இந்த வாழ்வென்பது – 31 (1)

நிழல்களால் நெய்யப்பட்டிருந்த இருளையும், இரவையும் இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த தர்மதுரையின் கரம் தன் மடியில் இருந்த மனைவியின் தலையை மென்மையாய் கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

“தேன்னு..”

“தேன்னு.. நான் ஒன்னு சொன்னா கேப்பியாடி?” விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து, “என்னது?” என்று விழிகளால் வினவினாள்.

“இப்ப மண்டையை மண்டையை ஆட்டிட்டு அப்புறமா பழைய குருடின்னு திரும்பவும் ஆரம்பிக்கக் கூடாது..”

“என்னன்னு சொல்லுங்க தர்மா”

“கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம வாழ்க்கையை வாழ்வோமா? குழந்தை, குட்டி, டாக்டர், மருந்து, மாத்திரை, ஓவலேஷன் பீரியட், அப்போத்தான் சேரணும், இப்போத்தான் சேரணும்னு எந்தக் கணக்கும், கவலையும், கட்டுப்பாடும் இல்லாம.. நிம்மதியா கொஞ்ச நாளைக்கு இருப்போமா தேன்னு?” குனிந்து அவள் முகம் பார்த்துக் கேட்டான். மெல்ல எழுந்து அமர்ந்தாள் தேன்மொழி.

“நல்லா யோசிச்சு பாருடி. எப்பவும் குழந்தை குழந்தைன்னு உன் கவனமெல்லாம் அதிலேயேதான் இருக்கு. நமக்குக் கல்யாணமான மொத மாசத்துல இருந்து இதைப்பத்திதான் பேசிட்டு இருக்க நீ.”

“இல்லையே..”

“உனக்கு மறந்திருக்கும். நமக்குக் கல்யாணமான மறுமாசம் ஆடி பொறந்துச்சு. அப்ப மாசமா இருந்தா பிரிச்சு வைக்க மாட்டாங்கன்னு சொன்னியா இல்லையா?”

“சொன்னேனா?”

“ம்ம், இதைப்பத்தியே யோசிச்சு கவலைப்பட்டு.. கல்யாண வாழ்க்கையையே நாம ஒழுங்கா வாழலடி..”

“அப்படியா?” என்றாள் முறைப்புடன்‌.

“ஆமாடி சிலுப்பி.” என்றான் குறும்பு புன்னகையுடன், கண்ணடித்து. அவன் மீசையைப் பிடித்திழுத்து முறுக்கியவளின் முகத்தைக் கையில் ஏந்தி, “இப்படியே மாமனை கொஞ்சுடி தேன்னு. நமக்கு இப்பத்தான் கல்யாணமானதா நெனச்சுக்கோ. எதைப்பத்தியும் கவலைப்படாம சந்தோஷமா இருப்போம். கண்டிப்பா நல்லதே நடக்கும்டி ம்ம்?” என்று அவள் கண்களைக் கூர்ந்து அவன் கேட்க, ஆமோதிப்பாகத் தலையசைத்தாள்.

“ஒரே ஒரு வருஷம் போகட்டும்..” என்றவன் அவள் பார்வை மாறியதை பார்த்ததும், “இல்ல, ஒரு ஆறு மாசம் போகட்டும். அப்புறமா டாக்டர் கிட்ட போய் ட்ரீட்மென்ட் எடுத்துப்போம். என்னா சொல்ற?” என்று கேட்டான்.

“எனக்கு நம்பிக்கை இருக்குடி தேன்னு. நம்ம தோட்டத்துப் பூவெல்லாம், நாம வளர்க்கிற பூவெல்லாம் எத்தனையோ வீட்ல சந்தோஷத்த குடுக்குது. தினம் ஆயிரக்கணக்கான பேர் கோவிலுக்கும் பிரார்த்தனைக்கும்தான் பூவை எடுத்துட்டு போறாங்க. அத்தனை பேரோட வேண்டுதலுக்குப் பயன்படுற நம்ம பூ.. நம்ம வேண்டுதலையும் நிறைவேத்தி குடுக்கும்டி”

“நான் நம்புறேன் தர்மா..” என்றாள். அவன் முகத்தில் வேகமாக மலர்ந்தது புன்னகை.

