இந்த வாழ்வென்பது – 31 (2)

அப்பத்தா, அப்புச்சி, அம்மா, அப்பா புகைப்படங்களைக் காண்கையில் அவள் கண்களில் மெல்லிய கண்ணீர் படலம் பரவ, தொண்டையைச் செருமி தன்னைச் சரி செய்து கொண்டாள்.

“இந்தா, இத பாருங்க” என்று அவள் கையில் ஒரு பெரிய புகைப்பட ஆல்பத்தைக் கொண்டு வந்து கொடுத்தார் நிர்மலா.

20, 30 வருடங்களுக்கு முந்தைய காலம் அங்கே புகைப்படங்களாகப் பதிவாகியிருந்தது.

ஐந்து வயது தேன்மொழி கால் நீட்டி அமர்ந்திருக்க அவள் மடியில் மூன்று வயது அன்பழகன் கட்டை விரலை வாயில் வைத்தபடி படுத்திருந்தான்.

“டேய் அன்பே. என்னடா இது?” என்று ஜெயபாலன் தம்பியை கலாய்க்க, “ண்ணா..” என்று அவனை முறைத்தான் அன்பு.

ஆட்டுக்குட்டியை தூக்கியபடி அவள் நின்றிருக்க, அவள் பாவாடையைப் பிடித்திருந்தான் அன்பழகன்.

மீனாட்சி, சேகரன், பெரியநாச்சி, வீரய்யன் என வீட்டுப் பெரியவர்களின் படங்களைப் புன்னகையோடு பார்த்திருந்தனர்.

அந்தப் புகைப்படங்களுக்குப் பின்னிருந்த கதையை மணிவண்ணன் சொல்லி நினைவுகளை இன்னும் அழகாக்கினார்.

இரவு உணவு முடித்து அறைக்கு வந்தவள், அலைபேசியை எடுத்து தர்மாவின் வீட்டில் இருந்த எடுத்து அலைபேசியில் பதிந்து வைத்திருந்த அவனது சிறு வயது புகைப்படங்களைப் பார்த்தாள்.

இப்போது போல முரட்டு கம்பீர தோற்றத்துடன் இல்லாமல் அப்பாவி முகபாவத்துடன் அப்படி இருந்தான்.

மெலிதாக முகிழ்த்த புன்னகையுடன் புகைப்படத்தை முத்தமிட்டு அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து போனவளை பின்னிரவில் முத்தமிட்டு அணைத்துப் படுத்தான் தலைவன். அவனை உணர்ந்ததும் விழித்து விட்டவளை வாரி சுருட்டிக் கொண்டான்.

“கொடைக்கானல் இடத்து டீல் முடிஞ்சுடுச்சு தேன்னு..” அந்தச் சந்தோஷ செய்தி, அவர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது.

அப்போதுதான் கண்ணயரத் தொடங்கியிருப்பார்கள். அந்நேரம் பார்த்து அறைக்கு வெளியில் பேச்சுச் சத்தம் கேட்க, “தேன்னு எழுந்திரு. போய் என்னனு பாரு” என்று அவளை எழுப்பினான். இருவரும் வெட்கச் சிரிப்புடன் அவசரமாக எழுந்து வெளியில் சென்றார்கள்.

“ரொம்ப முடியல தேனு..” என்ற பத்மாவின் முகம் பயத்திலும் வலியிலும் வெளிறியிருந்தது.

இம்முறையும் நிர்மலா கை வைத்தியம் என்று இறங்க, “ஹாஸ்பிட்டல் போய்டலாம்த்தே” என்றான் ஜெயபாலன். அவனுக்கு முன்னே சென்று காரை எடுத்திருந்தான் தர்மா.

இரவு பன்னிரெண்டு மணி போல மருத்துவமனை சென்று சேர்ந்தார்கள். பத்மாவுக்குக் காலை எட்டு மணிக்கு சுகப் பிரசவத்தில் மகன் பிறந்தான்.

அவ்வளவு நேரமும் பிரசவ பகுதியில் கால் கடுக்க நடந்து கொண்டிருந்த ஜெயபாலன் அந்தச் செய்தியை கேட்டதும் அப்படியே நின்று விட்டான்.

சற்று நேரத்தில் குழந்தையை அழகாய் துணியில் பொதிந்து எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார்கள். அனைவரும் அங்கிருக்க, “நீ வாங்கு தேனு” என்றான் ஜெயபாலன், தங்கையைப் பார்த்து.

