அன்று வேலையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் அங்கே கூடி விட, அன்பழகன் அக்கா மாமாவின் சார்பில் கேக்கை அவனே வெட்டினான்.
மீண்டும் அனைவரின் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் பெற்றுக் கொண்டான்.
தேனு, தர்மாவையும் வாழ்த்தி பரிசுகள் கொடுத்தார்கள்.
தம்பிக்கு அவனுக்குப் பிடித்த புல்லட்டை பரிசளிக்க விரும்பினாள் தேனு. ஏற்கெனவே தலைவன் பரிசளித்த வண்டி அவனிடம் இருக்கிறது. ஆனாலும் புதிதாக ஒன்றை அவனுக்கு வாங்கித் தர அவளுக்கு விருப்பம்.
அதனால் சுதாகரன் கடையில் புதிய மாடல் வண்டியொன்றை வாங்கினான் தர்மா.
“மாப்ள, அவன் என் ஆளு. இப்படி நீங்களே எல்லாத்தையும் அவனுக்கு வாங்கிக் குடுத்துட்டா நான் என்னத்த வாங்கிக் குடுக்கறது? அநியாயம் பண்ணாதீங்க மாப்ள. அப்புறம் அன்பு பய கோவிச்சுப்பான் என்கிட்ட..” என்று வண்டிக்கான பணத்தை வாங்க மறுத்தான்.
“தொழில்ல சொந்தம் பந்தம்லாம் வரக் கூடாது மச்சா..” என்று அவன் கையில் காசை திணித்தான் தர்மா.
“ஹாஹாஹா. தொழில்ல சொந்தம் பந்தம்லாம் வரக் கூடாதா? அதை யார் சொல்றா பாருங்க மாப்ள.” என்று கேலி செய்தவனை முறைத்தான் தர்மா.
“ஹ்ம்ம் இப்ப நான் என்ன வாங்குறது? அவனுக்கு வாட்ச் பிடிக்கும்ல?” என்றவன் முன் ரோலக்ஸ் கடிகாரத்தை நீட்டினான்.
“ஆத்தாடி. இதுவும் வாங்கிட்டீங்களா?” என்று அதிர்ந்து பார்த்தான்.
“ரைட்டு நான் வேற ஏதாவது யோசிக்கறேன்..” என்றவன், பத்மாவின் ஆலோசனைப்படி தம்பிக்கு அலுவலக உடைகளைப் பரிசளித்தான்.
இப்பொழுது தேன்மொழி தம்பிக்கு புது வண்டியின் சாவியைக் கொடுக்க, தர்மா கைக் கடிகாரத்தை அவன் கையில் அணிவித்தான்.
“டேய் அன்பே. கமல்ஹாசனுக்கு அடுத்து உன்கிட்டதான்டா இம்புட்டு வாட்ச் இருக்கும்” என்றான் ஜெயபாலன். அன்பழகன் சிரிப்புடன் கையைத் திருப்பி மணி பார்த்தான்.
அனைவரும் அன்பழகனை பெருமையாகக் கொண்டாட, அன்புக்கரசி தன் தம்பியை பெருமையாகப் பார்த்தாள்.
“பத்து வருசமாகப் போகுதுல்லக்கா? கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள எம்புட்டு வருஷம் ஓடிருச்சுல்ல? எல்லாருக்கும் ஏதாவது பண்ணணும் க்கா” என்றான் கண்ணைச் சுழற்றி அங்கிருந்த பணியாளர்களைப் பார்த்து.
எல்லாருக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனம் கொண்டவனுக்கு அவன் வேண்டும் வரமும், நல்லதும் நடக்க வேண்டுமென்று மனத்தில் வேண்டிக் கொண்டாள் அக்கா. அதைத் தவிர அவளுக்கு வேறு பிரார்த்தனைகள் இல்லை.
மறுநாள் பத்மாவுக்கு வளைகாப்பு என்பதால் ஜெயபாலன் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றான். மற்றவர்களும் தங்களின் வேலைகளைப் பார்க்கச் சென்றார்கள்.
மறுநாள் காலையிலேயே அம்மா வீடு செல்ல கிளம்பிய தேன்மொழிக்கு மெலிதான தயக்கம்.
அவள் மனம் புரிந்து, “நாம ஒன்னா போலாம் தேனு. தொர வரட்டும், பொறுமையா போவோம்” என்றார் திலகவதி.
