“தேனு, வா. ஊருக்குக் கொண்டு போகத் தோட்டத்துக்குப் போய்க் கொய்யாக்கா பறிச்சுட்டு வருவோம்” என்று ஜெயபாலன் அவளை அழைக்க, “இந்நேரம் போனா பறிக்க விட மாட்டாங்க டா. பொழுது போச்சுல்ல.” என்று முத்தம்மா சொல்ல, “நீங்க போங்கடா. அம்மா கேட்டேன்னு ரெண்டு கிலோ பழம் வாங்கிட்டு வாங்க” என்று மகன்களைத் துரத்தி விட்ட பொற்கொடி, தேன்மொழியைக் கவனித்தார்.
முகம் கழுவி, உடை மாற்றி வந்தமர்ந்தவளுக்கு, சிக்கெடுத்து தலை பின்னி விட்டார்.
“பெரிம்மா..”
“என்ன தேனு?”
“ஊர்ல..”
“ம்ம், ஊர்ல என்ன?”
“அங்க போஸ்ட் ஆபீஸ்ல போன் இருக்கு”
“ஆமா, இருக்குல்ல. முன்னாடி உங்க கூடப் பேச அங்கன தானே போன் போடுவோம்.” என்று அவர் சொல்லவும், படக்கெனத் திரும்பி, “அப்பத்தாக்கு போன் பண்ணுவோமா பெரிம்மா?” சரி என்று சொல்லி விடு என்பது போலக் கண்ணில் உயிரை தேக்கி வைத்து அவரைப் பார்த்தாள் அவள்.
“போனுதானே? பண்ணலாம் தேனு. ஆனா, நம்ம வீட்ல போனு இல்லையே. போனு நம்ம கலர் கம்பெனில இல்ல இருக்கு. நாம அம்புட்டுத் தூரம் நடந்து போய்ப் போன் போடுறதுக்குள்ள ஊர்ல போஸ்ட் ஆபீஸ்ஸ மூடிட்டாங்கன்னா என்னா பண்றது?” என்று அவர் சொல்லவும், முடியாது என்ற பதில் புரிந்த பிஞ்சு முகம் தொங்கிப் போனது.
“இங்காரு தேனு. நாமதான் நாளைக்கு ஊருக்கே போறோம்ல? அங்க போய் நேர்ல உன் அப்பத்தாகிட்ட நல்லா பேசிக்கோ. என்ன?”
“ம்ம்” என்றவளை, அப்படியே அமைதியாக விடாமல் தன் கூடவே கூட்டிக் கொண்டு சுற்றினார் பொற்கொடி.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து ஊருக்குச் செல்ல தயாராகினார்கள். காலை எட்டு மணி பேருந்தை தவற விட்டு, ஒன்பது மணி பேருந்துக்காக அவர்கள் காத்திருக்க, குட்டி யானை என்றழைக்கப்படும் வண்டி அவர்களின் ஊருக்குள் நுழைந்து சரியாக அவர்களின் வீட்டை நோக்கி வந்தது.
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவர்களைக் கடக்கையில், “அ…க்கா” என்று கத்திய அன்பழகன், வண்டியில் எழுந்து நின்று அவர்களைப் பார்த்துக் கையசைத்தான்.
“டேய் அன்பே..” என்று பதிலுக்குக் கத்தினார்கள் அண்ணன்கள் இருவரும்.
“உங்கம்மாவே வந்துட்டாங்க மாமா. இதென்ன குட்டி யானைல வந்திருக்காங்க” என்று பேசிக் கொண்டே பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடையை ஓட்டமாக்கினார் பொற்கொடி.
அவர்கள் வீட்டை நெருங்குகையில், கன்றுக் குட்டியை கயிற்றில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் அன்பழகன்.
தேன் மொழியிடம் குட்டியை கைக் காட்டி, “அக்கா, மீனு.” என்றான்.
அவளுக்கு மீனுவை பற்றியெல்லாம் கவலையில்லை. ஓடிப் போய்த் தம்பியை பிடித்துக் கொண்டாள்.
அவளைக் கண்டு கொண்டதற்கு அடையாளமாக, “ம்மா..” என்று கத்திய மீனு, அவளை நெருங்கி உரசியது.
அதன் முதுகில் தடவிக் கொடுத்தவள், தம்பியின் தலையைக் கலைத்து விட்டாள்.
“ஏன்டா மீனுவ இங்க கொண்டாந்தீங்க.”
“எனக்கு வேணாம். நீ வச்சுக்கோ கா” என்றான் அந்தக் கன்றை போலவே தலையை அசைத்து.
பெரியநாச்சி பேத்திக்காகக் கன்றையும், இரண்டு ஆட்டிக் குட்டியையும் கொண்டு வந்திருந்தார். அன்று மணிவண்ணன் குடும்பம் மொத்தமும் வந்திருக்க, பொற்கொடி, முத்தம்மா அவர்களைக் கவனிப்பதில் இறங்கினார்கள்.
“என்னத்த கன்னையும், ஆட்டுக் குட்டியையும் ஓட்டிட்டு வந்துட்டீங்க. என்னத்துக்கு? அது பாட்டுக்கு அங்கேயே இருந்திருக்கும் இல்ல?” என்று பொற்கொடி கேட்கவும், “பேத்திக்கு பிடிக்கும்த்தா. அதென், இதுக இருந்தா அவ…” மேலே சொல்ல முடியாமல் தடுமாறியவர், “அவளுக்கு விளையாட்டு துணைக்கு இருக்கட்டும்னு தென்.. ஏன் நீ வளர்க்க மாட்டியா?” என்று முறைப்பாகக் கேட்டார்.
