இந்த வாழ்வென்பது – 3 (1)

அந்தக் கோயில் மிகச் சிறியது. ஆனால், மிகப் பெரிய வேப்ப மரத்தின் அடியில், குளக்கரையில் அமைந்திருந்ததால், காணவே அத்துணை அழகாக இருக்கும்.

தேன்மொழி, அன்பழகன் சாமியிருந்த மேடையை விட்டு வெளியில் வந்து அங்கிருந்த புளிய மர நிழலில் விளையாடிக் கொண்டிருக்க, தர்மதுரை அவர்களைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

அவ்வளவு எளிதில் தன்னை அடிக்காத அம்மாவிடம் அடி வாங்கிக் கொடுத்து விட்டாளே என்ற கோபம் அவனுக்கு. இப்போதும் வேண்டுதலை முடித்து விட்டு திரும்பிய திலகா,

“அந்தப் பிள்ளையை ஏன்டா மொறைச்சு மொறைச்சு பாக்குற?”

என்று மீண்டும் அவன் தோளில் சுள்ளென்று அடித்தார்.

“அ…ம்மா” என்று பல்லைக் கடித்தான்.

“சரி, சரி, கத்தாத டா. நேரமாகுது, வா வீட்டுக்கு போவோம். நீ பறிச்ச தாமரையைக் கொண்டு போய் உங்கக்காளுக்குக் குடுப்ப.. வாய்யா” என்று அவன் கைப் பிடித்தார்.

வேகமாய் அவரின் கையை உதறி, “நான் அக்காக்காகக் கஷ்டப்பட்டுக் குளத்துல இறங்கி பறிச்ச பூவை நீ அசால்ட்டா அந்தப் பிள்ளைக்குக் குடுக்கச் சொல்லிட்டு, அந்தப் பிள்ளையைச் சும்மா பார்த்ததுக்கே என்னைய அடிச்சல்லம்மா” என்று கோபமாய்க் கூறி முறைத்தான்.

“என்னது அடிச்சனா? எய்யா, லேசா உன் தோள்ல தட்டுனேன். அது அப்படியே உனக்கு வலிச்சுடுச்சாக்கும்? பேசாம நடடா” என்று அவனின் கையைப் பிடித்திழுத்தார்.

“அந்தப் புள்ள ஆசையா பாக்குதேன்னு ஒத்த பூ கொடுக்கச் சொன்னா.. ரொம்பத்தான் பண்றான். சொல் பேச்சு கேட்காம அதென்ன மொறப்பு? வீட்டுக்கு வா உனக்கு இருக்கு”

“என்னைய திட்டாதம்மா. அப்றம் நான் அப்பத்தாகிட்ட சொல்லுவேன்”

“போய்ச் சொல்லிக்கோ டா. அப்படியே உங்க அப்பத்தாக்குத்தான் பயந்து போய்க் கிடக்கேன் பாரு நானு”

“இதையும் சேர்த்து சொல்லுவேன் ம்மா” என்று அவன் மிரட்ட, சட்டெனச் சிரித்து விட்டார் திலகா.

“அதான் சொல்லிக்கோன்னு சொல்லிட்டேன் இல்லடா. அப்புறம் என்னத்துக்குத் திரும்பத் திரும்ப அதையே சொல்ற?” என்று அவன் தோளில் தட்டி, அவனை அணைவாகப் பிடித்துக் கொண்டார்.

“விடும்மா என்னைய” என்று அவரின் பிடியில் இருந்து திமிறியவனுக்கும் சிரிப்பு வந்து விட்டிருந்தது.

அவர்களின் சிரிப்புச் சத்தத்தில் திரும்பி அவர்களைப் பார்த்தாள் தேன்மொழி.

அவர்களின் சிரிப்பு அவள் முகத்தில் மெலிதான புன்னகையைத் தோற்றுவித்தது.

