுவோம். ரெண்டு கருமுட்டையில் இருந்து உருவான ரெண்டு குழந்தைகள்தான் அவங்க.” தேன்மொழி அவர் சொல்வதைப் புன்னகையும் ஆச்சரியமாகக் கேட்டிருக்க,

“உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா, பொதுவா பொண்ணுங்களுக்கு ஒரு மாசத்துல ஒரு கருமுட்டை வெளிவரும். அது உயிரணுவோட சேரும் போது குழந்தை உண்டாகும். ஆனா, உங்களுக்கு ஒரே மாசத்துல ரெண்டு கருமுட்டை வெளியாகியிருக்கு. அது ரெண்டு உயிரணுக்களோட சேர்ந்து ரெட்டை குழந்தைகளா உருவாகியிருக்கு”

என்று அவர் சொன்னதை அதிசயம் போலக் கேட்டிருந்தாள்.

“இங்க பாருங்க” என்று அவளின் ஸ்கேன் படத்தைச் சுட்டிக் காட்டினார்.

“உங்க கர்ப்பப்பையில ரெண்டு அம்னியாட்டிக் சேக்ல (Amniotic sac) ரெண்டு குழந்தைகளும் தனித்தனியா இருக்காங்க பாருங்க”

“ஆமா, டாக்டர்” இன்னும் ஆச்சரியம் தீரவில்லை அவளுக்கு.

“அப்போ ரெண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்களா டாக்டர்?”

“நிறைய ஒற்றுமை இருக்கும். ஆனா, ஐடென்டிக்கல் ட்வின்ஸா இருக்க மாட்டாங்க” என்றார் மருத்துவர்.

அவளின் கேள்விகளும், சந்தேகங்களும் நீண்டு கொண்டே போனது. மருத்துவரும் மிகப் பொறுமையாகப் பதிலும், விளக்கமும் கொடுத்தார்.

ஒற்றை வரம் வேண்டி தவமிருந்தவர்களுக்கு இப்பொழுது எதிர்பாராமல் இரட்டை வரம் கிடைத்திருக்க, அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இருவரின் வீட்டிலும் இரட்டை மகிழ்ச்சியை வாரி வழங்கியது அந்தச் சந்தோஷ செய்தி.

தேனு கர்ப்பமாக இருக்கையில் பூவிழியின் காது குத்து விழாவை நடத்தக் கூடாதென்று, பிள்ளைகள் பிறந்ததும் மூவருக்கும் ஒன்றாக விழா எடுத்து விடலாம் என்று முடிவு செய்தார்கள்.

இரட்டை பிள்ளைகள் என யாரிடமும் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார் பவுனு அம்மாள். அவர்களால் அதை மீற முடியவில்லை.

தேன்மொழி கர்ப்பம் என்ற செய்தி கிடைத்ததும், “எனக்கு மருமக ரெடி. டேய் அன்பே..” என்று ஆர்ப்பரித்துத் தம்பியை ஓரண்டை இழுத்துக் கொண்டிருந்தான் ஜெயபாலன்.

“இப்போ எவனுக்காவது தைரியம் இருந்தா என்னைய பார்த்து, என் தங்கச்சி பிள்ளைக்கு நான் தாய் மாமா இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்று வீட்டினரை பார்த்து திமிராகச் சொன்னான்.

“லூசு பய..” சிரிப்புடன் அவனைத் திட்டி விட்டுச் சென்றார் முத்தம்மா.

error: Content is protected !!
Scroll to Top