இந்த வாழ்வென்பது – 30 (3)

அவளின் பிரார்த்தனைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.

எல்லாவற்றையும் விட மனதார நம்பிக்கை வைத்தாள். ஆனால், அவளும் மனுஷி தானே? பல நேரங்களில் மனம் தளர்ந்து போனாள்.

ஒருவித வெறுமையும், தவிப்பும் விரக்தியும் சூழ அமைதியாக முடங்கி விடுவாள். அவளின் குடும்பம், புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டுமே அவளுக்கு உறுதுணையாக இருந்தது. ஆறுதலாக இருந்தது. ஆனாலும், சொல் அம்புகளில் இருந்து அவர்களால் கூட அவளைக் காப்பாற்ற முடியவில்லை.

“அரச மரத்த சுத்தி வாத்தா. செவ்வாழை பழம் சாப்பிடு. மலை வேம்பு சாறு குடி. சோத்து கத்தாழயை முழுங்கு. வெந்தயம் ஊற போட்டு மறுநாள் காலையில வெறும் வயித்துல தண்ணியோட சேர்த்து வெந்தயத்தைக் குடிச்சு முழுங்கு. இளநீ குடி..” என இன்னொரு பக்கம் கை வைத்தியம் சொன்னார்கள்.

அரச மரத்தை புருஷனோடு சேர்ந்து சுற்றினாள்.

“அரச நம்பி புருஷனை கை விட்ட கதை இதுக்குச் சொன்னதாடி சிலுப்பி?” என்ற புருஷனையும் சேர்த்தே சுற்றினாள்.

“இதான் சரி..” என்று மோகத்துடன் மனைவியை இறுக்கினான் தலைவன்.

அடுத்ததாக வந்த சோதனைகள் இருக்கிறதே.

“மலை வேம்பு சாறு காலையில வெறும் வயித்துல குடிக்கணும்” என்று சொல்லியிருக்க, அதிகாலையில் எழுந்து குளித்து, சாமி கும்பிட்டுக் கூந்தலில் ஈரம் சொட்ட சொட்ட திலகவதி முன் அமர்ந்தாள்.

ஒரு டம்ளர் நிறையத் தளும்பத் தளும்பக் கெட்டியாக அரைக்கப்பட்ட மலை வேம்பு சாறு இருந்தது.

“கண்ணை மூடிட்டு ஒத்த மடக்குல குடிச்சுடு தேனு” என்று அவர் சொல்ல, அதை வாயின் அருகே கொண்டு போகையிலேயே அப்படியொரு கசப்பு வாடை. ஆனாலும், மூச்சை பிடித்து ஒரே மடக்கில் குடித்தும் விட்டாள்.

கசப்பென்றால் அப்படியொரு கசப்பு, மென்னியை நெரிக்கும் கசப்பு. வாயில் சீனியை அள்ளி போட்டு சுவைத்து விழுங்கியும் கசப்பு சுவை மாறவில்லை.

குடித்ததெல்லாம் மேலே வரும் போலிருந்தது.

“என்னத்தா பண்ணுது? எங்கூடப் பேசிட்டு இரு. ஒன்னும் தெரியாது” என்று அப்பத்தா அழைக்க, பேசத்தான் முயன்றாள். எங்கே முடிந்தது? பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. வாய் வழியே குடலே வெளிவந்து விடும் போல வாந்தி எடுத்திருந்தாள்.

அந்நேரம் அவர்களின் வீட்டை கடந்த பக்கத்து வீட்டு பெண்மணி, “என்னா தேனு.. நல்ல செய்தியா? என்னா ஆத்தா பேத்தி உண்டாகியிருக்கான்னு சொல்லவே இல்ல..” என்று விசாரித்தார்.

“ஆமா, சொல்றாங்க.. வந்துட்டா.. வேல கழுதைய பார்த்திட்டு போடி…” என்று கத்தினார் அப்பத்தா.

