இந்த வாழ்வென்பது – 29 (1)

ஜெயபாலனுக்கு உண்மையாகவே கோபம் வந்து விட்டிருந்தது.

“லூசாண்ணே நீ. அது பெர்ஃப்யூம் ஆல்கஹால்” என்று கத்தி அண்ணனின் பிடியில் இருந்து விலகினான் அன்பழகன்.

“பெர்ஃப்யூம் பண்றதுக்கு யூஸ் பண்றது..”

“ஆமாவா? ஆத்தாடி மறந்துட்டேன் டா. முன்னாடியே தேனு ஒருமுறை சொல்லியிருக்கா..” என்று ஜெயபாலன் வலிந்து புன்னகைக்க, அண்ணனை முறைத்தான் அன்பழகன்.

“மன்னிச்சுடுங்க மாப்ள..” என்று தர்மாவின் தோளைத் தொட்டு சொன்ன அண்ணனை வெளியில் இழுத்துக் கொண்டு போனான் அன்பு.

“டேய் அன்பே, தெரியாம பேசிட்டேன். என்னைய விடுடா. நான் வேற வேலையா வந்தேன். இரு வர்றேன்” என்று அவனை அங்கேயே விட்டுச் சென்றான் ஜெயபாலன்.

அந்நேரம் பத்மா அங்கு வரவும் அவளைக் குழப்பத்துடன் பார்த்தான் அன்பு.

“நான் மதியம் வீட்டுக்கு வரயில பெரிம்மா கேட்ட பூ எடுத்துட்டு வந்திருப்பேனே பத்மா. இத வாங்க நீயே வரணுமா? நாளைக்கு வளைகாப்பை வச்சுட்டு..” என்று அவளைக் கடிந்தபடி அங்கே வந்தாள் தேன்மொழி.

“இப்பத்தான் ஜெயாண்ணே வந்துச்சு. அடுத்து நீ வர்ற. எதுவும் பிரச்சனையா?” என்று அன்பு கேட்க, “அண்ணே எப்போ வந்துச்சு? எங்க?” என்று கேட்டாள் தேன்மொழி.

அப்பொழுது, “தேன்னு..” என்று தர்மா அழைக்க, கையில் இருந்த பூவை தம்பியிடம் கொடுத்து, “நீ போய்ப் பத்மாவ வீட்ல விட்டுட்டு வா அன்பு” என்று விட்டு உள்ளே ஓடினாள்.

“வா வீட்டுக்கு போவோம்..” அன்பு அழைக்க, “நீ எங்கூட வாடா..” என்று அவனை இழுத்துப் போனாள் பத்மபிரியா.

“அன்பே, கண்ணை மூடிக்கோ..” என்று ஓடி வந்து அவனிடம் நின்றான் ஜெயபாலன்.

“என்னண்ணே பண்றீங்க?” அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கேட்டான்.

சுதாகரன், ரம்யா, குடும்பமாக நின்றிருக்க, அன்புக்கரசி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள். பத்மாவின் அண்ணன் சரவணகுமாரும் அலைபேசியில் பேசியபடி அங்கே நின்றிருந்தான்.

தர்ஷனா, அன்புக்கரசியின் மக்கள் ரோஜா, தீபன் மூவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“என்ன எல்லாரும் வேலையை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் அன்பழகன்.

அதிலும் சரவணக்குமாரை பார்த்ததும் பேரதிர்ச்சிதான். பின்னே அவன் சென்னையில் அல்லவா இருக்க வேண்டும். தற்போது சென்னை அலுவலகத்தையும், பேக்கிங் ஹவுஸையும் நிர்வகிப்பது அவன்தான். அவன் எம்பிஏ பிசினஸ் மேனேஜ்மென்ட் முடித்ததும் அவனையும் தொழிலுக்குள் இழுத்துக் கொண்டான் தர்மா.

ஆரம்பத்தில் சென்னை அலுவலகத்தைத் தர்மாவும், லோகேஷ்வரனும்தான் நிர்வகித்தார்கள். லோகேஷ் அங்கேயே தங்கிவிட, தர்மா மாதம் இரு முறை சென்று வந்து கொண்டிருந்தான். அப்பொழுதே சரவணகுமார் அவர்களிடம் பணியில் சேர்ந்து விட்டான். முறையாக ஒரு வருடக்காலம் பயிற்சி பெற்றான்.

கடந்த ஒரு வருடமாக அவனே சென்னை அலுவலகத்தைப் பார்த்துக் கொள்கிறான். தர்மா அவ்வப்போது சென்று மேற்பார்வை செய்கிறான். திண்டுக்கல், மதுரை, சென்னை என அனைத்து அலுவலக நிர்வாகமும் அவனுக்குக் கீழேயே இயங்கிக் கொண்டிருந்தது. முக்கிய முடிவுகள் அவன் வசமே. முக்கியப் பொறுப்புகள் முழுதையும் தேன்மொழியிடம்தான் கொடுத்திருந்தான். வங்கி பணப் பரிவர்த்தனை அனைத்தும் அவர்கள் வசமே இருந்தது.

அக்கா, மாமா, சரவணக்குமார் மதுரை, சென்னை அலுவலகத்தை நிர்வகிப்பதற்காக மாத சம்பளமும், ஆண்டு வருமானத்தின் லாபத்தில் இருந்து பங்கும் தந்து விடுகிறான். அக்கா, மாமாக்கு இருபது சதம். சரவணனுக்குப் பத்து.

