இந்த வாழ்வென்பது – 30 (1)

அன்று தர்மதுரையால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மனைவியின் பிடியில் இருந்து விலக முயன்றான்.

“உங்க மகனுக்கு எங்கிட்ட வேலை கேட்டு வந்தீங்களே அப்ப தெரியலையா சித்தி நான் யாருன்னு உங்களுக்கு? உங்க மகனுக்கு வேலைக் கொடுத்ததும் நல்லவனா தானே இருந்தேன்? இப்போ அவன் வேலையை விட்டுப் போனதும் நான் கெட்டவனா ஆகிட்டேனா? உங்க மகன் கேட்ட மாதிரி துபாய் டீலர்ஷிப் குடுத்திருந்தா நல்லவன்னு சொல்லியிருப்பீங்களோ?” என்று தர்மா ஆத்திரத்துடன் கேட்க, சுதாகரன் ஜெயபாலன் முகத்தில் அதிர்ச்சி பரவியது.

பரமேஸ்வரியின் இளைய மகன் முழுதாக ஒரு மாதம் கூடத் தர்மாவின் சென்னை அலுவலகத்தில் வேலை செய்யவில்லை. அதற்குள் துபாய் போகப் போகிறேன், அங்குக் கடை வைக்கப் போகிறேன் என்று அவனாகவே வேலையில் இருந்து நின்று விட்டான்.

“துபாய் டீலர்ஷிப் எனக்குத் தா” என்று கேட்பவனை எப்படி நம்புவான் தர்மா? அதனால் மறுத்திருந்தான். இந்த விஷயம் தேன்மொழி குடும்பத்திற்கும், சரவணனுக்கும் மட்டுமே தெரியும். வேறு யாரிடமும் சொல்லியிருக்கவில்லை அவர்கள். பரமேஸ்வரிக்கு அந்தக் கோபம் மனத்தில் இருக்கச் சமயம் பார்த்து தேன்மொழியைப் பேசி விட்டார்.

அவர் முன்னரும் அப்படித்தான். சுதாகரன் மகளின் காது குத்து நிகழ்வின் போது கூட இது போலப் பேசி, அதற்குத் திலகவதியிடம் பேச்சு வாங்கியிருந்தார்.

“உங்க தம்பி மக தேனுவ பேச உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா, என் மருமகள பேச உங்களுக்கு உரிமையில்ல. அதுக்கு நான் விடவும் மாட்டேன். பார்த்து பேசுங்க” என்று கோபமும், கண்டிப்புமாகச் சொல்லியிருந்தார் திலகவதி.

அப்போது முகத்தைத் திருப்பிக் கொண்டு போனவர், தன் மகனுக்கு வேலை வேண்டும் என்றதும் இதே தேனுவின் கணவனிடம்தான் அவனை அனுப்பினார்.

ஒருவேளை அவர் மகன் தர்மாவிடம் தொடர்ந்து வேலை பார்த்திருந்தால், தர்மதுரையை நல்லவன் என்றிருப்பாரோ?

மனிதர்கள் மகா சந்தர்ப்பவாதிகள், சுயநலவாதிகள். தாங்கள் இருக்கும் இடத்திற்கு, மனிதர்களுக்கு ஏற்றவாறு விருப்பு வெறுப்புகளை மாற்றிக் கொண்டேயிருக்கும் பச்சோந்திங்கள். விதிகளை அவர்களுக்கு ஏற்ப வடிவமைத்தும் கொள்வார்கள்.

“உனக்கெல்லாம் எங்க மேல பாசமே இருக்காதா அத்த?” சுதாகரன் கோபமாகக் கேட்க, வேக நடையுடன் அங்கு வந்த கந்தன், “தள்ளுங்கப்பா, நான் பார்த்துக்கறேன்” என்று அவர்களை அனுப்பி விட்டு தங்கையின் பக்கம் திரும்பினார். அவர் கண்களின் கோபக் கனல் பரமேஸ்வரியை மௌனியாக்கியது.

தேன்மொழிக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. ஏனோ அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவளையே துளைப்பது போல ஓர் பிரம்மை.

இப்போது ஆறுதல் சொல்லத் தொடங்குவார்கள். சமாதானம் சொல்ல வருவார்கள். என்ன நடந்ததென்று விசாரிப்பார்கள். கிசுகிசுவென்று அவளின் பேச்சே அங்குப் பரவி நிற்கும்.

பத்மாவைப் பார்த்து, “சாரி” என்று கண்ணைச் சுருக்கிச் சொன்னவள், கணவனுடன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

சுதாகரனின் மகள் தர்ஷனாவின் பெயர் சூட்டும் விழாவிற்கு முன்புதான் சற்றே மனம் தெளிந்திருந்தாள் அவள்.

அன்றைக்குத்தான் குழந்தை ஆசையும் ஏக்கமும் தந்த மனஉளைச்சலுக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தாள்.

ஆனால், அவளின் உறவுகள் எல்லாம் சேர்ந்து அந்த முற்று புள்ளியை காற்புள்ளியாக இழுத்திருந்தார்கள்.

