பூவிழிக்கு இப்போது குரல்களை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. கண்ணை உருட்டி உருட்டி சுற்றி சுற்றி பார்க்கிறாள்.
தேன்மொழியின் குரலை கேட்டால் போதும் கையைக் காலை அசைத்து, குஷியாகி விடுகிறாள். அதைவிட அதிகமாக அப்பாவின் குரலுக்குச் சீட்டி அடிக்கிறாள். அப்பாவின் அண்மையும், மார்பும் போதும் அவள் உறங்குவதற்கு.
அப்பாவும், மகளும் உறங்குவதைப் பார்க்கையிலெல்லாம் ஒரு மெல்லிய பூவின் நறுமணத்துடன், கவிதையைத் தரிசித்தது போலிருக்கிறது அவளுக்கு. அப்பாவை போலவே அவளும் இசையின் ரசிகை போலும். அப்பா பாடினால், பாட்டு போட்டால் உறங்கி விடுகிறாள்.
இன்றும், “எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே..” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு மனம் உருகி கண்கள் கசிந்தது.
“உன் பூ விழி குறுநகை.. அதில் ஆயிரம் கவிதையே” நிச்சயம் பூவிழி கவிதைதான் அவர்கள் மகள் எனச் சிரித்து ஓடிப் போய் அவர்களோடு படுத்துக் கொண்டாள்.
இந்த வாழ்வும், உலகமும் மகளின் வரவால் வண்ணமயமாகியிருந்தது.
இப்போது கொள்ளு பேத்திக்கு எல்லாம் செய்வது பவுனு அம்மாள்தான். அவளுக்குத் தாலாட்டுப் பாடுவதில் தொடங்கி, குளிப்பாட்டி கதைச் சொல்லி தூங்க வைப்பதெல்லாம் அவர்தான்.
“நான்தான் சொன்னேன்ல. நம்ம ஜோசியன் அப்பவே சொன்னான்னு. என் பேரன் புள்ளங்கள நான்தான் வளர்த்து விடுவேன்னு..” பேரன் பிள்ளையைக் கையில் ஏந்தி மனம் குளிர கொஞ்சித் தீர்க்கிறார். வாரத்திற்கு ஒருமுறையாவது மறக்காமல் இந்த வசனத்தைச் சொல்லி விடுகிறார்.
“இன்னும் என்னா, எனக்குக் கொள்ளு பேரனை பார்த்துட்டா போதும்..” என்று அவர் சொல்லவும், “ஏ அம்மாச்சி” என்று கோபமாக அழைத்தாள் தேன்மொழி.
“ம்க்கும், உடனே இவளுக்குக் கோபம் வந்துடும்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
நான்கு வருடங்களாகக் கோவில் கோவில்களாக ஏறி பிரார்த்திருந்தார்கள். இப்பொழுது அந்த வேண்டுதல்களை, நேர்த்திக் கடன்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றினார்கள்.
பவுனு அம்மாள், முத்தம்மா, கருப்பண்ணசாமி தொடங்கி மாமாக்கள் மூவர், அப்பா, அப்புச்சி சுந்தரராஜன், தாத்தா கந்தன் என அனைவரும் பழனி முருகனுக்கு முடி காணிக்கை செலுத்தியிருந்தார்கள்.
தேன்மொழி, பொற்கொடி, திலகவதி மூவரும் பூமுடி கொடுத்திருந்தார்கள்.
பழனியாண்டவர் சந்நிதியில் தங்கத் தொட்டிலில் பூவிழியைக் கிடத்தி, குழந்தையின் நலனுக்காக மனதார பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
பழனியில் இருந்து நிறைவான மனத்துடன் கீழிறங்கினார்கள். ஜெயபாலன் கையில் இருந்த அக்கா மகளை வாங்க கை நீட்டினான் அன்பழகன்.
“டேய் அன்பே, என் பையன் அத்த மக கூட விளையாண்டுட்டு இருக்கான். பார்த்தா தெரியல உனக்கு?” என்று கேட்டு மருமகளை மடியில் வைத்துக் கொண்டான். அப்பாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த பிரசன்னா அத்தை மகளின் விரல் பிடித்து, அவளிடம் மழலையில் பேசிக் கொண்டிருந்தான்.
“என் மகனுக்கு அத்த மக டா. உன்னைய விட உரிமை அதிகம். நீ தள்ளி உக்காரு” என்று தம்பியின் தோளில் இடித்தான்.