“நானா..” என்றது அவளின் தயக்கப் பார்வை.

ஜெயபாலன் தர்மாவைப் பார்க்க, மனைவியின் கைப் பிடித்துக் குழந்தையை இருவருமாகச் சேர்ந்து வாங்கினார்கள்.

தேனுவின் கண்கள் கலங்க, கைகள் சிலிர்க்க, உதடோ நேர்மாறாகப் புன்னகைத்தன.

மூன்று நாள்களில் வீடு திரும்பி விட்டார்கள். தேன்மொழி குழந்தையைக் கவனிக்கும் சாக்கில் அங்கேயே தங்கி விட்டாள். அத்தைக்குச் சமையலில் உதவி செய்கிறாள். பத்மா உறங்கும் நேரத்தில் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள். அதனோடு அலுவலக வேலையையும் சேர்த்தே சிரத்தையுடன் பார்த்தாள். இதைத் தவிர அவள் மனத்தில் தலைவன் ஞாபகம் மட்டுமே இருந்தது. மற்றவரை, மற்றவைகளைப் பற்றிச் சிந்திக்க அவளுக்கு எங்கே நேரம் கிடைத்தது?

அப்படியே கிடைத்தாலும் தம்பியுடன் நேரம் செலவழித்தாள். இருவருமாகச் சேர்ந்து சொந்த ஊரை சுற்றி வந்தார்கள்.

இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மதுரை வந்து விடுகிறான் தலைவன். பயணமும் அலைச்சலும் கடினமாக இருந்தாலும் மனைவியோடு இருக்கும் நேரத்தை பார்க்கையில் அவனுக்குப் பெரிய கஷ்டமாக இருக்கவில்லை.

“வாங்க வாங்க..” நிர்மலாவின் குரலை கேட்டு தேன்மொழி திரும்ப, வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் பவுனு அம்மாள்.

“அம்மாச்சி.. வாங்க வாங்க. நீங்க வர்றீங்கன்னு உங்க ராசா சொல்லவேயில்ல” என்று அவள் எழுந்து கொள்ள, “நா ஒன்னியும் உன்னய பாக்க வல்ல..” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார் அப்பத்தா.

“எங்கிட்ட சொல்லிட்டா ஊருக்கு வந்தவ நீ.. எம்மேல பாசம் இருந்தா இத்தன நாளைக்கு நம்ம வீட்டுக்கு திரும்பி வந்திருக்க மாட்ட?” என்று அவர் சடைக்க, “என் மேல கோபமா அம்மாச்சி?” என்று நமுட்டு சிரிப்புடன் அவரைப் பார்த்து கேட்டாள்.

“நா ஏன்த்தா உம்மேல கோபப்படப் போறேன். எனக்கென்னா..” என்றவரை முறைத்து விட்டு, “வாங்கத்தே.. வாங்கண்ணி” என்று திலகவதி, அன்புக்கரசியை அழைத்து நலம் விசாரித்தாள்.

அவர்கள் பத்மாவையும் குழந்தையையும் பார்க்க வந்திருந்தார்கள். அப்படியே தங்கள் வீட்டு பெண்ணையும் பார்த்துக் கொண்டார்கள்.

“ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேசுவானுங்க. அந்தக் கோபத்தையெல்லாம் ராசா மேல காட்டுவியா நீ?” என்று கோபித்தவர், “ஒழுங்கா வீடு வந்து சேரு” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டே சென்றார்.

அம்மாவையும், அக்காவையும் எச்சரித்தே அனுப்பியிருந்தான் தர்மா. ஆக, இருவரும் அவளிடம் எதையும் கேட்கவில்லை. எதுவும் சொல்லவுமில்லை.

“உனக்கு நாங்கள் இருக்கிறோம்” என்பதை எப்போதும் போல மறைமுகமாகச் சொல்லி சென்றார்கள்.

“ராசாத்தி, உனக்காகவே பத்மாவையும் வீட்டுக்கு கூப்பிட்டுக்கலாம்னு இருக்கோம் நாங்க..” என்றார் முத்தம்மா.

“ஆமா, என்னாலயும் திண்டுக்கல் மதுரைன்னு அலைய முடியல. பேசாம நீ நல்ல நாள் பாரு அம்மாச்சி. ஒம்பதாம் நாள் என் பொண்டாட்டி புள்ளைய நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுப்போம்” என்றான் ஜெயபாலன், இதையே சாக்காக வைத்து.

