பொற்கொடி பிள்ளைகள் நால்வரையும் வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதற்குள் வேர்த்துச் சோர்ந்திருந்தார்.
“அப்பத்தா..” என்று வீட்டுக்குள் முதலாவதாக ஓடிய அன்பு, பெரியநாச்சியின் முன் சென்று நின்று பெரிய மனிதனைப் போல, அவர் தலையில் துளி திருநீறை தெளித்து, பின் ஏதோ முணுமுணுத்து நெற்றியில் பெரியதாகப் பட்டை போட்டு விட்டான்.
“சேட்டையைப் பாரும்மா. அப்படியே நான் பண்ற மாதிரியே பண்றான்” என்று அவர் பேரனை பெருமையாகப் பார்த்துச் சொல்ல, அவன் வீட்டில் இருந்த பெரியவர்களுக்கு எல்லாம் பொறுப்பாகப் பட்டை போட்டு விட்டுக் கொண்டிருந்தான்.
தேன்மொழி அமைதியாக அப்பத்தாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“இந்தப் பட்டுப் பாவாடை சட்டை உனக்கு நல்லாருக்கு தேனு. உங்க மாமன் இன்னும் நாலஞ்சு இதுபோல உனக்குத் தைக்கணும்னு சொல்லிட்டு இருந்தான்.” என்று அவளின் உடையைத் தொட்டு பார்த்தவர், “ம்ம், நல்லாதான் இருக்கு. அடுத்த முறை வரும் போது இன்னும் ரெண்டு தச்சு எடுத்துட்டு வர்றோம். என்ன?” என்று பேத்தியிடம் சொல்ல, “ம்ம்” என்றாள் அவளும்.
அவர்களிடம் வந்த பொற்கொடி, தேன்மொழியின் மறுபக்கம் அமர்ந்தார்.
“ஏன்த்த, நாம நாளைக்குத் திண்டுக்கல் டவுன் வரைக்கும் போய்ட்டு வருவோமா?” என்று பெரியநாச்சியிடம் கேட்டார்.
“எதுக்குத்தா? என்ன சோலி? விஷேச வீட்டுக்கு எங்கையும் போறீங்களா?”
“இல்லத்த. நாமெல்லாம் சேர்ந்து ஃபோட்டோ பிடிச்சுட்டு வரலாம்னு..” என்று அவர் சொல்லவும், தேன்மொழியின் முகமே மலர்ந்து போனது.
“ஃபோட்டோலாம் ரொம்பப் பிடிக்கக் கூடாது. ஆயுசு குறைஞ்சு போகும்” என்று சொல்கையிலேயே பெரியவருக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.
“ம்க்கும்..” என்று அவர் தொண்டையைச் செரும, ஓடி வந்து அவரின் முதுகில் தட்டினான் அன்பு. பெரியநாச்சிக்குக் கண்கள் கலங்கி விட்டது.
அன்பு அக்காவை இடித்துக் கொண்டு அங்கேயே அமர, பிள்ளைகள் இருவரையும் பார்த்தவரின் மனம் சட்டென மாறியிருந்தது.
அந்தப் பாசமலர்களைப் படம் பிடித்து வைக்க விரும்பினார் அவர்.
“சரித்தா. நாளைக்கு டவுனுக்குப் போய் ஃபோட்டோ பிடிச்சுட்டு வருவோம்” என்றார்.
மறுநாள் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து திண்டுக்கலுக்குச் சென்றார்கள்.
தேன்மொழி அம்மாவின் சேலையில் தைத்திருந்த பாவாடை சட்டையைதான் இன்றும் அணிந்திருந்தாள். அன்பழகனுக்கு அங்கேயே புத்தாடை எடுத்து அணிவித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
அன்பு எட்டி அக்காவின் தோளில் கைப் போட முயற்சித்து முடியாமல், அவளின் கையைப் பிடித்துச் சிரித்தபடி நின்றிருந்தான்.
“தம்பி, இந்தப் பக்கம் தள்ளி நில்லு”
“இங்க பாருய்யா, இங்க பாரு. என்னைய பாரு”
“உங்கக்காவ பாக்காம இங்க பாருடா” புகைப்படம் எடுப்பவர் எத்தனை சொல்லியும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அனைத்திலும் அக்காவைதான் பார்த்துக் கொண்டிருந்தான் அன்பு. இல்லையென்றால் அக்காவை பூனைக் குட்டியை போல உரசிக் கொண்டு நின்றிருந்தான். அதிசயமாக ஒரே ஒரு படத்தில் நேராகப் பார்த்துப் புன்னகைத்திருந்தான். அந்தப் புகைப்படத்தைத் தேர்வு செய்து சட்டமிட சொன்னார்கள். மேலும் நான்கைந்து படங்களைத் தேர்ந்தெடுத்து சட்டமிட சொன்னார்கள்.
