இந்த வாழ்வென்பது – 33 (1)

அவர்கள் வாழ்வின் வசந்த காலம் தொடங்கியிருந்தது. அவர்களின் தொழிலும் மேலும் ஏற்றம் கண்டிருந்தது.

அது தேன்மொழிக்கு எட்டாம் மாதம்.

இப்போது முன்பு போல உண்ண முடியவில்லை அவளால். இரவில் சரியாக உறக்கமும் வரவில்லை. அப்படியே அசந்து உறங்கினாலும் அந்நேரத்தில்தான் வயிற்றில் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் வலம் வந்து உதைத்து எழுப்பி விடுகிறது குழந்தை.

மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. தர்மா இன்னமும் வீடு வரவில்லை.

இப்போதெல்லாம் வெளியூர் பயணங்களை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டான் அவன். சென்னை, மதுரை, கொடைக்கானல் என எல்லா இடங்களிலும் முக்கிய ஆட்கள் பொறுப்பில் இருப்பதால் கவலையின்றி, திண்டுக்கல்லில் இருந்தே அனைத்தையும் கையாண்டான்.

அதனால் இரவு வீடு வர தாமதமாகிறது.

தேன்மொழி அப்பத்தாவோடு அமர்ந்திருந்தாள்.

“வைதேகி மகனுக்குதான் இந்தப் புள்ளைய கட்டியிருக்கு.” என்று அவளிடம் உறவுகளின் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார் அப்பத்தா.

“ம்ம்” கொட்டி கதைக் கேட்டு கொண்டிருந்தாள் அவள்.

“தேனு, சாப்பிடுறியா?” திலகவதி கேட்க, “வேணாம்த்தே.‌ அவர் வந்ததும் சாப்பிடறேன்” என்றாள்.

“நேரமாச்சுல்ல‌, சாப்டுத்தா. இல்லனா செமிக்காம நெஞ்சு மேலேயே நிக்கும்”

“இல்ல, அம்மாச்சி. அவர் வரட்டும். நீங்க சாப்பிடுங்க” என்றவளின் இரு கைகளிலும் ஈரமாய் மருதாணி பூசியிருந்தாள்.

அவள் உள்ளங்கை முழுவதிலும் குட்டி குட்டி நிலாக்கள் பூத்திருந்தது. அதை வைத்துக் கொள்ளவே அத்தனை அடம் பிடித்திருந்தாள் வீட்டில்.

அவள் ஆசைப்படும் அனைத்தும் கேட்காமலே வாங்கிக் கொடுத்த, செய்து கொடுத்த வீட்டினர் குளிர்ச்சியான பொருட்கள் அவள் கேட்டாலும் கொடுப்பதில்லை.

அவளுக்குச் சட்டெனச் சளி பிடித்து விடும். அதைத் தவிர்க்கவே குளிர்ச்சியான பொருட்களுக்குப் பெரிய தடா.

“எனக்கு மருதாணி வெச்சுக்கணும் போலருக்கு அண்ணி” என்று அவள் ரம்யாவிடம் சொல்ல, அதைக் கேட்ட பத்மா கணவனிடம் சொன்னாள். ஜெயபாலன் பக்கத்து வீட்டு மருதாணி செடியை மொட்டை அடித்து மருதாணி கிளைகளுடன் வீடு வந்தான்.

ரம்யா, “உனக்குச் சளி பிடிக்கும் தேனு. இரு அத்தைக்கிட்ட கேட்போம். அப்புறமா வச்சுக்கோ” என்று சொல்லி பொற்கொடியை இழுத்து வந்தாள். பொற்கொடி திரும்பி அம்மாவைப் பார்த்தார்.

“ராசாத்தி ரொம்ப ஆசைப்படுறால்ல? கொஞ்ச நேரம் வச்சுருந்துட்டு கைய கழுவிக்கட்டும். என்னா?” என்றவர், “எதுக்கும் மாப்ளயோட அப்பத்தாகிட்ட ஒரு வார்த்த கேட்டுப்போம்” என்று யோசனையுடன் சொன்னார்.

“மருதாணியா? வேணாம், வேணாம். உனக்குச் சேராது.” என்று மறுத்த அப்பத்தா, தேன்மொழியின் வாடிய முகம் பார்த்து, “ராசா என்னையதான் வைய்யும்” என்று கன்னத்தில் கை வைத்தார்.