“இவன் ஒருத்தன், பேசாம இருடா” என்று பேரனை அதட்டினார் முத்தம்மா.

பதினைந்தாம் நாள் பத்மா பாலன் மகனுக்கு, “பிரசன்னா” என்று பெயர் சூட்டினார்கள்.

சரவணக்குமாருக்குப் பெண் கொடுக்க விரும்புவதாகத் தெரிந்த குடும்பத்தில் இருந்து ஒருவர் கேட்டு வர, அவனது திருமணப் பேச்சு வார்த்தை தொடங்கியது.

அவனுக்கு இப்போதே பார்க்கத் தொடங்கினால்தான் ஒரு ஆறு மாதத்திலாவது சரியான வரன் அமையும் எனத் தீவிரமாகப் பெண் பார்க்கத் தொடங்கினார்கள். பின்னே அவனுக்குப் பின்னே அன்பழகன் வேறு இருக்கிறானே.

“ஆபீசர்” வேலையில் சேர்ந்து விட்டார். தினம் மதுரையில் இருந்தே பணிக்கு சென்று வருகிறான். அவனுக்குப் போக்குவரத்தே ஒரு நாளின் அதிக நேரத்தை விழுங்கி கொண்டிருந்தது.

“பேசாம விருதுநகர்ல வீடு பாப்போமா அன்பு? அதான் உனக்குத் தோது..” என்று தர்மா சொல்ல, “கொஞ்ச நாளைக்கு வீட்ல இருந்தே போய்ட்டு வர்றேன் மாமா” என்றவன் பார்வை அக்காவின் மேல் பதியவும், புரிந்து கொண்டான் தலைவன். அதனால் மனைவியை அப்போதும் அங்கேயே விட்டுவிட்டு தான் மட்டும் வீடு திரும்பினான்.

பிரசன்னா இப்போது ஒரு மாத குழந்தை. ஜெயபாலன் திண்டுக்கல் திரும்பி விட்டான். வாரத்திற்கு இரண்டு நாள்கள் மட்டும் மதுரை வந்து செல்கிறான். மகனைக் காணும் ஆவல் வந்தாலும் அவசரமாகக் கிளம்பி வந்து விடுவான்.

“ரே..ரே.. செல்லக் குட்டி.. உங்கம்மா வர நேரம் செல்லும் தூங்கு செல்லக் குட்டி..” அண்ணன் மகனை தொட்டிலில் போட்டு ஆட்டியபடி செல்லம் கொஞ்சி பாடிக் கொண்டிருந்த மனைவியை உரசி நின்று தொட்டிலில் கொட்டு கொட்டென்று கண்ணை முழித்துப் படுத்திருந்த மருமகனை எட்டிப் பார்த்துப் புன்னகைத்தான் தர்மா.

“காஃபி தரவா தர்மா?”

“வேணாம். குளிச்சுட்டு வர்றேன். சாப்பாடு எடுத்து வை” என்றான்.

சோஃபாவில் படுத்து குட்டி தூக்கம் போட்டிருந்த பத்மா, அவர்கள் பேச்சுச் சத்தத்தில் எழுந்து, “வாங்கண்ணா” என்றாள்.

“நீங்க தூங்குங்கம்மா” என்றவன் படுக்கையறைக்குள் சென்று மறைந்தான்.

சற்று நேரத்தில் வந்து மனைவியுடன் பேசியபடி அமர்ந்திருந்தான்.

“வாங்க தம்பி, உங்களுக்கு ரொம்ப அலைச்சல்” என்று மணிவண்ணன் கூற, பதில் சொல்லாமல் புன்னகைத்தான் தர்மா.

“மாமா பாருடா குட்டி பயலே.. மாமா.. தர்மா.. சொல்லு” என்று அண்ணன் மகனை கணவனிடம் கொடுத்தாள்.

“தேனு, மாப்ளைக்குச் சாப்பிட குடு மொதல்ல..” உள்ளிருந்து நிர்மலா குரல் கொடுக்க, குழந்தையைக் கணவனிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.

“பத்மாக்கு பண்ண எலும்பு குழம்பு இருக்கு. தோசை ஊத்தவா? போதும் தானே?” நிர்மலா கேட்க, “அவர் என்ன குடுத்தாலும் சாப்பிட்டுப்பார்த்தே..” என்றவள், நிமிடத்தில் தேங்காய் சட்னி அரைத்து தாளித்தாள்.

