இந்த வாழ்வென்பது – 28 (2)

காலை உணவிற்கே இட்லி, பொங்கல், வடையுடன் கேசரி, சக்கரைப் பொங்கல் என இனிப்பும் செய்து அசத்தி விட்டார் பொற்கொடி.

“நான் சாப்ட்டு ஒரு எட்டு தோட்டத்துக்குப் போய்ட்டு வரேன் தேன்னு. நீ பொறுமயா வா போதும். கஸ்டம்ஸ் வேலையை நான் பார்த்துக்கறேன்” என்ற கணவனின் தட்டில் கேசரி வைத்து, அதை எடுத்துப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பிக்கு ஊட்டி விட்டாள் தேன்மொழி.

“இதென்ன பக்கத்து இலைக்குப் பாயாசமா? இல்ல நெல்லுக்குப் பாயுறது புல்லுக்கும் சேர்த்தா மாப்ள?” என்று கேலியாகக் கேட்ட ஜெயபாலன், “தேனு உங்களுக்கே ஊட்டி விட்டாலும் நாங்க யாரும் கோவிச்சுக்க மாட்டோம். என் அன்புக்கு ஊட்டி விட நான் இருக்கேன். அதை மட்டும் செய்யாதீங்க” என்று சொல்லி தர்மா, அன்பு இருவரையும் முறைத்தான்.

“என்ன சொல்லு, உனக்கு அக்காவும், மாமாவும்தான் கண்ணுக்கு தெரியறாங்க இல்லடா அன்பே. அக்காவ பார்த்ததும் இந்த அண்ணன மறந்துடுற..” என்று அவன் சடைக்க, “பொறாம பிடிச்ச பய, புள்ளைங்கள பாத்து கண்ணு போடாத டா” என்று அவனைப் பேசி விட்டு உள்ளே சென்றார் முத்தம்மா.

“பாத்தியா டா அன்பே. இந்த அம்மாச்சி கூடப் போற போக்குல என்னைய வஞ்சுட்டு போகுது. ம்ம்..” என்று அலுத்துக் கொள்ள, தர்மா நிதானமாக ஒரு கை கேசரியை எடுத்து மனைவிக்கு ஊட்டி விட்டான். அப்படியே திரும்பி அன்புக்கும் ஊட்டி விடப் பக்கென்று சிரித்து விட்டாள் பத்மா.

“உனக்கென்ன ஒரே சிப்பானியா இருக்கு. பாத்து பல்லு சுளுக்கிக்கப் போகுது” நிறைமாத கர்ப்பிணியான மனைவியை முறைக்க முடியாமல் கடுப்பாகச் சொன்னான்.

“என்ன சொன்னீங்க?” என்று அவள் புருவம் உயர்த்தவும், “நீ செஞ்ச இந்தச் சக்கரை பொங்கல் டேஸ்ட்டா இருக்குன்னு சொன்னேன் மா” என்று அவளிடம் வழிந்து விட்டு, கேசரியை கையில் எடுத்து எட்டி எதிரில் அமர்ந்திருந்த தம்பிக்கு ஊட்டி விட்டான்.

பெரியவர்கள் அனைவரும் உண்டு வேலைக்குச் சென்றிருக்க, இளையவர்கள் பேச்சும் சிரிப்புமாக உணவு உண்டு கொண்டிருந்தார்கள்.

“நமக்குக் கல்யாணமாகி எத்தன வருஷம் ஆகுது. இன்னும் உனக்கு ஒரு சக்கரைப் பொங்கல் சரியா வைக்கத் தெரியலையா டி. என் தங்கச்சி கிட்ட சமைக்கக் கத்துக்கோ..” என்று சுதாகரன் தன் தட்டில் இருந்த பொங்கலை எடுத்து மனைவி ரம்யாவின் தட்டில் வைத்து அவளைத் திட்டவும், “ஒழுங்கா அந்தப் பொங்கலை எடுத்து சாப்பிடுண்ணா” என்று அவன் மேல் பாய்ந்தான் ஜெயபாலன்.

“ஏன்டா? நல்லா இல்லன்னு தானே..”