“நீ தான சொன்ன அம்மாச்சி, நான் ஆசைப்பட்டத செய்யாட்டி கால் வீங்கி போகும்னு. பாரு, என் கால் வீக்கமா இருக்கப் போலயே இருக்கு” என்று காலை நீட்டினாள். அவள் நேரம் கால் வீங்கி இருப்பது போலத்தான் தெரிந்தது.

திலகவதி உடனடியாக வென்னீர் வைத்து கொடுக்க, அதில் காலை அமிழ்த்தி அமர்ந்திருந்தவள், “அம்மாச்சி..” என்று அழைத்தாள்.

“திரும்ப ஆரம்பிக்காதத்தா..” என்றவர், “செரி செரி, மருதாணி கையில புடிக்கிற வரைக்கும் வச்சுக்கோ. படுக்கப் போகும் முன்ன கையைக் கழுவிடணும். என்னா?” என்று கேட்க, வேகமாகத் தலையசைத்தாள்.

உடனே பத்மா வந்து அவளின் இரு கைகளிலும் அழகாக மருதாணி வைத்து விட்டுச் சென்றாள்.

இப்போது இரண்டு கையிலும் மருதாணியுடன் அவள் அமர்ந்திருக்க, “வயித்துப் புள்ளைக்காரி நேரத்துக்குச் சாப்பிடணும்னு சொன்னா கேட்கறாளா பாரு உம் மருமக.. வீம்பு பிடிச்சவ” என்று திலகாவிடம் சொன்னவர், “நீ தட்டுல சோத்த போட்டு கொண்டா” என்றார்.

இட்லி, சப்பாத்தி, தக்காளி குருமா, சிக்கன் குழம்பு இரவு உணவாக இருக்க, அனைத்தையும் எடுத்து வைத்த திலகவதி, “தேனு, எந்திரிச்சி கைய கழுவு, சாப்பிடுவ” என்றார்.

இரண்டு கைகளையும் உயர்த்தி வெளிச்சத்தில் பார்த்தவள், “இன்னும் சரியா புடிச்சுருக்காதுத்தே” என்றாள்.

திலகவதி தட்டில் உணவை எடுத்து வைத்து அவளின் அருகில் அமர, “இங்க கொண்டா, நான் குடுக்கறேன். நீ போய் வேலையைப் பாரு” என்று தட்டை வாங்கிக் கொண்டார் அப்பத்தா.

“இருக்கட்டும் அம்மாச்சி. நான் அப்புறமா சாப்பிடுறேன்” என்ற அவளின் மறுப்பைச் சட்டை செய்யாமல் அவளுக்கு இட்லியை ஊட்டி விட்டார்.

ஒரு இட்லி முழுதாக உள்ளே சென்றதும் நிமிர்ந்து அமர்ந்தாள் தேனு.

“நல்லா கால நீட்டி சாஞ்சு உக்காருத்தா”

“ஏ அம்மாச்சி, உன் பேரன் புள்ள வரப் போகுதுன்னதும்தான என்னைய கவனிக்கற?”

“மதுரக்காரிக்கு இருக்க வாயி. பேசாம சாப்பிடுத்தா..” என்று இட்லியை அவள் வாயில் திணித்தார்.

“நான் என்ன இப்போ இல்லாததையா சொல்லிட்டேன் அம்மாச்சி. இதுக்கு முன்னாடி எனக்கு ஒருநாள் ஊட்டி விட்டிருப்பியா நீயி?”

“அதேன் உங்கத்தே உனக்கு ஊட்டுறாளே..”

“அது எனக்கு மேலுக்கு முடியலனாத்தான..”

“ராசாதான் நெதம் ஊட்டுதுல்ல?” என்று அவர் முறைக்க, ஆவென்று அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள் தேன்மொழி.

“உன்னைய கட்டிக்கிட்டு வந்த நாள்ல இருந்து என் ராசா ஊட்டி விடுறாப்ல இல்ல? அப்புறம் என்னா உனக்கு?” என்று அவர் நொடிக்க, “நான் உன்னய தானே கேட்டேன் அம்மாச்சி” என்று அவரைப் போலவே கழுத்தை தோளில் இடித்தாள்.