அதில் தேன்மொழியும், அன்பும் மட்டுமே இருக்கும் படமும் இருந்தது. அதையும் தனியாகச் சட்டமிட்டு தரச் சொல்லிவிட்டு ஊர் திரும்பினார்கள்.
மறுநாள் ஞாயிறு மதிய உணவு முடித்த சிறிது நேரத்தில், “அப்போ நாங்க ஊருக்கு கிளம்பறோம்த்தா” என்று எழுந்து கொண்டையை உதறி, முடிந்தார் பெரியநாச்சி.
“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாம் இல்லத்த” என்று பொற்கொடி அவரிடம் சொல்ல, அவர்கள் ஊருக்கு எடுத்துச் செல்ல தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழங்களைப் பை நிறைய எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்த கந்தன், “ஆமாம்மா. இப்ப என்ன அவசரம்? பொறுமையா அடுத்த வாரம் போய்க்கலாம் இருங்க” என்றார்.
“இல்லப்பா, இவனுக்குப் பள்ளிக்கோடம் இருக்கு”
“ஆமா, பேரன் பெரிய கலெக்ட்டருக்குப் படிக்கறான், பாருங்க. அந்தப் பால்வாடிக்கு ஒரு வாரம் போகலன்னா உங்க பேரனை என்னா சொல்லிட போறாங்க” என்று கூடத்தில் அமர்ந்திருந்த முத்தம்மா சடைத்துக் கொண்டு சொல்ல,
“நீங்க வேற.. அவன் எங்க பால்வாடி போறான்? டவுசர் சட்டை போட்டு வேன்ல இல்ல பள்ளிக்கோடம் போறான். அங்க ஒத்த நாள் போகலைனாலும் டீச்சருங்க பேசுவாங்கன்னு மணிவண்ணன் மக சொல்றா.. அதென்..” என்று அவர் இழுக்க,
“அதெல்லாம் இருக்கட்டும்மா. நீங்க ஒரு வாரம் இங்க இருந்துட்டு அப்புறமா போங்க” என்றார் கந்தன் திட்டவட்டமாக.
“இல்லப்பா. ஆடு, மாடு எல்லாம் கட்டிப் போட்டு கிடக்கு. அதுங்களுக்குத் தீவனும் வைக்கணும், மேய்ச்சலுக்கு ஓட்டி போகணும், கொட்டகைய கூட்டி அள்ளணும். அத்தனையும் நிர்மலா ஒத்தையா எப்படிச் செய்யும். அதுக்குச் சிரமம் ப்பா. நான் போனாதான் தோதுப்படும். இவனுக்குப் பள்ளிக்கோடம் லீவ் விட்டதும் இங்க கொண்டாந்து விடுறேன். அப்போ இங்கனயே இருக்கட்டும்” என்றார் தீர்மானமாக.
பொற்கொடி மறுத்துப் பேசத்தான் போனார். ஆனால், அவர் என்ன கேட்டாலும் மறுத்துப் பதில் சொல்லும் தோரணையும், எதிர்ப்புமாகப் பெரியநாச்சி எதிர்பார்த்து நிற்க, கோபமும், வருத்தமுமாக அவரை வழியனுப்பி வைத்தார்கள்.
தேன்மொழியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த அன்பழகனை அலுங்காமல் கையில் அள்ளி தோளில் போட்டுக் கொண்டார் கந்தன்.
அதில் உறக்கம் கலைந்திட, “ம்ம்க்கும்..” என்று சிணுங்கி கண் விழித்தான் சின்னவன்.
பெரியப்பாவின் தோளில் இருந்து பார்க்கையில், அக்கா அவனது கைப் பிடித்திருப்பது தெரிந்தது. பற்கள் தெரிய புன்னகைத்து மீண்டும் கண் மூடி உறக்கத்தில் ஆழ்ந்தான்.
அன்று உறக்கக் கலக்கத்தில் கலங்காமல் ஊர் சென்று விட்டான் அன்பு. ஆனால், கண்ணீர் கன்னம் நனைக்க வீட்டினுள் வந்தாள் தேன்மொழி.
ஒரு கட்டத்திற்கு மேல் காயத்தின் வலி மரத்து போவது போல, அந்தப் பிஞ்சு மனங்களுக்குப் பிரிவு புரியத் தொடங்கியது போலிருந்தது.
