அவர்களுக்குக் கல்யாணமான நாளிலிருந்து காத்திருந்த ஒன்று அந்தக் கணத்தில் சுக செய்தியாகக் காதில் விழ, இருவருமே உணர்ச்சி வசப்பட்டுப் பேச்சு மறந்து அமர்ந்திருந்தார்கள். இருவர் கரங்களும் அவர்களின் மனத்தைப் போலப் பின்னி பிணைந்திருந்தது.
மருத்துவர் பரிந்துரைத்த பரிசோதனைகளை உடனடியாக எடுத்தார்கள்.
இத்தனை வருட காத்திருப்பை விட இந்தச் சில மணி நேர காத்திருப்புதான் பெருங்கொடுமையாக இருந்தது அவர்களுக்கு.
“வீட்டுக்குச் சொல்லுவோமா தர்மா?”
“இல்ல தேன்னு, நேர்ல போய்ச் சொல்லிக்கலாம்..” என்றான் தர்மா. சரியெனத் தலையசைத்து அமர்ந்திருந்தவளுக்கு எந்தச் சந்தேகங்களும் இல்லை. மனைவியோடு இயல்பாகப் பேசியபடி அமர்ந்திருந்த தலைவனின் இதயத்தில் தடத்தடத்து ஓடிக் கொண்டிருந்தது ரயில் ஒன்று.
“தேன்னு.. உனக்கு எத்தன நாளா வாந்தி இருக்கு?”
“திடீர்னு நேத்துதான் மாமா ஸ்டார்ட்டாச்சு. ஏன் கேட்கறீங்க?”
“தெரிஞ்சுக்கத்தான்” என்றவன், மனைவியின் கரத்தை இறுகப் பற்றினான். முடிவு தெரிந்தும், தெரியாததுமான இந்தத் தவிப்பு அவனை அல்லாட வைத்தது. நடுநடுவே அவனுக்கு அலுவலக அழைப்புகள் வேறு வந்தவாறு இருந்தது.
அன்று வெளிநாடு, உள்நாட்டுக்குள் செல்ல வேண்டிய பூக்கள் பற்றிய விசாரணை, நிலவரம் அறிய கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குள் திணறிப் போனான். ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்தே பதில் சொன்னான்.
இதற்கிடையில் கஸ்டம்ஸ் மற்றும் அலுவலகப் பணிகள் வேறு அவனுக்காகக் காத்திருந்தது. அவனிருந்த மனநிலையில் நிச்சயமாய் அவனால் சரியாகச் செய்ய முடியாது. மனைவியைத் திரும்பிப் பார்த்தவன், அக்காவை அழைத்துப் பல வருடங்கள் கழித்து அந்த வேலையை அவளைப் பார்க்கச் சொன்னான்.
“தேன்னு..” படபடப்பும் பதற்றமுமாக அவன் அழைக்க, “அன்புக்கு ஆஃபீஸ் போட்டு போக ஷர்ட் எடுத்துக் குடுக்கணும் தர்மா. ரெண்டு அம்மாச்சிக்கும் சேல எடுக்கணும். அத்தை போன் ஸ்கிரீன்ல..” என்று அவள் போக்கில் வீட்டுக் கதைப் பேசிக் கொண்டிருந்தாள்.
“அடியேய் சிலுப்பி.. மாமன் அவஸ்தை புரியாம..” என்று அவன் புலம்ப, “என்ன தர்மா?” என்று விழி விரித்து அவன் முகம் பார்த்தாள்.
அந்நேரம், “தேன்மொழி..” என்று செவிலி அழைக்க, தர்மதுரை தாவி எழுந்து நின்றான்.
அத்தனை பரிசோதனை முடிவுகளும், அவள் கருவுற்றிருக்கிறாள் என்றது.
தர்மா கண்களால் மனைவியைக் கட்டிக் கொண்டான்.
“45 டேஸ் ஆச்சுல்ல. இப்பவே ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்” என்றார் மருத்துவர்.
அவள் உடலில் எந்த மாறுதல்களும் இல்லை. ஆனால், ஸ்கேன் செய்கையில் மெலிதாக ஒலித்த சத்தம் குழந்தையின் இதயத் துடிப்பு என்று மருத்துவர் சொல்லாமலே அவர்களுக்கு விளங்கியது.