“உனக்குக் காதுதான் பாம்பு காதுன்னு பார்த்தா, கண்ணு அதுக்கு மேல இருக்கும் போலயே..” என்று அவள் முணுமுணுக்க, சிரித்தார் பவுனு அம்மாள்.

அவர் எப்போதும் கூடத்தில்தான் உறங்குவார்.

தர்மாவுக்கு அதுவொரு பழக்கம். அவன் உண்ணும் போது ஒரு வாய் சோறை மனைவிக்கு ஊட்டி விடுவது. பெரும்பாலும் அவன் வரும் நேரத்தில் உறங்கி விடுவார் பெரியவர். ஆனாலும், கவனித்திருக்கிறாரே என்ற ஆச்சர்யம்தான் அவளுக்கு.

“போதும் அம்மாச்சி..”

“மூனு இட்லி உனக்கே காணாது. இதுல புள்ளைக்கு எப்படிப் பத்தும். இன்னொரு இட்லி சாப்பிடுத்தா”

“ம்ஹூம், வேணாம் அம்மாச்சி” என்று மறுத்து வேகமாக எழப் போனவளை, “படக்குனு எந்திக்காதத்தா” என்று அவர் எச்சரிக்க, அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த தர்மதுரை ஓடி வந்து மனைவியைக் கைத்தாங்கலாகத் தாங்கிப் பிடித்தான்.

“ராசா நான் சொன்னா உம் பொண்டாட்டி எங்க கேட்குறா” என்றவரை முறைத்து மேலும் புலம்ப விட்டான் அவன்.

மனைவி கையில் இருந்த மருதாணியைக் கவனிக்கவே செய்தான். ஆனாலும், ஒன்றும் சொல்லவில்லை அவன்.

அவன் உடை மாற்றி வருவதற்குள் தேன்மொழி கையில் இருந்த மருதாணியைக் கழுவி விட்டாள்.

“இதுக்குத்தேன் சொல்றது அததுக்கு அந்தந்த பூசாரி வரணும்னு” என்று ராகம் போட்டார் அப்பத்தா.

தர்மா இன்றும் மனைவிக்கு ஊட்டி விடத் தேனுவின் கண்கள் அப்பத்தாவை தொட்டு மீண்டது. கணவன் நீட்டியதை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். இரவு உணவு முடித்ததும் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான். அதன் ஒரு பக்கம் முழுக்கக் குட்டித் தோட்டம் இருந்தது.

தொட்டியிலும், பையிலும் மல்லிகை, பிச்சி, ரோஜாக்கள் இருந்தது. மலர்களின் மணத்தைச் சுவாசித்தப்படி மாருதம் மேனியை தீண்ட, மெல்ல மாடியில் நடந்தார்கள்.

“தர்மா தர்மா நில்லுங்க நில்லுங்க..” என்று தேனு பதறவும் நடையை நிறுத்தி மின்னல் வேகத்தில் அவள் வயிற்றில் கை வைத்தான் அவன். அதுதான் அவர்களின் வாடிக்கை.

கணத்தில் அவள் வயிற்றில் அசைந்தது குழந்தை. தன் உள்ளங்கையில் அதை உணர்ந்த தலைவனின் உடல் முழுவதும் பரவியது பரவசம்.

மீசைக்கடியில் நெளிந்த புன்னகையுடன் குனிந்து மென்மையான அழுத்தத்துடன் மனைவியின் வயிற்றில் முத்தமிட்டான். அப்படியே நிமிர்ந்து அவள் கன்னத்தையும் ஈரப்படுத்தினான்.

அவர்களின் காத்திருப்பும், ஏக்கமும் அந்தக் கணத்தில் காணாமல் போயிருந்தது.

“அம்மா இன்னைக்கு வளைகாப்புக்கு நாள் பாக்கறதா சொன்னாங்க” தேனு சொல்ல, தர்மாவுக்குதான் அவளை அனுப்பவே மனம் வரவில்லை.

ஆனால், அதற்காக அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார்கள் அல்லவா.

