தர்மா அதற்குள் அக்கா அன்புக்கரசிக்கு அழைத்துச் சொல்லி விட்டான்.
“நாங்க தேன்னு வீடு வரைக்கும் போய்ட்டு வர்றோம்மா” தர்மா சொல்ல, “ஒரு வாய் சாப்பிட்டு போங்கப்பா” என்றார்.
இட்லி, தோசை சாப்பிட்டு தேனுவின் வீட்டுக்கு அவர்கள் கிளம்ப, அவர்களுக்கு எதிரேயே வந்து விட்டார்கள் பொற்கொடி, முத்தம்மா இருவரும்.
“ராசாத்தி..” நெகிழ்ச்சியுடன் பேத்தியின் கைப் பிடித்துக் கொண்டார் முத்தம்மா.
“வெளில யாருக்கும் சொல்ல வேணாம். கண்ணு பட்டு போகும்.” என்று அவர்களை எச்சரித்தார் அப்பத்தா.
இரு பக்க நெருங்கிய உறவுகளுக்கும் அவசரமாக அலைபேசி வழியே செய்தி பறந்தது.
அன்று மாலையே முதல் ஆளாக அன்பழகன் அக்காவை பார்க்க வந்து விட்டான்.
அக்காவுக்குப் பிடித்த உணவுப் பண்டங்கள், பழங்கள் என அவனுக்குத் தெரிந்த வகையில் வாங்கி வந்திருந்தான்.
அடுத்து அண்ணன்கள் வந்தார்கள்.
“மாப்ள சாதிச்சுட்டீங்க. எம் புள்ளைக்கு மருமகள பெத்து குடுங்க” என்றான் ஜெயபாலன் ஆர்ப்பாட்டமாக.
சுதாகரன் அமைதியாகத் தங்கையின் அருகில் அமர்ந்திருந்தான். ரம்யாதான், “டாக்டர் என்ன சொன்னாங்க? ஸ்கேன் எடுத்தீங்களா? அடுத்தச் செக் அப் எப்போ?” எனத் தேனுவிடம் கேட்டு கொண்டிருந்தாள்.
இரவோடு இரவாக அன்புக்கரசி குடும்பம் வந்து பார்த்துச் சென்றார்கள். மூத்த மகன் தீபனை கையோடு அழைத்துச் சென்றவர்கள், ரோஜாவை மாமனிடம் விட்டுச் சென்றார்கள்.
“தேனு, ஒழுங்கா சாப்பிடு. என்ன வேணும்னு சொல்லு. நான் மதுரயிலருந்து வாங்கிட்டு வர்றேன். ஏதாவது சாப்பிட ஆசையா இருந்தா சொல்லு, செஞ்சு எடுத்துட்டு வர்றேன்” என்றாள் அன்பு, தம்பி மனைவியிடம் ஆசையாக.
“ம்ம்” என்று தலையாட்டிய தேனு, “நீங்க பண்ற புளியோதரையும், பூண்டுக் குழம்பும் சாப்பிடணும் போலருக்கு அண்ணி” என்றாள்.
“நாளைக்கே செஞ்சு எடுத்துட்டு வர்றேன் தேனு” என்றவள், “இப்பவே புளி காச்சல் செஞ்சு வச்சுட்டு போகவா?” என்று பரபரத்தாள்.
“புளி காச்சலா? ஏன் தேனு இந்த ஆடு, கோழி, மீனு இதெல்லாம் சாப்பிடணும் போல இல்லையா உனக்கு?” என்று கேட்டான் ஜெயபாலன்.
“பத்மாலாம் மீனும் நண்டுமா சாப்பிட்டா.. ஞாபகம் இருக்குத்தானே உனக்கு?”
“ஒருத்தருக்கு ஒன்னு புடிக்கும், இன்னொருத்தருக்கு அது புடிக்காது. எல்லாம் தெரிஞ்சா மாதிரி பேசுவான். பேசாம இருடா” என்று முத்தம்மா பேரனை அதட்ட, “அண்ணே அது சாப்பிட கேட்குது அம்மாச்சி” என்று உண்மையைப் போட்டு உடைத்தான் அன்பழகன்.
“டேய் அன்பே, இப்படிச் சபையில அண்ணனை விட்டுக் கொடுக்கலாமா நீ?” என்று அன்பழகனின் கழுத்தை ஒற்றைக் கையால் வளைத்தான்.
“அண்ணே.. என்னைய விடே..” என்று அவன் கத்த, சிரித்தான் சுதாகரன்.
“நீங்க புளிச்சோறே கிண்டி குடுங்க அண்ணி” என்றான் அன்புக்கரசியைப் பார்த்து. சிரிப்புடன் தலையசைத்தாள் அவள்.
மறுநாள் தங்கை மகளைக் காண வீடு வந்தார் மணிவண்ணன். அவருடன் அத்தை நிர்மலாவும் வந்திருந்தார்.