தேன்மொழி அண்ணன்களின் விளையாட்டை வேடிக்கைப் பார்க்க அமர்ந்து விட்டாள். தன் மனத்தை, கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி. அது கொஞ்சம் வேலையும் செய்தது.
நான்கு நாள்கள் கழித்து அவள் பள்ளி விட்டு வீடு திரும்பியதும், “தேனு, இங்க பாரு” என்று அவளை ஆசையாக அழைத்து அவள் கையில் காகிதம் சுற்றப்பட்ட பொருளை கொடுத்தார் பொற்கொடி.
“இதுக்குள்ள என்ன இருக்குது பெரிம்மா?” சிறுமிக்கே உரிய ஆர்வத்துடன் அவள் கேட்க, “பிரிச்சு பாரு தேனு” என்றார் அவர்.
“சொல்லுங்க பெரிம்மா, உள்ள என்ன இருக்குது?” அவர் மேல் சலுகையாகச் சாய்ந்து கொண்டு கேட்டாள்.
“பிரி கழுத மொதல்ல”
“பேப்பர் பேப்பரா சுத்தியிருக்கு பெரிம்மா” என்றாள் சலிப்புடன்.
“இங்க கொண்டா” என்றவர், அவளின் கைப் பிடித்து ஒவ்வொரு காகிதமாகக் கிழித்தார்.
கடைசித் தாளும் கிழிய, “ஐய்ய்ய்ய்ய், நானும், தம்பியும்..” என்று சத்தமாகக் கத்தி ஆர்ப்பரித்தாள்.
“எம்மா கொடி, என்னம்மா சத்தம்” என்று கேட்டுக் கொண்டே வந்த முத்தம்மா, “யாரு, நம்ம தேனுவா இது? ஏ ஆத்தாடி, உனக்கு இப்படிச் சத்தமா பேசலாம் தெரியுமா?” என்று போலி ஆச்சரியத்துடன் தாடையில் கை வைத்து வினவினார்.
அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தாள் தேன்மொழி.
வீட்டுக் கூடத்தில் நன்றாகப் பார்வையில் படும்படி ஏற்கனவே புகைப்படங்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து சற்றே தள்ளி அந்தப் புகைப்படத்தை மகன்களிடம் கொடுத்து மாட்டச் சொன்னார் பொற்கொடி.
அதையடுத்து அவர்கள் குடும்பமாக எடுத்த புகைப்படத்தையும் வைத்தார்கள்.
மறுகணமே அந்த வீட்டை நிரம்பப் பிடித்துப் போனது தேன்மொழிக்கு. வீட்டினுள் போகும் போதும், வரும் போதும் திரும்பி திரும்பி அந்தப் படத்தைப் பார்த்தாள். கூடத்தில் அந்தப் படத்துக்கு நேராகவே பெரும்பான்மையான நேரம் அமர்ந்துக் கொண்டாள்.
அந்த வார இறுதிக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தாள்.
அந்தப் புகைப்படத்தைத் தம்பியிடம் காட்ட வேண்டும். அவனது சிரிப்பை பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவளின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருந்தது. திருவிழாவில் தேர் காணும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். ஆனால், அந்த வாரம் பெரியநாச்சி அவளைப் பார்க்க வரவில்லை.
அதற்கடுத்த வாரமும் அவர்கள் வருவார்கள் என அவள் காத்திருக்க, ம்ஹும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
“ஏன் கொடி, உங்க அத்த நம்ம வீட்டுக்கு வந்து ரெண்டு வாரமாச்சு இல்ல? நல்லா வந்துட்டு போய்ட்டு இருந்த மனுஷிய ஏன் திடீர்னு ரெண்டு வாரமா காணல. என்னவாம், ஏன் வரலையாம். உங்கிட்ட ஏதாவது சொல்லுச்சா?” என்று முத்தம்மா மகளிடம் கேட்க, “என்கிட்ட தானே? அப்படியே சொல்லிட்டுதான் மறுசோலி பார்ப்பாங்க. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி போனவங்கதான். வர்றோம், வரலன்னு ஒன்னும் சொல்லலம்மா” என்றார் பொற்கொடி கோபமும், அலுப்புமாக.
“ஆங், உன் புருஷனை கேட்டியா? அவர் எதுவும் சொன்னாரா?”