இப்படித்தான் அவளும் அம்மாவுடன் கோவிலுக்குச் செல்வாள். அம்மாவும் இது போலதான் அவள் தோளில் கைப் போட்டு நடப்பார்.

அழகாக விரிந்த புன்னகையுடன், கண்கள் மின்ன அவர்களையே ஆவலாகப் பார்த்தாள்.

அந்நேரம், “அக்கா.. அது வேணும்..” என்று அவளின் சட்டையைப் பிடித்திழுத்து, அக்காவின் கவனத்தைத் தன் மேல் திருப்பினான் அன்பு.

“எதுடா வேணும்?”

“தோ.. இது..” என்று புளியம் பூவை கைக் காட்டிச் சொன்னான்.

அவள் எக்கி அதைப் பறிக்க முயற்சிக்க, அவள் உயரத்திற்கு அது எட்டவில்லை.

“ண்ணா..” என்று சுதாகரை அழைத்தாள். அதற்குள் அருகில் இருந்த தர்மதுரை அவர்களை நெருங்கி, புளியம் பூவையும், அதனுடன் சில பிஞ்சுகளையும் பறித்து அவளிடம் நீட்டினான்.

அவள் தயங்க, “வாங்கிக்கோ தங்கம்” என்று திலகவதி சொல்லவும் வாங்கிக் கொண்டாள்.

அன்பழகனுக்கு அந்தத் தயக்கமெல்லாம் இல்லை. அக்காவின் கையில் இருந்ததை ஆசையாக எடுத்து வாயில் இட்டான்.

மறுநொடியே அந்தப் புளிப்பு சுவை நாவில் சுள்ளென்று உறைத்து எச்சிலை ஊறச் செய்ய, கண் மூடி உடலை சிலிர்த்துக் கொண்டு உதறினான்.

“புளியம் பிஞ்சை சாப்பிடாதய்யா. காச்சல் வந்திடும்” என்று அவனைக் கடிந்தபடி வந்தார் பொற்கொடி.

தேன்மொழி கையில் இருந்ததை அவர் வாங்கப் போக, “எனக்கு வேணும் பெரிம்மா” என்றான் சின்னவன். அக்காவின் கையைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தான்.

“ஒன்னே ஒன்னுதான் திங்கணும். அதுக்கு மேல தொடக் கூடாது. சரியா?” என்று அவர் சொல்லவும், சரியெனத் தலையை எல்லாப் பக்கமும் அசைத்தான். சிரிப்புடன் அவன் தலைக் கோதி கொடுத்தார் அவர்.

அதற்குள் புளியமரத்தை மொட்டை அடித்து, பூவையும், பிஞ்சையும் பறித்து விட்டார்கள் அண்ணன்கள் இருவரும்.

“ஏலேய், எதுக்குடா இத்தனய பறிச்சீங்க? அம்புட்டையும் தின்னுட்டு மேலுக்கு முடியாம படுக்கவாடா? இதைத் தின்னா தடுமம் பிடிக்கும்டா. இப்படிக் கொண்டாங்கடா” என்று மகன்களின் கையில் இருந்ததை அவர் வாங்க முயற்சிக்க, அம்மாவிடம் சிக்காமல் தப்பி ஓடினார்கள் அவர்கள்.

“தேனு, இந்தா வாங்கிக்கோ” என்று அவளிடம் கொடுக்க ஓடி வந்தார்கள்.

“ஏலேய், வேணாம் டா. தங்கச்சிகிட்ட கொடுக்காதீங்க டா. அவக் கையில இருந்து, இந்த அன்பு பய அள்ளி வாய்க்குள்ள போட்டுக்கறான் பாரு. வேணாம் டா, சொன்னா கேளுங்க டா” என்று கத்தினார்.

பெரியம்மா, அண்ணன்களைத் துரத்தும் அந்த விளையாட்டைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தான் அன்பழகன்.

“அண்ணா.. ஓடு.. இங்க வா” என்று குதூகலமாகத் துள்ளி குதித்துக் கத்தினான். தம்பியின் சிரிப்பை கண்டு அகமும் முகமும் மலர மலர்ந்து புன்னகைத்தாள் தேன்மொழி.

