இம்முறையும் இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை, முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்றது பரிசோதனை முடிவுகள். மருத்துவரும் அதையேதான் சொன்னார். பொற்கொடி, திலகவதி இருவரிடமும் பேசி, “பிள்ளைகளுக்கு நீங்க பிரஸர் குடுக்காதீங்க “என்று அறிவுறுத்தி அனுப்பினார் மருத்துவர்.
தேனு, தர்மா இருவரிடமும், “யூ போத் ஆர் வெரி யாங். கவலைப்படாம ஹாப்பியா இருங்க. சீக்கிரமே ஹேப்பி நியூஸ் வரும். சரியா? இதையே நினைச்சு ஸ்ட்ரெஸ் எடுத்துக்கக் கூடாதும்மா. அதுவே உங்க உடம்பை பாதிக்கும். புரிஞ்சுதா?” என்று மருத்துவர் சொல்லவும் தயக்கத்துடன் தலையசைத்த தேன்மொழி, “டாக்டர், ஐயூஐ, ஐவிஎஃப் ட்ரீட்மென்ட் போகலாமா?” என்று கேட்டாள்.
சட்டெனக் கண்ணாடியை சரி செய்து அவளைக் கோபமும் கண்டிப்புமாகப் பார்த்தார் மருத்துவர்.
“நல்லா ஹெல்த்தியா இருக்கீங்க ரெண்டு பேரும். எல்லாமே நார்மல் உங்களுக்கு. சந்தோஷமா இருங்க. சந்தோஷ செய்தி தானா வரும். அதை விட்டு நல்லா இருக்கவங்க எல்லாம் இப்படி அவசரப்பட்டு ட்ரீட்மென்ட் போகணும்னா எப்படிம்மா? படிச்சவங்க தானே நீங்க?” இப்படிப் பேசலாமா என்ற தொனியில் அவர் கேட்கவும், மறுப்பின்றி மண்டையை ஆட்டினாள் தேன்மொழி.
செயற்கை கருத்தரிப்புச் சிகிச்சை முறைகள், அதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் என ஒவ்வொரு கட்டமாக விளக்கி சொன்னார். அதன் வெற்றி சதவீதத்தையும், மன, உடலளவில் ஏற்படும் மாற்றங்களையும், பாதிப்புகளையும் எடுத்துச் சொன்னார்.
அதைக் கேட்டு மிரண்டு போய் அமர்ந்திருந்தாள்.
தாய்மை எத்தனை வலிமையானதோ, அத்தனை வலி மிகுந்ததாகவும் தோன்றியது.
“நீங்க நேச்சுரலாவே கன்சீவ்வாவீங்க தேன்மொழி, ஓகே? ஹேப்பியா இருங்க. அவ்ளோதான்” என்றார் மீண்டும் மீண்டும்.
தேன்மொழிக்கு சத்து மாத்திரைகள் பரிந்துரை செய்தார். கூடுதலாக அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கி அனுப்பினார். மதுரை போதாதென்று சென்னை சென்றும் மருத்துவரை சந்தித்து வந்தார்கள்.
மாதாமாதம் மறக்காமல் மருத்துவர் சொன்ன சத்து மாத்திரைகளை உண்டாள் தேன்மொழி. கருமுட்டை வெளியாகும் காலத்தைக் கணித்து அந்தக் காலத்தில் கூடுதலாகக் கூடினார்கள்.
தர்மதுரைக்கு எப்போதும் மனைவி மேல் தீராக் காதல்தான். அந்த வகையில் அவள் மிகவும் பாக்கியசாலி.
அதற்காக அவர்களுக்குள் சண்டை சச்சரவு வந்ததில்லை என்றில்லை. அடித்தாலும் பிடித்தாலும் கோபித்தாலும் என்றும் மனைவியை மரியாதை இல்லாமல் நடத்தியது இல்லை அவன். மனைவியைக் கை நீட்டி அடித்ததும் இல்லை. அவளின்றி ஒரு நாளும் இருந்ததுமில்லை. அவனது முடிவுகள் அனைத்துமே அவளதுதான்.
மனைவி மீது அதீத அன்பும், காதலும் கொண்டிருந்தான். அதை வெளிப்படுத்த ஒருநாளும் தயங்கியதில்லை அவன்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி காதலிக்கவோ, கூடவோ நேரம் பார்த்ததில்லை அவன். அவனைப் பொறுத்தவரை எல்லா நாள்களும் காதலிக்கக் கட்டியணைக்கத் தகுந்த நாள்கள்தான்.
உயிர் உருக, மெய் உருக மனைவியை நேசித்தான். அந்த நேசத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தவும் செய்தான். ஆனால், தேன்மொழியால் முன்பு போல அதே அளவு ஈடுபாடு காண்பிக்க முடியவில்லை.
