மகள் வந்த பிறகு அவர்களுக்குள் நேசமும், நெருக்கமும் அன்னியோன்யமும் அதிகரித்திருந்தது. அதற்கு நேரெதிராகத் தாம்பத்யம் குறைந்திருந்தது.
“தேன்னு அழகிடி நீ. அப்படியே மல்லிப்பூ போல மனசை கொள்ள அடிக்கிற..” உன்மத்தத்துடன் உளறினான்.
உறக்கம் சுமந்த விழிகளுடன் அவனை ஏறிட்டாள். கள்ளின் போதையைக் கண்டான் அந்தக் கண்களில். பூவை வட்டமிடும் வண்டாய் மனைவியின் முகத்தை வட்டமிட்டது அவன் கண்கள்.
“சும்மாவே உன்னைய விட்டு என்னால தள்ளி இருக்க முடியாது. அதுவும் இப்ப.. ம்ம், பார்க்கவே அப்படி இருக்க..” மோகமும், தாபமுமாக அவள் காதில் கிசுகிசுத்தான்.
“அப்படியா? எப்படி இருக்கேனாம்?” அவனைப் போலவே கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
அந்தக் குரல் அவனை மேலும் மயக்க, “ம்ம்..” என்றவனுக்குப் பேச்சே வரவில்லை.
“தர்மாக்கு இப்பத்தான் பொண்டாட்டியை கண்ணு தெரியுதோ?” அவன் மார்பில் கை வைத்து தள்ளியபடி அவள் போலி கோபத்துடன் கேட்க, “அடியே சிலுப்பி, என் கண்ணு எப்பவும் உன் மேலதான்டி இருக்கும். மாமனோட மல்லிக நீதான்டி” அவன் மார்பில் இருந்த அவள் கரத்தை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டான்.
அவனை மெதுவாய் மென்மையாய் தொட்டு தழுவிய அவள் விழிகளில் மொத்தமாய் விழுந்து முத்தமிட்டான். முத்தம் மோகம் படிக்க, மனைவியை மலரின் மென்மையோடு பிரித்தான்.
“நாளைக்கு நீங்க சீக்கிரம் எழுந்துக்கணும் தர்மா. தூங்கல?” அவள் முணுமுணுக்க, “தூக்கமா டி இப்போ முக்கியம்?” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக அவள் மேனியெங்கும் முத்தம் வைத்துச் சொன்னான். அவனது மீசை அழுந்தி உரச கூச்சத்துடன் சிரித்தாள் தேன்மொழி.
மனைவியின் சிரிப்பு அவன் முகத்திலும் பிரதிபலிக்க, அவளின் கண்ணோடு கண் கலந்து, மெய்யோடு உயிர் கலக்க, காதல் பாடம் படிக்கத் தொடங்கினான் தலைவன்.
மறுமாதம் பூவிழிக்குப் பதினோராம் மாதம் பிறக்கவும், அவளுக்குக் குல தெய்வக் கோவிலில் மொட்டை போட்டு, காது குத்தி விடலாம் என்றார்கள் பெரியவர்கள்.
அதிலும் பூவிழிக்கு இப்போதே நன்றாக முடி வளர்ந்திருக்க, தாமதிக்காமல் உடனே மொட்டை அடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள் தர்மா வீட்டினர்.
தாய் மாமன் அன்பழகன் பெயரை போட்டுப் பத்திரிக்கை அடிக்கத் திட்டமிட்டார்கள்.
தேன்மொழி, “சுதாண்ணா, ஜெயாண்ணா பேரையும் போடணும்” என்று சொல்ல, தர்மாவும் அதை ஆமோதித்தான். திலகவதியும் அதையேதான் சொன்னார்.
“தாய் மாமேன் அவ கூடப் பொறந்தவன் இருக்கும் போது பேத்தியை அவன் மடியில உக்கார வச்சுத்தானே மொட்டை போட்டு காது குத்துறது” என்று அப்பத்தா சொல்ல,
“சரிதான்த்தே. ஆனா, பத்திரிக்கையில தாய் மாமன்கள்னு அண்ணனுங்க ரெண்டு பேர் பேரையும் போட்டுடுவோம்” என்றார் திலகவதி.
“அது எப்பவும் செய்யறது தானே?” என்று அப்பத்தா சொல்ல, “இல்லத்தே. தேனு தம்பி பேர் கூடவே சேர்த்து போடுவோம்னு சொல்றேன்” என்றார் திலகவதி.
