தர்மாவின் தோட்டத்துப் பூக்கள் அனைத்துமே தேன்மொழிக்குத்தான் என்று அடித்துச் சொல்லி விடுவான் தர்மதுரை. அவர்களுக்குத் திருமணம் முடிவான நாளில் இருந்து தேன்மொழி பூ வைக்காத தினங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனால், மகள் பிறந்ததில் இருந்து அவள் பூ வைப்பது குறைந்து விட்டது. இப்போது தினம் மகளின் குட்டி முடியில் கூடக் குட்டியாக மல்லி, முல்லை, பிச்சி என ஏதேனும் ஒரு சரம் அழகாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. சமயங்களில் ரோஜா கூடப் பூத்திருக்கும். ஆனால், பிள்ளைக்கு ஆகாது என்று சொல்லி சொல்லியே அவளை அதிகம் பூ சூட விடாமல் பார்த்துக் கொண்டார்கள் வீட்டுப் பெரியவர்கள்.
ஒரு வாரம் முன்பு அவர்கள் தோட்டத்து பன்னீர் ரோஜாக்களை மொத்தமாகக் கேட்டு பன்னீர், குல்கந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அவர்களை அணுகியிருந்தது. பூக்களின் வரத்து, தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையை, அவர்களின் தேவையைக் கேட்டுத் தெரியப்படுத்தியிருந்தான் தர்மா.
இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருகிறார்கள்.
அதனால், தேன்மொழியும் அலுவலகம் வருவதாக இருந்தது. ஆனால், அவர்கள் கிளம்பும் போது பூவிழி அழுது கொண்டேயிருக்கவும் அவளையும் தூக்கிக் கொண்டே அலுவலகம் சென்றார்கள். அங்கே ரம்யா இருக்க, அவளிடம் குழந்தையைக் கொடுத்து விட்டுத் தங்கள் பணியில் மூழ்கினார்கள்.
அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போதே குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பூவெடுத்து கொடுத்துத் தலையில் வைக்கச் சொல்லியிருந்தான் தர்மா.
தேன்மொழி சாமி கும்பிட்டு அத்தை, அம்மாச்சியிடம் சொல்லி கொண்டு கிளம்பியவள், பூவிழி அழவும் பூச்சூட மறந்து போனாள்.
“பூ வைக்கலையா தேன்னு?” காரில் ஏறிய பின்னரும் கூடத் தர்மா கேட்டிருந்தான்.
மகளுக்குப் பசியாற்றிக் கொண்டிருந்தவளின் காதில் அவன் கேட்டது விழவில்லை.
அந்தப் பூந்தோட்ட அலுவலகம் மொத்தமும் பூக்கள் விதவிதமாக வகை வகையாக, மூடை மூடையாகக் குவிந்திருக்க, மனைவியின் நீண்ட பின்னலில் நூறு பூ கூட இல்லாமல் இருந்தது தலைவனுக்குச் சினமூட்டியது.
பன்னீர் ரோஜா கேட்ட நிறுவனத்துக்குப் பூக்கள் கொடுக்க ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள் இரு தரப்பினரும்.
பூவிழி சிணுங்கி கொண்டேயிருக்க, வேலை முடிந்ததும் மகளுடன் தனியாக வீடு திரும்பி விட்டாள் தேன்மொழி.
அன்று மாலை விரைவாக வீடு திரும்பிய தர்மா, ஒரு குட்டி கூடை நிறைய மல்லிகைப்பூ கொண்டு வந்து மனைவியின் கையில் திணித்தான்.
“தர்மா, என்னதிது? எதுக்கு இம்புட்டு பூவு?” என்று கேட்ட மனைவியைக் கடுமையாக முறைத்தான்.
“ராசா, நான்தான்..” என்று ஆரம்பித்த அப்பத்தாவின் பேச்சு பேரனின் ஒற்றைப் பார்வையில் அப்படியே பாதியில் நின்று போனது.
“நல்ல வேளை கட்டின பூவ கொண்டு வந்தான். இல்லனா கூடை நிறையா பூவ கட்டுறதுக்கு இங்க யாருக்கு நேரமிருக்கு? அத இப்படிக் கொண்டா.” என்று கூடையைச் சிரிப்புடன் வாங்கிய திலகவதி மருமகள், பேத்திக்குக் கொஞ்சம் பூவை கத்தரித்துக் கொடுத்து தானும் கொஞ்சம் தலையில் சூடிக் கொண்டார். நான்கு முழ பூக்கள் இன்னமும் இருக்க அதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தார்.
அன்றிலிருந்து மறவாமல் பூச்சூடினாள் தேன்மொழி. அவள் மறந்தாலும் திலகவதி எடுத்துக் கொடுத்து விடுவார்.
இப்போது சுவரைப் பிடித்தோ, பெரியவர்களின் கைப் பிடித்தோ மெல்ல நடக்கத் தொடங்கியிருக்கிறாள் பூவிழி. தொடர்ச்சியாக நான்கு எட்டுக்கள் எடுத்து வைத்து விட்டால் போதும். அவளைக் கையில் பிடிக்க முடியாது. கிண்கிணியாக ஒரே சிரிப்பு. வீடு முழுக்க எதிரொலிக்கும் அந்தச் சிரிப்புச் சத்தம் பெரியவர்களையும் சிரிக்க வைத்திடும். அதுவும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தால் போதும் நிறுத்த மாட்டாள்.
யாராவது அவள் கையைப் பிடிக்க வேண்டும். அவள் பொறுப்பாக நடக்கத் தொடங்கிடுவாள்.