திலகவதி தேன்மொழியின் தலையைத் தாங்கி பிடித்திருக்க, அந்நேரம் வீட்டுக்குள் நுழைந்தான் தர்மா.

“தேன்னு” என்று பதறியழைத்தவன், “என்னத்தம்மா குடிக்கக் குடுத்தீங்க அவளுக்கு?” என்று கோபமாக அம்மாவிடம் கேட்டான்.

“இல்லப்பா.. அது மல வேம்பு சாறு குடிச்சா…”

“குடிச்சா.. இப்படி வாந்திதான் எடுப்பா” என்று கத்தினான்.

“எல்லாம் உன் வேலையா கெழவி?” என்று திரும்பி அப்பத்தாவை அவன் முறைக்க, “இல்ல ராசா. உடம்புக்கு நல்லதுன்னுதேன் குடுத்தோம்..” என்று அவர் சொல்ல, பல்லைக் கடித்தான்.

மனைவியைச் சென்று தாங்கிப் பிடித்தான்.

“இந்தா தேனு தண்ணிய குடி” என்று அவளிடம் நீட்டினார் திலகவதி. ஒரு மடக்குத் தண்ணீர் குடித்தாலும் மறுநொடியே அது வாந்தியாக வந்தது.

கண்களை இருட்டி கொண்டு வர சோர்ந்து ஓய்ந்து போனாள். அவளை அப்படியே தோளில் சாய்த்துக் கொண்டான் தர்மா.

“உடம்புக்கு நல்லதுன்னா நீ ஒரு லோட்டா குடிக்க வேண்டியது தானே கெழவி? எம் பொண்டாட்டிக்கு மட்டும் குடுத்து கொடுமைப்படுத்துறியா?”

“ராசா.. இந்தா நான் குடிக்கறேன்..” என்று அவர் சாறு நிரம்பிய டம்ளரை கையில் எடுக்க, “கொண்டா நானும் குடிக்கறேன்” என்று வாங்கினான்.

“வேணாம்ய்யா ராசா..” என்று அவர் கத்தியதை அவன் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.

“தொர..” என்று திலகவதி அதட்ட, “அதென்னம்மா அவளுக்கு மட்டும் மருந்து. எங்களுக்குப் புள்ள பொறக்கணும்னா நானும் குடிக்கணும்ல?” என்று கேட்டு, அம்மா, அப்பத்தா மறுத்தும் கேளாமல் சாறை வாயில் சரித்தான்.

அடுத்து அவன் வாந்தி எடுத்தான்.

அதைக் கண்டதும், “என்னா மாப்ள.. பூவும் நீதான் பறிக்கற? வாந்தியும் நீதான் எடுக்கற.. ம்ம், என்னா சங்கதி..” தர்மதுரைக்கு மச்சான் முறையுள்ள இளவட்டம் ஒன்று அவனைக் கேலி செய்து சிரிக்க,

“போடா பொசக்கெட்ட பயலே.. எம் பேரனை பேச வந்துட்டான். மொகரையைப் பாரு.. போடா அங்கிட்டு” என்று கத்தி அருகில் இருந்த குச்சியைத் தூக்கி அவன் மேல் எறிந்து அவனை ஓடச் செய்திருந்தார் அப்பத்தா.

“உங்கப்பாவ எளநீ கொண்டார சொல்றேன் டா, போய்ப் படுங்க ரெண்டு பேரும்” என்று திலகவதி சொல்ல, மனைவியை அறைக்கு அழைத்துச் சென்றான்.

தேன்மொழி சுருண்டு படுத்து விட்டாள். அன்று நாள் முழுக்க வாந்திதான். மறுநாள் காலைதான் கொஞ்சம் சரியானாள்.

மறுமுறை மீண்டும் அவளே கேட்க, “அய்யயோ வேணாம்த்தா. நீ வாந்தி எடுக்க ராசா என்னைய பேசும்” என்று ஒரேடியாக மறுத்து விட்டார் அப்பத்தா.