அவர்கள் உயிரில் இருந்து உயிராகிய உயிரின் ஒலியை கேட்கையில் இருவரின் உயிரும் உருகியது. மனம் நெகிழ தேனுவின் கண்களில் கண்ணீர். தர்மா உணர்ச்சிப் பெருக்கில் தேனுவின் கரத்தை அழுந்த பற்றித் தன் அன்பை கடத்தினான்.
இருவருக்குமே அது அற்புதமான கணம். தங்கள் மனத்தில் ஆழ பதிய வைத்துக் கொண்டார்கள்.
மீண்டும் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெற்று, தேனுவின் சளி காய்ச்சலுக்கு, கருவில் இருந்த குழந்தையைப் பாதிக்காதபடி மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை, சத்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, பரிசோதனை முடிவுகளுடன் வெளியில் வந்தார்கள்.
“ஏதாவது சாப்டுறியா தேன்னு?”
“இல்ல, வேணாம் தர்மா. வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுக்கறேன்” என்றாள்.
“ம்ம்..” அதற்கு மேல் எதுவுமே பேசவில்லை அவன். அவனது அமைதி பார்த்து அவளும் பேச முயற்சிக்கவில்லை. அவன் கையில் கார் வேகமெடுக்க, அவள் கண் மூடி இருக்கையில் சாய்ந்தாள்.
காரின் ப்ளூடூத் வழியே அன்பழகனை அழைத்தான் தலைவன்.
தேனுவின் மிக நெருங்கிய உறவு தம்பிதானே? அவர்கள் வாழ்வின் மகிழ்வான செய்தியை முதலில் அவனிடம்தான் பகிர்ந்தான்.
அப்போதுதான் அலுவலகம் சென்றிருந்தான் அன்பழகன்.
அந்தச் சந்தோஷச் செய்தியை கேட்டதும், “மாமா..” என்று கத்தி, “கங்கிராட்ஸ் மாமா” என்று ஆர்ப்பரித்தான்.
“அக்கா எங்க?”
“பக்கத்துலதான் இருக்கா அன்பு”
“ம்ம், வீட்டுக்கு போய்ட்டு இருக்கீங்களா மாமா? நான் லீவ் போட்டு ஊருக்கு வர்றேன்” என்றான் ஆர்வமும், படபடப்புமாக.
“அன்பு, இப்போதான் டா வேலையில் ஜாயின் பண்ணியிருக்க. லீவ் போடாத. ஆபீஸ் முடிச்சுட்டு பொறுமையா ஈவினிங் வாடா” தேன்மொழி சொல்லவும், ஓர் நொடி தாமதித்து, “சரிக்கா” என்றான்.
திண்டுக்கல்லில் தேன்மொழிக்குப் பிடித்த கடையில் நிறுத்தி வீட்டுக்கு இனிப்பு வாங்கிக் கொண்டு, சில நிமிடங்களில் வீடு வந்து விட்டார்கள்.
“வாங்க ராசா..” வாசலைப் பார்த்து அமர்ந்திருந்த அப்பத்தா இருவரையும் கண்கள் மலர பார்த்து வரவேற்றவர், “என்னத்தா இப்பத்தேன் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா?” என்று தேன்மொழியிடம் கேட்டார்.
“எங்க? வழி மறந்து போச்சு அம்மாச்சி. உன் ராசாதான் என்னைய இழுத்துட்டு வந்தாரு..” என்று வாய் பேசியவளின் கையை உண்மையாகவே இழுத்துக் கொண்டுதான் போனான் தலைவன்.
“வா தேனு. இப்ப உடம்புக்கு எப்டியிருக்கு?” என்று திலகவதியும் விசாரித்தார். தேன்மொழி பதில் சொல்லும் முன், “இஞ்சி போட்டு டீ போடும்மா. இப்ப வந்துடுறோம்” என்றவன், மனைவியோடு அறைக்குள் நுழைந்து விட்டான்.
“என்னவாம் திரும்பச் சடவா இவங்களுக்குள்ள? உன் மருமவ மூஞ்சியைப் பார்த்தா அப்படித் தெரியலயே. நல்லாத்தேன் இருக்கா. அப்புறம் ஏன் ராசா பேசாம போறான். உனக்கெதுவும் தெரியுமா?” என்று திலகவதியிடம் கேட்டார் அப்பத்தா.