“நீ போய்ச் சீலைய மாத்து..” என்ற அப்பத்தா, பங்குனி பொங்கலுக்குப் பேரன் பொண்டாட்டி எடுத்துக் கொடுத்திருந்த மென்பட்டை உடுத்தியிருந்தார்.
“சீல கட்ட உனக்குத்தேன் ஒரு மணி நேரம் ஆகுமே போத்தா போ..” என்றவரை முறைத்துக் கொண்டே அறைக்குச் சென்றாள் அவள்.
பச்சையில் அடர் நீலநிற கரை வைத்த மென்பட்டை நேர்த்தியாக உடுத்தினாள். கணவனுக்கும் அடர்நீல நிற பட்டுச் சட்டையை, வேட்டியுடன் எடுத்து வைத்தாள்.
அவளுக்கு இருபத்தைந்தாவது பிறந்தநாள் அன்று. காலையில் இருந்து வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்து கொண்டிருந்தது. ஆனால், ஏனோ ஒருவித வெறுமையும் தவிப்பும் அவளைச் சூழ்ந்திருந்தது.
மகிழ்ச்சி என்பதை உணர முடியாத அளவிற்கு ஒருவித இறுக்கமான மனநிலையில் இருந்தாள்.
பத்மாவின் வளைகாப்புக்கு செல்ல வேண்டும் என்பதால் அவளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றிருந்தான் தலைவன்.
புடைவையை அணிந்து தயாராகி அவள் அமர்ந்திருக்க உள்ளே வந்தான் தர்மா.
“பத்தே பத்து நிமிஷம் குடுடி. நான் ரெடியாகிடுறேன்” என்றவன், சொன்னது போலப் பத்து நிமிடத்தில் உடை மாற்றி நின்றான்.
“வளைகாப்புலாம் லேடீஸ் பங்ஷன். உங்களை அங்க விட்டுட்டு நான் தோட்டத்துக்குக் கிளம்பிடுவேன். வேலை கிடக்கு..” என்றான். சுரத்தே இல்லாமல், ம்ம் என்றாள்.
“என்னடி..” அவளை எழுப்பி அணைத்து முகத்தை நிமிர்த்தினான்.
“எனக்கு இன்னையோட இருபத்தைஞ்சு வயசாகுது தர்மா..”
“வயசாக வயசாக உன் அழகு கூடிட்டே போகுது டி சிலுப்பி. அதுக்கேன் ஃபீல் பண்ற? ம்ம்?” அவளை வாசம் பிடித்துக் கேட்டான். இதமான மல்லிகை வாசனை திரவியத்தின் மணம் அவள் மேலிருக்க, நீண்ட பின்னலில் சூடியிருந்த மல்லிகையின் வாசமும் சேர்த்து அவனை மயக்கியது.
“நான் என்ன சொல்றேன்னு புரியாம..”
“புரிஞ்சுதுடி. ஆனா, இருபத்தைஞ்சுலாம் ஒரு வயசாடி? இதுக்காகலாம் கவலைப்படுவியா?” அவளின் நெற்றியில் முட்டி முத்தமிட்டு கேட்டான்.
“ப்ச், உங்களுக்கு வயசாகுதேன்னு நான் ஃபீல் பண்றேன். அது புரியாம..”
“மாமா என்னைக்கும் யங்தான்டி சிலுப்பி. ப்ரூஃப் பண்ணவா..” என்று கண்ணடித்தான்.
“போங்க. நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு முப்பதாகப் போகுது தர்மா..” என்று ஏக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள்.
“ப்ச், இப்பல்லாம் முப்பதுலதான் கல்யாணமே பண்ணிக்கறாங்க. நீ என்னன்னா..”
“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது தர்மா? நான் ஆசைப்படற எதுவுமே எனக்குக் கிடைக்காதா? கடைசி வரைக்கும் என்னால என் தம்பி கூட இருக்க முடியல. இப்போ நமக்குன்னு குழந்தைங்க வருவாங்க. அவங்களை ஆசை ஆசையா வளர்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அந்தக் கடவுளுக்கு.. போங்க..” கண்ணீருடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
“தேன்னு, என்னைப் பாருடி. அழாத பிளீஸ்.” என்றவனிடம் ஆறுதல் மொழிகளும் தீர்ந்துப் போய் இருந்தது. ஆக, மனைவியை இறுக அணைத்து நின்றான்.
“போய் மூஞ்சி கழுவிட்டு வா. உங்கம்மா வீட்டுக்கு போவோம். அவங்க வெயிட் பண்ணுவாங்க இல்ல?”
