இந்த வாழ்வென்பது – 34 (1)

அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து கொள்வது தர்மாவின் அன்றாட வழக்கம். இன்றல்ல, நேற்றல்ல, பல வருடத்தைய பழக்கம். அதுபோலக் கடந்த பத்து நாள்களாக அப்பாவின் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறாள் அவன் மகள். தேன்மொழிக்கு எப்போதுமே இந்த அதிகாலையில் எழுந்து கொள்வது கடினம்தான். ஆனால், இப்பொழுது மகளுக்காக இரவுகளை உறக்கமின்றியே கழிக்கிறாள். பெரியம்மா, அம்மாச்சி எனப் பெரியவர்கள் உடன் இருப்பதால் சமாளித்து விடுகிறாள்.

இதுநாள் வரை அவளைப் பார்த்துக் கொள்வதற்கே ஆட்கள் வேண்டும் அவளுக்கு. இப்போது அதிசயம் போல, அபூர்வ மலரைப் போல உதித்திருந்த மகளை அவள் கையில் கொடுத்திருக்க, அவளைக் கவனித்துக் கொள்வதற்குள் திணறிப் போகிறாள். மகளின் ஒவ்வொரு அசைவையும், அதிசயம் போலப் பார்க்கிறாள்.

அவள் அண்ணன் பிள்ளைகளை வளர்த்திருந்தாலும், தன் பிள்ளை என்று வரும் போது அனைத்துமே புதிய அனுபவமாக இருக்கிறது.

குழந்தை அடிக்கடி அழும் போதெல்லாம் மனம் பதறுகிறது. சில மணி நேரங்கள் அழாமல் உறங்கினால், “ஏன் இவ்வளவு நேரம் தூங்குறா?” என்று பயந்து மகளைத் தொட்டு தொட்டுப் பார்ப்பவள், அவளின் சுவாசத்தை உணர்கையில்தான் இவளின் சுவாசம் சீராகிறது.

இதையெல்லாம் கணவனிடம் சொன்னால் சிரிப்பை உதட்டில் ஒளித்துக் கொண்டு அவளை முறைப்பான்.

“என் தேன்னு குட்டி தூங்கறா. அவளைத் தொல்லை பண்ணாம, ரொம்ப யோசிக்காம அவளுக்கு ஒரு பேரை யோசிடி என் சிலுப்பி”

“நீங்க சொல்லுங்க தர்மா..”

“பூவிழி எப்படியிருக்கு தேன்னு?”

“நல்லாருக்கே. பூந்தோட்டக்காரருக்கு வேறென்ன பேரு தோனும், ம்ம்”

“மல்லி, முல்லைன்னு..”

“தர்மா..” அழுத்தமாக அழைத்து அவள் முறைக்க, “என்னடி?” என்று நெருங்கினான். அவன் மார்பில் கை வைத்து பின்னே தள்ளி விட்டவள், “பூவிழிதான் நம்ம பொண்ணு பேரு” என்றாள் புன்னகையுடன்.

பூ போன்ற மகளின் துறுதுறு விழிகளைக் காணும் போதெல்லாம் அவனுக்கு அந்தப் பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

அதுவே மனைவிக்கும் பிடித்து விட, மகளுக்கு அந்தப் பெயரையே வைத்து விடுவது என முடிவெடுத்துப் பெரியவர்களிடம் தெரியப்படுத்தினார்கள்.

தேன்மொழியின் வீட்டில் வைத்து பெயர் சூட்டும் விழாவும் சிறப்பாக நடந்தேறியது.

அன்பழகன் அந்த மாத சம்பளம் மொத்தத்தையும் செலவழித்து அக்கா மகளுக்குப் பொன்னில் காப்பு வாங்கி ஆசையாகப் போட்டு விட்டான்.

அக்காவையும், அக்கா மகளையும் கவனிப்பதே அவனது வேலையாகி போனது. வேலை நாள்கள் தவிர மற்ற நாள்கள், ஒரு நாள் விடுமுறை என்றாலும் திண்டுக்கல் வந்து விடுகிறான் அவன்.

இரு வீட்டு பெரியவர்களும் பேத்தியை அன்பாலும், பரிசுகளாலும் நிறைத்து விட்டார்கள்.