“அவர நான் பார்த்துக்கறேன் அம்மாச்சி..” என்று சமாளித்து அவரைச் சரிகட்டி மீண்டும் மலை வேம்பு சாறு குடித்தாள். இம்முறையும் நாள் முழுக்க வாந்தி, அதன் விளைவால் காய்ச்சல் வந்து, உடலில் நீர் சத்து குறைந்து மருத்துவமனை செல்லும் நிலைக்குக் கொண்டு சென்றது.

இரண்டு நாள்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னரும், “சோத்து கத்தாழ எப்படிக் குடிக்கிறது அம்மாச்சி..” என்று அவள் கேட்க, உடனடியாகப் பேரனிடம் போட்டு கொடுத்து விட்டார் அவர்.

“வீட்ல இருந்தா தானே இந்த வேண்டாத வேலையெல்லாம் பாக்க சொல்லுது உன் மூள, ஆபீஸ்ல வேலை இருக்கு எங்கூட வாடி சிலுப்பி.” என்று அவளைக் கையோடு அலுவகம் அழைத்துச் சென்றவன் பின் வந்த நாள்களில் அவளைத் தனியாக விடவே இல்லை.

அதுவும் சமீபமாகத்தான். ஒரு இரண்டு மூன்று மாதமாக எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறாள்.

“சும்மாத்தான் இருக்கியா மருமகளே..” என்று அதையே சொல்லி மறைமுகமாக மகப்பேறு பற்றி யாரேனும் கேட்டால் வாழ்வே சலித்துப் போகிறது அவளுக்கு.

இப்படியாக இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. அவர்களுக்குத் திருமணமாகி நான்காண்டு முடிந்திருந்தது.

அவளின் ஆசையும் ஏக்கமும் நான்கு மடங்காகி இருந்தாலும் பெரிதாக மனத்தை வருத்திக் கொள்ளவில்லை.

அத்தை பரமேஸ்வரி போல யாரேனும் வருத்துவது போலப் பேசினால்தான் மனம் வருந்தி போகிறாள். மற்றபடி வாழ்வில் குறையொன்றும் இல்லை.

குழந்தை இல்லாததே பெரிய குறையாகப் பார்க்கப்படும் போது, அப்படியும் சொல்லிவிட முடியாது இல்லையா?

பத்மாவின் வளைகாப்பு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று நினைத்தவள் யாரின் கவனத்தையும் ஈர்க்காமல் பொற்கொடியிடம் சொல்லி விட்டு பின்வாசல் வழியாகக் கணவனுடன் வெளியேறி விட்டாள்.

தர்மா நேராக அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான்.

தோட்டத்து வீட்டையொட்டிய தோட்டத்தில் பல்வேறு வகையான மலர் செடிகளை வளர்த்து வருகிறான் தர்மா.

சொந்த விஷயமோ, தொழிலோ என்ன சிக்கல் என்றாலும், மனம் குழம்பிய நேரங்களில் அங்குதான் வருவான் அவன். அந்த மலர்கள் அவன் மனத்தைச் சாந்தப்படுத்தி விடும். மனைவியை இப்பொழுது அங்குக் கொண்டு விட்டான் அவன்.

அவளுக்கும் அந்தத் தோட்டம் மிகவும் பிடிக்கும். மெல்ல அந்தத் தோட்டத்தைச் சுற்றி வந்தாள்.

அங்கிருந்த அமைதி அவள் மனத்தையும் சூழ்ந்தது.

அவர்கள் மாலை வீடு திரும்பும் போது வீட்டினர் எதுவுமே கேட்டுக் கொள்ளவில்லை.

அன்பழகன் மட்டும் அக்காவை தேடி தோட்டத்திற்கு வந்து விட்டான். அவனும் அவர்களோடு வீடு வந்தான்.

“தேன்னு.. இதென்ன பை?” படுக்கையில் இருந்த பையைத் தூக்கி பார்த்தபடி கேட்டான் தர்மா.