“ம்ம்” என்று விலகினாள்.
பத்து நிமிடத்தில் தயாராகி அவள் வீடு சென்றார்கள். அவள் முகம் பார்த்தே அகத்தைப் புரிந்து கொண்ட அப்பத்தா, அவளை வம்பிழுத்து சிரிக்க வைத்திருந்தார்.
பத்மாவின் வளைகாப்பு வீட்டிலேயே சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
நிர்மலா மகளை அந்த வீட்டில் கொடுக்க அத்தனை தயங்கினார். ஆனால், இன்று மகளின் மகிழ்வான முகம் பார்த்துப் பூரித்துப் போனார்.
பத்மாவை ஒன்பதாம் மாதம் வரைக்கும் அம்மா வீடு அனுப்ப மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டான் ஜெயபாலன்.
இப்பொழுதும் கூட, “ரம்யா அண்ணி மாதிரி நீயும் நம்ம புள்ளைய தூக்கிட்டு பத்தே நாள்ல நம்ம வீட்டுக்கு வந்துடு பத்மா. அம்மாவும், அம்மாச்சியும் உன்னைய பார்த்துப்பாங்க” என்று அவன் சொன்னது அவர் காதிலும் விழ, சிரிப்பை அடக்கினார்.
பத்மாவுக்கு முறையாகச் சடங்குகள் செய்து, நலுங்கு வைத்து, வளை பூட்டி ஒன்பது வகைச் சோறூட்டினார்கள்.
அவளுக்குக் குடும்பத்தார் வளையல் அணிவிக்க, தேன்மொழி தன் சார்பாகப் பச்சைக்கல் பதித்த பொன் வளையலை போட்டு விட்டாள்.
“வளையல் நல்லாருக்கு ராசாத்தி..” என்று முத்தம்மா சிலாகிக்க, அருகில் இருந்த பரமேஸ்வரி, “ம்க்கும்” என்று நொடித்தார்.
“கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் புள்ள இல்லாத இவள பக்கத்து மனையில உக்கார வச்சு வளையல் போடுறத விட்டுட்டு.. இவள வளையல் போட விட்டு அழகு பார்த்திட்டு இருக்கீங்க” என்று அவர் சொன்னது அங்கிருந்த அனைவருக்குமே கேட்டிருந்தது.
தேன்மொழியின் மனம் அந்த வார்த்தைகளில் சட்டென்று உடைய, உடனே உடைய போகிறேன் என்று மிரட்டிய கண்களைக் கட்டுப்படுத்தி நின்றாள்.
“அத்த..” என்று ஜெயபாலன் அவரை அதட்ட, அன்பழகன் கோபத்துடன் முன்னே வந்து அக்காவுக்கு அருகில் நின்றான்.
“நான் என்ன இப்ப இல்லாததையா சொல்லிட்டேன். உண்மையத்தானே சொன்னேன். இவள கட்ட இருந்தவனுக்கு இப்போ ரெண்டு புள்ளைங்க இருக்கு. ஆனா இவ? வெறுங்கையோட திரியறா. நல்லவேளை என் பங்காளி வீட்ல இவள கட்டல. இல்லனா இவளால நானும்ல பேச்சு வாங்கியிருக்கணும்”
“அத்த இதுக்கு மேல ஒரு வார்த்த அக்காவ பத்தி பேசினீங்க..” அன்பழகன் முன்னே செல்ல அவன் கைப் பிடித்துத் தடுத்தாள் தேன்மொழி.
“என்னடா பண்ணிடுவ? ராசி இல்லாத பயலே. உங்க ரெண்டு பேர் ராசிதான்டா உங்கம்மாப்பாவை கொண்டு போச்சு. உங்கக்கா ராசிதான் எங்க ஆத்தாவையும் அல்பாயுசுல போக வச்சுடுச்சு..”
“என்னத்தா.. யாரு நீ.. என்னா பேசுற..” விஷயம் அறிந்து வரிந்து கட்டிக் கொண்டு முன்னே வந்தார் அப்பத்தா.
“உனக்கெல்லாம் அறிவே இல்லையாத்தே. உன்னைய போய் மதிச்சுக் கூப்பிட்டேன் பாரு. என்னைய சொல்லணும். நீ கிளம்பு.. வெளில நட..” என்று அவரை வெளியில் தள்ளி கொண்டு போனான் ஜெயபாலன்.
