மயக்கும் மாலைப் பொழுது. அப்போதுதான் தம்பியுடன் வீடு திரும்பியிருந்தாள் தேன்மொழி.
அன்று மதுரையில் ஒரு திருமணம். அதற்கு அத்தை திலகவதியுடன் சென்றிருந்தாள். அந்தத் திருமணம் முடிந்தவுடன் சென்று அன்புக்கரசியைப் பார்த்து, மதுரையில் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டியிருக்க அதையெல்லாம் வாங்கி முடித்து, அவர்கள் திண்டுக்கல் திரும்புகையில் அன்பழகனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
“என் தம்பி பொண்ணுக்கு மகன் பொறந்திருக்காம் தேனு. அவங்க வீட்டுக்கு வந்ததும் போய்ப் பார்த்திட்டு வருவோம். என்னா? அடுத்த வாரம் போலப் போவோம். அன்புவும் வர்றேன்னு சொன்னா. அவ கூடவே நாமளும் போய்ப் பார்த்துட்டு வந்துடுவோம்” என்று திலகவதி சொல்லவும், “சரிங்கத்தே” என்றாள்.
“மா..மா” என்று ராகம் போட்டு மாமன் மண்டையை ஆட்டி அவன் முடிகளை எண்ணும் முயற்சியில் இருந்தாள் பூவிழி.
“பட்டுக் குட்டி..” என்று அவன் அதட்ட, உடனே பால்பற்களைக் காட்டி ஈயென்று புன்னகைத்து மாமனை மயக்கினாள்.
“எம் முடிய பிடிச்சு இழுக்கக் கூடாது. வலிக்கும்” போலி கண்டிப்புடன் அவன் சொல்ல, அழுகையில் பிதுங்கியது பிஞ்சு உதடுகள்.
“அச்சோ பூக்குட்டி அழ கூடாது. மாமா சாரி..” என்று மாமன் கொஞ்சவும், நொடியில் அழுகை மாறி மீண்டும் புன்னகைத்தாள். அந்தப் பிஞ்சுக் கரங்களுக்கு எப்படித்தான் அப்படியொரு வலு வருமோ, கொத்தாக மாமனின் முடியை பிடித்து இழுத்து எதையோ சாதித்து விட்டது போலச் சிரித்தாள்.
“வலிக்குது குட்டி” மாமன் முகம் சுருக்க, ஈரமாய் முத்தம் வைத்து, “சரியா போச்சா?” என்று அவன் கன்னம் தடவி மழலையில் கேட்டாள்.
“ம்ஹூம். வலிக்குது குட்டி. இன்னொரு உம்மா குடு. அப்போதான் சரியா போகும்” என்று பேரம் பேசினான் மாமன். அந்தக் குட்டி கோலிக் குண்டு கண்களைச் சுருக்கி மாமனை பார்த்தாள் பூவிழி.
அந்தப் பார்வையைக் கண்டு அன்பு சத்தமாகச் சிரிக்க, கூடவே தானும் கிளுக்கி சிரித்தாள் குழந்தை.
தேன்மொழிக்கு மதுரை சென்று வந்தது சோர்வாக இருக்க, தம்பியிடம் மகளைக் கொடுத்து விட்டுப் படுக்கச் சென்றாள்.
அவளுக்கு லேசாகத் தலை வலிப்பது போலிருந்தது. காலையில் கிளம்பி மதுரைக்குச் சென்று திரும்பிய பயண அலைச்சல் சோர்வை தந்திருக்கச் சற்று நேரம் கண்ணை மூடிப் படுத்திருந்தவளுக்கு உறக்கம் வரவில்லை. மாறாக வயிற்றைப் புரட்டுவது போலிருக்கவும் எழுந்து அமர்ந்து விட்டாள்.
ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். அனைவரோடும் கூடத்தில் அமர்ந்திருந்தாள். அவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும் மனத்தில் பதியவில்லை.
அந்நேரம் வீட்டுக்குள் நுழைந்தான் தர்மா.