“இன்னைக்கு உனக்கு இருபத்தைஞ்சாவது பொறந்தநாள்டி. அதைக் கொண்டாடுறத விட்டுட்டு..” ஒற்றைக் கண்ணடித்துச் சொன்னான்.

“அதெல்லாம் காலையிலயே நல்லா கொண்டாடியாச்சு..” என்று நல்லாவில் அழுத்தம் கொடுத்துச் சொன்னாள்.

“ப்ச், எங்கடி? நீ அரைத்தூக்கத்துல இருந்த, எனக்கும் தோட்டத்துக்குப் போற அவசரம். இதுல அவசர அவசரமா..”

“அச்சோ தர்மா..” பட்டென்று அவன் உதட்டில் கை வைத்து பேச விடாமல் செய்தாள். மீசை அழுந்த அழுத்தமாய் அவள் உள்ளங்கையில் முத்தம் வைத்தான் தலைவன்.

“நம்ம டீல இப்போலருந்தே ஸ்டார்ட் பண்ணுவோம்? என்னடி சொல்ற..?” மோக மயக்கத்துடன் மனைவியின் காது மடல் தீண்டி வினவினான்.

“தர்…மா..” என்று அவள் தடுமாற, “சரிம்மா..” என்றான் சிரிப்புடன்.

“மாடில இருக்கோம்..” புடைவை மறைக்காத இடையில் அத்துமீறிய அவன் கரத்தை அழுந்த பற்றினாள்.

“வா, அப்போ கீழ போவோம்..” என்றான் கரகரத்த குரலில் கிசுகிசுப்பாக. அதில் அவள் மேனி சிலிர்க்க, “நமக்குக் கல்யாணமாகி நாலு வருஷத்துக்கு மேலாச்சுடி. இன்னும் உனக்குக் கூச்சம் போகல..” சிரிப்பில் உடல் குலுங்க அவன் சொல்ல, தேன்மொழியின் ஒற்றை விரல் அவன் கழுத்தில் பதிந்து மார்பில் இறங்கி கோடிழுத்தது. அவனது அடர்ந்து சுருண்ட மார்பின் ரோமத்தில் தளிர் விரல்கள் தீண்டவும் ஆழ்ந்த மூச்செடுத்தான் தலைவன்.

“தேன்..னு”

“என்ன மாமா..” என்றாள் அவன் உயரத்திற்கு முகத்தை உயர்த்தி.

“சோதிக்காதடி..” மோகம் மொட்டு விட அவன் குரல் அடர்ந்து ஒலித்தது.

தேன்மொழி சத்தமாகச் சிரிக்க, அவளின் சிரிப்பை முத்தமிட்டு அவளின் இதழ்களுக்குள் புன்னகைத்தான்.

முத்தம் மோகம் வளர்த்து அடுத்தக் கட்டத்தைத் தொட, “மாடில இருக்கோம் தர்மா..” என்று எச்சரித்தாள்.

“ம்ம்..” என்று விலகி தலைக் கோதினான். ஒரே தாவலில் எழுந்து நின்றான். சட்டெனக் குனிந்து பூ மூட்டையைத் தூக்குவது போல மனைவியைத் தூக்கினான்.

“அச்சோ தர்மா, என்னைய கீழ விடுங்க. யாராவது பார்க்க போறாங்க..”

“எல்லாரும் புது வீட்ல தூங்கறாங்க. அன்புவும் என்னைப் பார்த்ததும் கீழ ஓடிட்டான்‌. அதுனால பயப்படாம பேசாம வாடி சிலுப்பி..” நெஞ்சோடு இறுக்கியணைத்துச் சொன்னவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

அவர்களின் திருமண இரவில் கூட இப்படி அவன் நடந்து கொண்டது கிடையாது.