பொற்கொடிக்கு அப்படியே தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
ஏற்கனவே பிள்ளைகளைப் பிரித்தது போதாதென்று, இப்படி வாயில்லா ஜீவன்களையும் அதன் தாயிடம் இருந்து பிரித்து விட்டாரே என்ற ஆதங்கத்துடன், “தேனுக்குத் தொணைக்கோ இல்ல விளையாடவோ இங்கன ஆளா இல்லத்த? அவ கூட உங்க பேரனுங்க ரெண்டு பேரும் இருக்கானுங்க. அதுக்கு மேல ஊருக்குள்ள தேனு சோடு புள்ளைங்க எம்புட்டு இருக்குதுங்க. தேனு அவங்க கூடச் சேராம ஆடு, மாடுங்கள பார்க்க சொல்றீங்களா?” என்று சற்று காட்டமாகவே கேட்டார்.
“நீ என்னத்தா இப்படி வெடுக்குன்னு பேசுற. பிள்ளைக்கு ரெண்டு நாள்ல பொறந்த நாள் வருதே, அதுக்கு என்னத்த கொடுப்போம்னு தெரியாம குட்டிங்கள ஓட்டிட்டு வந்தேன் நானு. நீயென்னமோ நான் பெருசா தப்பு பண்ணிட்டா மாதிரி இல்ல பேசுற. இப்போ என்ன குட்டிங்கள திரும்ப எடுத்துட்டு போய்டவா” என்று கேட்டவரை கோபம் குறையாமல் பார்த்தார்.
பிறந்தநாள் பரிசு என்று சொல்பவரிடம் என்னதான் சொல்வார் அவரும்.
பொற்கொடி நன்றாகத் திரும்பி கணவரை முறைத்து விட்டு உள்ளே சென்றார்.
மணிவண்ணன் குடும்பத்தினர் தேன்மொழிக்கு இப்போதே வாழ்த்துகள் சொல்லி பிறந்தநாள் பரிசுகள் கொடுக்க, மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டாள்.
“அக்கா…” என்று அன்பு, அன்பாக நீட்டிய பென்சில் பாக்ஸ் அவளின் பிறந்த நாள் பரிசில் பெருமதிப்பை பெற்ற பரிசானது.
“அழகா இருக்குடா அன்பு.” என்றாள் சந்தோசமாக.
அவர்கள் வீட்டின் பின் பகுதியில் இருந்த பெரிய தோட்டத்தில், பெரியநாச்சியுடன் சேர்ந்து முத்தம்மா கன்று குட்டிக்கும், ஆட்டிக் குட்டிகளுக்கும் இடம் தேர்ந்தெடுத்துக் கட்டினார். முத்தம்மாவின் முகம் கடுகடுவென்று இருந்தது.
“நீங்க உள்ள போங்க. நான் இதுங்களுக்கு அகத்திக்கீர கட்டி போட்டுட்டு வர்றேன்” என்று சொல்லி முத்தம்மா, பெரியநாச்சியை உள்ளே அனுப்பி வைத்தார்.
அவர் அங்கிருந்து விலகியதும், “பேரப் பிள்ளகள தென் பிரிக்கறாங்கன்னு பார்த்தா, உங்களையும் பிரிச்சு விட்டுட்டாளா உங்க அப்பத்தா மகராசி..” என்று புலம்பிக் கொண்டே அவைகளைக் கவனித்தார்.
“என்னம்மா தனியா பேசிட்டு இருக்க?” என்று அவருக்குத் தேநீர் எடுத்து வந்த பொற்கொடி கேட்க,
“அந்தக் குட்டி பயலை இங்க விடச் சொன்னா, கன்னு குட்டியை கொண்டு வந்து விடுது உன் மாமியா. கூறு கெட்டத்தனமா” என்று கத்தினார்.
“அந்தப் புள்ள பள்ளிக்கோடம் போகுமா, இல்ல இதுங்க சாணியை அள்ளி போடுமா? பெருசா தொணைக்குக் கொண்டுட்டு வந்துட்டா பெரிய மனுஷி. நாம கேட்டோமா? இதுங்கள பார்த்தா தம்பியை மறந்துடுவாளா தேனு குட்டி? புத்தியே இல்லாம…” என்று நிறுத்தாமல் புலம்பினார்.
அம்மாவின் நடவடிக்கையில் கந்தனுக்கும் உடன்பாடில்லை. அதை அவரிடமே நேரடியாகச் சொல்லியும் விட்டார்.
“இப்ப நான் என்னப்பா பண்ணணும்னு சொல்றீங்க?” என்று பெரியநாச்சி கோபமாகக் கேட்க, “நான் உன்னைய ஒன்னும் சொல்லல விடும்மா” என்று பதிலுக்குக் கத்தி விட்டுப் போனார் அவர்.
மறுநாள் மாலை அவர்கள் ஊருக்குக் கிளம்புகையில், தேன்மொழி தனியாகப் பெரியநாச்சியிடம் வந்து நின்று, “அப்பத்தா” என்றழைத்தாள்.
“என்ன ராசாத்தி?”
“தம்பி என் கூடவே இருக்கட்டுமே அப்பத்தா. அன்பயும் என் கூட விட்டுட்டு போங்க” அண்ணாந்து அவரின் முகம் பார்த்து தயங்கினாலும் தெளிவாகக் கேட்டு விட்டாள்.
பளிச்சென்று அவளின் முதுகில் ஒரு அடி போட்டார் பெரியநாச்சி. அவளுக்கு நன்றாக வலித்து விட்டது. கண்ணில் நிறைந்து விட்ட கண்ணீருடன் அப்படியே அவரைப் பார்த்தது பார்த்தபடி நின்றாள்.
பெரியநாச்சியின் இயலாமை கோபமாக அடியாக வெளிப்பட்டிருந்தது.