“என்னைய மட்டும் தனியா விட்டு போறீங்க? எனக்கும் தேனுவை பாக்கணும்” என்று புலம்பிய பத்மா, தேன்மொழிக்கு அலைபேசியில் அறிவுரைகளை அள்ளித் தெளித்து விட்டாள்.
மறுநாள் தர்மா, தேன்மொழி இருவரின் குடும்பமும் தர்மாவின் வீட்டிலிருக்க விருந்து பேச்சு எனக் கலகலத்தது வீடு.
இருவரின் மகிழ்ச்சி பலரின் மகிழ்ச்சியாக மாறியிருந்தது.
“ப்பா, நம்மகிட்ட வேலை பாக்கற எல்லாருக்கும் ஒரு மாச சம்பளம் போனஸா குடுக்கலாமா?” என்று அப்பாவிடம் தர்மா கேட்க, “கண்டிப்பாகக் குடுக்கலாம் தம்பி” என்றார் சுந்தரராஜன்.
“நாம பூ எக்ஸ்போர்ட் ஆரம்பிச்சி பத்து வருஷம் ஆகிடுச்சுப்பா. அதுக்காக என்ன செய்யன்னு யோசிச்சுட்டே இருந்தேன். அதான்.. இனிப்போட ஒரு மாச சம்பளமும் சேர்த்து குடுத்துடலாம்னு நெனச்சேன்”
“சந்தோஷம் தம்பி. அப்படியே செஞ்சுடலாம்” என்று மகனின் ஆசையை ஆமோதித்தார்.
அவர்களின் தோட்டத்தில் பூ பறிப்பவர்கள், களை எடுப்பவர்கள் தொடங்கிக் கணினி பணியில் இருப்பவர்கள் வரைக்கும், அனைவருக்கும் அவர்களின் ஒரு மாத ஊதியத்தை அந்த மாத சம்பளத்துடன், ஒரு கிலோ இனிப்பும் சேர்த்து வழங்கினான் தர்மா.
அவர்களின் குடும்பமே நின்று கொடுக்க, யாருக்கும் அது வித்தியாசமாகப்படவில்லை.
அவர்களின் மகிழ்ச்சியை அனைவரோடும் வேறொரு வகையில் பகிர்ந்து கொண்டான்.
முதல் நான்கு மாதங்கள் தேன்மொழி சற்றே சிரமப்பட்டாள். வாந்தி, மயக்கம், சோர்வு எனக் கர்ப்பக்கால அவஸ்தைகள் அவளைப் படுத்தி எடுத்தது. ஆனாலும், தினமும் தவறாமல் வேலைக்குச் சென்றாள். காலை சற்றுத் தாமதமாக எழுவாள். மாலை விரைவாக வீடு வருவாள். அவ்வளவுதான். மற்றபடி அவள் வாழ்வு இயல்பாகத்தான் சென்று கொண்டிருந்தது.
ஊருக்குள் அவர்களாக யாரிடமும் சொல்லவில்லை. ஆனாலும், அவளின் பூரித்த முகத்தையும், பூசிய உடலையும், அடிக்கடி சோர்ந்து அமரும் விதத்தையும் கொண்டே விஷயத்தைக் கண்டறிந்து கொண்டார்கள் பலர்.
“என்ன திலகா? மருமக மாசமா இருக்கு போல?” என்று யாரேனும் விசாரித்தால், “ஆமா” என்று சிரிப்புடன் சொல்லி விடுவார் திலகவதி.
அப்பத்தாதான், “ஐயோ அவ கண்ணு கொள்ளி கண்ணு. அவ காலடி மண்ணெடுத்து வந்து பேத்திக்கு சுத்தி போடணும்” என்று அலப்பறையைக் கூட்டுவார்.
முன்பு போலவே இப்போதும் பார்ப்பவர் எல்லாம் ஆயிரம் கோளாறு சொன்னார்கள். எல்லாவற்றுக்கும் மண்டையை ஆட்டி விடுவாள் தேன்மொழி.
மாதம் தவறாமல் மருத்துவமனை சென்று வந்தார்கள். மாமியார், அம்மா வீடு என இரண்டு பக்கமும் அவளைச் சிறப்பாகக் கவனிக்க, வயிற்று குழந்தையும் ஆரோக்கியமாக வளர்ந்து கொண்டிருந்தது.
ஐந்தாம் மாதமே வளைகாப்பு போட்டு வீட்டிற்கு அழைத்துக் கொள்கிறோம் என்று கேட்டார்கள் பொற்கொடி, முத்தம்மா இருவரும்.
“ஏழாம் மாசம் கூப்பிட்டுக்கோங்க” என்றார் திலகவதி. தலைவன் முகத்தைப் பார்த்தால் மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பும் எண்ணமே அவனுக்கு இல்லாதது போலிருந்தது.
அன்பழகன் வாரந்தோறும் வந்து அக்காவை பார்த்துச் செல்ல, அன்புக்கரசி மாதம் ஒருமுறை வந்து சென்றாள்.
தேன்மொழி விரும்பிய அனைத்தும் அவள் வாய் விட்டு கேளாமலே வீட்டினர் நிறைவேற்றி வைத்தார்கள்.