“தேனு..” என்று மகளை ஆதரவாகப் பிடித்துக் கண்ணீருடன் கணவரைத் தேடினார் பொற்கொடி.
திலகவதி, பொற்கொடி, முத்தம்மா, நிர்மலா, அன்பு என வீட்டின் பெண்கள் கோபத்துடன் பரமேஸ்வரியை நெருங்கும் முன், “நான் பார்த்துக்கறேன் மா. நீங்க வேலையைப் பாருங்க..” என்று பரமேஸ்வரியை வாசலுக்கு இழுத்துப் போனான்.
தேன்மொழியை அன்பழகன், “வாக்கா..” என்று அழைக்க, அவள் கண்கள் கணவனைத் தேடியது.
“விடு அன்பு..” என்று வெளியில் போகப் போனாள்.
அவன் தடுத்துப் பிடிக்க, “விடுடா” என்று திமிறி வெளியில் சென்றாள்.
எங்கிருந்தோ ஓடி வந்த சுதாகரன், ஜெயபாலனை விலக்கி, “நீ போய் வேலையைப் பாரு.” என்றான்.
“என்னங்கடா, நான் பார்க்க வளர்ந்த சின்னப் பசங்க நீங்க. ஆத்தா அப்பன் இல்லாம உங்க வீட்டுக்கு வந்த இவளுக்காக என்னைய..” என்று தேன்மொழியைக் கைக் காட்டி அவர் பேச, “அத்த, அவளும் உங்கதம்பி மகதான்..” என்று கத்தினான் ஜெயபாலன்.
அதுவரை வீட்டு வாசலில் நின்று அலைபேசி கொண்டிருந்த தர்மா அந்தச் சத்தத்தில் சட்டென்று திரும்பிப் பார்த்தான். அவன் பார்வை முதலில் மனைவியின் மேல்தான் விழுந்தது. அவசரமாக அலைபேசியைச் சட்டையில் போட்டு, வேட்டியை மடித்துக் கட்டி நாலே எட்டில் பரமேஸ்வரியை நெருங்கினான்.
“என்ன சித்தி? என்னா வேணும் உங்களுக்கு?” என்று நிதானமாகக் கேட்டவன் குரலே அவரை மிரட்டியது.
“அவ என் பொண்டாட்டி. தர்மதுரை பொண்டாட்டி. அத மனசுல வச்சுட்டு இனிமே இந்த வீட்டுப் பக்கம் வாங்க. இன்னமும் என் பங்காளிக்கு கட்டியிருந்தான்னு பேசினீங்க.. அம்புட்டுதான்” என்று அவன் மிரட்டலாகச் சொல்ல, “அத்த பேசினது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று குழம்பிய ஜெயபாலன், “இது.. இதுக்கு முன்னாடியே இப்படிப் பேசியிருக்கா அத்த?” என்று கோபமாகக் கேட்டான்.
தர்மதுரை ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மனைவியை நெருங்கி நிற்க, பரமேஸ்வரி அவர்களைப் பார்வையால் பொசுக்கினார்.
“இவன் உங்க எல்லாருக்கும் வேலைய குடுத்து வளைச்சு போட்டுக்கிட்டான். இவனுக்கு நீங்கதான் விசுவாசமா இருக்கணும். நான் ஏன் பயப்படணுங்கறேன்..” என்று விடாமல் தர்மாவை முறைத்து அவர் வார்த்தையை விட, அவரின் கோபமும் வன்மமும் அப்போதுதான் பிடிபட்டது.
அவனின் வளர்ச்சி அவனைச் சூழ்ந்திருந்த அனைவரையும் வளரச் செய்திருந்தது. என்னமோ அவரால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. பிறர் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாத வகைப் போலும் அவர்.
“என்ன சொன்னீங்க சித்தி..” என்று தர்மா அவரை நெருங்க, “வேணாம் மாமா..” என்று அவனைத் தடுத்துப் பிடித்தாள் தேன்மொழி.
திருமணமாகி இந்த நான்கு வருடங்களில் எத்தனை பேச்சுக்களை, எத்தனை பேர் வாயிலாகக் கேட்டு விட்டாள். ஆனாலும், மனம் மரத்து விடாமல் ஒவ்வொரு வார்த்தையும் ஊசியாய் துளைத்து வலிக்கத்தான் செய்கிறது.
இந்த வாழ்வென்பது வலிகள் நிறைந்தது தானோ?