“ண்ணா..”
“உன் கோபம் புரியுது டா அன்பே. விடு, விடு. ஆமா, ஆபீசர் நீ இப்படி மொட்டை போட்டுட்டு ஆபீஸ் போனா, அங்க உன் ஆளு கோவிச்சுக்காதா?” என்று கேலியாகக் கேட்டான்.
“நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா என்ன மச்சா? அவன் உங்க ஆளு தானே?” என்று தர்மா கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் முழித்தான் அவன். சட்டெனச் சிரிப்பலை பரவியது காரினுள்.
பூவிழிக்கு ஏழு மாதம் முடியவும் மீண்டும் அலுவலக வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள் தேன்மொழி.
குழந்தை தவழ தொடங்கியதில் இருந்து வீட்டையே வட்டம் அடிக்கிறாள்தான். ஆனால், அவளைப் பார்த்துக் கொள்ள அப்பத்தா, திலகவதி இருவரும் இருக்க, தேனுவுக்குச் சற்றே ஓய்வு கிடைக்கிறது.
அன்று அதிகாலை வேளையில் குழந்தை பசித்து அழவும் விழித்து விட்டாள் தேன்மொழி. மகளுக்குப் பசியாற்றித் தரையில் பாய் விரித்துப் படுக்கப் போட்டுவிட்டு, அருகில் அமர்ந்து மடிக் கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தர்மாவும் எழுந்து தோட்டத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.
அவன் குளித்து இடுப்பில் கட்டிய துவாலையுடன் வெளியில் வர, “ப்பா” என்றழைத்தாள் பூவிழி.
“அச்சோ, அப்பா சொல்றாளே என் குட்டி பூங்கொத்து. என் செல்ல பொண்ணு. என் தங்க பொண்ணு. என் மல்லிப்பூ.. என் மரிக்கொழுந்து.. அப்பா கூப்பிடுறாங்க.” குனிந்து மகளைக் கையில் அள்ளி அவள் முகமெங்கும் முத்தமிட்டுக் கொஞ்சினான். கிளுக்கி சிரித்தாள் குழந்தை.
“நானும் இங்கதான் இருக்கேன். என்னைய யாருக்கும் கண்ணு தெரியல. இதெல்லாம் சொல்லி ஒரு காலத்துல என்னைக் கொஞ்சினார்.. ம்ம்..” என்றாள் தேன்மொழி, பெருமூச்சுடன் புலம்பியபடி.
“உன்னய கண்ணு தெரியாம இருக்குமாடி மாமனுக்கு. எப்பவும் என் பூந்தோட்டம் நீதான் டி” என்று அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான். அப்பாவின் கையில் இருந்தபடியே தாவி அம்மாவின் முகத்தைத் தடவி, முடியை பற்றி இழுத்து, முயல் குட்டி போலிருந்த இரண்டே இரண்டு பற்களைக் காட்டி புன்னகைத்தாள் பூவிழி.
அந்தப் புன்னகையில் மனம் கொள்ளைப் போக, எட்டி மகளின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் தேன்மொழி.
“ம்ம். மாமன மறக்காதடி சிலுப்பி” என்றவனைக் கண்கள் சுருக்கி முறைத்தாள்.
அந்தப் பார்வை அவனுக்குப் பழைய நினைவுகளைக் கிளறி விட, “நம்மள பார்த்து உங்கம்மாக்கு பொறாம..” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை.
“அம்மா..” என்று அழுத்தமாக அழைத்தாள் பூவிழி.
“அம்மான்னு கூப்பிட்டா தானே இப்போ? ஏன் தர்மா, அம்மான்னு தானே சொன்னா?” கண்களில் துளிர்த்த கண்ணீருடன் மகளைப் பார்த்து, இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
எப்போதும் ம்மா என்பாள். இன்று அழுத்தம் திருத்தமாக அம்மா என்று சொல்லியிருக்க அப்படியொரு பூரிப்பு தேன்மொழி முகத்தில். இந்த வாழ்க்கைக்கு இது போதும் என்பது போலிருந்தது அவளுக்கு.
மகளைச் சுமந்திருந்த கணவனை மகளோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டாள்.
தர்மாவை, “அப்பா” என்று அழைக்கும் போதும் அப்படித்தான் இருந்தது அவர்களுக்கு.