மாந்தளிர் நிற பட்டுப் பாவாடை சட்டையில், அவளின் அசைவுக்கு ஏற்ப அசைந்த இரட்டை பின்னலுடன் சேர்ந்து அவள் சூடியிருந்த மல்லிகையும் ஆட, காதில் அணிந்திருந்த குட்டி கல் பதித்த தோடும் சேர்ந்தாடியது. அந்த வட்ட முகத்தை மேலும் அழகாக்கி காட்டியது, நெற்றியில் வரிசையாக வைத்திருந்த திருநீறு, சந்தானம், குங்குமம், மற்றும் சாந்து பொட்டில் வைத்திருந்த திலகம்.

திலகவதி அவளை நெருங்கி, கன்னம் வருடி நெட்டி முறித்து, “வாய்யா போலாம்” என்று மகனின் கைப் பிடித்து அங்கிருந்து நகர்ந்தார்.

தேன்மொழியின் கவனமெல்லாம் தம்பியின் மேலும், அண்ணன்களின் மேலும் இருக்க, திலகவதி அவளின் கன்னம் தொடவும் சட்டெனத் திரும்பிப் பார்த்து புன்னகைத்து திரும்பினாள்.

“அழகு பெத்த புள்ள” என்றபடி வீடு நோக்கி நடந்தார் திலகவதி.

அவளையே பாத்திருந்த தர்மதுரை, “இந்தப் புள்ள பாவம்னு அப்பத்தா சொல்லுச்சுல்ல..” என்று அவன் நினைவு கூறவும், “உன் அப்பத்தாக்கு வேற வேலையில்ல. அதுனால பாவம்னு சொல்லும். என்ன? ஆனா, நீயெல்லாம் அப்படிச் சொல்ல கூடாது. அதெல்லாம் அந்தப் புள்ளைங்க நல்லா இருக்கும்” என்றார், மகன் முன் ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்கையும், கண்டிப்புமாக. துரை முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு தலையசைத்தான்.

“உங்க அப்பத்தா பல நேரம் பெரிய மனுஷி மாதிரி பேசாது. ஒருநாள் இருக்கு அதுக்கு” என்று முணுமுணுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஏதேதோ புலம்பிக் கொண்டே வந்தவர், “அந்தப் புள்ளைங்க நல்லா இருக்கணும்யா” என்றார், தன் மனத்தின் ஆழத்தில் இருந்து.

அதைக் கேட்டதும் தர்மதுரை, அம்மாவை நன்றாக நிமிர்ந்து பார்த்தான்.

“சாமிகிட்ட எல்லாரும் நல்லாருக்கணும்னு வேண்டிக்கோ ராசா” அவன் கடவுளின் முன் கைப் கூப்பி நிற்கும் போதெல்லாம், இந்த வாக்கியம் ஒன்றை மட்டுமே அவனிடம் சொல்வார் அம்மா.

வீடோ, கோவிலோ, வேண்டுதலோ, அம்மாவின் பிரார்த்தனை எப்போதும் இத்தனை சுருக்கமாகவே இருக்கும். அதுதான் அவனுக்கும் வழக்கம். அது அம்மா சொல்லி சொல்லியே அவனும் பழகியது.

அவன் வீட்டில் எல்லாருக்கும் அம்மா அதையேதான் சொல்வாள். இன்று அந்தச் சிறு பெண்ணுக்கும் அதையே அவர் சொல்ல, அந்த வார்த்தைகள் மீண்டும் அவனுள் ஆழமாய்ப் பதிந்து போனது.

அந்நேரம் அவனைக் கடந்து சர்ரென்று இரண்டு சைக்கிள்கள் விரைய, அதில் ஒன்றில் அமர்ந்திருந்தாள் அவள்.

error: Content is protected !!
Scroll to Top