“தர்மா.. என்னைய கீழ விடுங்க..”

“இருடி..” படுக்கையறை கதவை திறந்து நிதானமாக உள்ளே சென்று இறக்கி விட்டான்.

அது அவர்களின் பழைய வீடு. அவள் பெற்றோரின் படுக்கையறை அது. தேன்மொழியின் கண்கள் அறையைச் சுற்றி சுழல தலைவனின் கைகள் தலைவியைச் சுற்றியது. மெல்ல மெல்ல அவன் வசமானாள்.

நெற்றியில் நிதானமாகப் பதிந்த உதடுகள், நாசியில் மூச்சு வாங்கி, உதட்டை வந்தடைந்தன உதடுகள்.

“தேன்னு..” உன்மத்தத்துடன் உச்சரித்தவன் உதடுகள் கழுத்தில் தொடங்கிக் கால் விரல் வரை பதிந்து பதிந்து விலகின.

மனைவியின் உலகத்தைத் தன் உதடுகளால் கட்டிப் போட்டான். கணவனைத் தவிர எதுவுமே அவள் மனத்தில் இல்லை.

தான் கொடுத்ததைச் சாமர்த்தியமாகத் திருப்பியும் பெற்றான் தலைவன். தலைவியைத் திருமணமான புதிதில் இப்படிக் கண்டிருக்கிறான். வெட்கமும், ஆர்வமும், மோகமுமாக. இப்போதும் அதே வெட்கமும் வேகமும் அவளிடம் இருக்க, “தேன்னு.‌..” என்று கரகரத்தது தலைவனின் குரல்.

மெல்ல மென்மையில் தொடங்கி வன்மைக்குத் தாவி, நிதானமாக நேரம் மறந்து களித்திருந்தார்கள்.

முழுதாகக் களைத்த பின்னும் முகத்தில் நிறைந்திருந்தது நிறைவு தந்த மலர்ச்சி.

தலைவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கியிருந்தவள், மென்மையாய் இதழ் ஒற்றினாள். ஆக்டோபஸ் போல அவளைச் சுருட்டி வளைத்து தனக்குள் புதைத்து, “தூங்குடி” என்று கிசுகிசுத்தான். சுகஅயர்ச்சியில் கண்ணயர்ந்தனர்.

தர்மா அதிகாலையில் திண்டுக்கல் செல்ல வேண்டும். பூந்தோட்டத்தை அப்பாவிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுத்தான் வந்திருந்தான். ஆனாலும், அங்கே அவனுக்காக வேலைகள் காத்திருந்தது. அதனால் அவன் சென்றுதான் ஆக வேண்டும். தேன்மொழியைத் தம்பியோடு அனுப்பி விட்டு அவனால் அவளில்லாத வெற்று அறைக்குள் தனியாக இருக்கவே முடியவில்லை.

ஆடி மாதம், சென்னை வேலை தவிர்த்து, மனைவியைப் பிரிந்து ஓரிரவு கூட அவன் இருந்ததே கிடையாது.

அவர்களின் அறையே வெறுமை சூழ்ந்தது போல இருக்க, அவனால் அங்கிருக்க முடியவில்லை. அணிந்திருந்த பட்டு வேட்டி சட்டையைக் கூட மாற்றாமல் அப்படியே காரை மதுரையை நோக்கி செலுத்தியிருந்தான்.

அதிகாலையில் அலாரம் அடிக்கவும், உறக்கம் கலைந்தவன் கண்கள் தீயாய் எரிந்தது. அந்நேரம் வெளியில் பேச்சுச் சத்தம் கேட்கவும் பட்டென்று எழுந்து விட்டான்.