“இப்ப எதுக்கு அண்ணியைப் பேசுற நீ?” என்று அண்ணனை முறைத்தான்.

“இப்போ நீ எதுக்கு உங்க அண்ணிக்குச் சப்போர்ட் பண்ற? சாப்பாடு சரியில்லன்னா மொத ஆளா நீ தானே டா கத்துவ..”

“அதெல்லாம் பொண்டாட்டி சமைச்சதா இருந்தா கத்த மாட்டோம். இல்ல மச்சா?” என்று நக்கல் சிரிப்புடன் தர்மா கேட்க, ஜெயபாலன் முகம் போன போக்கில் கொல்லென்று சிரித்து விட்டார்கள் அனைவரும்.

பத்மாவும் சிரிக்க, “சிரிக்காத டி” என்று அவளை முறைத்தவன் திரும்பி, “அனுபவம் பேசுதா மாப்ள?” என்று தர்மாவின் காலை வாரினான்.

தலைவன் முறைக்க, “அக்கா வீட்டுக்கு நீ இனிமேட்டு சாப்பிட போவேண்ணே? இரு உனக்குச் சோறே போட கூடாதுனு சொல்றேன்..” என்று அன்பழகன் தன் அக்காவை பேசியது பொறுக்காமல் பதில் கொடுக்க, “அடப்பாவி அன்பே. அக்கான்னு வந்தா அண்ணனை அம்போன்னு விட்டுடுறியே டா” என்று அங்கலாய்த்தான்.

ஜெயபாலன் பேச்சோடு பேச்சாக மனைவி தட்டில் இருந்த பொங்கலையும் சேர்த்து அவனே உண்டான்.

“பைனாப்பிள் கேசரி, தேனு பண்ணது நல்லாருக்கு சாப்பிடு” என்று அவளுக்குப் பரிமாறினான்.

பொற்கொடி, முத்தம்மா, ரம்யா மூவரும் வீட்டையும், சமையலையும் பார்த்துக் கொள்வதால் பத்மாவிற்குத் தையல் கலை கை வந்த அளவுக்குச் சமையல் கலை கை வரவில்லை.

அவளது கடையை இப்போது திண்டுக்கலுக்கு மாற்றி விட்டாள். தினம் வேலைக்குச் சென்றாலும் வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய மறப்பதில்லை. ஆனால், அதில் சமையல் அடங்காது. தனக்கு வராததை எதற்குச் செய்து அனைவரையும் சோதிக்க வேண்டும் என ஒதுங்கிக் கொண்டாள். இன்றைக்கு இரண்டு குடும்பத்தினரும் அங்கிருக்க ஆசையாகச் சக்கரைப் பொங்கல் செய்தாள். ஆனால், சொதப்பி விட்டது.

தேன்மொழி வேலைக்குச் சென்றாலும் கூடுதலாகக் கவனம் செலுத்தி சமையலையும் அம்மா, அம்மாச்சி, திலகவதி, பவுணு அம்மாள் என அனைவரிடமும் கற்றுக் கொண்டாள்.

ரம்யா இயல்பிலேயே நன்றாகச் சமைப்பாள். கணினி பொறியியல் படித்திருக்கிறாள். தர்மாவின் தோட்டத்து அலுவலகத்தில்தான் அவளும் பணிபுரிகிறாள்.

இப்பொழுது முருங்கை சாகுபடியை பல ஏக்கருக்கு விரிவாக்கி இருந்தான் தர்மா. முருங்கைக் கீரை, முருங்கைப் பொடி, பூ, காய், முருங்கை விதை எண்ணெய், முருங்கை மரத் தேன் என முருங்கைச் சார்ந்த மதிப்பு கூட்டல் பொருட்களுக்கு உள்ளூர் வெளியூர், வெளிநாடு என ஏகப்பட்ட கிராக்கி இருப்பதை அறிந்ததும், அந்தத் தொழிலை விரிவாக்கினான்.

அது சார்ந்த அனைத்தையும் ரம்யாவின் வசம் ஒப்படைத்து விட்டான்.

“நான் கிளம்பறேன் தேன்னு” மனைவியிடம் சொன்ன தர்மா, மற்ற அனைவரையும் பார்த்து தலையசைத்து விட்டுச் சென்றான்.