மாமனின் கையில் இருந்த பூவிழி, அப்பாவை பார்த்தும், “தம்மா..” என்று உற்சாகக் குரல் எழுப்பி, அவனை நோக்கி கை நீட்டியபடி தளிர் நடை போட்டாள்.
“இருடி, செல்லக் குட்டி. மாமாவ பிடிச்சுக்கோ. கீழ விழுந்துட போற” அன்பு பதற, அப்பாவை நோக்கி நகர்ந்தாள் பூவிழி.
“என் பூச்செண்டுக்கு என்னா வேணுமாம்?” நாலு எட்டில் மகளை நெருங்கி கையில் அள்ளிக் கொண்டான் தர்மா.
கடல் பச்சை நிற லினன் சட்டை அணிந்திருந்தான். மடித்து விடப்பட்ட கைகளுடன், வேட்டி நுனியை பிடித்தப்படி வீடு நுழைந்தவனை விழிகளால் விழுங்கினாள் தலைவி.
தலைவனின் பார்வை தலைவியின் மேல் பதிந்ததும் அவன் கால்கள் தன்னிச்சையாக அவளை நோக்கி நகர்ந்தது.
மகள், “தம்மா..” என்று உரக்க அழைக்கவும், மனைவியை மறந்து மகளிடம் போனான்.
இப்போதும் அவனையே விழிகளால் வாரி சுருட்டிக் கொண்டிருந்தாள் தலைவி.
ம்ம், வயது கூடக் கூடத் தலைவனின் கம்பீரமும் கவர்ச்சியும் கூடியிருக்க அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.
“தர்மா..” தயக்கத்துடன் அழைத்தாள். ஏனென்றால் சொல்லப் போகும் விஷயம் தீவிரமானது அல்லவா.
“என்னடி?”
“இங்க வாங்க..”
“ம்ம், சொல்லு” மகளைத் தோளில் தூக்கி கொண்டு மனைவியின் பின் சென்றான்.
அவள் அறைக் கதவை மூடவும், “என்னடி, ஆள முழுங்கற மாதிரி பார்க்கற? இப்போ கதவச் சாத்துற? என் சிலுப்பிக்கு மாமன தேடுதோ” என்றான் கண் சிமிட்டி.
அவன் பேசத் தொடங்கியதும் மகளின் காதை மூடி விட்டாள் தேன்மொழி.
“பாப்பாவ இப்படிக் குடுங்க” என்று அவள் பூவிழியைத் தூக்கவும், “ப்பா” என்று அடித் தொண்டையில் இருந்து கத்தினாள் மகள்.
“மாமா கூட இரு குட்டி.” என்று தேன்மொழி மகளைத் தூக்கவும்,
“அப்பா.. கூட.. தம்மா..” என்று அவள் கையில் இருந்து தாவி அப்பாவின் கழுத்தில் கரம் கோர்த்தாள்.
“அடியே சிலுப்பி. என்னடி சங்கதி. மாமன இப்படித் தேடுற..” அவள் புறமாகச் சாய்ந்து காதில் கிசுகிசுத்து இடையோடு சேர்த்தணைத்தான்.
“ம்ம்..” என்று ராகம் இழுத்தவள், சட்டென அவனை விலகி, கணத்தில் அவன் கையில் எதையோ வைத்து அழுத்தினாள்.
“என்ன தேன்னு?” மெல்ல கையை உயர்த்திப் பார்த்தான். அதுவொரு கர்ப்பத்தைப் பரிசோதிக்கும் கருவி. அதுவும் இரட்டை கோடுகளுடன் இருக்க, “தேன்னு..” என்று அதிர்ச்சியுடன் மனைவியை ஏறிட்டான். அவளுக்குமே அதிர்ச்சிதான். ஆனால், ஆனந்த அதிர்ச்சி. கனவிலும் எதிர்பார்த்திராத இரண்டாவது மகவு. அப்படியே தலை என்ன, அவளின் உலகமே சுற்றிய உணர்வு.