அதற்காகவே அன்பு மாமன் வாங்கி வந்திருந்த நடை வண்டியை அவள் திரும்பி பார்ப்பது கூடக் கிடையாது.
“உங்களுக்கு எல்லாம் என்ன வேலை. என் பின்னாடி நடங்க” என்று வீட்டினரைதான் தன் பின்னால் ஓட விடுவாள்.
அன்றும் அப்படியொரு நாள். சுந்தரராஜன், திலகவதி இருவரும் தங்களின் முறை முடித்துச் சோர்ந்து அமர்ந்து விட, பவுனு அம்மாளின் முறை அது.
“என் தங்கப்புள்ள நடங்க.. நா வாரேன் உங்களுக்குத் தொணைக்கு” என்று நிதானமாகக் கொள்ளு பேத்தியுடன் நடந்தார்.
இரவு ஒன்பது மணி போல வீடு திரும்பினான் தர்மா.
படுக்கையறைக்குள் நுழைந்தவன் மனைவியைப் பார்த்ததும் நீண்ட விசிலடித்தான்.
விசேஷ வீட்டிற்குச் சென்று வந்திருந்தாள். அதனால், புதுப் புடைவை, தலை நிறையப் பூ, கை நிறையக் கண்ணாடி வளையல் என அழகான அலங்காரத்துடன் தாய்மையின் எழிலும் சேர கொள்ளை கொள்ளும் அழகுடன் இருந்தவளை கண்களால் கட்டிக் கொண்டான் கணவன்.
“குளிச்சுட்டு வாங்க தர்மா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று சொல்லி அவள் வெளியில் செல்லப் போக, சட்டெனக் கை நீட்டி அவளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டான் தலைவன்.
“ப்ச், என்ன பண்றீங்க? பாப்பா..”
“என் பூச்செண்டு அப்பத்தா கூடத் தூங்குது” மனைவியை இறுக அணைத்து வாசம் பிடித்து அவள் காதில் கிசுகிசுத்தான்.
“ம்ம். ஆனா, பசியில முழிச்சா என்னைய தேடுவா..”
“நானும் உன்னைய தேடுறேனே அது உன் கண்ணுக்கு தெரியுதா டி?”
“ப்ச், சேலை கசங்குது விடுங்க தர்மா”
“என் மனசு கசங்குதுடி சிலுப்பி. அது உனக்குத் தெரியுதா?” கரகரத்த குரலில் அவன் கேட்க, சிரித்தாள் தேன்மொழி. சிரித்த உதடுகளை அழுந்த முத்தமிட்டான்.
“தேனு, தொரய இன்னும் காணும். என்னான்னு போன் போட்டு கேளு” என்ற திலகவதியின் குரல் கேட்கவும், கணவனின் மார்பில் கை வைத்து தள்ளி விட்டாள்.
“ப்ச்..” என்று கடுப்புடன் சலித்துக் கொண்டு குளிக்கச் சென்றான் அவன்.
அவள் வெளியில் சென்று, “இப்போதான்த்தே வந்தார். குளிக்கறார்” என்று திலகவதியிடம் சொன்னாள்.
“நீங்க போய்ப் படுங்கத்தே. அவருக்கு நான் சோறு போடுறேன்” என்று அவள் சொல்லவும், “சரி, தேனு” என்றவர் வாசல் கதவை மூடி விட்டுத் தொலைக்காட்சி முன் அமர்ந்தார்.
சற்று நேரத்தில் தர்மா வந்து இரவு உணவு முடித்து, அலுவலக வேலையில் மூழ்கிப் போக, அப்பத்தாவுடன் படுத்திருந்த மகளைத் தூக்கப் போனாள் தேன்மொழி.
“நல்லா தூங்குற புள்ளைய ஏன் தூக்குற தேனு? அவ தூங்கட்டும் விடு. நீ போய்ப் படு. நான் அவள பார்த்துக்கறேன்” என்று அவர் சொன்ன பிறகும் மகளின் பக்கத்தில் படுத்திருந்தாள்.
திலகவதி கூடத்தில் படுக்கையை விரிக்கவும் எழுந்து அறைக்குச் சென்றாள். தர்மா இன்னமும் வேலையில் மூழ்கியிருக்க, இரவில் மகள் முழித்துத் தன்னைத் தேடப் போகிறாள், பசித்து அழப் போகிறாள். பேசாமல் போய் அவளைத் தூக்கி வந்து விடுவோமா? என்று புடைவையைக் கூட மாற்றாமல் யோசித்துக் கொண்டே படுத்திருந்தவள் அப்படியே உறங்கியிருந்தாள்.
“தேன்னு..” இடையில் கை கோர்த்து இழுத்து அணைத்துக் கொண்டான் கணவன்.
“பாப்பா முழிச்சுட்டாளா?” என்று பதறி கண் விழித்துக் கேட்டவளை முறைத்து, “அவ நல்லா தூங்குறா” என்றான்.
“இருங்க. நான் போய்ப் பார்த்திட்டு வர்றேன்” என்று எழப் போனவளை தடுத்து அப்படியே சரித்தான்.
“நான் இப்பத்தான் டி சிலுப்பிப் பார்த்துட்டு வர்றேன்” என்றவன் பார்வை மனைவியை மொத்தமாய் மோகமாய் மையலுடன் மைய்யமிட்டது.
மகள் பிறந்த பிறகு மனைவியின் மீதான அவனது நேசமும் நிறைவாகி நிறைந்திருந்தது.