அங்கிருந்த அனைவரின் பார்வையும் அதையே விருப்பமெனத் தெரிவிக்க, “சரி, செய்ங்க” என்று விட்டார் பெரியவர்.
தேன்மொழி மறுநாளே இந்த விஷயத்தைப் பெரியம்மா, அம்மாச்சியிடம் தெரியப்படுத்தினாள். அப்போது பத்மாவும் அங்கிருந்தாள். வீட்டு நடப்பை யதார்த்தமாக அவள் கணவனிடம் பகிர, கோபமாகச் சண்டைக்குக் கிளம்பி விட்டான் ஜெயபாலன்.
“டேய் அன்பே.. அப்போ நீ மட்டும்தான் தேனு மகளுக்குத் தாய் மாமனா? நாங்கல்லாம் யாராம் அப்போ?” என்றான் கோபமாக. அவன் எப்போதும் போல விளையாட்டாகச் சீண்டுகிறான் என்றே அனைவரும் நினைக்க, அவனோ தீவிரமாகப் பேசினான்.
தாய் மாமன் பதவியை எல்லாம் அத்தனை எளிதில் விட்டு கொடுக்க மாட்டார்கள். அன்பழகன் அண்ணனை முறைக்க, சுதாகரன் கூட இம்முறை தன் தம்பி பக்கம் நின்றான்.
“நல்ல காரியம் நல்லபடியா நடக்கணும்டா. ஏன் டா, இப்படிப் பொறுப்பில்லாம பண்றீங்க?” என்று பேரன்களைத் திட்டினார் முத்தம்மா.
“நீ பேசாம இரு அம்மாச்சி. இதுல நீ வராத” என்று கத்திய ஜெயபாலன், “இங்க பாருடா அன்பே, நீ என் மடியில உக்காரு. என் மருமக உன் மடியில உக்காந்து காது குத்திக்கட்டும். என்ன சொல்ற?” என்று தீவிரமாகக் கேட்டான். பெரியவர்களுக்கு அவனைச் சிரிக்கவா, முறைக்கவா, திட்டவா எனத் தெரியவில்லை.
அதைக் கேட்டு ரம்யா சிரிக்கவும் அனைவரும் சிரித்து விட்டார்கள்.
மறுநாளே இதைத் தேன்மொழியிடம் சொல்லி விட்டார் பொற்கொடி.
தர்மா வீட்டில் நல்ல நாள் பார்த்து விட்டார்கள். காது குத்துப் பத்திரிக்கை அடிக்க எழுதி வாங்கி வந்திருந்தார்கள். திண்டுக்கல் சென்று பத்திரிக்கை அடிக்கக் கொடுக்க வேண்டும். சமையலுக்குக் கூடப் பேசி விட்டார்கள். இப்போது இந்தப் பேச்சு வரவும் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களுக்குள் பேசியபடி அமர்ந்திருந்தார்கள்.
ஒரு வாரம் இப்படியே ஓடி விட்டது.
“என்னப்பா தம்பி, நாளைக்குப் பத்திரிக்கை அடிக்கக் குடுத்துடவா?” என்று மகனிடம் கேட்டார் சுந்தரராஜன். பின்னே நாட்கள் குறைவாக அல்லவா இருந்தது.
“சரிப்பா, குடுத்துடுங்க. மச்சானுங்ககிட்ட நான் பேசிக்கறேன்” என்றான் தர்மா முடிவாக.
அதற்கான வேலைகள் விரைந்து நடக்க, மாலை வீடு வந்த தர்மா, “தம்மா..” என்றழைத்த மகளைத் தூக்கி கொஞ்சிக் கொண்டிருக்கையில், “தர்மா..” என்று தயக்கத்துடன் அழைத்தாள் தேன்மொழி.
“என்னடி..”
“இங்க வாங்க..”
“ம்ம், சொல்லு..” என்று எழுந்து அவள் பின்னே சென்றான். மனைவி சொன்ன செய்தியில் அதிர்ச்சியாகி அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.
அண்ணன்கள் விருப்பம் போல, திட்டமிடப்பட்ட காது குத்து விழா நடக்கவில்லை. தர்மா வீட்டினர் விழாவை நிறுத்தி விட்டார்கள்.