ஒவ்வொரு மாத மாதவிடாயின் போதும் மனம் நொந்து போனாள். சட்டென உலகமும் வாழ்க்கையும் வெறுத்து போன நிலை அவளுக்கு.
“எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?” என்று தனக்குள் மறுகினாள்.
தனக்கொரு பிரச்சினை என்றால் மனித மனம் எல்லா வகையிலும் தீர்வுகளைத் தேடத் தொடங்குகிறது.
அடுத்து தெய்வத்தின் முன் சரணடைந்தார்கள்.
“இங்க பாருத்தா தேனு, ஊரு ஆயிரம் பேசும். அதெல்லாம் காதுல போட்டுக்கக் கூடாது. நான் கும்பிடுற முருகன் அப்படியெல்லாம் நம்மள கை விட மாட்டான். நீ வேணா பாரு.. அடுத்த வருஷமே எனக்குக் கொள்ளு பேரன் வரத்தான் போறான்.” என்று பவுணு அம்மாள் அவளைத் தேற்ற, “ஏ அம்மாச்சி. பேத்தி வந்தா வேணாம்னு சொல்லிடுவியா நீ?” என்று கேட்டாள்.
“ஆத்தே உன் வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்த்தா. அப்பனே முருகா..” என்று அவரின் முன்னிருந்த பழனி முருகனை இரு கரத்தையும் உயர்த்தி வணங்கினார்.
“ஏ அம்மாச்சி. நான் உனக்கு ஆவாத பேரன் பொண்டாட்டி தானே? உனக்குப் பிடிச்சா மாதிரி ஒருத்தியை உன் பேரனுக்குக் கட்டியிருந்தா இந்நேரம் நீ ஆசைப்பட்ட மாதிரி கொள்ளு பேரன் பேத்தி வந்திருக்கும் இல்ல அம்மாச்சி? உன் ராசாவும், நீயும் சந்தோஷமா இருந்துருப்பீங்கல்ல?”
“பேச்ச பாரு. வாயக் கழுவுத்தா..” என்று அவளின் கன்னத்தில் இடித்தார்.
“அப்ப ஏதோ யோசனையில்லாம பேசிப்புட்டேன்.”
“அப்போ உனக்கு என்னைய பிடிக்கும். அப்படித்தானே அம்மாச்சி..”
“ம்க்கும், பேரனுக்குப் புடிச்சா பத்தாதா?” என்று முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டார்.
“இங்க பாருத்தா, நீ எதுக்கும் மறுகாத. என் பேரன் புள்ளைகள பார்த்துட்டுதான் நான் போய்ச் சேருவேன்னு நம்ம ஜோசியன் சொல்லியிருக்கான். நீ வேணா பாரு, அவன் வாக்கு பலிக்கும்” என்றார்.
அவரின் வயதையும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் பழனி முருகனை பாத யாத்திரையாகச் சென்று தரிசித்து, வேண்டி, வழிபட்டு, முடி காணிக்கை கொடுத்து வந்தார்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் என அறுபடை வீடுகளுக்கும் அவர்களை அழைத்துச் சென்று வேண்டுதல் வைத்தார்.
மதுரை மீனாட்சி, மடப்புரம் பத்ரகாளியம்மனிடமும் மனமுருக வேண்டினார்கள்.
திண்டுக்கல்லிலும் ஒவ்வொரு கோவிலாகச் சென்று வந்தார்கள். பவுணு அம்மாள், திலகவதி, அன்புக்கரசி, பொற்கொடி, முத்தம்மா, ரம்யா, பத்மா என அவளுக்குத் துணையாக யாராவது இருவர் எப்போதும் அவளுடன் பயணித்தார்கள்.
“ராசாத்தி, கோட்டை மாரியம்மனுக்கு உருண்டு குடுக்க வேண்டியிருக்கேன்” என்ற முத்தம்மா, பேத்திக்காக வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்தார்.
குழந்தை வரம் அருளும் திருக்கருகாவூர் கர்ப்பகாம்பிகை கோவிலுக்குச் சென்று குழந்தை வரம் வேண்டி வந்தார்கள்.
கருவளர்சேரி திருத்தலத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரியிடம் மனதுருக மன்றாடி வந்தாள்.
பெரியவர்கள் சொன்ன வழிபாடுகள், பிரார்த்தனைகள், மந்திரங்கள் என அனைத்தையும் சிரத்தையுடன் செய்தாள், சொன்னாள்.
அவளின் இருபத்தியோரு வயது வரை சென்றிருந்த கோவில்களை விட இந்த இரண்டு வருடங்களில் சென்ற கோவில்கள்தாம் அதிகம்.