“அன்பு என்னாச்சு? என்ன பெரியப்பா? இந்நேரமே எழுந்துட்டீங்க?” அன்பழகன், மணிவண்ணன் இருவரும் கூடத்தில் நின்றிருக்க அவர்களைப் பார்த்து கேட்டான்.

இருவரின் பார்வையும் அவனைக் கடந்து பின்னே சென்றது.

“பத்மாக்கு வயிறு வலி மாப்ள..” என்று மணிவண்ணன் சொல்ல, “என்ன பெரிப்பா.. எங்கள எழுப்பி இருக்கலாம் இல்ல? இப்படி அசால்ட்டா சொல்றீங்க?” என்று பதறியவன் பத்மாவைப் பார்த்து விட்டு, மனைவியை எழுப்பச் சென்றான்.

“இல்ல தம்பி, அவங்கம்மா சூட்டு வலியா இருக்கும்ன்னு சொல்றா. ஏதோ கசாயம் போட்டுட்டு இருக்கா. அத குடிச்சும் வலி நிக்கலன்னா ஆஸ்பத்திரி போலாம்னு சொல்றா..” என்றார். தர்மா திரும்பி பார்க்க அன்புவிடம் பேசியபடி வலியில் சுருங்கிய முகத்துடன் கூடத்தில் மெல்ல நடந்து கொண்டிருந்தாள் பத்மா.

தர்மாவால் பதட்டப்படாமல் இருக்க முடியவில்லை. உடனே சென்று மனைவியை எழுப்பி அவளிடம் விஷயத்தைப் பகிர்ந்தான்.

அடுத்த நொடி அவளையும் தொற்றிக் கொண்டது அவன் பதற்றம்.

“நீ மொத குளிச்சுட்டு வா. உங்கத்தே ஏதோ கை வைத்தியம் பண்றாங்க போல..” என்று அவன் சொல்லவும் தலையசைத்துக் குளிக்கச் சென்றாள்.

சற்று நேரத்தில் பத்மாவின் பக்கத்தில் இருந்தாள்.

“மூச்சே விட முடியல தேனு. வயிறு வலிக்கிற மாதிரியும் இருக்கு. வலிக்காத மாதிரியும் இருக்கு. தூக்கமே வரல.” பத்மா புலம்ப, அவளின் முதுகை நீவி விட்டாள்.

நிர்மலா தரையில் அமர்ந்து மகளின் பாதங்களை மென்மையாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்.

அதற்குள் கிளம்பி வந்த தர்மா, “நான் காரை எடுக்கறேன். வாங்க ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திடுவோம்” என்றான்.

“இல்ல, மாப்ள. சாதா வலி போலதான் தெரியுது” என்று நிர்மலா சொல்ல, பத்மாவின் முகம் பார்த்தவன் அசையவே இல்லை.

“போலாம் மா. எனக்கு டாக்டர் பாக்கணும்” என்று பத்மா சொல்லவும், அதற்கு மேல் தாமதிக்காமல் மருத்துவமனை சென்றார்கள்.

காரில் செல்லும் போது ஜெயபாலனுக்கு அழைத்துத் தகவல் சொல்லி விட்டார்கள். அவன் அடித்துப் பிடித்து அவசரமாக மதுரை வரும் போது, சாதாரண வலியென்று சொல்லி பத்மாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார் மருத்துவர்.

ஜெயபாலனிடம் கார் சாவியை நீட்டிய தர்மா, “கார் இங்கேயே இருக்கட்டும். நான் அன்பு வண்டியை எடுத்துட்டு போறேன்” என்றான்.

“இல்ல மாப்ள. எங்கண்ணே கார் இருக்கு. ஊர்ல இருந்து அதைக் கொண்டாரா சொல்றேன்..”

“பிடிங்கன்னு சொன்னேன்” என்றவன், சாவியை ஜெயபாலனின் சட்டைப் பையில் திணித்தான்.