அத்த, மாமா, தாத்தா எல்லாம் எளிதாக விரைவாகச் சொல்லி விட்டாள் பூவிழி.
அம்மா, அப்பா தனிதான் போலும்.
ஒன்பதாம் மாதம் நிறைவடையும் நிலையில் இருந்தாள் பூவிழி. அழகிய நல்லூரின் குளக்கரையில் அமைந்திருந்த கங்கையம்மன் கோவிலுக்குத் திலகவதியுடன் சென்றிருந்தார்கள்.
சொந்த ஊரின் சாமிக்கும், குல தெய்வத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கத்தானே செய்கிறது. இப்போதெல்லாம் எல்லா வெள்ளிகளிலும் இங்கு வந்து விடுகிறார்கள்.
அந்தக் கோவில் தேன்மொழிக்கு மிகவும் பிடித்தமான, விசேஷமான கோவில். அவர்களைத் தொடர்ந்து பொற்கொடி, முத்தம்மாவும் அங்கு வந்திருக்க, அனைவரும் ஒன்றாகச் சாமி கும்பிட்டு, கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“வீட்டுக்கு போவோமாத்தே? எனக்கு வேலையிருக்கு” என்று தேன்மொழி சொல்ல, திலகவதி எழுந்து கொண்டார்.
பூவிழி அம்மாச்சி பொற்கொடியின் இடுப்பில் இருந்தாள்.
“குட்டியை நான் தூக்கிட்டு வர்றேன். நீ நட தேனு” என்று அவர் சொல்ல, “சரிம்மா” என்று கோவில் வளாகத்தை விட்டு வெளியில் வந்தவள் கண்கள் அனிச்சையாகக் குளத்தைத் திரும்பிப் பார்த்தது.
சந்தன நிற சட்டையும், மடித்துக் கட்டிய வேட்டியுமாகக் குளத்தில் இறங்கி அல்லி, செந்தாமரை பறித்துக் கொண்டிருந்தது சாட்சாத் தர்மதுரையேதான்.
மனைவியின் பார்வை வீச்சை உணர்ந்தவன் போலத் திரும்பியவன் கண்கள், அவள் கண்களைக் கூர்ந்தது.
அவனை ஆச்சரியத்துடன் பார்த்து, “மேல வாங்க..” என்று வாயசைத்தாள். கை நிறைய அல்லி, செந்தாமரை மலர்களுடன் ஈரம் சொட்ட சொட்ட மேலேறி வந்து, கையில் இருந்த பூவை மொத்தமாக மனைவியிடம் கொடுத்தான்.
“டேய் தொர. புள்ளைக்கு ரெண்டு பூ குடுடா” என்று திலகவதி அதட்டவும் அடக்கப்பட்ட சிரிப்புடன் மனைவிடம் இருந்து இரண்டு பூவை வாங்கி மகளுக்குக் கொடுத்தான்.
அதைக் கண்டதும் அனைவருக்கும் பழைய நினைவுகள் மனத்தில் மேலெழுந்து வந்தது.
அப்பாவை பார்த்ததும், “அப்பா, அப்பா..” ஏலம் போட்ட பூவிழி, தாவி அவனிடம் சென்றாள்.
மனைவி, மகளை வண்டியில் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் தலைவன்.
பூவிழியின் குட்டி முடியில் உச்சிக்குடுமி போடப்பட்டிருக்க, அதில் குட்டி மல்லிச் சரம் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
“என் பொண்ணு வச்சுதும்தான் மல்லிப் பூவே அழகா இருக்கு” என்று மகளின் கன்னத்தில் கணக்கில்லாமல் முத்தமிட்டான்.
“யோவ் தர்மா..” தேன்மொழி கோபமாக அழைக்க, “அச்சோ” என்று நாக்கை கடித்து, மீசையில் சிரிப்பை மறைத்துத் திரும்பினான்.
“யோ தம்மா..” என்று அம்மாவை போலவே சொன்னாள் பூவிழி.
அதைக் கேட்டதும் இருவருமே வாய் விட்டு சிரித்து விட்டார்கள்.
“அடியே உன்னைய பேரன பேர் சொல்லாதன்னு சொல்லியிருக்கேன்ல” என்று தேன்மொழியைப் பேசும் அப்பத்தா கூடக் கொள்ளு பேத்தி சொல்கையில் பூரிப்பும் புன்னகையுமாக அமர்ந்திருந்தார்.