இந்த வாழ்வென்பது – 33 (2)

அவர்கள் வீடு போய்ச் சேர்ந்த அரை மணி நேரத்தில் தர்மதுரையும், திலகவதியும் அவர்கள் வீட்டுக்கு வர, “வாங்க..” என்று யோசனையுடன் இழுத்து அவர்களை வரவேற்றான்.

திலகவதி கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, தர்மா நேராக மனைவியின் அறைக்குச் சென்று விட்டான்.

“எம்மா, ஏ அம்மாச்சி, மாப்ள வீட்டுக்கு வந்திருக்கார். அவர் எப்படி வரலாம். இப்போ வரக் கூடாதுல்ல? நீங்க அவர் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?” என்று படபடத்தான்.

“ஏலேய் அவங்க ஒன்னாதான்டா வரக் கூடாது. பொண்ணு வந்ததுக்கு அப்புறம் மாப்ள வரலாம்டா” என்று முத்தம்மா சொல்லவும், “ஆ.. இதெல்லாம் எனக்குச் சொல்லல நீங்க?” என்று அதிர்ச்சியானான்.

நான் இனி இங்குதான் இருக்கப் போகிறேன் என்பது போலத் தர்மா பட்டு வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு வீட்டில் உலாவ, “இதெல்லாம் நியாயமே இல்ல. என்னையலாம் எம் பொண்டாட்டி வீட்டு பக்கமே அனுப்பல நீங்க. மாப்ள மட்டும் இங்கேயே இருப்பாரா?” என்று கேட்டுப் புலம்பினான்.

“உன்னைய யார்ரா போவேனான்னு சொன்னது?” என்று கருப்பண்ணசாமி கேட்டுக் கொண்டே கடந்து போக, “இதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். டேய் அன்பே, ஆபீசர். இங்க வா, இந்த அநியாயத்தை என்னான்னு கேளு” என்று தம்பியை அழைத்தான்.

“என்னங்க..” என்று பத்மா அழைக்கவும், “இந்தா வர்றேன் பத்மா” என்று பதில் சொன்னவன், “இவ வேற.. நான் வாயவே திறக்கக் கூடாதுங்கறா..” என்று புலம்பினான்.

அந்நேரம் தர்மா அங்கு வர, “மாப்ள, நைட்டுக்கு சாப்பிட என்ன வேணும்னு சொல்லுங்க? டீ குடிக்கறீங்களா இப்போ?” என்று அந்தர் பல்டி அடித்தான்.

தர்மா அலைபேசியில் பேசியபடி தலையசைத்து விட்டு நகர, “ஆனாலும், எனக்கு நடந்தது அநியாயம்தான்” என்று அடித்துச் சொன்ன தம்பியின் தோளில் சிரிப்புடன் தட்டிச் சென்றான் சுதாகரன்.

தேனுவின் பிரசவத்திற்கு மூன்று வாரங்கள் இருக்க, அவள் புகுந்த வீட்டினர் அடிக்கடி வந்து பார்த்துச் சென்றார்கள்.

தர்மா தன் வீட்டிற்கு தினம் சென்று வந்தாலும், மனைவியுடன்தான் வசித்தான்.

வீடு, தோட்டம், வேலைகள் என அனைத்தையும் அவனே பார்த்துக் கொண்டு மனைவிக்கு முழு ஓய்வை தந்திருந்தான்.

பத்து நாள்கள் கடந்திருக்கும். இரவு உணவு முடித்து அனைவரும் உறங்கச் சென்றிருக்க, தர்மாவும் அப்போதுதான் படுக்கைக்கு வந்தான்.

மனைவியின் பாதங்களை மென்மையாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தான்.

“தர்மா..”

“என்னடி.. தேன்னு.. வயிறு வலிக்குதா..”

“ம்ம், ஒரு மாதிரியிருக்கு. ‍அம்மாவ இல்லனா அம்மாச்சிய எழுப்பறீங்களா?” என்று மூச்சு வாங்க அவள் பேச, அவள் கைப் பிடித்து மெதுவாக எழுப்பி வெளியில் அழைத்துச் சென்றான்.

முத்தம்மா கூடத்தில்தான் படுத்திருந்தார்.

“நீ உக்காரு. நான் கார எடுக்கறேன்”

“இல்ல. மொத அம்மாச்சிய எழுப்புங்க. ஏதாவது கசாயம் போட்டு குடுப்பாங்க. சூட்டு வலியா இருக்கப் போகுது”

“அத டாக்டர் சொல்லட்டும்டி” என்றான் கண்டிப்புடன். அவனிடம் பேசும் போதே அவளுக்கும் மூச்சு வாங்கியது. வலியில் முகம் கோணியது. அதைக் கண்டதும் தாமதிக்க விரும்பவில்லை அவன்.

அவர்களின் பேச்சுச் சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்து விட்டார் முத்தம்மா.

“என்ன ராசாத்தி? ஏன் நிக்கற? என்னா பண்ணுது?” என்று முத்தம்மா பதற, அந்தக் குரலில், பொற்கொடி எழுந்து வந்து விட்டார். அரை மணி நேரத்தில் தர்மா வீட்டுக்குத் தகவல் சொல்லி, திலகவதியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்கள்.

குழந்தையின் தலை திரும்பி விட்டது என்று சொல்லி அப்போதே அவளைப் பிரவச அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.

ஆனால், ஒரு நாள் முழுக்கத் தேன்மொழி வலியில் துடித்து, தவித்து, அவளுக்காகக் காத்திருந்த அனைவரையும் தவிக்க விட்டாள்.

இரண்டாம் நாள் அதிகாலையில் தேன்மொழிக்கு சுகப் பிரசவத்தில் தேவதை பிறந்தாள். அவள் இரண்டு நாட்களாக வலியில் துடித்த வேதனையெல்லாம் மகளின் முகம் பார்த்ததும் மாயமானது.

“தர்மதுரை, உங்களுக்குப் பொண்ணு பொறந்திருக்கு” ரோஜாப் பூப்போலிருந்த அவன் மகளை ரோஜா நிற துணியில் சுற்றி அவன் கையில் கொடுத்தார்கள்.

பூந்தோட்டக்காரனுக்கு, “பூவிழி” மகளாகப் பிறந்தாள். மகளைக் கையில் வாங்கியவன் மேனி சிலிர்த்து அடங்கியது.

“தேன்னுவ பார்க்கணும், எப்படியிருக்கா? இப்போ பாக்கலாமா?” என்று அனிச்சையாக மனைவியைத் தேடினான்.

ஒரு மணி நேரத்தில் மனைவியையும் மகளையும் ஒன்றாகப் பார்க்கையில் நிறைவான புன்னகை அவன் முகத்தில் மலர்ந்திருந்தது. அவர்களின் வாழ்வைப் போலவே.

error: Content is protected !!
Scroll to Top