“எம்மா, இன்னைக்கு மாட்டு பொங்கல்னு நினைச்சுட்டு இந்தப் பொங்கலை நம்ம மாடுங்களுக்கு ஊட்டி விட்டுடு” என்று அம்மாவின் கையில் பொங்கல் இருந்த பாத்திரத்தை திணித்தான் ஜெயபாலன்.

அவனுக்குப் பின்னே கை கழுவி கொண்டிருந்த பத்மா கோபத்துடன் திரும்பி அவனை மொத்தினாள்.

சுதாகரன், ஜெயபாலன் இருவரும் கடைக்குக் கிளம்பப் பத்மா வீட்டில் இருந்தாள். அவளுக்கு இப்பொழுது ஒன்பதாம் மாத தொடக்கம் என்பதால் வேலையை வீட்டில் இருந்தே பார்க்கிறாள். திண்டுக்கல்லில் கடையைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள, தையல் வேலைகளைக் கவனிக்க ஆட்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தாள். ஆகவே தொழில் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

தர்மா வர வேண்டாம் என்று சொன்னாலும் கேளாமல் அலுவலகம் கிளம்பினாள் தேன்மொழி. அவளோடு அன்பழகனும் இணைந்து கொண்டான்.

“ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க. எனக்கும் வேலைக்கு டைம் ஆகுது. நானும் வர்றேன்” என்று அவர்களுடன் தொற்றிக் கொண்டாள் ரம்யா.

தர்ஷனா அப்பத்தா பொற்கொடியின் கைகளில் இருந்தபடி அம்மாவுக்கும், அத்தைக்கும் கையசைத்தாள்.

பின் காலைப் பொழுதில் அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருக்க, தோட்டத்து அலுவலகத்திற்கு வந்தான் ஜெயபாலன்.

அவன் நேராகச் சென்றது தர்மதுரையின் அலுவலகத்திற்குதான்.

அவன் கையில் இருந்த மதுபான குப்பிகளைக் கண்டதும், “மாப்ள என்னதிது புதுப் பழக்கம். இது தங்கச்சிக்கு தெரியுமா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

தர்மதுரை கையில் இருந்ததைக் கீழே வைக்காமல் ஜெயபாலனை பார்த்து அதிர்ச்சியடைந்தது போலப் பாவனைச் செய்தான்.

“புதுப் பழக்கம்னு யார் சொன்னா? எல்லாம் பழைய பழக்கம்தான்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

“என்னது? நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? எங்கிட்டயே தைரியமா சொல்றீங்க?”

“அப்புறம் உங்கள பார்த்து பயப்படணுமா நானு?”

“இல்ல மாப்ள, எதுக்கு இந்தப் பழக்கம்லாம்? உடம்புக்கு நல்லதில்ல. தேனுக்குத் தெரிஞ்சா.. இப்ப உங்களுக்கு என்ன சோகம்னு இந்தக் கருமத்த குடிக்கறீங்க.. கருமம்..” என்று அவன் முகம் சுளிக்க, அந்நேரம் உள்ளே வந்தான் அன்பழகன்.

அண்ணன், மாமா இருவரையும் மாறி மாறி பார்த்தவன், மாமனின் கையில் இருந்ததைப் பார்த்தும் சூழலை கணித்து விட்டான்.

“எனக்கொரு பாட்டில் குடுங்க மாமா.” என்று அவன் கை நீட்ட, “கொன்னேபுடுவேன் உன்னய..” என்று தம்பியின் தோளில் கைப் போட்டு கழுத்தை நெரித்தான்.

“அண்..ணே.. விடே.. என்னைய விடே..” என்று அவன் கத்த, “பச்ச புள்ள உனக்கெதுக்கு டா பாட்டில் கேட்குது?” என்று பதிலுக்குக் கத்தினவன், “ரொம்ப நல்ல பழக்கம். இத நீங்க பழகுனது பத்தாதுன்னு இவனுக்கும் பழக்கி விட்டீங்களா?” என்று தர்மதுரையின் மேல் பாய்ந்தான்.

error: Content is protected !!
Scroll to Top