கடந்த சில நாட்களாக அவளுக்குச் சோர்வு, தலை சுற்றல், வாந்தி எனக் கர்ப்பகால அவஸ்தைகள் அனைத்துமே இருந்தது. சரியான உறக்கமில்லாதது, பயண அலைச்சல், உணவு ஒத்துக் கொள்ளவில்லை என வெவ்வேறு காரணங்கள் கற்பித்துக் கடந்து விட்டிருந்தார்கள்.
எதையுமே பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை அவள். அவளுக்குப் பூவிழி பிறந்து ஒன்பதாம் மாதம்தான் மாதவிடாய் திரும்பவும் வந்திருந்தது. அதன் பிறகு வரவேயில்லை என்பது கூட அவளது கவனத்தில் பதியவில்லை.
இன்றைக்கும் மதுரை சென்று வந்த அலைச்சலின் காரணமாகவே தலைவலியும் வாந்தியும் என்றே நினைத்தாள். ஓய்வாகப் படுக்கையில் படுத்திருக்கும் போது எதிரில் சுவரில் இருந்த புகைப்படம் அவளைப் புருவம் சுருக்க வைத்தது.
தர்மா, தேனு இணைந்து நிற்க, தர்மாவின் கையில் பூவிழி பொக்கை வாய் சிரிப்புடன் இருந்தாள்.
தேன்மொழியின் இதழ்கள் சிரிப்பில் மலர, மகளையும், கணவனையும் ரசித்துக் கொண்டிருக்கையில், “என் தம்பி பொண்ணுக்கு மகன் பொறந்திருக்காம் தேனு” என்று திலகவதி சொன்னது நினைவில் வந்து எதையோ நினைவுறுத்துவது போலிருந்தது.
அப்போதும் பெரிதாக யோசிக்கவில்லை அவள். ஆனால், மீண்டும் வாந்தி எடுத்து வந்து சோர்வுடன் அமர்கையில், சிறிய பொறிச் சந்தேகமாக எழுந்தது. அலைபேசியை எடுத்து கடைசி மாதவிடாய் தேதியை பார்த்தாள். அது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன் என்றது தேதி.
சட்டென அவளைப் பதற்றம் தொற்றிக் கொண்டது. அப்படி இருக்குமோ? ச்சே, ச்சே இவ்வளவு சீக்கிரமா? இருக்காது? வாய்ப்பில்லையே. என்றெல்லாம் சிந்தித்தவள், ஒரு முடிவுடன் சட்டெனச் செயலில் இறங்கி விட்டாள்.
முன் எப்போதோ வாங்கி வைத்திருந்த கர்ப்ப பரிசோதனை கருவியைத் தேடி எடுத்து பரிசோதிக்க, இரண்டு கோடுகளைக் காண்பித்து அவளின் இதயத் துடிப்பை ஏகத்தும் எகிற செய்தது அது.
அவசரமாகக் கணவனை அழைத்து வீடு வரச் சொன்னாள். வேலை முடித்து இப்போதுதான் வந்திருந்தான் அவன்.
“நிஜமாவா தேன்னு? எப்படி டி?” ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக வினவினான்.
“ம்ம்ம். எப்படின்னா? உங்களுக்குத் தெரியாதா?” என்று அவள் முறைக்க, அவளை இறுக கட்டிக் கொண்டான்.
மென்மையான அழுத்தத்துடன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான். அப்பாவை போலவே பூவிழியும் அம்மாவின் கன்னத்தை ஈரமாக்கினாள்.
அப்பாவின் மீசையைப் பிடித்திழுத்து ஈயென்று சிரித்து அப்பாவுக்கும் முத்தம் கொடுத்தாள்.
“என் பூச்செண்டு.. உன் மாமா கிட்ட ஓடு. அப்பா அம்மாவ நல்லா கொஞ்சிக்கறேன்..” என்று முணுமுணுத்தவன், அன்பழகனிடம் மகளைக் கொடுத்து விட்டு மனைவியிடம் வந்தான்.