சுதாகரனின் மகள் தர்ஷனாவும், ஜெயபாலனின் ஒரு வயது மகன் பிரசன்னாவும், பாப்பாவை ஆசையாகப் பார்த்து எந்நேரமும் அவளையே சுற்றியே வந்தார்கள்.

இப்போதும் தர்மா மனைவியின் வீட்டில்தான் இருந்தான்.

“ம்ம், என்ன மாப்ள, மாமியார் வீடு பக்கத்திலேயே இருக்கிறதுல இதுவொரு வசதி இல்ல?” என்று ஜெயபாலன் தர்மாவிடம் கேட்க, “என்ன வசதி?” என்று புருவம் உயர்த்தினான் தர்மா.

“எப்போ வேணும்னாலும் பொண்டாட்டி, பிள்ளையைப் பார்க்கலாம். இங்கேயே இருக்கலாம். அதச் சொன்னேன்” என்று சிரித்தவன் முகத்தில் சத்தியமாகத் துளி பொறாமை இருந்தது.

“ஏலே, இங்க வாடா..” என்று சத்தமாக அழைத்து அவனை முறைத்தார் முத்தம்மா.

தர்மா சிரிப்புடன் உள்ளே சென்றான்.

“நான் பத்மாவ பாக்க மதுர போனப்போ அண்ணே போன் பண்ணி என்னைய கடைய பாக்க வரச் சொல்லிச்சு தெரியுமா அம்மாச்சி? எனக்கொரு நியாயம் உன் பேத்தி புருஷனுக்கு ஒரு நியாயமா?” என்று பொங்கினான்.

“மச்சா, உங்கள தங்கச்சி கூப்பிடுது பாருங்க” என்று தர்மா சொல்லவும், “இந்தா வந்துட்டேன் பத்மா” என்று அவசரமாக மனைவியைத் தேடிச் சென்றான்.

“ஏன் லூசு மாதிரி பேசி என் மானத்தை வாங்கறீங்க?” என்று அவன் சட்டையைப் பிடித்தாள் பத்மா.

“அடிப்பாவி, உன்னய பிரிஞ்சு இருக்க முடியலன்னு நான் பீலிங்ஸா பேசிட்டு இருந்தா.. உனக்கு லூசு மாதிரி தெரியுதா?”

“இப்போ நான் இங்க தானே இருக்கேன். உங்க கூடவே.. அப்புறம் என்ன பீலிங்ஸ் வேண்டிக் கெடக்கு உங்களுக்கு”

“அதில்லை டி, போன தடவ பிரிச்சி வச்சாங்க இல்ல. அதுக்கு நியாயம் கேட்க வேணாமா?”

“நீங்க ஒன்னும்..” என்று அவள் ஆரம்பிக்க, “அப்படியெல்லாம் சொல்லக் கூடாது டி. என் புள்ளைக்குத் தங்கச்சி பாப்பா வேணும்ல” என்று சட்டையைப் பிடித்திருந்த அவள் கையை இறுக்கமாகப் பற்றினான்.

அடுத்த முறை அந்தப் பேச்சை அவன் எடுக்கும் போது, “இப்ப என்னடா வேணும் உனக்கு? அடுத்தவாட்டி உன் பொண்டாட்டியை எங்கேயும் அனுப்பாம உன் கூடவே வச்சுட்டு, அவ பின்னாடியே சுத்து” என்றார் முத்தம்மா.

“இப்பயே அதத்தேன் பண்ணிட்டு இருக்க. பெறவென்ன?” என்று அம்மாச்சி சொல்ல, கணவனை முறைத்து பல்லைக் கடித்தாள் பத்மா.

அதைக் காணாதது போல, “மாப்ள, இன்னைக்கு மல்லி என்ன வெல?” என்று அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த தர்மதுரையைக் கேட்டான் அவன்.

தர்மா பதில் சொல்வதற்குள், “உங்களோட.. வாங்க இப்படி..” என்று அவனை இழுத்துக் கொண்டு போனாள் பத்மபிரியா.

மூன்றாம் மாதம் மகளுடன் புகுந்த வீடு வந்து விட்டாள் தேன்மொழி.

error: Content is protected !!
Scroll to Top