“நேத்து எடம் ரெஜிஸ்டர் பண்ணிட்டோம்னு போன் போட்டாங்கத்தே. அப்புறமேட்டு தேனுக்கு முடியலன்னு சொன்னியான். இப்ப என்னான்னு தெரியலையே..” என்று மகனின் அறையைப் பார்த்தவர், “நான் போய் டீய போடுறேன். உங்களுக்கும் தரவாத்தே?” என்று கேட்டபடி சமையல் அறைக்குச் சென்றார்.
தேன்மொழிக்கு அறைக்குள் நுழைந்ததுதான் தெரியும். மறுகணம் கணவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.
மருத்துவனையில் வைத்து வெளிப்படுத்த முடியாத அவன் உணர்வுகளை ஒற்றை அணைப்பின் வழியே அவளுக்குக் கடத்தினான்.
மலரின் மென்மையோடு மனைவியின் வயிற்றில் பதிந்தது மலர் தோட்டக்காரனின் கரம்.
“குழந்தைக்கு ஹார்ட் பீட்டே வந்துடுச்சுடி..” என்றான் உணர்ச்சி மிகுதியில் கரகரத்த குரலில்.
“தர்மா..” தன் தோளில் ஈரம் உணர்ந்து மெல்ல விலகி கணவனின் முகம் பார்த்தாள். மெல்லிய நீர்படலம் அவன் கண்களில். அதீத அன்பின் வெளிப்பாடு அது.
அவன் கழுத்தை சுற்றி கைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.
“தொர..” திலகவதி அழைக்க, மெல்ல விலகி அவள் முகமெங்கும் முத்தத்தடம் அழுத்தமாய்ப் பதித்து, “வா, அம்மாகிட்ட சொல்லலாம்” என்றான்.
“இதோ வர்றேன்ம்மா” என்று குரல் கொடுத்தவன், பொற்கொடியை அழைத்து வீட்டில் இருக்கும்படி கூறினான்.
அப்பத்தா, திலகவதி இருவருக்கும் தேன்மொழி இனிப்பை கொடுக்க, இனிப்பான செய்தியை மனைவியைப் பார்த்தபடி பகிர்ந்தான் தர்மா.
“எந்தங்கமே…” தேனுவை இழுத்துக் கன்னம் வருடி முத்தமிட்ட அப்பத்தா, “அப்பனே முருகா..” என்று கை கூப்பிச் சட்டென்று பொங்கி விட்ட கண்களுடன் மௌனமாய்ப் பிரார்த்தித்தார்.
தன் கையில் இருந்த இனிப்பை மகனுக்கும், மருமகளுக்கும் ஊட்டி விட்ட திலகவதி கண்கள் கலங்க மருமகளின் தலையில் கை வைத்து அழுத்தினார்.
“மொத உக்காருங்க ரெண்டு பேரும்..” என்றவர், இருவருக்கும் சூடாகத் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.
“வாந்தி வர்ற மாதிரி இருக்கா தேனு? டீ குடிச்சுடுவியா? இல்லன்னா எலுமிச்சை ஜூஸ் புழிஞ்சு தரவா?” என்று கேட்டார்.
“டீ குடிக்கறேன்த்தே” என்று வாங்கியவளுக்கு இஞ்சியின் மணம் பிடித்திருக்க, பொறுமையாகத் தேநீரை குடித்தாள்.
திலகவதி அதற்குள் விளக்கேற்றி சாமி கும்பிட்டுப் பிள்ளைகளுக்குத் திருநீறு பூசி விட்டார்.
“எம் புள்ளைங்க நல்லாருக்கணும்” எப்போதும் போல அவரின் வேண்டுதல் அதுவாகத்தான் இருந்தது.
“காலையில என்ன சாப்பிட்டீங்க? தோச ஊத்தவா?” என்று அடுப்படிக்கு ஓடியவரை நிறுத்தி, மருத்துவர் சொன்னதை, நாள் கணக்கை எல்லாம் சொன்னாள் தேன்மொழி.
“எம் புள்ளைங்கள கடவுள் கை விட மாட்டார்ன்னு எனக்குத் தெரியும் தேனு.. நீ உக்காரு நான் தோச ஊத்துறேன்.” என்றவர், அவசரமாக அலைபேசியைத் தேடி எடுத்து பொற்கொடிக்கு அழைத்துச் சந்தோஷச் செய்தியை முறையாக அவரிடம் பகிர்ந்தார்.