“நா.. நா தம்பி கூட மதுர போறேன்” என்றாள், அவன் முகம் பார்க்காமல்.

“தேன்…னு..” என்றான் அதிர்ச்சியும், அது தந்த தவிப்புமாக.

“நான் இங்கருந்தா இத பத்தியே பேசிட்டு இருப்பாங்க..”

“அதுக்காக..”

“பிளீஸ் தர்மா..” தம்பியோடு செல்கிறேன் என்று அவள் சொல்லவும், தலைவன் காயப்பட்டுப் போனான்.

அவளையே இமைக்காமல் பார்த்தபடி அப்படியே சிலை போல நின்றிருந்தான்.

“மாமா..”

“சரி, வா. நானே கொண்டு போய் விடறேன்”

“இல்ல. நான் தம்பி கூடப் போறேன்..” என்றவளை எதுவும் சொல்ல முடியா கோபத்துடன் பார்த்து நின்றான்.

இன்று நடந்தது அவளுக்கு மட்டுமா வேதனையைத் தருகிறது? அவனுக்கும் தானே வலிக்குறது? கண்ணில் வலியுடன் அவளைப் பார்த்திருந்தான்.

“தர்மா..” மெல்ல அவனை நெருங்கி தோளை தொட்டாள். மறுகணம் அவனது இறுக்கமான அணைப்பில் இருந்தாள்.

“உன்னய நாளைக்கு வந்து கூப்பிட்டுக்கவாடி..”

“நானே வர்றேன் தர்மா..” அவளை ஓர் நொடி கூட அவனால் விலகிட முடியாது. ஆனாலும் அவளது விருப்பத்திற்கு வளைந்தான்.

“சரி. போய்ட்டு வா” என்றான் கரகரத்த குரலில்.

“என் காரை எடுத்துட்டு போ அன்பு..” என்று கார் சாவியை நீட்டினான். அதையே வாங்க மறுத்தாள் தேன்மொழி.

வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

மணிவண்ணன், நிர்மலா வளைகாப்பு முடிந்து பத்மாவை அழைத்துக் கொண்டு வீடு வந்திருந்தார்கள்.

அன்பழகனோடு வீடு வந்த தேன்மொழியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.

என்ன? ஏதென்ற கேள்விகளை எல்லாம் தனியாக அன்பழகனிடம்தான் கேட்டார்கள். அவனுக்கு எங்கே பதில் தெரிந்தது, அவர்களிடம் சொல்வதற்கு?

அன்றைய நாளின் களைப்பில் அனைவரும் விரைவாக உறங்கி விட்டார்கள். சரவணக்குமார் சென்னை கிளம்பி விட்டான்.

தேனுவும், அன்பும் மட்டுமே மொட்டை மாடியில் இருந்தார்கள். இந்த வீடு அவர்கள் பிறந்த வீடு.

தேன்மொழி சில வருடங்கள் என்றாலும் அம்மா அப்பாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வீடு அது. ஏனோ இப்போது யோசிக்க அந்த மகிழ்வான நாள்கள் ஏதும் நினைவில் இல்லை.

தம்பியை, அப்பத்தாவைப் பிரிந்து சென்றது. அன்பு அவள் பின்னேயே அழுது கொண்டே ஓடி வந்ததுதான் பசுமையாக அவள் மனத்தில் பதிந்திருந்தது.

மகிழ்ச்சியை எங்கே மனம் நினைக்கிறது. வலிகள்தான் நீங்கா வடுவாக நிலைத்து விடுகிறது.

அப்பத்தா பெரிய நாச்சி தவறியது என ஒவ்வொரு நிகழ்வாகக் கண் முன் வர, கலங்கிய கண்களுடன் சுவரில் சரிந்து சாய்ந்து அமர்ந்தாள்.

ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை அண்மை தந்து விடும்.