அதனால் மறுமாதம், அவளின் ஒன்பதாம் மாதத்தில் விமரிசையாக ஊரை அழைத்து வளைகாப்பு நடத்தினார்கள்.

மணிவண்ணனுக்குத் தங்கை மகளைப் பார்க்கையில் அப்படியே தங்கையைப் பார்ப்பது போலிருந்தது.

அவள் தலையில் கை வைத்து அழுத்தி, கலங்கிய கண்களுடன் அவளை ஆசிர்வதித்தார். அவருக்கு மருமகளைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆசை. ஆனால், பொற்கொடி முடியவே முடியாதென்று மறுத்து விட்டார்.

“என் பொண்ணுக்கு நான்தான் பிரசவம் பார்ப்பேன்” என்று முடிவாகச் சொல்லி விட்டார்.

அவர்கள் வருந்துவதைப் பார்த்ததும், “இங்கன அவள பார்த்துக்க நாங்கள்லாம் இருக்கோம்ல தம்பி. தேனு மாமியா வீடும் இங்கனக்குள்ள தானே இருக்கு? ராசாத்திய நாங்க நல்லா பார்த்துப்போம். நீ கவலைப்படாம இருப்பா. குழந்தை பொறந்ததும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்ப் பார்த்துக்கோங்க நீங்க” என்று முத்தம்மாதான் அவருக்குச் சமாதானம் சொன்னார்.

வளைகாப்புக்கு பரமேஸ்வரியையும் அழைத்திருந்தார்கள். அப்போதும் அவர் பேச்சு குறையவில்லை. ஆனால், அதையெல்லாம் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் எண்ணமும் அங்கு யாருக்கும் இல்லை.

கீதாராணி தேனுவுக்கு வளையல் போட போக, அம்மாவை தடுத்து பிடித்தாள் ரம்யா.

“நீ ஒருத்தி போதும்டி, என்னைய அவமானப்படுத்த..” என்று மகளிடம் கோபப்பட்டார் அவர்.

“நீ அவமானப்படுத்துனதத் தேனு மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். உன் பெரிய மனசு அன்னைக்கே எனக்குத் தெரியும். அதுனால பேசாம இரு. உன்னய கூப்பிட்டதுலாம் திருஷ்டி கழியதான். அதுனால என் கூடயே நில்லு” என்ற மகளைப் பல்லைக் கடித்து முறைக்க மட்டுமே அவரால் முடிந்தது.

பொன்னாலான ரோஜாக்கள் பதித்த வளையல்களை மனைவிக்குப் போட்டு விட்டான் தர்மா.

“அழகா இருக்கு..” தேனுவின் பார்வையே அதைச் சொன்னது.

வளைகாப்பு முடிந்ததும் தேனுவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள் பொற்கொடி குடும்பத்தினர்.

தர்மா பெரிதாக அந்தப் பிரிவுக்கு அலட்டிக் கொள்ளவில்லை.

அப்பத்தாதான் அறிவுரைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்.

“நான் நெதம் வந்து பாக்கறேன் உன்னய.” என்று அவர் சொல்ல, “நீ வரலன்னா நானே வந்துடுவேன் அம்மாச்சி” என்று மிரட்டினாள் தேன்மொழி.

“என்னடா அன்பே, உங்க மாமா உன்னைய போல அழுவார்னு பார்த்தா உங்கக்காவ அனுப்பிட்டு பீலே பண்ணாம நிக்குறாரு” என்று அன்பழகன் கழுத்தில் கைப் போட்டு ஜெயபாலன் விசாரிக்க, “என்னைய விடே..” என்று நமுட்டு சிரிப்புடன் அண்ணனின் பிடியில் இருந்து நழுவியவன், சிரிப்பு மறையாமல் காரில் அக்காவின் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.

ஓரே ஊரில்தான் இருக்கப் போகிறார்கள். ஆனாலும், அவர்கள் கார் தெருவில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தான் தர்மா.

“ம்ம், உம் மாமா கொஞ்சூண்டு ஃபீல் பண்றார் போலயே டா அன்பே..”

“பேசாம வாண்ணா” என்று அண்ணனை அதட்டினான் அன்பு.

ஜெயபாலன் அசட்டையாகத் தோள் குலுக்கி கொண்டான்.

error: Content is protected !!
Scroll to Top