வீட்டுப் பெரியவர்கள், பத்மாவிடம் சொல்லிக் கொண்டு மனைவியிடம் வந்தான்.

“உன் பொறந்த நாளுக்குக் கொடைக்கானல்ல உன் பேர்ல ரோஜா தோட்டம் வாங்கணும்னு நெனச்சேன் தேன்னு. என்னமோ தெரியல, அந்த இடம் முடியவே மாட்டேங்குது.”

“அப்போ நான் உங்க பொறந்த நாளுக்கு அத வாங்கித் தர்றேன் தர்மா..”

“எனக்கு என் பூந்தோட்டம் போதும்டி..” சில்லென்ற அவன் கரம் அவளின் இடையை வளைத்தது.

அதைக் கேட்டு கிளுக்கிச் சிரித்தவள், “எனக்கும் நீங்க போதும் தர்மா” என்றாள். சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு அவளை இறுக்கியணைத்தான்.

அவளுக்கு மூச்சு முட்ட, “விடுங்க தர்மா..” என்று அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள். அழுத்தமாய் அவள் இதழ்களில் புதைந்து விலகியவன், “அந்தக் கொடைக்கானல் டீலை முடிச்சுட்டு வர்றேன்டி. அந்த இடத்தை வாங்கி என் ஃப்ரெண்ட் கிட்ட குடுத்துட்டா ரோஸ் கல்ட்டிவேஷன் அவன் பார்த்துப்பான். நாம ரோஜா வெளில வெல குடுத்து வாங்கத் தேவையில்லை” என்றான்.

அது அவர்கள் ஏற்கெனவே ஆலோசித்து முடிவு செய்ததுதான். என்ன அவர்கள் தேடிய இடம், விரும்பிய இடத்தில், அளவில் கிடைக்கவில்லை. கொடைக்கானலின் காலநிலை ரோஜா வளர உகந்தது என்பதால் அங்கேயே இடம் வாங்கித் தாங்களே ரோஜாக்கள் வளர்க்கும் திட்டத்தில் இருந்தான். அதன் பொறுப்பை அவனோடு படித்த நண்பன் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருந்தான். கொடைக்கானலை சேர்ந்த அவன் நண்பனுக்கு ஏற்கெனவே அங்கே ரோஜா வளர்ப்பகம் இருந்தது. ஆக, நண்பனை நம்பி களத்தில் இறங்கினான் தர்மா.

“ரெண்டே நாள்ல வந்துடுறேன் தேன்னு. மாமனை ரொம்பத் தேடாதடி” என்றான் கண்ணடித்து.

எட்டி அவன் மீசையைப் பிடித்திழுத்து முறுக்கி முத்தமிட்டு, “எல்லாம் நல்லபடியா முடியும். போய்ட்டு வாங்க” என்று வழியனுப்பினாள்.

அக்காவை பார்த்துக் கொள்ளும்படி அன்பழகனிடம் சொல்லி விட்டே அங்கிருந்து சென்றான்.

ஜெயபாலன் மனைவியோடு மாமியார் வீட்டிலேயே இருந்து கொண்டான்.

“டேய், டெலிவரிக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்குன்னு ரம்யா சொல்றா? இங்க கடையில வேலை கெடக்கு டா, ஒழுங்கா வீடு வந்து சேரு” என்று சுதாகரன் சொல்ல, “தம்பிக்காக இது கூடச் செய்ய மாட்டியாண்ணே” என்று ஒரே வார்த்தையில் அண்ணனை ஆஃப் செய்து விட்டான்.

முதல் நாள் மனைவியோடு வீட்டில் இருந்தவன், மறுநாள் திண்டுக்கல் சென்று கடையைக் கவனித்து, மாலையில் மதுரை திரும்பினான்.

அந்த வீட்டுக் கூட்டத்தில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அங்கிருந்த புகைப்படங்களைப் பார்த்து அந்த நாள் ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

error: Content is protected !!
Scroll to Top