“அவருக்கும் எதுவும் தெரியலம்மா. நேத்து ராத்திரி சாப்பிடும் போது கூட எங்க, எங்க ஆத்தா கொஞ்ச நாளா வீட்டு பக்கமே வரல. இந்த அன்பு பய என்ன பண்ணுறானோன்னு எங்கிட்ட கேட்டுட்டு இருந்தார்”
“அதுசரி. அவருக்கும் தெரியாதாமா.. ம்ம்..” என்று யோசித்தவர், “இந்தத் தேனு குட்டி மூஞ்சியைப் பாக்க முடியல. ரெண்டு வாரமா வீட்டுக்கும், வாசலுக்குமா ஓடிட்டு கிடக்கா, ஊருக்குள்ள பஸ்ஸு சத்தம் கேட்டாலே ஓடி ஓடிப் போய்ப் பார்க்கறா. பாவம் புள்ள. பேசாம நீயே இந்தப் புள்ளைய கூட்டிட்டு, உன் மாமியா வீட்டுக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துடேன். இவளும் இங்க வந்ததுல இருந்து அங்க போகவே இல்லல்ல? நீயே கூட்டிட்டு போய்ட்டு வந்துடேன்” என்றார் முடிவாக.
பொற்கொடிக்கும் அம்மா சொல்வது சரியெனப் பட, உடனடியாகக் கணவரிடம் கேட்டார்.
“அம்மா சொல்றது சரிதான். நாமளே போய்ட்டு வந்துடுவோம். இந்தச் சனிக்கிழம பசங்களைக் கூட்டிட்டுப் போலாம்” என்றார் கந்தன். ஆனால், அவர்களின் பொறுமை தேன்மொழிக்கு இல்லை.
அந்த வாரம் வெள்ளிக்கிழமை வீடு வந்ததும், பள்ளி புத்தகப் பையைச் சுமந்தபடி, “பெரிம்மா, தம்பி வரல?” என்று வீடு முழுக்கக் கண்களால் அலசியபடி கேட்டாள்.
“நாளைக்கு வந்துடுவாங்க தேனு” என்றார் அவர் சமாளிப்பாக.
“இப்ப ஏன் வரல?”
என்று அவள் கேட்கவும், சட்டென என்ன சொல்வதெனத் தெரியாமல் அவர் முழிக்க,
“அன்பு இப்பத்தானே ஸ்கூல் விட்டு வந்திருப்பான் தேனு? நம்மள மாரி. அதான் இப்போ வரல. அம்மா சொல்றாங்க இல்ல. நாளைக்கு வந்துடுவான்” என்று சுதாகரன் சொல்ல, மெல்ல தலையசைத்தாள்.
பின், “நாளைக்கு வர்றேன்னு அப்பத்தா சொன்னாங்களா?” என்று அவள் கேட்கவும் முழித்தான் அவன்.
“நீ வீட்டுக்குள்ள வா மொதல்ல. உன் தம்பியை உங்கப்பத்தா நாளைக்குக் கூட்டிட்டு வரும். அப்படி வரலன்னா வெள்ளன எந்திரிச்சு அன்பை பார்க்க நாமளே ஊருக்கு போறோம். சரியா?” என்று அவர் கேட்க, மெல்ல அவர் சொன்னதை உள்வாங்கி, கண்கள் மின்ன சத்தமில்லாமல் சிரித்து, வேக வேகமாகத் தலையசைத்தாள்.
“டேய், நாளைக்கு நாம ஊருக்கு போறோம் டா ஜெயபாலா” என்று சுதாகரன் கத்த, “ஏய், அம்மாச்சி. நாங்க ஊருக்கு போறோமே” என்று கத்தி புத்தகப் பையைத் தூக்கி எறிந்தார்கள்.
“பெரிம்மா, இப்ப வர்ற பஸ்ஸுக்கு போவோமா?” தேன்மொழி தயக்கத்துடன் கேட்க, “பெரிப்பா வீட்டுக்கு வந்துடட்டும், அப்புறமா போவோம் தேனு. என்னா? அவர் வர்றதுக்குள்ள நீ போய் மூஞ்சி, கை, கால் கழுவிட்டு வா, ஓடு. அம்மா உனக்கு டீ போட்டு தர்றேன். உனக்குப் பிடிக்கும்னு உப்பு உருண்டை பிடிச்சு வச்சுருக்கேன். டீயை குடிச்சுட்டு, நாலு உப்பு உருண்டையைச் சாப்பிட்டு முடி. அப்புறம் ஊருக்குப் போலாம். ம்ம்?” என்றார்.
மனத்தைக் கண்களில் தேக்கி அவரைப் பார்த்து, “ம்ம்” என்றாள்.