முன்னர்க் கீதாராணியிடம் அன்புக்கரசி நியாயம் கேட்க, அப்பத்தா அடிக்காத குறையாக அவரைப் பேசியிருந்தார்.

லோகேஷ்வரனும் அவரைக் கோபமாகப் பேசிவிட மனம் திருந்தி மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை அவர். ஆனால், அமைதியாக இருந்து கொண்டார். அன்றும் சரி, இன்றும் சரி. அவர் எதற்காகவும் தேன்மொழி விஷயத்தில் தலையிடுவது கிடையாது.

அதற்கு வேறொரு காரணமும் இருந்தது. மகள், மருமகன் மேல் பயம் எல்லாம் தாண்டி, ரம்யா இப்பொழுது பணிபுரிவது தேன்மொழியிடம். அதனால் கிடைத்த பல சலுகைகள். மகளை மிகவும் நல்ல விதமாக நடத்தும் மாமியார் வீடு என அவரின் அமைதிக்கு பல காரணங்கள். மேலும், லோகேஷ்வரனின் அப்பாவும் தங்கையை எச்சரித்திருந்தார்.

கீதாராணி அமைதியானதில் பொற்கொடி ஆசுவாசப்பட, அப்படியெல்லாம் உன்னை நிம்மதியாக விட முடியாது என்பது போல அடுத்ததாக அவரின் அக்கா பூங்கொடி ஆரம்பித்தார்.

“உன் சம்மந்தி பண்ணது தப்புதான். அதுக்காக நீங்க கோபப்படுறதும் நியாயம்தான். ஆனா, இந்தப் புள்ள தேன்மொழியை இப்படியே விடாம என்ன ஏதுன்னு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய்க் காட்டி கேளு கொடி” என்று சொல்லவும், அக்காவை கண்களால் எரித்தார் பொற்கொடி.

“அவ பச்ச புள்ள கா. என்ன வயசாவுது அவளுக்குன்னு ஆளாளுக்கு இப்படி அவளைப் பேசுறீங்க. மனசாட்சியே இல்லாம..”

“யாருக்குடி மனசாட்சி இல்ல? எனக்கா? உனக்கா? இதுவே உன் சொந்த மகளா இருந்தா இப்படிக் கண்டுக்காம விடுவியா? இந்நேரம் நாலு ஆஸ்பத்திரி ஏறியிறங்கியிருக்க மாட்ட? அவ காலேஜ் முடிச்சதும் தானே கட்டிக் குடுத்த? அப்புறம் என்ன பச்ச புள்ளன்னு பாட்டு பாடிட்டு இருக்க? அங்கங்க போய்ப் பாரு. பதினெட்டுல கல்யாணம் பண்ணி இருபத்து ரெண்டுல கையில ரெண்டு புள்ளைங்களோட நிக்குதுங்க. நீ என்னவோ அதிசயமா பொண்ண வளர்த்த மாதிரியில்ல அவள யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு குதிக்கற? உம்மவ தேனும் குழந்தை குட்டின்னு இருக்க வேணாமா உனக்கு?” அக்காவின் பேச்சில் கோபம் துளிர்த்தாலும் பொற்கொடியால் அதைப் புறந்தள்ள முடியவில்லை.

“எல்லாம் எங்களுக்குத் தெரியும். வந்துட்டா கோளாறு சொல்ல. உன் வீட்டுக்குக் கிளம்பு நீ..” என்று முத்தம்மா மூத்த மகளை முகத்தில் அடித்தது போலப் பேசி அனுப்பி விட்டார். ஆனால், பொற்கொடிக்கு கவலைத் தொற்றிக் கொண்டது.

தேன்மொழிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்தும் குழந்தை இல்லை. ஊருக்குள் உறவுக்குள் ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வழங்க அனைவரும் தயாராக இருந்தார்கள்.

அன்றிலிருந்து தொடங்கியது தேன்மொழி வாழ்வில் வேறொரு அத்தியாயம்.

இப்பொழுது நினைத்துப் பார்க்கையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலக் கடினமாகக் காலம் அவள் வாழ்வில் இருந்ததே இல்லை என்று உறுதியாகச் சொல்வாள்.

முதல் வேலையாகப் பொற்கொடி அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல விரும்பினார். ஏற்கெனவே பார்த்து விட்டோம் என்று சொன்னாலும் அதை ஏற்க அவர் தயாராக இல்லை. ஆக, மதுரையின் பிரபலமான மகப்பேறு மருத்துவரை காண முன் பதிவு செய்து அம்மா, மாமியார் உடன் வர மனைவியை அழைத்துச் சென்றான் தர்மதுரை. ஏற்கெனவே எடுத்திருந்த பரிசோதனைகளை, அதன் முடிவுகளைக் காண்பித்து, மீண்டுமொரு முறை அனைத்து பரிசோதனைக்கும் உட்பட்டார்கள்.

error: Content is protected !!
Scroll to Top