பூ ஏற்றுமதியால் அவர்களைச் சார்ந்த அனைவரின் வாழ்வும் ஏற்றம் கண்டிருந்தது.

அன்பழகனின் ஆச்சரிய கேள்வியில் சிரித்த ஜெயபாலன், “பேசாம வாடா அன்பே..” என அவனை இழுத்துப் போனான்.

அங்கிருந்த மேசையில் ஐந்து கிலோ அளவில் பெரிய கேக் வீற்றிருக்க, அதில் “மனம் நிறைந்த வாழ்த்துகள்” என்ற வாசகம் எழுதியிருந்தது.

“நம்ம கடையில வண்டி எதுவும் விக்கலயாண்ணே. அம்புட்டு வெட்டியாவா இருக்க நீ?” அன்பு கேலியாக அண்ணனை கேட்க, “நீ பேசுவடா. பின்ன ஆபீசர் ஆகிட்ட இல்ல?” என்று அவன் கழுத்தில் கரம் போட்டவன், “எங்கடா உங்கக்கா மாமாவ?” என்று தேடினான்.

அனைவரும் அங்குக் கூடியிருக்கத் தலைவனையும், தலைவியையும் மட்டும் காணவில்லை.

“நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்..”

“நீ இரு டா அன்பே. நான் போறேன்” என்று அவர்களைத் தேடி சென்றான் ஜெயபாலன். தர்மாவின் அலுவலக அறையிலும் அவர்கள் இல்லை. தேன்மொழியின் அறையிலும் இல்லை.

அப்படியே தேடிக் கொண்டு பின்னால் இருந்த வீட்டிற்குச் செல்ல, அங்கே பேச்சுச் சத்தம் கேட்டது.

“தேனு..” என்று அவன் அழைக்க, “உள்ள வாங்க..” என்றான் தர்மா.

கதவைத் திறந்ததும் குப்பென்று வாசனை திரவியத்தின் மணம் நாசியை நிறைக்க, “ஆஹா..” என்று ஆழ்ந்த மூச்செடுத்தான் அவன்.

“எங்க இருக்கீங்க?” என்று அவர்களைத் தேடிக் கொண்டு உள்ளே சென்றான்.

அந்த வீட்டு படுக்கையறையின் ஒரு சுவர் முழுக்கக் கண்ணாடி அலமாரி இருந்தது. அது முழுக்க மது குப்பிகள். அதன் பக்கத்திலேயே தலைவன் கைப்படச் செய்திருந்த வாசனை திரவிய குப்பிகள் வரிசையாக இருந்தது.

பன்னீர் ரோஜா, மல்லிகை, அரேபிய மல்லிகை, மரிக்கொழுந்து முதலியவை மது நிரம்பிய குப்பிகளில் மிதந்து கொண்டிருந்தது.

“மாப்ள நீங்க வீட்லயே பெர்ஃப்யூம் பண்றீங்களா? சொல்லவே இல்ல?” வியப்புடன் வினவினான்.

தங்கை நீட்டிய வாசனை திரவியம் நிரம்பிய குப்பியை வாங்கி மணிக்கட்டில் அடித்து முகர்ந்து பார்த்தான்.

“அப்ப்ப்ப்பா என்னா வாசனை. செம்மையா இருக்கு மாப்ள. இது அடுத்தப் பிசினஸா?”

“தேன்னுக்காகப் பண்ணுவேன் எப்பவும். விக்க இல்ல” தர்மா சொல்லவும், “ஓ..” என்று ராகம் போட்டான்.

“ஏன் எங்களுக்குலாம் குடுக்கக் கூடாதா?”

“இப்பதான் இவர் ஆசைப்பட்ட மாதிரி வந்திருக்குண்ணா. எல்லாருக்கும் எடுத்து வச்சிருக்கேன் பாரு..” என்று பெயர் எழுதிய குப்பிகளைக் காண்பித்தாள் தேன்மொழி.

“பாருடா. தேங்கஸ் மாப்ள” என்றான் ஆர்ப்பாட்டமாக.

தலைவிக்கு மட்டும் பிரத்யேகமாக அரேபிய மல்லிகையில் செய்த வாசனை திரவியத்தைப் பரிசளித்தான் தலைவன்.

“நெக்ஸ்ட் பெர்ஃப்யூம் கம்பெனி ஸ்டார்ட் பண்றோம் மாப்ள. என்ன சொல்றீங்க?” என்று அலப்பறையைக் கூட்டியபடி அவர்களை அழைத்துச் சென்றான்.

“நம்ம அன்பே பெரிய ஆபீசராகிச் சாதிச்சிட்டான். நாளைக்குத் தேனுக்கு இருபத்தஞ்சாவது பர்த்டே. அடுத்து மூனு நாள்ல உங்களுக்குப் பர்த்டே வருது மாப்ள. நீங்க இந்தப் பிசினஸ் ஆரம்பிச்சி இத்தோட பத்து வருஷமாகப் போகுதுன்னு உங்கக்கா சொன்னாங்க. அதான் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு சின்னச் செலிபிரேஷன்” அவர்கள் கேட்கும் முன்னரே பதிலை சொல்லி அழைத்துச் சென்றான் ஜெயபாலன்.

error: Content is protected !!
Scroll to Top