முட்டை தோசை, வெங்காயத் தோசை எனக் கணவனுக்குப் பிடித்த விதமாகச் செய்து கொடுத்தாள்.

“நீங்க எல்லாம் சாப்டீங்களா பெரியப்பா?” என்று கேட்டவன், “நான் நாளைக்குத் தேனுவ கூட்டிட்டு போறேன் பெரியப்பா” என்றான்.

“கொடைக்கானல்ல பூந்தோட்டம் ஒன்னு வாங்கப் போறோம் சொல்லியிருந்தேன் இல்ல? அதுக்காக”

“நல்லது தம்பி. ரொம்பச் சந்தோஷம். நல்லபடியா போய்ட்டு வாங்க. இதே போல இன்னும் நாலு எடம் வாங்கணும், வாங்குவீங்க” என்றார் மணிவண்ணன்.

“நாளக்கழிச்சு எடத்த பதிய போறோம்” அங்கிருந்த அனைவரையும் பார்த்து பொதுவாக அந்தச் செய்தியை பகிர்ந்தான்.

மறுநாள் அதிகாலையில் அவர்கள் கிளம்பும் முன்னே வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட்டு, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள் நிர்மலா, மணிவண்ணன் தம்பதிகள்.

கொடைக்கானலில் பூந்தோட்டம் வாங்குவது குறித்து ஏற்கனவே தர்மாவின் வீட்டினருக்கு தெரியும். இப்போதும் அவன் தகவல் சொல்லி விட்டுதான் வந்திருந்தான். ஆனாலும், அத்தை மாமாவை அழைத்து முறையாக மீண்டுமொருமுறை சொன்னாள் தேன்மொழி.

“கொடைக்கானல் போய்ட்டு இருக்கோம்த்தே” என்று தெரியப்படுத்தினாள்.

“சரி, சரி. எல்லாஞ்சரி. முருகன் அருளால என் ராசாக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்..” என்ற பவுனு அம்மாள், “அங்க வேலைய முடிச்சுட்டு அப்படியே வீடு வந்து சேருங்க. என்னா? நான் சொல்றது கேட்குதா?” என்றார் அழுத்தமாக.

“கேட்டுச்சு கேட்டுச்சு..” என்று பதில் சொன்னவள், “நாங்க வேலையை முடிச்சுட்டு ஹனிமூன் போகப் போறோம் அம்மாச்சி..” என்று கணவனைப் பார்த்து முணுமுணுத்தாள்.

“என்னாத்தா சொல்ற? காதுல விழல?” என்று அப்பத்தா அந்தப் பக்கம் கத்த, காரோட்டி கொண்டிருந்த தலைவன் கண்ணடித்து, “ஆஹா, இது எனக்குத் தோனாம போச்சே..” என்று சொல்லி, நீண்ட விசிலடித்தான்‌.

தேன்மொழி வெட்கமும் சிரிப்புமாக, “வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன் அம்மாச்சி.” என்றாள். சிறிது நேரம் அவரிடம் வம்பு வளர்த்து அழைப்பை துண்டித்தாள்.

பூம்பாறை செல்லும் வழியெல்லாம் பசுமை நிறைந்திருந்தது. தர்மாவின் நண்பன் வீட்டிற்குச் சென்று இளைப்பாறி மதியத்துக்கு மேல் போய் இடத்தைப் பார்த்து வந்தார்கள்.

கொடைக்கானலில் அது குளிர்காலம் இல்லை. ஆனாலும், குளிராகத்தான் இருந்தது. மாலையில் பனி பொழியத் தொடங்கியிருந்தது. அப்போதே தும்மத் தொடங்கி விட்டாள் தேன்மொழி.

இரவு குளிர் தாங்காமல் மரவட்டையாய் சுருண்டு விட்டவளை தன்னோடு சேர்த்தணைத்து வெப்பமூட்டினான் கணவன்.

மறுநாள் காலையில் தேன்மொழி தர்மதுரை இருவரின் பேரிலும் இடத்தைப் பதிவு செய்திருந்தார்கள்.

அன்று காலை எழுந்ததில் இருந்தே தேன்மொழியை இருமலும் சளியும் பாடாய்ப்படுத்தியது. அதன் விளைவாக அவளுக்கு நல்ல காய்ச்சல் வேறு வந்து விட்டிருந்தது.