அன்பழகன் அமைதியாக அக்காவின் அருகில் அமர்ந்திருந்தான்.

அலைபேசியில் பாடல்களை ஒலிக்க விட்டு மௌனமாய் இரவையும் இருளையும் பார்த்திருந்தார்கள்.

மனத்தின் சோர்வு உடலுக்கும் பரவ, இசை தாலாட்ட பாய் விரித்திருந்த தரையில் சுருண்டு படுத்து விட்டாள் தேன்மொழி.

அன்பு அக்காவின் தலையில் கை வைத்து கால் நீட்டி அமர்ந்திருந்தான்.

எத்தனை நேரம் கடந்தது எனத் தெரியவில்லை. தென்றல் மெல்லத் தீண்டிச் செல்ல உறக்கம் அவளைத் தழுவிய நொடி, அவள் தலையைத் தூக்கி மடியில் வைத்தது ஒரு கரம்.

“அன்பே அன்பே நீ என் பிள்ளை..” பாடல் பின்னணியில் ஒலிக்க, “தர்மா..” என்றழைத்து அவனை உணர்ந்து, அவன் ஸ்பரிசம் உணர்ந்து, வாசம் தெரிந்து தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

மெலிதாகப் புன்னகைத்தான் தர்மா.

அவள் தலையை வாகாகத் தன் மடியில் கிடத்தி, மெல்ல வருடிக் கொடுத்தான்.

“தேகம் மட்டும் காதல் இல்லை.. பூமியில் நான் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்..” அந்தப் பாடல் வரிகளில் அதன் அர்த்தத்தில் மனம் கனிந்து, நெகிழ்ந்து உருகி கண்கள் கசிய, மெல்ல தலையைத் திருப்பிக் கணவனை இடையோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.

“தேன்னு..” கண்டிப்புடன் அழைத்துக் கண்ணீரை துடைத்து விட்டான்.

“எனக்கு ஏதாவது குறையிருக்குன்னு சொன்னா கூட என்னால தாங்கிக்க முடியும் போலத் தர்மா. என்னால குழந்தையே பெத்துக்க முடியாதுன்னு முடிவா சொல்லிட்டாங்கன்னா மனசை தேத்திட்டு.. அடுத்தென்னானு பாக்கலாம். ஆனா, எந்தக் குறையும் இல்லன்னு சொல்லிட்டு இப்படி மாசாமாசம் காத்து காத்து ஏமாந்து போறது. ரொம்பக் கொடுமையா இருக்கு தர்மா..” என்றாள் உடைந்த குரலில்.

“எனக்கு உங்களைப் போலவே ரெண்டு புள்ளைங்க வேணும். அவ்ளோதான் என் ஆசை. அது கூட நடக்காதா.. அப்படியென்ன பெருசா ஆசைப்பட்டுட்டேன் நான்..”

“எனக்கு நீ போதும் டி. நீ மட்டும் போதும். இந்த வாழ்க்கைக்கு.. இந்த ஜென்மத்துக்கு.. இனி எத்தன ஜென்மம் நான் எடுத்தாலும் நீ போதும் எனக்கு..”

அவள் விழிகளை ஊடுருவி சொன்னான். சிறு கேவலுடன் அவனை மேலும் இறுக்கி அணைத்தாள்.

“உன் வாசத்தைச் சுவாசிக்கிறேன்

என் ஆயுள் நீளும்படி…” பின்னணியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

“எனக்குக் குழந்தை வேணும் தர்மா..” என்றாள் அழுகையில் கரகரத்த குரலில்.

“உன்னைய போலவே ஒரு பொம்பளை புள்ளை ரோஜாப்பூ மாதிரி.. கண்டிப்பா நமக்குப் பொறக்கும் டி தேன்னு..” என்று தேற்றினான்.

“எப்போ?” தொண்டையில் அடைத்த கேள்வியைக் கேட்காமல் அப்படியே விழுங்கினாள்.

error: Content is protected !!
Scroll to Top