அன்று மாலையே வீடு திரும்புவதாக இருந்தவர்கள் அவளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, அவனது நண்பன் குடும்பம் வற்புறுத்தவும் இரவு அங்கேயே தங்கினார்கள்.

மறுநாள் எழுந்ததும், “நம்ம வீட்டுக்குப் போலாம் தர்மா” என்றாள் தலைவி. அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அங்கிருப்பானா அவன்? உடனடியாகக் காரை எடுத்து விட்டான். அவளுக்குக் காய்ச்சல் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. போதாதற்குப் பயணத்தைத் தொடங்கியதில் இருந்து ஒரே வாந்தி தொல்லை வேறு.

“ஏதாவது சூடா குடிக்கறியாடி?”

“ம்ஹூம், வேணாம்..”

“அப்போ சீட்டை நல்லா சாச்சுட்டு படுத்து தூங்கு”

“ம்ம்” என்று கண் மூடியவளுக்குத் தூக்கம் வரவில்லை. தலையைச் சுற்றியது. தலை மட்டும் எங்கோ செல்வது போலிருக்க எழுந்து அமர்ந்து விட்டாள்.

மனைவியின் சோர்ந்த முகத்தைப் பார்த்து கொடைக்கானல் மலையில் இருந்து கீழிறங்கியதும் காரை நேராகத் திண்டுக்கல்லில் இருந்த அவர்களின் குடும்ப மருத்துவரின் மருத்துவமனைக்கு விட்டான் தர்மா.

அவளின் உடல் சூடு சற்றே குறைந்திருக்க, சளி இருமல் தொல்லை, கூடுதலாக வாந்தி என்றதும், அவளைப் பரிசோதித்த மருத்துவர், “ஒரு இன்ஜெக்ஷன் போடவா? உடனே கேட்கும்” என்று கேட்டு அவளின் முகம் பார்த்தார்.

“ஊசியா? மாத்திரை தாங்களேன் டாக்டர்” என்றாள் சிறுபிள்ளை போல.

“ம்ம், ஓகே. ஊசிக்கு பயந்துட்டு..” என்றவர் சிரிப்புடன் மருந்துகள் எழுதத் தொடங்கினார்.

“நல்லா வெயிட் குறைஞ்சுருக்கீங்க. சத்து மாத்திரை தரவா? முகமெல்லாம் வெளிறி தெரியுது. எதுக்கும் ஒரு ப்ளட் டெஸ்ட் எடுப்போமா? ஹீமோகுளோபின் எவ்வளவு இருக்குன்னு பார்த்துடலாம்” என்றார்.

தேன்மொழி யோசிக்க, தர்மா உடனே சரியென்றான்‌. தேன்மொழியின் முகத்தைக் கூர்ந்த மருத்துவர், “லாஸ்ட் பீரியட் எப்போ? டேட் என்ன சொல்லும்மா?” என்றார்.

“அது..” என்றவள் சற்றே யோசித்து அலைபேசியைத் தேடினாள். கடந்த ஒரு மாதமாக எந்தக் கணக்கையும் பார்த்திருக்கவில்லை அவள். எதையும் குறித்து வைக்கவுமில்லை. ஞாபகமும் இல்லை. மருத்துவர் கொடுத்த சத்து மாத்திரைகளை உண்ணாமல் விட்டிருந்தாள். மருத்துவர் சொன்ன கருவுற ஏதுவான நாள்களையெல்லாம் கவனிக்கவே மறந்திருந்தாள்.

அவளிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை தலைவன் சொன்னான்.

அந்தத் தேதியை கேட்டதும் அவள் மனம் சட்டெனக் கணக்கிட்டது.

“தேன்னு..” என்றான் அவனும் ஆவலாக.

“நாப்பத்தஞ்சு நாள் தள்ளிப் போய் இருக்கு தர்மா..” அதைச் சொல்லும் போதே அவள் குரல் உடைய, சட்டெனக் கணவனின் கையை இறுகப் பற்றினாள். உணர்ச்சி மிகுதியில் அவனுக்கும் தொண்டையடைத்து வலித்தது.

அவர்களைப் பார்த்து, “அப்போ கண்டிப்பா டெஸ்ட் எடுக்கணுமே..” என்று சிரிப்புடன் சொன்னார் மருத்துவர்.

error: Content is protected !!
Scroll to Top